கூகுள் செயலிகள்
-----------------------
சென்ற இடுகையில் கூகுள் எழுதுசெயலி பற்றி பதித்ததைத் தொடர்ந்து இன்னும் சில எண்ணங்கள்.
கூகுள் இப்போது ஒரு இணையச் செயல்தளம் என்ற அளவில் வளர்ந்து வருகிறது. மைக்ரோசாப்ட் விண்டோஸ் ஒரு தனி கணினி செயல்தளம் மட்டும்தான். வலைச் செயல் தளங்கள் எனும் கருத்து தனிக்கணினிகளால் ஆன ஒரு வலையையே செயல்தளமாகப் பார்ப்பதும் அதன் பயனீட்டுக்கு உரியவகையில் நிரலாக்கம் மற்றும் நிரல் கட்டமைப்பாக்கம் இவற்றை அமைப்பதும் ஆகும். செயல்தளங்கள் மட்டுமே பயனர்களுக்குப் போதாது. உதாரணமாக வெறும் விண்டோஸ் கணினி மட்டும் இருந்தால் நமக்கு வலைப்பதிவிட முடியாது. அதற்கு ஒரு எழுதுசெயலியும் (பலருக்கு notepad, முரசு போன்றவை) தேவை. இத்தகைய செயலிகளையும் அதன் இடைமுகங்களையும் இணைய உலாவியிலேயே கிடைக்குமாறு செய்துவிட்டால் வெறும் தனிக்கணினிச் செயல்தளமான விண்டோஸ் மட்டும் போதும். மேலும் எழுதுவதை பக்கவடிவமைப்புச் செய்ய மைக்ரோஸாப்ட் வேர்ட் , ஓபன் ஆபீஸ் (தமிழ் இடைமுகமுள்ள 'தமிழா') போன்ற செயலிகளைப் பயன்படுத்துகிறோம். அதற்கு மாற்றாக இணையத்திலேயே இடைமுகமுள்ள இந்த கூகுள் ரைட்லி போன்றவை வந்துவிட்டால் இதற்கான தனிச்செயலிகளை வாங்கும் செலவு நமக்கில்லை. இதன் படி நிறுவனங்களின் (பல தனிப்பவர்கள் கூட) கணக்குவழக்குகளை கோர்த்துக்கொள்ள உதவும் மைக்ரோஸாப்ட்டின் எக்ஸெல் போன்ற செயலியையும் கூகுள் இணையத்திலேயே அளிக்கிறது. (spreadsheets.google.com) இதுவும் அனைவருக்கும் ஒரு பயனுள்ள செயலிதான். வீட்டுச் செலவுக்கணக்கு வைத்துக்கொள்ளவும் இது பயன்படும். அனால் இத்தகைய வலைபடு செயலிகள் நம் ரகசியங்களை உலகத்துக்கே சொல்லிவிடுமோ என்ற பயம்தான் நம் எல்லோருக்கும் இருக்கிறது. ஆனால் கூகுள் இப்போதே நம் பல ரகசியங்களையும் அறிந்துவைத்துள்ளது. நம் இமெயில் அனைத்தும் அதனிடம், நம் வலைத் தேடு களங்களைப்பற்றிய விவரங்களும் அதனிடம். நம் இணைய வலைப்பதிவு உளரல்கள், நாம் பிடித்த புகைப்படங்கள், சென்ற இடங்கள் இப்படி நம்மைப்பற்றி கூகுளுக்கு இப்போதே நிறையத்தெரியும். இன்னும் எவ்வளவு அதற்கு நாம் நம்மையே அறியத்தரப்போகிறோம் என்பது நாம் அதைப்பயன்படுத்துவதில் இருக்கிறது. மனதில் பாரமானவர்களே கூகுளிடத்தில் வாருங்கள். அது உங்களுக்கு இளைப்பாறுதல் தரலாம்.
1 comment:
//மனதில் பாரமானவர்களே கூகுளிடத்தில் வாருங்கள். அது உங்களுக்கு இளைப்பாறுதல் தரலாம்//
கணினியில் பாரமானவர்களே கூகுளிடத்தில் வாருங்கள். அது உங்களுக்கு இளைப்பாறுதல் தரலாம் என்று சொல்லலாமோ!
:)
Post a Comment