Friday, January 12, 2007

நாய்கள், நாங்கள், நீங்கள் ...

இங்கே பெங்களூரில் தெரு நாய்களின் தொல்லை தாங்க முடியாமல் போய்விட்டது. விலங்குநேச அமைப்பாளர்கள் , ஆர்வலர்கள் போடும் ஆட்டத்தில் நகராண்மைக் கழகம் நமக்கேன் வம்பு என்று சில வருடங்களாக இதைக்கண்டு கொள்ளவே இல்லை. சென்ற வாரம் ஒரு எட்டு வயது குழந்தையை தெருநாய்கள் குழு வாக வேட்டையாடி தெருவில் கடித்துக் குதறி எல்லோரும் பார்க்கும்போதே குழந்தை இறந்து விட்டது. உடனே மக்கள் குரல் எழுப்ப அரசு சில நாய்களைப் பிடிப்பதும், அல்லது கருத்தடை ஊசி போடுவதும் என நாடகமாடிக்கொண்டு இருக்கிறது. பலர் நாய்ப்பாசம் பொங்க இதற்கெல்லாம் குப்பைகூழங்களை உடனடியாக அகற்றாததும், மீதமாகும் இறைச்சி போன்றவற்றை தெருவில் கொட்டுவதும் காரணம் என்றும் , அதை உண்டு பழகிய நாய்கள் பாவம் வேறு வழியில்லாததால் குழந்தைகளை கடிக்கின்றன என்றும் ஆங்கிலத்தில் வாசகர் கடிதம் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் வாதப்படி தெரு நாய்களை யாரும் தொல்லைப்படுத்தக்கூடாது. அரசு தன் கடமையை சரிவரச் செய்தால் நாய்களும் இலைதழைகளைத் தின்று சாதுவாக இருக்கும். ஆமாம் தெருக்களை அரசு சுத்தம் செய்து சரியாகப் பராமரித்தால் இந்த நாய்கள் எதைத்தின்று தெருவில் வாழும்? சில பெண்மணிகள் இன்னும் ஒருபடி மேலே போய் தாங்கள் ஓரிரு தெரு நாய்களை தத்தெடுத்துக் கொண்டிருப்பதாகவும் அன்றாடம் உணவளித்துப் பேணுவதாகவும் அன்பு பொங்க பேட்டி கொடுத்தனர். அம்மணி, அப்படியே அந்த நாய்களை உங்கள் இல்ல வரவேற்பறையில் வாழ வைக்காமல் மீண்டும் ஏன் தெருவில் விரட்டுகிறீர்கள் என்று கேட்கலாம் போலிருந்தது. இன்று மீண்டும் ஒரு குழந்தையை நாய்கள் விரட்டிக் கடித்துள்ளன. அரசு உடனடியாக அனைத்துத் தெருநாய்களையும் பிடித்துக் ..... (சொல்ல பயமாக இருக்கிறது).
அகற்றப்படாத தெருநாய்களால் இங்கே தொல்லை என்றால் மக்கள் சீனத்தை முன்னுதாரணமாகக் கொள்ளும் பொதுவுடைமைக் கோட்டையான மேற்கு வங்கத்தில் அகற்றப் பட இயலாத மக்களால் தொல்லை. ஒழுங்காக நிலச் சீர்திருத்தம் செய்தோமா அதிலிருந்து நேரடியாக சர்வீஸ் எகானமிக்கு மாறினோமோ என்று உலகம் சுற்றும் வெள்ளைக்காரகளுக்கு வைத்தியம் செய்து எதிர்காலத் தாய்லாந்து ஆக கனவுகாணும் கேரளாபோல இல்லாமல் மே.வ. வில் உற்பத்திப் பொருளாதாரம் வேண்டுமாம். 60,000 ஏக்கர் விளைநிலத்தை பொதுவுடைமை அரசு 'மார்க்கட் விலையில்' கையகப்படுத்தி பெரும் தொழில் நிறுவனங்களை அமைக்க ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறது. மக்கள் கிராமம் கிராமமாக ஆயுதங்களை எடுத்து போலீஸையும், கட்சித் தொண்டர்களையும் தாக்குகிறார்கள். இதற்கு நடுவில் அமைச்சர்கள் அதிபயங்கர "மு" வார்த்தையைச் சொல்லத்தொடங்கி விட்டார்கள். முஸ்லீம் சமய , இடம்பெயர்ந்த , பொய்பிரச்சாரத்துக்கு அடிமையான மக்கள் அறியாமையால் அரசுத்திட்டங்களை எதிர்க்கிறார்கள் , இன்ன பிற. பங்களாதேஷிலிருந்து ஆயிரக்கணக்கில் கள்ளத்தனமாக உள்ளே வந்த மக்கள் நாடெல்லாம்தான் இருக்கிறார்கள். இது ஒரு வலதுசாரிப் பிரச்சனையாகத்தான் இத்தனை நாள் இருந்தது. மாநில பொருளாதார மாயக் கண்ணாடி சில வர்க்கப் பிரச்சனைகளை இனப்பிரச்சினைகளாக மாற்றுகிறது போலும். CPI-M நிலையின்றித் தடுமாறும் தருணமிது. முதலாளித்துவ அமெரிக்காவைவிட மிகக்குறைந்த அளவில் தொழிலாளர் உரிமை பேணும் மக்கள்சீனத்தை லட்சியமாகக் கொண்டால் எதுவும் நடத்தலாம்.
அசிங்கமான அரசியல்வாதியாக இருந்தால்தான் இவ்வளவு தடுமாறி மக்களின் சார்பாக ஏதோ முணுமுணுத்துக் கொண்டாவது இருக்கவேண்டும். கார்பரேட் குடிமகனாக இருந்தால் படு ஜாலி.
இன்போஸிஸ் நாராயணமூர்த்தி சில தினக்களுக்கு முன்னாடி தம்மைப்போன்ற பன்னாட்டுக் கம்பெனிகள் தேசநலங்களைப் பற்றி கவலைப் பட முடியாது, தாம் உலகக் குடிமகன்கள் என்ற ரீதியில் பேசி இருந்தார். இன்று நந்தன் தம் கம்பெனி பயங்கர வாதத் தாக்குதலுக்கு முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளதாக அறிவித்திருக்கிறார். இன்போஸிஸ் நண்பர்கள் பதுங்குகுழிகளுக்குள் இருந்து எப்படி ஒரு SOA ஆர்கிடெக்சர் போடலாம் என்பதை தனிமடலில் தெரிவிக்கவும்.

