Tuesday, March 27, 2007

தொடரும் சுடர் ...

சாகரனின் சுடரை எனக்குக் கடத்தியது தேன்துளி பத்மா. ஏதோ ஆறுமாசத்துக்கு ஒரு கார்ட்டூன் என்று ஒப்பேத்தலாம் என்று இருந்தால் இப்படி கேள்விகளால் உலுக்கி விட்டார். உங்கள் பாடு. அனுபவியுங்கள்.
(கல்யாணுக்கு அஞ்சலிகளுடன்)

===========================================
1. ஜீன் தெரபி போன்ற சிகிச்சை முறைகள் பலரால் அணுகக்கூட முடியாத அளவு மிகவும் அதிக பொர்ருள் தேவையாய் இருக்கிறது. உலகின் பல மக்களால் அதிகம் உபயோகிக்க முடியாத சிகிச்சை முறைகளில் ஆராய்ச்சி செய்வது பற்றி உங்கள் கருத்து என்ன?
===========================================

உயிர் காக்கும் ஆதார மருந்துகளின் விலை இப்போது இந்தியாவில் மிக அதிகமாக உயர்ந்துள்ளது. ஆண்டிபயாடிக் மருந்துகள், உதாரணமாக தற்போது வ்ந்துள்ள ஃப்ளாக்ஸாஸின் குடும்பத்தைச் சேர்ந்த சிப்ரோ, லிவொ வகை மாத்திரைகள் ஒன்று 3 ரூ முதல் 27 ரூ வ்ரை விற்கின்றன. மருத்துவர்கள் ஏழைகளுக்கு இவற்றைத் தர இயலுவதில்லை. இப்படி பல ப்ரோட் ஸ்பெக்ட்ரம் ஆண்டிபயாட்டிக்குகளே, உயிர்காக்கும் generic மருந்துகளே நாடு தழுவிய பொது சுகாதர மருத்துவக் கட்டமைப்புக்குள் அனைவருக்கும் அடையமுடியாத அளவில் இருக்கின்றன.

அனைத்து கிராமங்களிலும் பொது சுகாதார மையங்கள், ஒருங்கிணைக்கப் பட்ட தாய்சேய் நல மையங்கள் என்பது நமது அரசின் முதன்மைத் திட்டங்களில் ஒன்றாக வரவேண்டும். இதற்கான திட்ட ஒதுக்கீடும் செயல்முறையும் இப்போதும் மிகக் குறைந்த அளவே இருக்கிறது என்றே கருதுகிறேன். இதில் வேதனையான நிகழ்வு எனில் பல மாநிலங்கள் தமக்கு ஒதுக்கப் பட்ட நிதியைச் செலவழிக்கத் தெரியாமல் திருப்பி அனுப்புவதுதான். நமது சமுதாய, அரசியல் சட்டகம் இன்னும் நாடுதழுவிய செயல்பாடுகளுக்கான முதிர்ச்சியை அடையவில்லை என்பதையே இது காட்டுகிறது. பொருள்,மூலதனம், பணம் என்பது ஒரு தடைக்கல்லென்றால் நமது மக்கள் மூலதனமே இன்னும் பயிற்றுவிக்கப் பட வேண்டியதாக இருக்கிறது. ஓரளவு விஷயம் தெரிந்தவர்கள் நிறைய இருக்கும் நமது நாட்டிலேயே இதுதான் நிலமை. இதில் மற்ற வளரும், ஏழை நாடுகளின் நிலைமை சொல்லமுடியாது.
.
எனவே பொருள் மட்டுமே ஒரு தடை அல்ல என்றே நினைக்கிறேன். இந்த நோக்கில் பார்க்கும்போது மறுபுறம் நீங்கள் குறிப்பிடும் நிறுவனமயப் படுத்தப்பட்ட அறிவியல் பெரும் நிதி சார்ந்தும், அமைப்புகள் சார்ந்துமே இயங்கவேண்டியுள்ளது. (நமது நாட்டின் அறிவியல் அமைப்புகளுக்குள்ளேயும் இந்த விவாதங்கள் எப்போதும் நடந்துகொண்டிருப்பது உங்களுக்குத் தெரியும். எழுபதுகளில் எல்லோரும் பேசிய 'sudra science Vs brahmin science', எண்பதுகளில் ராஜீவ் அரசின் போது விவாதிக்கப்பட்ட 'blue sky research' பற்றிய விமரிசனங்கள் என நமது அறிவியல் அமைப்புக்குள்ளும் கடும் விவாதங்கள் விமரிசங்கள் நடந்துள்ளன. பரவலாக மக்களுக்கு அவை கொண்டு செல்லப் படவோ, மக்கள் ஊடங்கங்களில் விவாதிக்கப் படவோ இல்லை. இப்போது எல்லாமே ஐ.டி என்பதால் அறிவியல் பற்றி யாரும் கவலைப் படுவதும் இல்லை என்பது சோகம். ) காசநோய், எய்ட்ஸ், மலேரியா போன்ற நோய்களுக்கான அடிப்படை ஆராய்ச்சிகள் இன்னும் பலப்படுத்தவேண்டிய நேரத்தில் ஜெனடிக் தெரபி பற்றி நாம் ஆராய வேண்டுமா என்பது நியாயமான கேள்விதான். (இது ஒரு சரியான அரசியல் கேள்வியும்கூட).

