Sunday, July 29, 2007

கார்டூன்கள் - சில கருத்துகள்...

-

சென்ற இடுகையின் மிக நீஈஈஈஈண்டுவி ட்ட ஒரு பின்னோட்டம் அடுத்த இடுகையின் முன்னுரையாக இங்கு:


>> கார்ட்டூன் வரைவதும் படம் வரைவதும் ஒன்றா?

நம் எல்லோருக்குமே தெரியும். நிச்சயம் வேறு வேறுதான். ஆனால் இங்கு கார்ட்டூன் பற்றி நான் எழுதியது அவற்றையே நிறைய என் பதிவில் போட்டிருப்பதால் - எடுத்துக்காட்ட உதவியாய். பலவகைப் படங்கள் இப்பதிவில் இருக்கின்றன, இல்லஸ்ட்ரேஷன் போலவும். ஆனால் அவை குறைவு. மேலும் அவை பெயின்ட் மட்டும் கொண்டு வரையப்பட்டவை அல்ல. அதனால் இந்த இடுகைக்கு மட்டும் கார்ட்டூன் = வரைதல் சரியா.

பதிவிற்கு வெளியில் பேசினால் வரைகலை என்பதே பெரும் நிலப்பரப்பு. ஒரு ஓவியத்தை எளிதாக அணுக வரைதல் + தீற்றல் (sketching+painting) எனப் பிரிக்கலாம். சிலர் வரைதலில் சிறப்பாக இருப்பார்கள். சிலர் தீற்றலில். ஆனால் வரைதல்தான் அடிப்படை என்பதிலிருந்து மாறி நவீன ஓவியம் பல ஓவியர்களின் முயற்சிகளுக்குப் பின் வெறும் தீற்றலாகவும் இருக்கலாம் என்ற முறைக்கு கடந்த மூன்று நூற்றாண்டுகளாக நகர்ந்து வந்துவிட்டது. இப்போது வரைதல் ஒரு stylised/stylish genre. கருப்பு வெள்ளைப் படங்களைப் போல. தனிப்பட்டமுறையில் பேப்பர், துணி இவற்றில் நான் ஒரு வரைவன். நல்ல தீற்றன் அல்ல. ஆனால் கணினி தீற்றலை நன்கு கற்றுக்கொள்ள பொறுமை இல்லாதிருக்கும் என்னைப்போன்ற சோம்பேறிகளுக்கும் நல்ல தீற்றும் சாத்தியத்தை அளித்திருக்கிறது. :-)


>> கார்ட்டூன் என்பது வரைதலுடன் நின்று விடுகிறதா அல்லது வரைதலில் துவங்குகிறதா?

கார்ட்டூனில் வெறும் வரைதல் மட்டுமே இருக்கும் மொழியில்லாக் கார்ட்டூகள் உண்டு. வரைதலில் துவங்கி மொழியைச் சேர்த்து முழுமை பெரும் கார்ட்டூன்கள். மொழியே இல்லாமல் வரைதல் மட்டும் கொண்டு ஆனால் மொழியின் அர்த்தத்துடன் இருக்கும் விஷுவல் பன்னிங் வகை கார்ட்டூன்கள் உண்டு. Punning is the lowest form of humour - இல்லையா; இந்தகாரணத்துக்காகவே ஹிந்துவின் கேசவ் சில சமயம் கொஞ்சம் எரிச்சலூட்டக்கூடிய கார்ட்டூனிஸ்ட்.


>> வரையத் தெரிந்தால் கார்ட்டூனிஸ்ட் ஆகிவிடலாமா? கார்ட்டூன் வரைய மேட்டர் பிடிப்பது எப்படி?

