Thursday, February 08, 2007

செம்போத்துப் பறவை
இந்தப் பறவையை எங்க ஊர்ப்பக்கம் செம்போத்து (செம்பூத்து என்பது பேச்சு வழக்கு) என்றழைப்பார்கள்.
கிராமத்தில் பள்ளிப் பருவத்தில் விடுமுறை நாள் பகல் வேளைகளில் புன்செய்க் காட்டில் சுற்றித்திரியும் போது மிகுந்து இருக்கும் கள்ளிப் புதர்களிலும், அடர்தென்னைத் தோப்பின் நிழல்களிலும் தத்திப் போகும் பறவை. இரண்டிரட்டாய் சற்றே தூரத்தில் தரையில் நடந்து புழுபூச்சிகளை தேடும் இணைப் பறவைகள் நம் காலடி அதிர்விலோ, பேச்சின் ஒலியிலோ எழுப்பிப் பறக்கும்போது வெகுதூரம் பறப்பதில்லை.தரையிலிருந்து அருகில் தாழ உள்ள மரக்கிளைகளுக்கோ அல்லது கிளைவிட்டு கிளைதாவியோ சிறு தூரங்களையே பறந்து கடக்கின்றன. மழை பெய்ந்து ஓய்ந்த மதிய நேரங்களில் குகுக் குகுக் எனக் கத்தி அழைக்கும் ஒலி எவராலும் எளிதில் இனம் காணமுடியும். செம்போத்தின் இன்னொரு பெயர் குக்கில் என்கிறது சூடாமணி நிகண்டு.

கோவை அருகில் மருதமலை அடிவாரத்தில் எடுத்த படம்

10 comments:

ஆதிபகவன் said...

இலங்கையில் இது செண்பகப்பறவை என்று அழைக்கப்படும். இந்தப் பறவை தமிழீழத்தின் தேசியப்பறவை.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இதை ஈழத்தில் செண்பகம் என்போம். இது குறிப்பாக மயிர்கொட்டிப் புழுவைச் சாப்பிடுவதைக் கண்டுள்ளேன். தானும் தன்பாடுமாக வாழும் பறவை.
யோகன் பாரிஸ்

Venkat said...

வாங்க, வாங்க அண்ணாச்சி.

செம்போத்து எங்க ஊருலயும் உண்டு. நீங்க எழுதியிருக்கறதெல்லாம் சென்னப்பட்டணத்துல இது எங்கேந்து வந்திச்சுன்னு கேள்வியோடயே படிச்சுக்கிட்டு இருந்தேன். கடசில நான் எதிர்பாத்தாமாதிரியே பட்டணத்துல இல்லன்னு ஆயிடிச்சு :)

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

அழகான படம். எங்களுடைய ஊரில் இந்தப் பறவையை செண்பகப் பறவை என்று சொல்வார்கள். செண்பகமே, செண்பகமே பாடலைக் கேட்கும்போதெல்லாம் ஆரம்பத்தில் இந்தப் பறவைதான் நினைவுக்கு வந்தது.

படத்தில் இருக்கும் தென்னோலையும், தேங்காய்களும் கண்ணைப்பறிக்கின்றன. :) அதைப் படம் எடுத்துக்கிடுத்து வைச்சிருந்தா சொல்லுங்க.

-0-

மா.கிருஷ்ணனின் மழைக்காலமும் குயிலோசையும் புத்தகத்தில் செம்போத்துப் பறவையைப்பற்றிப் படித்த நினைவு இருந்தது. புத்தகத்திலிருந்து:

செம்போத்து (செம்புகம், செங்காகம், குக்கில்)

இதை 'செண்பகப்பட்சி' என்றும் சொல்வதுண்டு. இது குயிலினத்துக்கு உறவானபோதிலும் பல விதங்களில் இது குயில் போல இராது. இது புதரில் கூடுகட்டி, அடைகாத்துச் சந்ததியைப் பெருக்கும் கடமையைத் தானே மேற்கொள்ளும். மேலும் குயிலைப் போல மர உச்சிகளில் சஞ்சரிக்காது. மூங்கிற்புதர்களிலும் தரையிலும் செடிகளிலும் வசிக்கும். ஆழ்ந்த குரலில் இது 'ஹூ ஹூ' என்று சப்திக்கும். இதன் சதை கைகண்ட மருந்தென்ற நம்பிக்கை ஒன்றுண்டு. எங்கேனும் செல்லுகையில் செம்ப்போது எதிர்பட்டால் அது நல்ல சகுனம் என வட இந்தியாவில் கருதப்படும்.