ஆனால் அதே சமயம் பணம் என்பதோ, மூலதனம் என்பதோ உலகில் இன்று பற்றாக்குறையானது அல்ல என்பதும் கசக்கும் உண்மை. மலையளவு மூலதனம் இன்று உலகெங்கும் தன்னை பெருக்க வேண்டி சுற்றிக்கொண்டு இருக்கிறது. உலகு முழுவதும் ஒரு முதலாளித்துவ அமைப்பில் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் இக்காலத்தில் அதை எப்படி மிக அதிகமான ஏழை மக்களுக்குத் தேவையான, இணக்கமான காரியங்களுக்கு பயன்படுத்தும் படி நாம் கொள்கைத் திட்டங்களை வகுக்கமுடியும் என்பதை கருத்தில் கொள்ளவேண்டும். இதனாலேயே அரசியல் வாதிகளை நான் இகழ்வது இல்லை. அவர்களால் நிறைய காரியங்கள் செய்ய முடியும், சரியான படி மக்களும் ஊடகங்களும் இயங்கும்போது நமது அரசியல்வாதிகளே நல்ல திட்டங்களை முன்னெடுக்கும் காரணிகளாகவும் இருப்பார்கள் - இருந்திருக்கிறார்கள்.


====================================
2. ஏதேனும் ஒரு அறிவியல் புனைவொன்று உண்மையாக மாறக்கூடிய வாய்ப்பிருந்தால் எந்த புனைவு உண்மையாகவேண்டுமென்று ஆசைப்படுவீர்கள்?
===================================

அய்யய்யோ. இப்படி ஒரு கேள்வியா.
அறிவியல் புனைவுகளின் 'புது அலை' அறுபதுகளில் துவங்கியது. ஜே.ஜே, பலார்ட்டின் அப்போதைய (1962) manifesto வில் ஒரு பகுதி :

" Science fiction should turn its back on space, on interstellar travel, extra terrestial life forms, galactic wars and the overlap of these ideas that spreads across the margins of nine - tenths of magazine s.f. Greater writer though he was, I am convinced that HG Wells has had a disastrous influence on the subsequent course of science fiction...

Similarly I think science fiction should jettison its present narrative forms and plots ...

The biggest developments of the immediate future wil take place not on the moon or mars, but on earth, and it is the inner space, not outer that needs to be explored. The only truly alien planet is Earth... "

தொடர்ந்து வந்த அறிபுனைவுகளின் பாய்ச்சல் பல பரிமாணங்களில் விரிந்தது. (மீண்டும் லூகாஸின் ஸ்டார்வார்ஸும், ஸ்பீல்பெர்க்கின் திரில்- எ- மினிட் கதையாடலும் அறிபுனைவுகளை முற்றிலுமாக திரைப்படங்களில் கைமா செய்யும் வரை- அதற்குப் பின் நடந்தவை ஒரு பெரும் காண்டம்)

