Thursday, June 08, 2006

வாண்டா மக்கின்டாயரின் "of Mist and Grass and Sand"

ஆக்டோவியா பட்லரைப் பற்றிய இடுகையில் வாண்டா மக்கின்டாயரின் "of Mist and Grass and Sand" எனும் க்தையைப் பற்றிச் சொல்லியிருந்தேன். அதைப்பற்றி இங்கே.

அறுபதுகளின் இறுதியிலும் எழுபதுகளின் துவக்கத்திலும் பல பெண் எழுத்தாளர்கள் அறிபுனைவுகளை எழுத முனைந்தார்கள். முதலில் கோபமான பெண்ணியச் சார்பான கதைகள் எழுதப்பட்டன. 'இப்படி இருந்தால் எப்படி' எனும்படியான 'what if'கேள்விகளுக்கு தகுந்த களன்களை அறிபுனைவுகள் இயல்பாக தம்மில் சாத்தியப் படுத்துவன. எந்த ஒரு அதிகார மையம், கட்டுமானம் பற்றிய கேள்விகளயும் அதிர்வுதரும் வழிவகைகளை பதில்களாகவும் ஒரு அலட்சியத்துடன் அறிபுனைவுகளில் நிகழ்த்தலாம். ஒரு அளவுகடந்த எல்லையற்ற நினைப்புத் தளையறுத்தலையும் அறிபுனைவுகள் வழங்குகின்றன. உர்சுலா லெ கின், யோவான்னா ரஸ், சூசி மெக்கீ சார்னாஸ், ஆலிஸ் ஷெல்டன் என பல பெண் எழுத்தாளர்களுக்கு தம் பெண்ணியக் கருத்தாக்கங்களை வைத்து சமுதாயத்தின் ஆண் தன்மையைப்பற்றி, தேவையைப்பற்றி பாரியமான கேள்விகளை எழுப்ப அறிபுனைவுகள் சரியான தளமாக இருந்தன. கதைகள் என்றவகையில் பல நல்ல ஆக்கங்களையும் இம்முயற்சிகள் தந்தன என்பதை நினைவில் வைக்கலாம். இப்போது பாம்புக் கதை.

அறிபுனைவுகளில் பெண், ஆண் எழுதியது என்றெல்லாம் பிரித்துப்பார்க்காமல் எனக்குப் பிடித்த சிறந்த சிறுகதைகளில் ஒன்று 'பனி, புல், மணல் பற்றி...' என வாண்டா மக்கின்டாயர் எழுதிய கதை. 'பாம்பு' என்றே காரணப் பெயராக அழைக்கப்படும் ஒரு இளம் மருத்துவச்சியைப் பற்றிய கதை. பெரும் அணுச் சமர் கழிந்த காலத்தில் சிதிலமடந்த பூமியில் மிஞ்சிய இனக்குழுக்கள் ஆங்காங்கே பிரிந்து வாழ்கின்றனர். பயிற்சி முடிந்து நோய்தீர்க்கும் பனி, புல், மணல் எனும் பாம்புகளுடன் பெரும் பாலை ஒன்றைக் கடந்து வரும் மருத்துவச்சி 'பாம்பு'. அவளை ஒரு சிறு கிராமத்தினர் தம் குழுவின் நோயுற்ற பிள்ளை ஒன்றைக் காப்பாற்ற அழைத்துச் செல்கின்றனர். இதில் துவங்குகிறது கதை.
பிள்ளை மிகவும் நோயில் வருந்தி இறப்பின் வாயிலில் கிடக்கிறான். குழுவினருக்கு பாம்புகளின் மருத்துவம் செய்ய மிக அச்சமாகவும் தயக்கமாகவும் இருக்கிறது. ஒரு கையறு நிலையிலேயே பாம்பை அழைத்திருக்கிறார்கள். குழுவினர் சூழ நிற்க தன் பாம்புகளை பிள்ளையின் மீது படர விடுகிறாள். பனி பிள்ளையை நாவால் தீண்டி நோயை உணர்கிறது. பின்பு அது நோய்க்கான மருந்தை தன்னுள்ளே மறுநாள் சுரந்து நச்சுடன் பிள்ளையைக் கொத்தி உள்ளேற்றும். பிள்ளையுடன் தூங்க புல்லை விட்டுப் போகிறாள் பாம்பு. இதில் புல் இப்புவியின் உயிரி அல்ல. வேறொரு கோளிலிருந்து வந்த அயலுயிரி (alien). அதை இறக்கும் தறுவாயிலுள்ளவர்க்கு, நோயற்ற அமைதியான பிரிதலை தர பயன்படுத்துவாள் பாம்பு. அவ்வகையில் அச்சிறுவனின் முடிவை அமைதிப்படுத்த புல்லை அவனுடன் விட்டு இரவில் கூடாரத்தின் வெளியே போகிறாள் பாம்பு. இரவில் பனி உருவாக்கும் நச்சு மருந்தை காப்பாற்றும் பணி அவளுக்கு. பனி நச்சை உருவாக்கியவுடன் சிறுவனைக் கொத்தவிட கூடாரத்தினுள் நுழைபவளுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது. தன் நச்சுப் பற்களைக்காட்டி சிறுவனின் முகத்தருகில் சுருண்டு அவனுக்கு நிம்மதியான வலியற்ற உறக்கத்தையும் இன்பக்கனாக்களையும் அளித்துக் கொண்டிருந்த புல்லைப் பார்த்த உறவினர்கள் பயந்து போய் அதை வெட்டித்தூக்கி விலக்கிவிடுகிறார்கள். அளவற்ற துக்கத்துடன் பனியை சிறுவனின் மீது விடுகிறாள் பாம்பு...

தான், தம் நம்பிக்கைகள், வழக்கங்கள் இவற்றைத் தாண்டி அயலவரையும், அவர்தம் இயல்புகளையும் மருண்டு கண்டு அணுகும் ஒரு இனக்குழுவின் தற்காப்புச் செயல்கள் விளைவிக்கும் அளவீடற்ற சோகங்களைச் சொல்லும் இச்சிறுகதை அதை முதலில் படித்தபோது எனக்கு அறிபுனைவுகளின் வீச்சைக் காட்டியது. வாண்டா மக்கின்டாயர் இச்சிறுகதையை பின்னர் ஒரு பெரும்கதையாக்கி Dreamsnake எனும் நாவலாக வெளியிட்டார். அதுவும் நல்லதொரு கதை. பின்னொரு நாளில் அதைப்பற்றி எழுதுவேன். வாண்டா இச்சிறுகதையினாலும், நாவலினாலும் புகழ் பெற்றார். பின்னர் அக்கால ஸ்டார் ட்ரெக் பகுதிகளுக்கு கதை எழுதினார். பிற்காலத்தில் அவர் எழுதிய 'the moon and the sun'மற்றொரு சிறப்பான கதை என்று கூறுகிறார்கள். நான் படித்ததிலை.

No comments: