Monday, August 07, 2006

இலக்கர் - 4


விடுதியின் தடம் சில வேப்பமரங்களூடே வளைந்தது. வெண்புகை மரங்களடியில் அடர்ந்து தேங்கியிருந்தது. ஊடே புகுந்து மெல்ல ஓடினான் பரன். மரங்களின் பின்னிருந்து ஒலியிலி வெடிப்பிகள் முனகின. ஒரு காலில் அடிபட்டு தரை வீழ்ந்து உருண்டான் பரன். இருபுறமும் இருந்து நான்கைந்து ஆட்கள் சூழ்ந்தார்கள்.

"துணைச் செயலர் பரன். சற்றே ஒத்துழையுங்கள்" பதிலிறுக்குமுன் கண்களில் மறைஆடிகளைப் பொருத்தினர். தடத்திலிருந்து விலகி நடந்தனர்.

"கைகளைப் பிணைக்கமாட்டோம். ஒருமணிப் பயணம்தான்".

"கூட்டாட்சிப் பேராண்மை என்னை எங்கும் தொடர முடியும் நண்பர்களே. யார் நீங்கள்"

"உடலில் அலைபரப்பி பொதித்துள்ளார்களா? தெரியும் பரன். கலத்திலும் இருப்பிலும் அலைகுழப்பிகள் உள. "

"யார் நீங்கள்?"

"நமது கூட்டாட்சியின் குடிமக்கள்" என்றவன் சிரித்தான். "பரன், இப்படி, மிதவையில் அமருங்கள்" கைபற்றி உதவினான் ஒருவன்.


புகையின் அடர்வு இன்னும் குறையவில்லை. மூச்சில் வேம்பின் பூவாசமும் புகையின் மெல்லிய கரிப்பும் உணர்ந்தான். மிதவையின் இருக்கைகளின் பட்டைகளை தடவினான். அதிமுடுக்கத்தில் மார்பில் பரவிப் பிணைக்கும் சவ்வின் குமிழ்கள் பட்டன. விரைகலன்களை வைத்துள்ளார்களா, யார் இவர்கள்?. ஒருவன் பரனின் காலின் காயத்தில் கிருமிக்கொல்லியைப் பீய்ச்சினான்.

"பரன், இது ஒரு விரைகலம். ஓர்த்திருப்பீர்கள்தானே. இப்போது உயர்த்துகிறோம். திடுக்கிடாதீர்கள்".

மிதவை சரக்கென உயர்ந்தது. காவல்நிலையத்திலிருந்து சில வெடிப்பிகள் மிதவையையைச் சுட்ட ஒலி விரைவில் தேய்ந்தது. கலம் ஓட்டி முடுக்கிகளை அமர்த்தி கலத்தை சீர் ஓட்டத்தில் செலுத்தினான்.
-


"நீர் அருந்துகிறீர்களா" என்ற ஒருவன் ஒரு தோல் குப்பியை கையில் திணித்தான்.

பரன் நீரை உறிஞ்சிக் கொண்டே, "இன்னும் எத்தனை நேரம்" எனக் கேட்டான்.

"பத்தே நிமிடங்கள். ஏன் கூட்டாட்சி வான்படை நம்மைத் துரத்தவில்லை என நினைக்கிறீர்கள் அல்லவா?"

"ஆம்"

"கீழே உங்களுக்கு விடை கிடைக்கும் பரன். உங்கள் காலில் குருதி உறைந்து விட்டது. கால்சட்டையை தாழ்த்துகிறேன்"

மிதவை தாழ வீழ்ந்தபோது வயிற்றின் குழிவை சவ்வு பரவி மூடியது. நால்வர் அமரும் வான்படை அல்லது எல்லைக்காவலரின் விரைகலன். மற்ற இருவர் கீழேயே தங்கியிருப்பர் என்பதை நினைத்தான். கவியின் நிலை பற்றித் தெரியவில்லை. இது தன்னைக் கடத்த மட்டும் நடக்கும் நிகழ்வு என அவன் கருதவில்லை.. இன்று மாலையிலிருந்து நிகழ்ந்தவை ஒன்றோடொன்று தொடர்பற்றே இருப்பது போல் தோன்றினாலும் அவற்றின் கூட்டுச் சுட்டி ஒரு பெரும் திட்டம் செயல் படுகிறது என்றே அவன் எண்ணினான். யார்?

மிதவை தரை தொட்டவுடன் ஒருவன் பரனை அணைத்து இறக்கினான். கால்களில் கோரை பட்டது. முறையான இறங்குதளமல்ல. ஆயின் அரசின் ஆட்கள் அல்லர். இல்லை இதுவரை தான் அறியாத ஒரு உளவுத் துறையா? வண்டுகளின் ஒலி பெரும் வனப்பகுதியில் இருக்கிறோம் என அவனுக்கு உணர்த்தியது. செயலர் ஒருமுறை "கூட்டாட்சியின் நிழல்கரங்கள் நாம் மட்டுமல்ல பரன். நாம் மட்டும்தான் என்று நம்மை நம்பவைக்க பகை அரசுகள்தான் முயலும்" என்றார். "அயல்புலன்அறிவுத்துறைக்கு அனைத்து உள்புலன் தரவுகளின் சுருக்கும் தவறாமல் வருகின்றன. நாம் அனைவரும் ஒரே துறைதானே என்று மயங்காதே".

செயலர் நாளை மணலடிக் கூட்டத்தை ஏன் ஒத்திவைத்தார். காவலூர் விண்நோக்கியின் துவக்கவிழா நாள் இன்னும் இரண்டே மாதத்தில். ஆசிய, அய்ரோப்பிய கூட்டாட்சிகளின் நிபுணர்கள் தென்னாசியாவைச் சுற்ற வாய்ப்பு. "மாசு அகற்றும்" திட்டக் கூட்டம் நாளை. உண்மையில் ஒத்திவைத்தாரா?

"மறைஆடிகளை கழற்றுகிறேன் பரன்"

கண்கள் முதலில் எதையும் காணவில்லை. இருட்டு எங்கும். தன் அருகில் இருவரே இருப்பதைக் கண்டான். சூழ புதர்களும் சிறு மரங்களும் நிறந்திருந்தன. தப்ப எளிது. கால்களையும் கைகளையும் தளர்த்திக்கொண்டான். ஐந்துமுறை மூச்சை சீராக்கினான். முதலில் இடதுபுறம் இருப்பவன்.

"பரன், வருக" என்றபடி எதிர்நின்ற ஒரு மரத்தின் பின்னிருந்து செயலர் வந்தார்.

3 comments:

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

அறிபுனை கதையோடு கொஞ்சி விளையாடும் தமிழ் என்னைக் கவர்கிறது. நன்று. நன்று.

யாத்ரீகன் said...

ஆரம்பத்தில் படிக்க மிகவும் கடுமையா இருந்தது .. பயன்படுத்தியிருந்த தமிழாக்க வார்த்தைகள் என சொல்லத்தான் வேண்டுமா .. இரு பதிவுகள் கடந்ததும் இரசிக்க முடிந்தது .. இன்னும் முழுமையாய் புரிய மீண்டும் ஒரு முறை படிக்க வேண்டுமென நினைக்கிறேன்


அறிமுகம் செய்த கில்லிக்கு நன்றி..

யாத்ரீகன் said...

ஆரம்பத்தில் படிக்க மிகவும் கடுமையா இருந்தது .. பயன்படுத்தியிருந்த தமிழாக்க வார்த்தைகள் என சொல்லத்தான் வேண்டுமா .. இரு பதிவுகள் கடந்ததும் இரசிக்க முடிந்தது .. இன்னும் முழுமையாய் புரிய மீண்டும் ஒரு முறை படிக்க வேண்டுமென நினைக்கிறேன்


அறிமுகம் செய்த கில்லிக்கு நன்றி..