அறிவியல் புனைவுகள் பலவும் விளையாட்டுப் போல இருந்தாலும் அவை நாம் நம்பும், எடுக்கும் சில அடிப்படை நிலைபாடுகளை குலைப்பவையாகவே இருக்கின்றன. எனக்குப் பிடித்த அறிபுனைவுகள் என ஒரு முப்பது, நாற்பது நெடுங் கதைகளைச் சொல்லலாம். அவற்றில் எது உண்மையில் நடந்தாலும் அத்தகைய ஒரு சூழலில் வாழாமல் இருப்பதே நாம் செய்த புண்ணியம் போல இருக்கும். அறிபுனைவுகளிலும், 'மிக இனிமையான பாடல்கள் மிகச் சோகமானவைதான்'.


=========================================
3. மதனின் கார்ட்டூன்களை நான் அதிகம் சிலாகித்தது இல்லை. உங்கள் பார்வையில் இந்தியாவின் சிறந்த கார்ட்டூனிஸ்டாக யாரைக் கருதுவீர்கள்? சமீபத்தில் இங்கே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 12 வயது சகோதரர்கள் அந்த நோயைப்பற்றி, அதன் தன்மையை பற்றி எப்படி கவனமாக இருக்க வேண்டும் என்பது பற்றி கார்ட்டூன்கள் கொண்ட புத்தகம் ஒன்ரை தயாரித்திருக்கிறார்கள். அது போல பொதுவாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் கார்ட்டூன்களை வரையவேண்டுமென்று உங்களைப் பணித்தால் எது முதலிடம் பெறும்?
=================================

இந்தியாவில் கார்ட்டூனிஸ்ட்கள் என்றால் - இறந்து போன அபு ஆபிரகாம், ஓ.வி.விஜயன் போன்ற மலையாள கார்ட்டூனிஸ்டுகள் பிடிக்கும். மஞ்சுளா பத்மனாபனும் மிக நல்ல கார்டூனிஸ்ட். ஆர்கே லட்சுமணன் is too literal for me.
இரண்டாவது கேள்வி பற்றி - சில காலமாக நானே யோசித்துக்கொண்டிருந்தேன். இப்படி யோசித்து யோசித்து செயல்படுத்தாமல் விட்டது ஏகப்பட்டது இருக்கிறது. வெட்கமாகத்தான் இருக்கிறது. நண்பர்கள் அறிவார்கள். நிச்சயமாக முதலிடம் மற்றுமல்ல ஒரே இடம் அதற்குத்தான்.

====================================
4. மொழி என்பதே மனிதன் தன் எண்ணத்தை பிறருக்கு சொல்ல ஏற்படுத்தியதுதான். எண்ணத்தை வெளிப்படுத்த அடுத்தவருக்கும் புரியும் வண்ணம் அது சைகை மொழியானாலும் உபயோகிப்பதே சரி. அமெரிக்காவில் எந்த மொழி பேசுபவரானாலும் ஒரு அவசர நிலை வரும் போது அவருடைய மொழியில் எப்படி பாதுகாத்துக்கொள்வது என்பதையும் ட்ராமா(trauma) நிலையில் அந்த மொழியில் பேசுவதே பலன் என்று கருதி பல மொழிபெயர்ப்பாளர்கள் உதவியை நாடி பல திட்டங்களை தமிழ் உட்பட பல மொழிகளில் மொழிபெயர்க்கிறார்கள். இது என் மொழி இல்லை என்று பாகுபாடு இல்லாமல் என் ஊருக்கு வந்து வரி செலுத்தும் உன்னை கவனிப்பது என் கடமை என்று கவனமாக (to also avoid law suit) இருக்கிறார்கள். ஆனால் நம் ஊரில் இந்த அணுகுமுறை இல்லாதது ஏன்?
=======================================

