Thursday, June 29, 2006

இலக்கர் - 3
"வாங்க பரன். அப்படி வெளிச்சத்தில் அமரலாம்" என்ற

காவல் அலுவலர் எழுந்து நின்றார். ஆறரை அடிக்குமேல் இருந்தார். கூட்டாட்சியின் எப்பகுதி என்று கணிக்க முடியவில்லை.

"என் பெயர் குமார். நீங்கள் ஹோசூர்தானே."
"ஆம். பிறந்து வளர்ந்த ஊர்"
இருக்கை சூழ்ந்து பரனைத் தாங்கியது. காவல் அலுவலகத்தில் இத்தனை வசதி இருக்கும் என அவன் எதிர்பார்க்கவில்லை.

"தாய், தந்தை ஐந்தாண்டுப் போரில் மரித்தார்கள். அதைப்பற்றி வேண்டாம். உங்கள் தங்கை ..."
"தென்னாப்பிரிக்காவில். லெசோதொ"
"பணி நிமித்தமா?"
"இல்லை. அவள் இணைதேடிப்போன இடம்"
"எங்கே கல்விகற்றார்?"
"பூனா"
"என்ன பயின்றார்?"
"கோள்திருத்தம்"

நிறைய கேள்விகள் குடும்பத்தைச் சுற்றியே இருந்தன. அனைத்தும் கூட்டரசுத் தரவுகளில் இருக்கும். அதிலிருந்தே அவை முக்கியமானவை அல்ல என்று உணர்ந்து சரியான கேள்விக்குக் காத்திருந்தான் பரன்.

"கவியை எத்தனை நாட்களாகத் தெரியும்"
"இரண்டு மாதங்கள்" அவனுக்கே சந்தேகமாக இருந்தது.

இரண்டே மாதங்கள் தானா? அதற்குள்ளே எப்படி? சொன்னால் சீறுவாள்.

"கவியின் ஆசிரியரை சந்தித்திருக்கிறீரா பரன்"
"ஒரே ஒரு முறை"

அவன் மறக்க நினைத்த சந்திப்பு. மனிதன் உடல் என்றால் மூளையை பாதுகாப்பாக வைத்திருக்க இயற்கை வடிவமைத்த கொள்கலன் என்பதை நிறுவ இரண்டுமணிநேரம் செலவழித்தார். வெளியேறி கவியை ஒரு அரச மரத்தடியில் இழுத்து உட்காரச் செய்து
"இன்னும் ஐந்து நிமிடம் பேசியிருந்தால் அம்மனிதருக்கு கொள்கலனைப் பிரித்துக் காட்டியிருப்பேன்." என்றான்.
"கவலைப் படாதே. மூளையைப் பற்றி ஒரு நாள் கற்றுத்தருகிறேன்" சிரித்த கவிக்கு அன்று நாள் சரியிருக்கவில்லை.

"அவர் நேற்று இறந்துவிட்டார் தெரியுமா?" என்று பரனையே பார்த்துக்கொண்டிருந்தார் குமார்.
"என்னது? அப்படியா? " கவி ஏதும் சொல்லவில்லை என்பது வியப்பாக இருந்தது. அவளுக்கே தெரியாதா?

"பல்கலை நகர் வளாகத்திலேயே. கவியின் ஆய்வுக்கூடத்திலிருந்து நூறுமீட்டர் தொலைவில்"
பரன் பதிலிறுக்கவில்லை.

"கவியும் அவருடைய ஆய்வுத் தோழரும் இன்று முழுவதும் இதை அறிந்திருக்கவில்லை. என்று நினைக்கிறேன்" குமார் தன் சட்டைப் பையிலிருந்து ஒரு சிறு மரச் சதுரத்தை எடுத்தார்.

"அறிந்திருந்தால் கவி சொல்லியிருப்பாள்" என்ற பரன் இப்படி தேவையில்லாமல் தான் பேசுவதை உணர்ந்து நிறுத்தினான். மரச்சதுரத்தை பரனிடம் கொடுத்தார் குமார்.