வரையத் தெரிந்தால் மட்டுமே கார்ட்டூனிஸ்ட் ஆக முடியாது இல்லையா. சற்றே அபத்தத்தை உணரும் மனநிலை வேண்டும். சற்று அபத்தம், சற்று அனைத்து அதிகார எதிர்ப்பு, சற்று எள்ளல் தன்மை, சற்று முட்டாள்தனம் எல்லாம் இயல்பாக கலந்தால்தான் நல்ல கார்ட்டூன். மேட்டர் விஷயம் ரொம்ப சுலபம். நாம் வாழும் அனைத்துக் கணங்களும், அனைத்து நிகழ்வுகளும் முன்னே சொன்ன அபத்தம், எதிர்ப்பு,.. இன்னபிற கூறுகளுடன்தான் இருக்கின்றன அல்லவா. அதை உணரத் தெரிந்தால் போதும். என் இந்தப் பதிவில் நிறைய அறிவியல் தொடர்பான கார்ட்டூன்கள் இருக்கின்றன. அவை வேண்டும் என்றே ஒரு சீரியஸான அறிவியல் பார்வையை உடைத்து எனக்கு நானே உள்வாங்கிக்கொள்ள நான் பயன்படுத்தும் வழிமுறைகள். அந்த வகையில் அவை மிகவும் பெர்சனல் எனக்கொள்ளலாம். மற்றவை பல வகையில் playing to the gallery. தப்பில்லை இல்லையா. :-)


>> படத்தை மறைத்துவிட்டு வாசகத்தைப் படித்தாலோ அல்லது வாசகத்தை மறைத்து விட்டு படத்தைப் பார்த்தாலோ கார்ட்டூன் விளங்கக் கூடாது என்று ஒரு இலக்கணத்தை, குமாரி கமலாவின் வீட்டுக்காரரும், மால்குடிக்காரரின் இளையருமான லெச்சுமண் ஒரு முறை சொன்னார், அது பற்றி உங்கள் கருத்து என்ன?

அவரின் கார்ட்டூன்களில் இருந்தே இதற்கு மறுதலைகளைக் காட்டலாம். எழுபதுகளில் இருந்து அவரது கார்ட்டூன்களை பார்த்துக்கொண்டே இருக்கிறேன்.
அவரது ஒரு பேட்டர்ன் பார்க்கலாம்:
ஒரு இடிந்த கூடிச் சுவர், கீழே தரையில் கிழிந்த துணியும், கலைந்த தலை,தாடியுடன் ஒரு ஏழை ஒருக்களித்து தரையில் கிடக்கிறான். பின்னணியில் ஒரு குடிசை. பக்கத்தில் ஒரு மாங்கரெல் நாய் ... இரண்டு பேண்ட், மூக்குக் கண்ணாடி போட்ட மீசையில்லாத அரசு அலுவலர் இருவர்.
கீழே இரண்டு நாட்களுக்கு முன் அரசு அறிவித்த திட்டத்தைப் பற்றி ஒரு கிண்டல் வாக்கியம். இதுதான் டெம்ப்ளேட். இந்தப்படத்தை வைத்து கடந்த முப்பது வருஷத்தில் அவர் ஒரு ஐயாயிரம் கார்ட்டூன் போட்டிருப்பாரா? இந்த கிரியேட்டிவிட்டி எனும் கலைஞர்களின் சிருஷ்டித்தன்மை பற்றி அறிவியலில் சில முக்கியமான கருத்துப் பரிமாற்றங்கள் உண்டு. அவற்றை பரவலாக்க வேண்டும். தத்துவ பூச்சாண்டி காட்டுவதற்காக அல்ல. இந்த சிருஷ்டித்தன்மைக்கும் ஒரு இரைதேடும் எறும்பின் தேடலுக்கும் இருக்கும் வித்தியாசங்களைப் (அப்படி ஏதாவது இருந்தால்) புரிந்து கொள்ள.


-

Friday, July 27, 2007

இரண்டு நிமிடத்தில் கார்ட்டூன் போடுவது எப்படி?