நாம் சுதந்திரம் அடைந்து இத்தனை வருடங்களாகியும் அரசு நம்மிடம் அந்நிய மொழியில்தான் பேசுகிறது. நமது சட்டங்கள், நமது தகவல் சாதனங்கள், அரசு இயந்திரம் அனைத்தும் ஒரு குடிமகனுக்கு அந்நியமாகவே இருக்கின்றன. சமீபத்தில் தமிழகத்தில் நீதிமன்றதில் தமிழ் மொழியாக இருக்கவேண்டுமென்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. இயல்பாக நடக்கவேண்டிய எதையும் ஏதோ தேச எதிர்ப்பு இயக்கம்போல நடத்தித்தான் பெறவேண்டும் என்பது நமது நாட்டின் சாபம் போலும். ஆயிரக்கணக்கான் வருட பழைமையான மொழிகள் தமிழ், கன்னடம், தெலுங்கு இப்படி பல இருக்கும் நமது நாட்டில் ஏன் இந்த நிலைமை என்று எனக்குப் புரியவில்லை.
நமது நாட்டில் விற்கப்படும் அனைத்து உணவு, மருந்து பொருள்களுக்கும் உறையில் அந்தந்த மாநில மொழிகளில் குறிப்புகள் இருக்கவேண்டும் என சட்டமியற்றுவது கடினமா? ஏன் இதை நாம் இன்னும் செய்யாமல் இருக்கிறோம். முதல் படியாக இதைச் செய்தால் கூடப் போதும். பல காரியங்களை மாநில அளவிலும் செய்யலாம். ஆதார சுகாதார நிலையங்கள், மதிய உணவுக் கூடங்கள் என ஊடுறுவி இருக்கும் அரசின் அமைப்புகளை மாநில அரசுகள் செய்தித் தொடர்புக்கும், சிறு நலக் கையேடுகளை பரப்புவதற்க்கும் பயன்படுத்தலாம். முன்பு பயன்படுத்தியும் இருக்கின்றன. ஆனால் போதாது என்பதே இன்றைய நிலை. தமிழகம் போன்ற மாநிலங்கள் பரவாயில்லை என்றே சொல்ல வேண்டும். அமைப்பே இல்லாத பல மாநிலங்களில் நிலைமை மிக மோசம்.

============================
5. விளையாட்டு வீரர்கள், திரைப்பட தொழிலில் இருப்பவர்களுக்கு இருக்கும் புகழும் பொருளும், அறிவியல் துறைக்கு இல்லாமல் இருப்பது உங்களை எப்போதாவது வியக்க வைத்திருக்கிறதா?(இது அமெரிக்காவிற்கும் பொருந்தும்) ஒரு மூறை ராஜீவ் பிரதமராக இருந்த போது நேரிடயாகவே AICC யில் எங்களிடம் நாங்கள் ஏன் ஆராய்ச்சியாளார்களை கண்டு கொள்ள வேண்டும். கடைசியில் தேர்தல் அன்று வாக்கு போடக்கூட வரமாட்டீர்கள் என்று சொன்னது நினைவுக்கு வருகிறது. அறிவியல் ஆராய்ச்சியாளர்களால் வாக்கு வங்கியை மாற்ற முடியாத நிலைதான் காரணமா?
==========================