5 comments:

ரவி ஸ்ரீநிவாஸ் said...

இன்போஸிஸ் நண்பர்கள் பதுங்குகுழிகளுக்குள் இருந்து எப்படி ஒரு SOA ஆர்கிடெக்சர் போடலாம் என்பதை தனிமடலில் தெரிவிக்கவும்
sure, but the billing will include extra charges on account of increased security cover being provided (not to you but to ...) :)
-----------------------------------
I am an underdog with no biting
capacity :).

Jayaprakash Sampath said...

'எங்களுக்கு விவசாயம் வேண்டாம்' தென்னிந்தியா போல நாங்களும் முன்னேறுகிறோம், நிலங்களை விற்க விடுங்கள் என்று விவசாயிகள் சொல்வதை ( அல்லது சொல்வதாகச் சொல்வதை ) நம்புவதா, விவசாயிகளின் நலன் காக்க களத்தில் குதித்திருக்கும் மமதா பானர்சீ யை நம்புவதா, இவனுங்களுக்கு வேற வேலையில்லை, உருப்படற வழியைப் பாருங்கப்பா என்று புலம்பும் அறிவுசீவிகளை நம்புவதா? போட்டியாளர்கள் தான் எரிகிற கொள்ளியில் எண்ணெய் வார்க்கிறார்கள் என்று ஓபன் ஸ்டேட்ட்மெண்டு கொடுக்கும் ரதன் தாத்தாவை நம்புவதா, எக்காரணம் கொண்டும் தொழிற்சாலை கொண்டு வந்தே தீரூவோம் என்று சூளுரைக்கும் புத்ததேவரை நம்புவதா என்று சுத்தமாகப் புரியவில்லை.

வங்கத்திலே, கழகங்களுக்கு ஈகவலண்டாக ஏதேனும் ஒன்று வந்திருக்க வேண்டும். சைலண்டாக காரியம் நடந்திருக்கும். பாவம், இத்தனை காலம் ரொபீந்த்ர சங்கீதத்திலும், மீன் கட்லட்டிலும்,மோகன்பகான் பெனாட்ல்டி கோல்களிலும் , புஸ்ஸுக்கு எதிராக எஸ்பிளனேடில் போராட்டம் நடத்துவதிலும், காலத்தைக் கழித்து விட்டு இப்ப அவஸ்தைப் படுகிறார்கள்.

arulselvan said...

ரவி,
>>>
I am an underdog with no biting
capacity :).
-------------

bit by bit the byte grows larger :-)

------------

பிரகாஷ்:
>>>
வங்கத்திலே, கழகங்களுக்கு ஈகவலண்டாக ஏதேனும் ஒன்று வந்திருக்க வேண்டும். சைலண்டாக காரியம் நடந்திருக்கும்.
--------
சொன்னாப் புரிஞ்சுக்க மாட்டாங்க.
--------

இன்னிக்கு பாருங்க. முதலமைச்சர் கலக்குறார்.

http://www.ibnlive.com/news/buddha-ignores-left-right-and-centre/top/31080-7.html


The Left Front wants use of multicrop land for SEZ restricted at 10 per cent, but Bhattacharjee says departures are bound to happen in Bengal.

"I think it is not possible to apply in our state because 62 per cent is agricultural land and at least 70 to 80 per cent is fertile land. But we'll compensate by improving the productivity of land we have," says Bhattacharjee.

வங்காளத்தில் 62 சதம் விளைநிலமாம். 70-80 சதம் பல்பயிர் விளையும் நன்செய் நிலங்கள். வற்றாத கங்கை நதி டெல்டா. அய்யா, உலகத்திலேயே அதிக பட்ச விவசாய உற்பத்தி தரும் மாநிலமாக மாறுங்களேன். எந்த விவசாயியும், விவசாயக்கூலியும் வேலை இழக்க வேண்டியதில்லை. ஆமா விவசாய நிலத்திலே மேல்மண் பண்படுத்த எத்தனை பத்தாண்டுகள் உழைக்கணும்னு இந்த பங்களா பாபுவுக்குத் தெரியுமா? எங்க தங்கத் தமிழகத்திலே ஒரு வற்றாத ஆறும் எங்களுது இல்லை, அதனாலே வேறே வழி தேடவேண்டியிருக்கு. இவங்களுக்கு என்ன குறச்சல்?

அருள்

arulselvan said...

testing போஸ்ட்.

ignore

Unknown said...

//இன்போஸிஸ் நாராயணமூர்த்தி சில தினக்களுக்கு முன்னாடி தம்மைப்போன்ற பன்னாட்டுக் கம்பெனிகள் தேசநலங்களைப் பற்றி கவலைப் பட முடியாது, //

இவரைத்தான் சிலர் ரோல் மாடல்களாக வைத்துள்ளார்கள் :-(((