"இது என்ன என்று நினைக்கிறீர்கள் பரன்"
தொடுவதற்கு வழவழப்பாக இருந்தது. கண்ணடிபோல் பரப்பு ஒளியை சிதறடித்தது.
கருஞ்சிவப்பாக இருந்தது. மெலிதான கோடுகள் குறுக்கே சென்றிருந்தன.

"இது என்ன மரம் பரன்?"
யாருக்குத் தெரியும். ஏதாவது அயல்நாட்டு மரமோ என்னவோ.
தலையை தெரியாது என அசைத்தான்.

"நம்ப மாட்டீர்கள். பனைமரம். பனை ஒரு சொரசொரப்பான மரம் பரன். இழைப்பது கடினம். நன்கு முதிர்ந்த பனையில் மிகத் திறைமையான ஒருவன் செய்தது"
"இருக்கலாம்"
"சரி. இது என்ன என்று நினைக்கிறீர்கள்"
"ஏதோ காட்டுவாசிகள் குழந்தைகளுக்கு விளையாட செய்திருப்பார்கள்."
"ம்ம். காட்டுவாசிகள் இப்போது யார் பரன். எல்லாம் பெருநகரிலிருந்து
வெளியேறிய நம் மக்கள்தானே" சிரித்தார் குமார்.
"இதை எதற்கு உங்களுக்கு காட்டுகிறேன் தெரியுமா? கவியின் ஆய்வுமேசை
இழுப்பறைகளில் ஒன்றில் இருந்தது இது"
"அதற்கென்ன?"

அறைக் கதவருகில் ஏதோ ஈரமான தடித்த கம்பளம் விழுவதுபோல் சத்தம் கேட்டது.
இருவரும் பாதி எழுந்து நகர முயற்சிக்கும்போது அறையில் வெண்புகை பரவியது.
கையிலிருந்த மரத்துண்டை கால்சட்டையில் சொருகிகொண்டு கதவை நோக்கி ஓடினான்
பரன். குமார் எங்கே என்று சரிவரத் தெரியவில்லை. அறைக்கு வெளியே மைதானத்தில் விளக்குகள் அனைத்தும் அணைந்தன. புகை அடர்ந்து எங்கும் பரவிக் கொண்டு இருந்தது. காவலர்களின் கைவிளக்குகள் அங்கிங்கும் அலைந்தன. கவி சென்ற விடுதியை நோக்கி விரைந்தான் பரன்.

8 comments:

Venkat said...

அருள் - கதை சுவாரசியமாகப் போகிறது. முழுக்க படித்துவிட்டு விரிவாக எழுதுவேன்.

அது கிடக்க; இந்தப் படம் என்ன வெக்டரிலா வரைந்தீர்கள்? மிக நன்றாக வந்திருக்கிறது. R1 உங்களைப் பார்த்ததாகச் சொன்னான்.

சன்னாசி said...

//மனிதன் உடல் என்றால் மூளையை பாதுகாப்பாக வைத்திருக்க இயற்கை வடிவமைத்த கொள்கலன் என்பதை நிறுவ இரண்டுமணிநேரம் செலவழித்தார். //

:-)

கதை வெகு சுவாரஸ்யம். கதைக்கேற்ற இந்த ரீதியான படங்களை ஒருகாலத்தில் மருது முயன்றதற்குப்பின் (சுஜாதா குமுதம் ஆசிரியராக இருக்கையில் வந்த ஒரு சித்திரத் தொடர் என்று நினைவு) அதிகம் பார்க்கக் கிடைக்கவில்லை. இன்னொரு விஷயம் - தமிழில் படித்த பெரும்பாலான தொடர்கதைகளில் வரும் படங்களில் கட்டிடங்களைப் பார்த்ததே/பார்ப்பதே வெகு அரிதாக இருக்கிறது (அதாவது - மனிதர்களற்ற எதையும் பார்ப்பதே வெகு அரிதாக இருக்கிறது - அல்லது என் பிரமையா?) -
பார்த்தவரையில் எனில் மனிதர்களைத் தெளிவாக வரைந்து பின்புலத்தில் சில கோடுகள் மூலமான கட்டிடங்களாகத்தான் இருக்கிறது!! தமிழ்ப் பத்திரிகைகளின் தொடர்கதைகளில் வரும் படங்களில் மனிதர்கள் தவிர வேறு எதையும் பெரும்பாலும் காணமுடியாதது சுவாரஸ்யமான விஷயமாய் இல்லை? 'மாருதி' வரைந்த ஏதாவதொரு கட்டிடத்தை உங்களால் நினைவுகூர முடிகிறதா? :-)