அறிவியல் துறைக்கு புகழும் பொருளும் இல்லை என்பது உண்மைதான். ஆனால் அது எனக்கு வியப்பாக இல்லை. அறிவியல் என்பது ஒரு இயல்பான மனிதத் தன்மை என்பதை நாம் மறந்துவிடவே பயிற்றுவிக்கப் ப்ட்டுள்ளோம். அறிவியல் படித்தல் ஒரு சிலரே செய்யும் ஒரு வினோதமான வழக்கம், பொதுவான மனித இயல்புக்கு மாறான ஒன்று என்று ஒரு கற்பிதம். எல்லாக் குழந்தைகளும் ஓயாது சூழலை அறிந்துகொள்ள கேள்வி கேட்கின்றன, எல்லாக் குழந்தைகளும் படங்கள் வரைகின்றன, பாட்டுப் பாடுகின்றன, விளையாடித் தீர்க்கின்றன. ஒரு மனிதக் குழந்தைக்கு இயல்பானது எதுவும் வளர்ந்த மனிதனுக்கும் இயல்பானதுதான். வளர வளர இவற்றில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதில் மட்டுமே சிறக்கவேண்டும் என்பது மனித இயல்புக்கு முற்றிலும் மாறானது. எந்த வயதிலும் பாட்டுப் பாடுபவர்களாகவும், படம் போடுபவர்களாககவும், கதை சொல்பவர்களாகவும், மீண்டும் மீண்டும் அனத்தையும் அறிந்து கொள்ள கேள்விகள் கேட்பவர்களாகவும் நாம் அனைவரும் இருப்பதே மனிதனின் இயல்பான நிலை. இதை அனைவரும் புரிந்து கொள்ளும் போது ஏதாவது ஒரு துறையில் சிறந்தவர்களை மட்டுமே உயர்த்திப் பிடிப்பதும் முட்டாள்கள் போல் ரசிகர் மன்றம் வைப்பதும் குறைந்து போகும். ஆனால் சிலவற்றை கேளிக்கை என்றும் மற்றதை ஒரு சீரியஸ் விஷமென்றும் தோற்றப் படுத்துவதாலேயே இந்த நிலை வந்திருக்கிறது. அறிவியலில் இல்லாத கேளிக்கையா? ஒரு நல்ல அறிவியல் கோட்பாட்டை புரிந்துகொள்ளும் போது வரும் போதை (கள்வெறி எனும் பாரதியின் வார்த்தை!) க்கு ஈடாக எதைச் சொல்ல முடியும்? அறிவியல் என்பது விளையாட்டுப் போல புத்துணர்ச்சி தருவது, பாடலைப் போல கிறங்க அடிப்பது, ஒரு கதையைப் போல உறவாடக்கூடியது ஒரு ஓவியத்தைப் போல மிதக்க வைப்பது என்ற ஒரு உணர்வை நாம் நம் இளைஞர்களுக்கும் வளர்ந்தவர்களுக்கும் உணரச் செய்ய தவறிவிட்டோம். அறிவியல் கடினம் என்பது மற்றொரு மாயை. எல்லாமே கடினம்தான். நன்றாக சமையல் செய்வது கூட மிகக் கடினமான ஒரு வேலைதான். எல்லா அம்மாக்களும் செய்வதால் சமைப்பது என்பதை மலினப் படுத்த முடியாது. இதில் பீடி சுழற்றும் நடிகர்களும், மலைகளை, காடுகளை ஆன்மீக ரியல் எஸ்ட்டேட்டாக மாற்றி மோட்சப் பிலிம் காட்டும் இன்கார்பரேட்டட் சாமியார்களும் படு பிரபலமாக இருப்பதில் நமக்கென்ன நட்டம் என்று இருக்கவேண்டியதுதான்.

