Wednesday, June 28, 2006

இலக்கர்-2" கவி. பயப்படாதே".
என்று சொல்லி அணைத்துக் கொண்டிருந்த பரனுக்கு கால்கள் மெல்ல நடுங்கின.
இலக்கர்கள் மூவரும் ஒரு முக்கோணத்தின் முனைகளில் இருந்து அனைவரையும் சுனைகளிலிருந்து விலக்கிச் சேர்த்துக்கொண்டிருந்தார்கள்.
திகைப்பியால் வீழ்ந்த இரு சீனர்களையும் அகற்ற சுனைக்காவலாளர் இருவர் இலக்கருக்கு குறிசெலுத்தினர்.
ஆரம்பவாகிலி எனக் கத்தியவன் எவன் என்பதை அறிய இலக்கர் கண்களை கூட்டத்தில் உழற்றிக்கொண்டிருந்தனர்.
பரன் அருகில் ஒரு காவலாளி விரைந்து வந்தான்.

"பரன் அவர்களே. உடன் வாருங்கள். இப்பெண் உங்கள் இணையா?."
"ஆமாம்.கவி. உடனே வெளியேற முடியுமா? இலக்கர்...? "
"குறி செலுத்தியிருக்கிறேன். உம்முடன் மிதவை ரயிலில் பேசின இலக்கன் அப்போதே உங்களை தனிமைப் படுத்த வேண்டினான்"
தனக்கு முன்பே சுட்டுத்தரவுகள் போவது பரனுக்கு உவப்பாக இல்லை. கூட்டரசின் அதிகாரியாக இருப்பதற்கான விலைகள் இயல்பானதாக இல்லை. இதற்குள் கவியின் அனைத்து சுட்டிகளும் தன்னுடையவற்றினுடன் கோர்க்கப்பட்டிருக்கும் என்பது நினைவுக்கு வந்தது. என்னவிதமான வாழ்வு இது என நினைத்து கவியின் தோளை இறுக்கினான்.
"போய்விடலாம் பரன்." கவியின் குரல் எங்கிருந்தோ வருவதுபோல் கேட்டது.

"பரன். உங்களை ஹெப்பால் அலுவலகத்தில் விடுகிறேன். செலுத்தி வெளியில் இருக்கிறது. " காவலாளி சைகையில் சுனைச்சுற்றுச் சுவருக்கு வெளியில் காண்பித்தான்.
"யார் முதன்மையில் அழைக்கிறீர்கள்?"
"எமக்கு கடமைகள் உண்டு பரன். உங்களைத் தவற விட்டால் இலக்கர் நிச்சயம் என்னை குறித்து விடுவார்கள் . "
அவனின் பேசி ஒலித்தது. கேட்கும்போது , கவியைக் கூர்ந்து நோக்கி தலையை ஆட்டினான. அமுக்கி உள்வைத்து, "கவி, மன்னியுங்கள். உம்மை எனக்குத் இதற்கு முன் தெரியாது" என்றான்.
கவி திகைத்து "என்ன சொல்லுகிறீர்கள். நான் ஆய்வு மாணவி"
"முதலில் நடவுங்கள். இரண்டு பேரையும் கொண்டு சேர்ப்பதற்குள் என் உயிர் போய்விடும்"
அவனுடன் செல்ல பரனும் கவியும் திரும்பியபோது அருகில் சூழும் மக்களில் இருந்த ஒருவன் மெல்ல பரனின் முழங்கையைத் தொட்டான். கையை விலக்கி பரன் யார் அவன் என்று பார்த்தான்.
"பரன்... " என்ற அவன் தென்னாசியனைப் போல இருந்தான்.
"பரன், ஒட்டுத்தாளைப் பாருங்கள்" என்று கையில் அமுக்கினான்.
காவலாளி அம்மனிதனின் முகத்தில் அடித்தான்.
"விலகு."
பரனையும் கவியையும் இழுத்தவாறு காவலாளி வேகமாக விரைய அவனைத் தொட்டவனை ஒரு இலக்கன் பிடித்து விட்டிருந்தான்.
காவலாளி தடுப்புக்கட்டையை விலக்கி அவர்களை வெளிப்படுத்தி காவலுந்து ஒன்றில் திணித்தான். உந்தை முடுக்கி இடப்புறம் வலித்து தரையில் இருந்து உயர்ந்தான்.
பரன் முழங்கையைத் தடவிப்பார்க்க ஒட்டுத்தாள் ஒன்றை உணர்ந்தான். மெதுவாக அதை உரித்துப் பார்த்தான்.
எதுவும் அதில் இருப்பதாகத் தெரியவில்லை. வீட்டில் உணர்வருடிகளில் படிக்கலாம் என்று பையில் வைத்தான்.
கவி பயந்து பேசாமல் அருகில் குறுகி அமர்ந்திருந்தாள்.
"பயப்படாதே கவி. காவல் அலுவலகத்தில் பதித்துவிட்டு உடனே ஹோசூர் போய்விடலாம்" என்றான்.
முதன் முறையாக தன் வீட்டுக்கு இப்படி பயந்த சூழ்நிலையில் தானா அவளை அழைக்க வேண்டும் என நினைத்தான்.
"எனக்கென்னவோ மிகவும் பயமாக இருக்கிறது பரன். அவனுக்கு என்னைப்பற்றி என்ன செய்தி வந்திருக்கும்?"
"பார்க்கலாம்" என்றபோது உந்து அலுவலக வாசலில் நின்றது.
இறங்கின உடன் "அம்மணி நீங்கள் இடதுபுறம் உள்ள விடுதிக்கு வாருங்கள்" என காவலாளி அவளை விலக்கி நடத்தினான்.