arulselvan said...

வெங்கட்,
ஆமாம் படம் வெக்டர்தான்.
கொஞ்ச நாள் முன்னால் செயலியை
http://www.inkscape.org/ இல் இருந்து
இறக்கினேன்.
நன்றாக இருக்கிறது. யாராவது செயலியை தமிழ்ப் படுத்தலாம்.
R1 ஓடு ரொம்பநேரம் பேசினோம். அப்புறமா சொல்றேன்.
அருள்

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

என்ன செய்தீர்கள் என்று தெரியவில்லை. இந்தப் படம் அருமையாகவும் கதைக்குப் பொருத்தமாகவும் இருக்கிறது.

arulselvan said...

சன்னாசி,
மருது நிறைய fantasy வகை வரைவுகளையும் செய்துகொண்டிருந்தார். ஆனால் தமிழரின் வார்த்தைப் பித்தினூடே யாரும் ஒன்றும் செய்யமுடியாது என்றே நினைக்கிறேன். ஒரு ஐம்பது வருடங்களுக்கு முன்பு விகடன் போன்ற பத்திரிக்கைகளில் இருந்த உழைப்பு கூட இப்போதைய இல்லஸ்ட்ரேட்டர்களுக்கு தேவையில்லை என்பதை என்ன சொல்ல. ரியலிஸ்ட்டிக்காக போடுவது மிகத் தேவையான ஒன்று. அதை மறந்தே விட்டோம் என்றே தெரிகிறது. இப்போது கூட சுஜாதாவின் கதைக்கு ஜெ போடும் படங்களைப் பாருங்கள். லைன்னில் படு வீக். வேண்டுமென்றேதான் இந்த கட்டடத்தை 3D இல் உருவாக்கினேன். கவனித்து விட்டீர்கள். பிற ஷாட்கள் அப்புறம் போடுகிறேன்.
அருள்

arulselvan said...

செல்வராஜ்,
inkscape நன்றாக இருக்கிறது. இறக்கி குழந்தைகளுக்கு கண்டிப்பாக கொடுங்கள்.
சிலநாட்களில் உங்களுக்கே கற்றுக்கொடுப்பார்கள். :-). பயிற்சிசெய்ய நல்ல செயலி.
அருள்

Venkat said...

அருள் - எனக்கு அந்த இங்க்ஸ்பேஸ் ஃபைலை (ஒரிஜினல்) மெயிலில் அனுப்ப முடியுமா? இங்க்ஸ்ஃபேஸ், ரைட்லி என்று நல்ல சமாச்சாரங்களையெல்லாம் கூகிள் வளைத்துப் போட்டுவிட்டது. (சத்தம் போடாமல்).

இன்னொன்று - ஜப்பான்காரர்களின் இலவச நிரலியான பிக்ஸியாவை முய்ற்சி செய்து பார்த்தீர்களா? அதுவும் நன்றாக இருக்கிறது. http://park18.wakwak.com/~pixia/index.html

சன்னாசி - மருது ஒருவர்தான் இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபடுபவர் (நம்மூர் பத்திரிக்கை உலகில்). உயிர்மையில் காமிக்ஸ்கள் பற்றி அவர் எழுதிய தொடர் மிக சுவாரசியமானது.

சன்னாசி said...

வெங்கட்: மருதுவின் கட்டுரை பற்றிக் குறிப்பிட்டதற்கு நன்றி - தேடிப் படிக்க முயல்கிறேன்.