-0-

-மதி

arulselvan said...

ஆதிபகவன், யோகன் பாரிஸ், நன்றி. ஈழத்தில் செண்பகம் என அழைப்பீர்கள் எனப் படித்து இருக்கிறேன்.

வெங்கட்,
புது வருடத்தில் வலையில செட்டிலாயாச்சு போல. இனி தொடர்ந்து எழுதுவீங்கதானே. சென்னையா? என்ன அது? நாவு ஈக திரிகே நம்மூருகே பந்தாயித்து கொத்தா...

மதி,
கிளிக்கினால் பெருசாகும் படம். கிருஷ்ணன் புத்த்கத்தை நீங்க சொன்னப்புறம் தான் எடுத்துப் பாத்தேன். படிச்சது மறந்தே போச்சு. நல்ல புத்தகம். செம்போத்து கறியப் பத்தி எழுதியிருக்காரு பாத்தீங்களா? எங்கூருல ஊர்க்காரங்க யாரும் சாப்பிடமாட்டாங்க. பூனைக்குறவர்கள் சாப்பிடுவாங்க. எப்பிடி சுவையோ தெரியாது.
அருள்.

Kasi Arumugam said...

//எங்கூருல ஊர்க்காரங்க யாரும் சாப்பிடமாட்டாங்க. பூனைக்குறவர்கள் சாப்பிடுவாங்க. எப்பிடி சுவையோ தெரியாது.//

அருள், இந்த செம்போத்தை எங்கப்பாவுக்கு எதோ ஒண்ணுக்கு மருத்தாய் ஒருத்தர் பரிந்துரைக்க இதைத் தேடியலைந்தார்கள். கிடைத்ததா சாப்பிட்டார்களா என்றெல்லாம் நினைவில் இல்லை. 30 வருடம் முந்தைய கதை அது:-) எப்படியோ இன்னிக்குப் படமாப் பாத்துட்டேன். நன்றி.

உங்கூரு எங்கூருக்கிட்டத்தானே:-))

arulselvan said...

காசி,
நல்லா இருக்கீங்களா. எங்கிருந்தாலும் பக்கம் பக்கம்தானுங்க அல்லாரும். :-)

அருள்

நாகராஜ் said...

க்கீக்கிரிச்சி கீச்.... இப்படின்னு நம்ம உடுமலை பக்கம் கத்திகிட்டே போமே நான் மாடு மேய்க்க போகும்போது பாத்திருக்கேன்....

அருள் நல்லாதானிருக்கு உங்க ரசனை

இன்னிமேல் ரெகுலர் விசிட்டரா உங்களதும் வந்துட்டா போச்சு

குமரன்
www.muthamilmantram.com

Ashraf, NVK said...

//செம்போத்தின் இன்னொரு பெயர் குக்கில் என்கிறது சூடாமணி நிகண்டு.//

அதுமட்டுமல்ல, இரத்தக்கரை படிந்த காகம் எப்படி செம்போத்தானதென்பதை இப்பாடல்மூலம் அறியலாம்:

தெரி கணை எஃகம் திறந்த வாய் எல்லாம்
குருதி படிந்து உண்ட காகம், உரு இழந்து,
குக்கில் புறத்த, சிரல் வாய. (களவழி 5)

அதுமட்டுமல்ல……

ஆங்கிலத்தில் இதற்கு “Crow pheasant” என்றும் “Coucal” என்றும் பெயர்கள் உள்ளன. இனி “குக்கில்” எப்படி “Coucal” ஆனது என்பதை அராயவேண்டும்….!!!

Ashraf, NVK said...

//செம்போத்தின் இன்னொரு பெயர் குக்கில் என்கிறது சூடாமணி நிகண்டு.//

அதுமட்டுமல்ல, இரத்தக்கரை படிந்த காகம் எப்படி செம்போத்தானதென்பதை இப்பாடல்மூலம் அறியலாம்:

தெரி கணை எஃகம் திறந்த வாய் எல்லாம்
குருதி படிந்து உண்ட காகம், உரு இழந்து,
குக்கில் புறத்த, சிரல் வாய. (களவழி 5)

அதுமட்டுமல்ல……

ஆங்கிலத்தில் இதற்கு “Crow pheasant” என்றும் “Coucal” என்றும் பெயர்கள் உள்ளன. இனி “குக்கில்” எப்படி “Coucal” ஆனது என்பதை அராயவேண்டும்….!!!