Thursday, March 01, 2007

வரி, எழுத்து, சேமித்தல்.

வரி, எழுத்து, சேமித்தல்.
------------------------------

எழுத்து என்பது நம் எண்ணங்களைச் சேர்த்துவைக்க, நாம் இல்லாத இடத்திலும் மற்றவர்களுக்கு அறியப்படுத்த என மனிதன் கண்டுபிடித்தது. களிமண் பலகைகள், குகைச் சுவர்கள், கற்பலகைகள், பனை ஓலை, விலங்குகளின் தோல், மரப்பட்டை, காகிதம், கணினி வட்டுகள், தற்போது குட்டிக்குட்டி வில்லைகள், யூஎஸ்பீ விரல்சேர்ப்பிகள் எனப் பல வடிவங்களில் சொற்களை நாம் சேகரித்து வருகிறோம்.
இவை அனைத்தும் காலத்தால் அழியக்கூடியவை தான். களிமண் பலகைகள் உடைகின்றன. பனை ஓலைகள் நசிகின்றன, தோல்கள் பட்டுப்போகின்றன. காகிதம் பூச்சிகளால் அரிக்கப்படுகிறது. குகைகளையும், கற்பலகைகளையும் நாம் எல்லோரும் பயன்படுத்த முடிவதில்லை. இந்த (சென்ற) நூற்றாண்டின் கணினிக் கண்டுபிடிப்புக்குப்பின் ஆஹா மனிதனின் அனைத்துச் எழுத்துகளையும் இனி கணினியில் டிஜிடைஸ் செய்து சேகரம் செய்துவிட்டால் விட்டது தொல்லை என்று உலகம் முழுவதும் உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதிலும் இருக்கிறது பிட்ராட் (வில்லியம் கிப்ஸன் நினைவுக்கு வரவேண்டும்) எனப்படும் பிட்அழுகல். எழுபதுகளில் அல்லது எண்பதுகளில் கணினியைப் பயன் படுத்தியவர்கள் யாராவது நண்பர்கள் இருந்தால் அவர்களது பழைய கணினித் தரவுகளை படிக்கக்கூடிய படிப்பான்கள் தற்காலத்திய கணிகளில் இருக்கின்றனவா எனப் பார்க்கவேண்டும். (ஐபிஎம் 370 இல் ஃபோர்ட்ரான் நிரல் ஓட்டிய ஹோலரித் அட்டைகள் சில மிச்சம் வைத்திருக்கிறேன். சும்மா புத்தகம் படிக்கும்போது பக்க நினைவுறுத்தியாகப் பயன்படுத்த). இப்போது நாம் பெரும் தரவு மலைகளை கணினிகளில் சேகரித்து, சேமிக்க டேப்புகளையும், கடினவட்டுஅடுக்குகளையும் பயன்படுத்துகிறோம். இவை பெரும்பாலும் காந்தத்துகள்களை அடுக்கிச் சீரமைத்து சேர்க்கும் நுட்பமாகும். நம் வீடுகளிலும், அலுவலகங்களிலும் இருக்கும் தற்போக்கான மின்காந்தப் புலம்களாலோ, நீர், உராய்வு, தவறி வீழ்தல் போன்ற எளிதில் பெறப்படும் காரணிகளாலோ இந்த காந்தத் துகள் கட்டமைப்பு கலைந்து போக சாத்தியங்கள் ஏராளம். ஒரு நூறுவருடங்களுக்குமேல் இவை தாங்காது என்பதே இன்றைய நிலை.
ஜப்பானில் ஒரு ஆய்வகத்தில் பாக்டீரியாகளின் டிஎன்ஏயில் தரவுகளை குறிஏற்றம் செய்து சேகரித்து வைக்கலாம் என கண்டுபிடித்திருக்கிறார்கள் . டிஎன் ஏ இல் சேகரிப்பதால் தலைமுறை தலைமுறையாக இந்த பாக்டீரியாக்கள் பல்கிப் பெருகும்போது இந்த குறியேற்றப்பட்ட தரவு பதிவெடுக்கப் பட்டுக்கொண்டே இருக்கும். அதனால் ஆயிரக்கணக்கான (!) வருடங்களுக்கு இந்தத் தரவுகளுக்கு அழிவே இல்லாமல் இருக்க சாத்தியங்கள் உண்டு. முதன் முதலில் நம் எல்லோருக்கும் நன்கு புரிந்த 'E=MC^2 1905' என்பதை குறியேற்றியிருக்கிறார்களாம். வாழ்க.