அறிவியல் துறைக்காரர்கள் பொருள் இன்றி இருப்பது பற்றி: சென்ற நூற்றாண்டின் துவக்க ஆண்டுகளிலும் நடந்த இயல்பியல் புரட்சி அறிவியலுக்கு ஒரு பெரிய முடுக்கத்தைக் கொடுத்திருந்தது. "so young but not yet famous?" என்பது போல இளைஞர்கள் ஈர்க்கப்பட்டு அறுபதுகளிலும் எழுபதுகளிலும் கணிதம், இயல்பியல் படித்தவர்கள் ஏராளமாக அமெரிக்காவில் இருந்தனர். ஆனால் வக்கீல்கள், முகைமையாளர்கள் போல இவர்களால் கோடீஸ்வரர்கள் ஆக முடியவில்லை. "if you are so smart, why are you not rich?" என்பது ஒரு உறுத்தும் கேள்வியாக இவர்கள் முன் வைக்கப் பட்டபோது சில துகள் இயல்பியல், அண்ட இயல் போன்றவற்றைப் படித்த இளைஞர்கள் கடுப்பாகி நியூயார்க் பங்குச் சந்தையில் நுழைந்தனர். உயர்கணித உதவிகொண்டு இன்று analytics என்று டிவீ18 இல் கூட உதிர்க்கப்படும் பல வழிமுறைகள் இவர்களால் கணினிகளின் உதவி கொண்டு எழுபதுகளில் வகுக்கப் பட்டவைதான். "the revenge of the nerds" என்று அப்போது அதை அழைத்தார்கள். இன்று அரை சென்ட் ஆர்பிட்ராஜுக்காக ஹாங்காங்கிலிருந்து லண்டனுக்கும், மாஸ்கோவிலிருந்து பாரிசுக்கும் கோடிக்கணக்கான டாலர் மணித்துளிகளில் மாறுகின்றது என்றால் அந்த உயர்கணிதத்தின் மாடல்கள் தான் இவற்றுக்கு முதுகெலும்பு. எண்பதுகளின் இறுதியில் Proceedings of Royal Society இல் ஒரு சிறப்பு மலரே பங்குச் சந்தைக்கான கணிதம் பற்றி வந்தது நினைவிருக்கிறது. பணம் சம்பாதிக்க வேண்டுமானால் அதுவும் பங்குச் சந்தை, போன்றவற்றில் விளையாட வேண்டுமானால் ஓரளவு கணிதமும், தைரியமும் போதும். எல்லோருக்கும் அதில் விருப்பமும் ஆர்வமும் இல்லை என்பதுதான் உண்மை. அந்தப் பக்கமெல்லாம் போகவிடாமல் தடுத்தாட்கொள்ளும் அறிவியலின் இணையற்ற 'கிக்' இன்னொரு காரணமாக இருக்கலாம். சரசுவதியைப் போல ஒரு மோசமான அடிமைப் படுத்தும் எஜமானியை யாராலும் காட்ட முடியாது.================


எனது கேள்விகள் வளவு இராம.கி அவர்களுக்கு:


1. நீங்கள் சென்ற கோவில்களிலேயே தமிழரின் வரலாற்றில் ஒரு பெரும் தாக்கத்தத்தை ஏற்படுத்தியது என நீங்கள் கருதுவது எது? ஏன்?

2. திராவிட இயக்கத்தின் தமிழ்ப் பங்களிப்பை வரலாற்று நோக்கில் எப்படி கணிப்பீர்கள். ஒரு தமிழறிஞரின் பார்வையில் கேட்கிறேன். சிறுபத்திரிக்கை இயக்கத்தினரின் 'இலக்கிய' மதிப்பீடுகளைப் பற்றி இதில் கணக்கில் கொள்ளாமல் கணிக்கவும்.
(அல்லது)
தமிழருக்குத் தம் மொழியின் மீது ஏன் இத்தனை வெறுப்பு? விளையாட்டாகக் கேட்கவில்லை. காண்பதைத் தான் கேட்கிறேன்.

3. அறிவியல் தமிழ் என்று நிறையப் பேசுகிறோம். அரசு ஏன் எதுவுமே இப்போதெல்லாம் இதற்காக செய்வதில்லை. ஒரு கலைகளஞ்சியத்தை இற்றைப்படுத்த முயற்சியாவது இருக்கிறதா? இணையம் இதில் பங்களிப்பது என்பது எந்த அளவு நடைமுறையில் சாத்தியம்?

4. உங்களுக்குப் பிடித்த எம்ஜீஆர் படம் எது, ஏன்? . உங்களுக்குப் பிடித்த ஹாலிவுட் படம் எது, ஏன்?

5. உங்கள் சிறுவயது, நடுவயது, தற்போதைய பொழுதுபோக்குகளைப் பற்றிக் கொஞ்சம் கூறவும்.

==========

Thursday, March 01, 2007

வரி, எழுத்து, சேமித்தல்.

