"வாங்க பரன். அப்படி வெளிச்சத்தில் அமரலாம்" என்ற
காவல் அலுவலர் எழுந்து நின்றார். ஆறரை அடிக்குமேல் இருந்தார். கூட்டாட்சியின் எப்பகுதி என்று கணிக்க முடியவில்லை.
"என் பெயர் குமார். நீங்கள் ஹோசூர்தானே."
"ஆம். பிறந்து வளர்ந்த ஊர்"
இருக்கை சூழ்ந்து பரனைத் தாங்கியது. காவல் அலுவலகத்தில் இத்தனை வசதி இருக்கும் என அவன் எதிர்பார்க்கவில்லை.
"தாய், தந்தை ஐந்தாண்டுப் போரில் மரித்தார்கள். அதைப்பற்றி வேண்டாம். உங்கள் தங்கை ..."
"தென்னாப்பிரிக்காவில். லெசோதொ"
"பணி நிமித்தமா?"
"இல்லை. அவள் இணைதேடிப்போன இடம்"
"எங்கே கல்விகற்றார்?"
"பூனா"
"என்ன பயின்றார்?"
"கோள்திருத்தம்"
நிறைய கேள்விகள் குடும்பத்தைச் சுற்றியே இருந்தன. அனைத்தும் கூட்டரசுத் தரவுகளில் இருக்கும். அதிலிருந்தே அவை முக்கியமானவை அல்ல என்று உணர்ந்து சரியான கேள்விக்குக் காத்திருந்தான் பரன்.
"கவியை எத்தனை நாட்களாகத் தெரியும்"
"இரண்டு மாதங்கள்" அவனுக்கே சந்தேகமாக இருந்தது.
இரண்டே மாதங்கள் தானா? அதற்குள்ளே எப்படி? சொன்னால் சீறுவாள்.
"கவியின் ஆசிரியரை சந்தித்திருக்கிறீரா பரன்"
"ஒரே ஒரு முறை"
அவன் மறக்க நினைத்த சந்திப்பு. மனிதன் உடல் என்றால் மூளையை பாதுகாப்பாக வைத்திருக்க இயற்கை வடிவமைத்த கொள்கலன் என்பதை நிறுவ இரண்டுமணிநேரம் செலவழித்தார். வெளியேறி கவியை ஒரு அரச மரத்தடியில் இழுத்து உட்காரச் செய்து
"இன்னும் ஐந்து நிமிடம் பேசியிருந்தால் அம்மனிதருக்கு கொள்கலனைப் பிரித்துக் காட்டியிருப்பேன்." என்றான்.
"கவலைப் படாதே. மூளையைப் பற்றி ஒரு நாள் கற்றுத்தருகிறேன்" சிரித்த கவிக்கு அன்று நாள் சரியிருக்கவில்லை.
"அவர் நேற்று இறந்துவிட்டார் தெரியுமா?" என்று பரனையே பார்த்துக்கொண்டிருந்தார் குமார்.
"என்னது? அப்படியா? " கவி ஏதும் சொல்லவில்லை என்பது வியப்பாக இருந்தது. அவளுக்கே தெரியாதா?
"பல்கலை நகர் வளாகத்திலேயே. கவியின் ஆய்வுக்கூடத்திலிருந்து நூறுமீட்டர் தொலைவில்"
பரன் பதிலிறுக்கவில்லை.
"கவியும் அவருடைய ஆய்வுத் தோழரும் இன்று முழுவதும் இதை அறிந்திருக்கவில்லை. என்று நினைக்கிறேன்" குமார் தன் சட்டைப் பையிலிருந்து ஒரு சிறு மரச் சதுரத்தை எடுத்தார்.
"அறிந்திருந்தால் கவி சொல்லியிருப்பாள்" என்ற பரன் இப்படி தேவையில்லாமல் தான் பேசுவதை உணர்ந்து நிறுத்தினான். மரச்சதுரத்தை பரனிடம் கொடுத்தார் குமார்.
"இது என்ன என்று நினைக்கிறீர்கள் பரன்"
தொடுவதற்கு வழவழப்பாக இருந்தது. கண்ணடிபோல் பரப்பு ஒளியை சிதறடித்தது.
கருஞ்சிவப்பாக இருந்தது. மெலிதான கோடுகள் குறுக்கே சென்றிருந்தன.
"இது என்ன மரம் பரன்?"
யாருக்குத் தெரியும். ஏதாவது அயல்நாட்டு மரமோ என்னவோ.
தலையை தெரியாது என அசைத்தான்.
"நம்ப மாட்டீர்கள். பனைமரம். பனை ஒரு சொரசொரப்பான மரம் பரன். இழைப்பது கடினம். நன்கு முதிர்ந்த பனையில் மிகத் திறைமையான ஒருவன் செய்தது"
"இருக்கலாம்"
"சரி. இது என்ன என்று நினைக்கிறீர்கள்"
"ஏதோ காட்டுவாசிகள் குழந்தைகளுக்கு விளையாட செய்திருப்பார்கள்."
"ம்ம். காட்டுவாசிகள் இப்போது யார் பரன். எல்லாம் பெருநகரிலிருந்து
வெளியேறிய நம் மக்கள்தானே" சிரித்தார் குமார்.
"இதை எதற்கு உங்களுக்கு காட்டுகிறேன் தெரியுமா? கவியின் ஆய்வுமேசை
இழுப்பறைகளில் ஒன்றில் இருந்தது இது"
"அதற்கென்ன?"
அறைக் கதவருகில் ஏதோ ஈரமான தடித்த கம்பளம் விழுவதுபோல் சத்தம் கேட்டது.
இருவரும் பாதி எழுந்து நகர முயற்சிக்கும்போது அறையில் வெண்புகை பரவியது.
கையிலிருந்த மரத்துண்டை கால்சட்டையில் சொருகிகொண்டு கதவை நோக்கி ஓடினான்
பரன். குமார் எங்கே என்று சரிவரத் தெரியவில்லை. அறைக்கு வெளியே மைதானத்தில் விளக்குகள் அனைத்தும் அணைந்தன. புகை அடர்ந்து எங்கும் பரவிக் கொண்டு இருந்தது. காவலர்களின் கைவிளக்குகள் அங்கிங்கும் அலைந்தன. கவி சென்ற விடுதியை நோக்கி விரைந்தான் பரன்.