(படிக்கப் பொறுமை இல்லை என்றால் கடைசியில் ஒரு குட்டி வீடியோ சுட்டி உள்ளது. பாருங்கள்)


பெயின்ட் செயலி பயன்படுத்தி வரைகலை போட்டி நடக்கிறது. புதிதாக பழகும் நண்பர்களுக்கு இந்தச் செயலியின் மூலம் என்னென்ன சாத்தியங்கள் என்று காட்ட என்னுடைய பழைய இடுகைகளுக்கு சில சுட்டிகள் கொடுத்திருந்தேன். இனி நான் கற்றுக்கொண்டது - எனக்குத் தெரிந்த அளவு:


பெரும்பாலும் நான் இயல்வகை (ரியலிச) ஓவியங்கள் வரைய வேண்டுமானால் பெயின்ட் செயலியை பயன்படுத்துவது இல்லை- இணையத்தில் அதிவேகத்தில் கார்ட்டூன் போட மட்டும்தான். மொத்தம் 5-10 நிமிடங்களுக்கு மேல் எடுக்கக்கூடாது. ஒரு இடுகையை எழுதி இடுவதைவிட இது வேகமான வழி என்பதால் பல சமயங்களில் ஒரு கிறுக்கு கிறுக்கி சொல்ல வந்ததை இட்டுவிட்டு ஓடிவிடுவேன்.

இங்கு நான் பாவிக்கும் சில வழிமுறைகளைச் சொல்லுகிறேன். யாருக்கேனும் பயன்பட்டால் மகிழ்ச்சி.

அ. கணினி எலியை ஒரு வரைகோலாக பயன்படுத்துவது பற்றி:

1. இதுவே போதும். பழகப் பழக நன்றாக வரும். சாதாரண ஒரு எலியே போதும். லேசர் எலியோ, பிற விலை அதிகமான எலிகளோ தேவையில்லை.
2. மேசை பரப்பு போன்ற எத்தகைய பரப்பும் சரிதான். ஒரு கட்டி அட்டை போட்ட 80 பக்க நோட்டுப் புத்தமே சிறந்த எலித்தளம்.
3. முதலிலேயே பென்சில்- தாள் கொண்டு வரையத்தெரிந்தால் நலம். எவ்வளவு நன்றாக உங்களால் பென்சிலில் வரையமுடியுமோ, அவ்வளவுக்கு எலியில் கற்றுக்கொள்ள நேரம் குறையும்.
4. தப்புத் தப்பாக வந்தால் கவலைப் படாதீர்கள். பழகப் பழக வரும். நீங்கள் செய்த தவறுகளைக் கண்டு பிடிக்க மற்றவருக்கும் வரையத் தெரிய வேண்டும். பெரும்பாலும் எல்லோரும் நல்லா இருக்கு என்றுதான் சொல்வார்கள். :-)
5. நன்றாக பென்சில் கொண்டு வரையத் தெரிந்தவரானால் ஒரு வரைதளம் - மின்னெழுதி (டேப்லெட்) வாங்கலாம். விலை அதிகம். வாங்காமல் இருப்பது நல்லது.

ஆ. தவறுகள் செய்வது தவறல்ல. அதை எத்தனை விரைவில் எளிதாகக் களைகிறோம் என்பதுதான் முக்கியம். அதற்காக ஒரு வீடியோ இறுதியில் உள்ளது. இரண்டு நிமிடம் செய்த வேலையில் எத்தனைமுறை தவறி அதை சரி செய்திருக்கிறேன் என்று பாருங்கள். (இது நாலு நிமிடம் ஓடும். ஆனால் 2 நிமிடத்தில் போட்டதுதான்). தவறுகளை பட்டியலிட்டுள்ளேன்.