வரி, எழுத்து, சேமித்தல்.
------------------------------

எழுத்து என்பது நம் எண்ணங்களைச் சேர்த்துவைக்க, நாம் இல்லாத இடத்திலும் மற்றவர்களுக்கு அறியப்படுத்த என மனிதன் கண்டுபிடித்தது. களிமண் பலகைகள், குகைச் சுவர்கள், கற்பலகைகள், பனை ஓலை, விலங்குகளின் தோல், மரப்பட்டை, காகிதம், கணினி வட்டுகள், தற்போது குட்டிக்குட்டி வில்லைகள், யூஎஸ்பீ விரல்சேர்ப்பிகள் எனப் பல வடிவங்களில் சொற்களை நாம் சேகரித்து வருகிறோம்.
இவை அனைத்தும் காலத்தால் அழியக்கூடியவை தான். களிமண் பலகைகள் உடைகின்றன. பனை ஓலைகள் நசிகின்றன, தோல்கள் பட்டுப்போகின்றன. காகிதம் பூச்சிகளால் அரிக்கப்படுகிறது. குகைகளையும், கற்பலகைகளையும் நாம் எல்லோரும் பயன்படுத்த முடிவதில்லை. இந்த (சென்ற) நூற்றாண்டின் கணினிக் கண்டுபிடிப்புக்குப்பின் ஆஹா மனிதனின் அனைத்துச் எழுத்துகளையும் இனி கணினியில் டிஜிடைஸ் செய்து சேகரம் செய்துவிட்டால் விட்டது தொல்லை என்று உலகம் முழுவதும் உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதிலும் இருக்கிறது பிட்ராட் (வில்லியம் கிப்ஸன் நினைவுக்கு வரவேண்டும்) எனப்படும் பிட்அழுகல். எழுபதுகளில் அல்லது எண்பதுகளில் கணினியைப் பயன் படுத்தியவர்கள் யாராவது நண்பர்கள் இருந்தால் அவர்களது பழைய கணினித் தரவுகளை படிக்கக்கூடிய படிப்பான்கள் தற்காலத்திய கணிகளில் இருக்கின்றனவா எனப் பார்க்கவேண்டும். (ஐபிஎம் 370 இல் ஃபோர்ட்ரான் நிரல் ஓட்டிய ஹோலரித் அட்டைகள் சில மிச்சம் வைத்திருக்கிறேன். சும்மா புத்தகம் படிக்கும்போது பக்க நினைவுறுத்தியாகப் பயன்படுத்த). இப்போது நாம் பெரும் தரவு மலைகளை கணினிகளில் சேகரித்து, சேமிக்க டேப்புகளையும், கடினவட்டுஅடுக்குகளையும் பயன்படுத்துகிறோம். இவை பெரும்பாலும் காந்தத்துகள்களை அடுக்கிச் சீரமைத்து சேர்க்கும் நுட்பமாகும். நம் வீடுகளிலும், அலுவலகங்களிலும் இருக்கும் தற்போக்கான மின்காந்தப் புலம்களாலோ, நீர், உராய்வு, தவறி வீழ்தல் போன்ற எளிதில் பெறப்படும் காரணிகளாலோ இந்த காந்தத் துகள் கட்டமைப்பு கலைந்து போக சாத்தியங்கள் ஏராளம். ஒரு நூறுவருடங்களுக்குமேல் இவை தாங்காது என்பதே இன்றைய நிலை.
ஜப்பானில் ஒரு ஆய்வகத்தில் பாக்டீரியாகளின் டிஎன்ஏயில் தரவுகளை குறிஏற்றம் செய்து சேகரித்து வைக்கலாம் என கண்டுபிடித்திருக்கிறார்கள் . டிஎன் ஏ இல் சேகரிப்பதால் தலைமுறை தலைமுறையாக இந்த பாக்டீரியாக்கள் பல்கிப் பெருகும்போது இந்த குறியேற்றப்பட்ட தரவு பதிவெடுக்கப் பட்டுக்கொண்டே இருக்கும். அதனால் ஆயிரக்கணக்கான (!) வருடங்களுக்கு இந்தத் தரவுகளுக்கு அழிவே இல்லாமல் இருக்க சாத்தியங்கள் உண்டு. முதன் முதலில் நம் எல்லோருக்கும் நன்கு புரிந்த 'E=MC^2 1905' என்பதை குறியேற்றியிருக்கிறார்களாம். வாழ்க.

எல்லாம் சரி, நம்மால் முடிந்ததெல்லாம் இ.தி -தான்.

"....என்னடா இது, புதுக்கவிதையிலே காவியம் படைக்கலாம்னா சொற்குவை இத்தனை குறைவா இருக்குதே. பேசாம ஹைக்கு நாலு பாடிடலாமா. "


--