Tuesday, May 23, 2006

ஒரு மாலை கடும் வெய்யில் நேரம் ...

இருட்டிய பிறகும் சுட்டெரிக்கும் சென்னைக் கோடை. இரவு வீட்டுக்கு போகும் வழியில் பாண்டிபஜாரை கடக்கும் போது அந்த கழிவுப் புத்தக காட்சிக்குள்ளே சும்மா என்னதான் இருக்கும் பார்க்கலாம் என்று நுழைந்தேன். அமெரிக்காவிலிருந்து எடைபோட்டு டன் 10$ என்று அமரிக்க கம்பெனிகள் இந்திய ஏஜண்டுகளுக்கு விற்கிறார்கள் என்று நினைக்கிறேன். கடந்த ஓரிரு மாதங்களாகவே பெங்களூரிலும் சென்னையிலும் இப்படி 30, 40 வருட பழைய புத்தகங்கள் குவிந்து கிடக்கின்றன. இருக்கும் கெட்டபழக்கம் இப்படி பழைய புத்தகங்களை பொறுக்குவது என்பதால் தேட ஆரம்பித்து விட்டேன். மேல்மாடியில் இருந்த கூறையின் தணல் பரப்பும் அறையில் விசிறியை சுற்றவைக்காமல் கடை ஆள் கிறுக்குத்தனம் செய்ததால், வியர்வை புத்தகங்களின் மீது சொட்ட சொட்ட தேடவேண்டி இருந்தது. அறிபுனைவுகள் (sf) மட்டுமே நான் வாங்குவதால் குப்பை மலையில் புத்தகங்கள் தாமே மேலெழும்பி தம்மை அறிவித்துக் கொண்டால்தான் ஏதாவது பயனுறும் நிகழ்சி நடக்கும் என்ற நிலைமை. பத்திருபது புத்தகங்களை ஒரு கெஸ்டால்ட் பார்வை பார்த்தால் சில புத்தகங்கள் மட்டும் லேசாக ஆடுவது தெரியும். அவைதான் நாம் வாங்கவேண்டியவை என நமக்கும் அந்த புத்தகங்களுக்கும் தெரியும். இதெல்லாம் ஜன்மஜன்மமாக வரும் தொடர்புகள் என நமக்குத்தான் தெரியுமே.
கிடைத்த முத்துக்களில் சில:

Immortality, Inc.: Robet Sheckley- 40 ரூ. எப்போதோ படித்தது. 58-இல் எழுதிய ஷெக்லியின் முதல் நாவல். அப்போதே அறிபுனைவுகள் பெரும் ஆதரவுபெற்று எதிர்கால அண்டம்கொள்ளும் அளவுக்கு அறிவியல் சாதனைகளின் எதிர்பார்போடு boy meets spaceship வகை புனைவுகள் பரவிக்கொண்டிருந்தன. அழகான எதிர்கால மேய்ச்சல் வெளிகளில் அலைந்து கொண்டிருந்த புனிதப்பசுக்களின் மீது ஷெக்லி 'எருமை' என்று கிராஃபிட்டி சாயவீச்சுக்குப்பி கிறுக்கல்களாக தன் கதைகளை துவக்கிய காலம்.
The World of Null-A: A.E. van Vogt - 20 ரூ.
என்ன சொல்ல. 1948. வான் வாக்ட் எழுதியவற்றை ஆனானப்பட்ட கேம்பல்லே நிராகரிக்கமுடியாமல் அஸ்டௌண்டிங்கில் பதிக்கவேண்டியதாகப் போயிற்று. இவரால் பாதிக்கப்பட்ட பிற்கால எழுத்தாளர்கள்தான் எத்தனைபேர்.
Transition : Vonda McIntyre - 40 ரூ. மக்கின் டாயரின் பிற்கால ஒரு முத்தொடர் நாவல்களில் மத்திய நாவல். முதலாவது மட்டும் படித்திருந்ததால் தொடர்ச்சிக்காக வாங்கியது.
The flight of the Horse: Larry Niven- 20 ரூ. நிவென் எழுதிய hardsf நிறைய உள்ளதால் அவரின் fantasy சேகரிக்க வாங்கியது. நல்ல சிறுகதைகள் சில உள்ளன.
இன்னும் பல.

அறிபுனைவுகளில் ஆர்வமுள்ள சென்னை நண்பர்கள் தவற விடவேண்டாம்.
-

6 comments:

Jayaprakash Sampath said...

எக்ஜாக்ட்லி, அந்த எடம் எங்க இருக்குன்னு சொல்லுங்க..

arulselvan said...

அர்ச்சனா ஸ்வீட்டுக்கும் பாலாஜி பவனுக்கும் இடையே ஒரு மாடியில் அப்பப்போ தோல் பொருள்கள், வண்ணவ்ண்ண பிளாஸ்ட்டிக் கலைப் பொருள்கள் இப்படி எதயாவது காட்சி போடு வைத்திருப்பார்களே அந்த மாடிதான். இதுக்கு பேர் இருக்குதான்னு தெரியலெ.
அருள்

Jayaprakash Sampath said...

ஓ.. அந்த இடமா? தெரியும் தெரியும்... போய்ட்டு வந்து சொல்றேன்..

kavi said...

Arul,
Any LEM's novels? I dont see them anywhere here. Infact i went as far as the moor market (the new one) but no luck. Ofcourse i may get it hard cover editions but what about paperbacks? If you know any idea about it pls let me know.

arulselvan said...

kavi
i didnt spot any lem. but i was scanning the pile rather randomly - it was too hot there.
in bangalore it is possible to get mortal engines and prix series in old book shops - certainly. i am not very familiar about the chennai old books scene - i myself am an immigrant here. :-)
arul

Venkat said...

யோவ், அருள்! இது நியாயமா? சென்னைக்குப் போய்ச் சேந்து பத்து வருஷத்துக்கும் மேலாகுதுய்யா. இன்னும் எத்தன நாள்தான் ஊருக்குப் புதுசுன்னு சொல்லிக்கிட்டு இருக்கப்போறீங்க? (இந்த நேரத்துல நான் ஏழு தடவ எடத்த மாத்தியிருக்கேன்).

அதே மாரி, பெங்களூர்ல இருந்தத வுட இப்ப வெளில இருக்கறதும் அதிக நாளாச்சுய்யா. இனிமே பெங்களூரு ஒங்க ஊரு இல்லங்கறதய்யும் பிரிஞ்சுக்கங்க!

கவி :) டிங்கி டிங்கி! போன மாதம் இங்க உள்ளூர் லைப்ரரில பழைய புத்தகம் (இதுல புதுசா நூலகத்துக்கு அன்பளிப்பு வந்த தேவையில்லா புத்தகமும் உண்டு) வித்தாங்க. கிலோ ஒரு டாலர். நெற்ய்ய வாங்கினேன், அதுல ரெண்டு லெம்-மும் சேர்த்தி. ஹா...ஹா..