"பரன்... சீக்கிரம் வந்துவிடு "
"விரைவில் பதித்துவிட்டு வந்து விடுவேன்"
பரனை அமரச்செய்த அலுவலர் தன் கணியை இயக்கினார்.
"பரன். 29. அயல்புலன்அறிவுத் துறை. துணச் செயலர். ம். ஹோசூரில் இன்று மழையா பரன்"
"சற்றே தூரல்"
"உங்கள் செயலர் என் உடன் படித்தவர். இட்டாநகர் மைய காவல் பயிற்சி கல்லூரி"
"நல்ல ஊர். இரண்டுவருடம் இருந்தேன்"
"ஆமாம். செயலர் இப்போதுதான் அழைத்தார். உங்களுடைய நாளைய கூட்டம் ஒத்திவைக்கப் பட்டுள்ளது"
"உங்களிடம் இதை சொல்லச் சொன்னாரா?"
பரனுக்கு மெலிதாக கோபம் வந்தது.
"ஆமாம். நீங்கள் இங்கே இரவு தங்க வேண்டும். சில கேள்விகள் உள்ளன"
"என்னிடமா?"

"ஆமாம். கவியிடமும் கூட"
"கவி? அவள் ஆய்வு மாணவி"
"தெரியும் பரன். இலக்கர் அறிவுத் துறை"
பரன் மூச்சை இழுத்து சற்றே உள்ளடக்கி மெதுவாக வெளியே விட்டான்.
"கூட்டாட்சி அனுமதி பெற்றிருக்கிறீரா?"
"மையப் பேராண்மை ஒப்புதல் நீங்கள் உள்ளே நுழைந்த போதுதான் வந்தது"
"நான் கவியிடம் இப்போது பேசலாமா?"
"இரவு உணவின் போது சந்திப்பீர்கள். அப்போது பேசலாம். இன்னும் ஒருமணி நேரம் உள்ளது.இப்போது பொதுவாக
சில கேள்விகள் இப்போது கேட்கலாமா? "

நிகழ்வுகள் சிக்கலாவதை பரன் உணர்ந்தான். செயலர் அனுமதித்திருக்கிறார். பேராண்மை ஒப்புதல் அளித்துள்ளது.
இரவு உணவுக்கு இன்னும் ஒரு மணி நேரம். கவி?

3 comments:

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

nail biting...

Arul, அடுத்த பகுதி இன்னொரு 2 கிழமைக்குப்பிறகா? ;)

Jayaprakash Sampath said...

வாஹ்ரே....

இப்பத்தான் ரெண்டு பகுதியையும் சேத்து வெச்சுப் படிச்சேன்...

arulselvan said...

மதி,
இதோ. இன்றே :-)
பிரகாஷ்,
எஞ்ஜாய். நம்ம ஊரு கதை.
அருள்