எல்லாம் சரி, நம்மால் முடிந்ததெல்லாம் இ.தி -தான்.

"....என்னடா இது, புதுக்கவிதையிலே காவியம் படைக்கலாம்னா சொற்குவை இத்தனை குறைவா இருக்குதே. பேசாம ஹைக்கு நாலு பாடிடலாமா. "


--

4 comments:

ரவி ஸ்ரீநிவாஸ் said...

டிஎன் ஏ இல் சேகரிப்பதால் தலைமுறை தலைமுறையாக இந்த பாக்டீரியாக்கள் பல்கிப் பெருகும்போது இந்த குறியேற்றப்பட்ட தரவு பதிவெடுக்கப் பட்டுக்கொண்டே இருக்கும்
no chance of mutation ?

arulselvan said...

ரவி,
மியூடேஷன் இருக்கும். அதற்காக ஒன்றுக்கு மேற்பட்ட முறை அதே சொல்லை டிஎன்ஏ ல் பதிக்கலாம் என்று கருதுகிறார்கள். இது இன்னும் நடைமுறையில் செயல்படுத்தப்டும் நுட்மமாகத் தெரியவில்லை. ஒரு feasibility demo என்ற அளவில் நமக்கு சுவாரசியமாக இருக்கிறது.
அருள்

Venkat said...

அருள், நான் இந்த ஆராய்ச்சியைப் படித்தபொழுது என்னைப் பெரிதும் கவரவில்லை. பல்படியாக்கத்தால் தரவின் நிரந்தரம் உறுதிச் செய்யப்படும் என்பது உண்மை என்றாலும், உயிர்த்தொகுதிகளை இதற்குப் பயன்படுத்துவது மிக மிகச் சிக்கலானது.

மாறாக, வழமையான காந்தச் சேமிப்புகளிலேயே பல்படியாக்கம் சாத்தியம். உதாரணமாக என் வீட்டிலேயே எம்.பி 3 பாடல்கள் CD (50 cents/GB), DVD (10 cents/GB), Hard disk (40 cents/GB) அளவிற்கு வந்துவிட்டதால் பல்வேறு வடிவங்களில் என் இசைக் கோப்புகள் கிடக்கின்றன. 80 கிகாபைட் அளவுள்ள என் முழு இசைக்கோப்புகளையும் ஒன்றுக்கு மேற்பட்ட கடினவட்டுகளில் (வட்டுக்கு 32 டாலர்கள்தான் செலவு, இது இரண்டு சிடிக்களின் மொத்த விலை). கூடவே, ஜப்பான் காலத்து மினிடிஸ்க், பழைய வீடியோக்கள் மினி டேப் என்று பல டிஜிட்டல் வடிவங்களில் இருக்கின்றன. எல்லா டிஜிட்டல் சேமிப்பு வடிவங்களிலும் பிழைதிருத்த பிட்டுகள் கூடவே உண்டு என்பதால் பிட் ஒழுகல் நடைமுறை நிகழ்தகவு மிக, மிகக் குறைவு.

மாறாக, பாக்டீரியங்கள் புறக்காரணிகளின் மிகச் சிறிய மாற்றத்திலேயே மரபுமாற்றத்திற்கு உள்ளாகின்றன.

arulselvan said...

வெங்கட்,
ஒரு குட்டி எழுத்துச் சரடையாவது ஒரு தரவாய் டிஎன்ஏ வில் எழுத, மீண்டும் அதைப் படிக்க, தேவைப்படும் நுட்பம் கையடக்க அளவில் அதுவும் on the fly செய்வதற்கேற்ப கண்டுபிடிக்கப் படும் என்ற நம்பிக்கை எனக்கும் இல்லை. ஒரு அறிவியல் முயற்சி என்ற அளவில் சுவாரசிய்மானது இல்லையா.
அருள்