இ. பொதுவாக ஒரு கார்ட்டூன் போடுவதில் இருக்கும் படிகள்:

1. விரைவான வரைகோட்டு கீற்றுதல்
2. பின்னால் வண்ணங்களை வெள்ளமாக நிரப்பப் போகிறோம். அதாவது ஒரு பரப்பை ஒரே நிறம் கொண்டு ஒரு சொடுக்கில் நிரப்புதல். இதை "ஃபிளட் ஃபில்" என்பார்கள். இதில் ஒரு மூடிய கோட்டுப் பரப்பை செயலி நிரப்பிவிடும்.
3. ஒரே வண்ணம் நிரப்பவேண்டிய மூடிய கோட்டுப் பரப்புகள் மூடி இருக்கின்றனவா என சோதித்தல். காட்டாக இந்த வீடியோவில் முகம், சட்டை, தலை முடி, மூக்குக் கண்ணாடி போன்றைவை.
4. அவை மூடிய கோட்டுப்பரப்புகளாக இல்லாவிட்டால் அவற்றை சிறு கோடிகளைக் கொண்டு மூடுதல்.
5. நிறங்களை நிரப்புதல்.
6. தவறுகளைக் களைதல் - அநேகமாக சிறு கோடுகளால் மூடுதல். இதற்கு உருப்பெருக்கியைப் பயன்படுத்துங்கள்.
7. மீண்டும் நிறங்களால் நிரப்புதல்.

திரும்பத் திரும்ப 2-7 படிகளை செய்தல். அவ்வளவுதான்.

ஈ. மீண்டும் நினைவு படுத்த:

1. வேகமாக வரைதல்
2. மூடிய பரப்புகளுக்காக சோதித்தல்
3. வண்ணம் நிரப்புதல்
4. உருப்பெருக்கி மூடா பரப்புகளை மூடுதல்
5. மீண்டும் வண்ணம் நிரப்புதல்.


உ. வண்ணங்களைப் பற்றி:

பின்னால் இன்னொருமுறை எழுதுகிறேன்.
முடிந்தவரை குறைந்த எண்ணிக்கையில் பயன்படுத்துங்கள்.
மங்கலான வண்ணங்களைப் பயன்படுத்துங்கள்.

நிறைய வண்ணங்களைப் பயன்படுத்தவும், பளிச்சென்ற வண்ணங்களைப் பயன்படுத்தவும் ஒரு ஒழுக்கம் வேண்டும். அது பழகப் பழக வரும்.http://media.putfile.com/show1-40


-


-

-

Wednesday, July 25, 2007

பாடு -> பொருள்

-


கற்றதனாலாய பயனென்? கொல்
கொல் என ஆயுதம் செய்தலா
வெற்றிநம் குழுகூட்டம் முழக்கு
தட்டிப் பேரண்டம் கொய்தலா
ஆங்கோரேழைக்கு எழுத்தரைவைத்து
விண்ணப்பம் நிரப்பலா.

என்கொணர்ந்தாய் பாணாநீ
எனக்கேட்டால் நம்கவிதை
எட்டுத்திக்கும் சென்றிங்கு கொணர்ந்து
சேர்த்த மட்டிலாக் கடவுளர்
றாழ் தொழார் எனின் ஆமழல்
எங்கே பிறந்தாலும் என்?

இங்கே வெந்து தணிந்தது
மழையில் நனைத்த தார் ரோடு


-

Tuesday, July 24, 2007

சிருஷ்டி கழித்தல்

-

ஞாயிறு மதியம்
திருப்தியாய் சாப்பிட்டு
சன்னலருகில் சாய்நாற்காலியில்
முயங்கிக் கிடந்தேன்.

நல்ல கவிதை ஒன்று வந்தது.
தன்னியல்புக்கேற்ப தன்னைத்தானே எழுதிக்கொள்ள
தாளையும் எழுதுகோலையும் தேடியது.
அலங்கோலமான அறையில் எனக்கே கிடைக்கா அவை.
காணாமல் சோர்ந்துபோய் மிதியடியில் தடுக்கி வீழ்ந்தது.

கெட்ட கவிதை ஒன்று வந்தது
முகத்தில் நீரடித்து
முடியைப் பிடித்து அதட்டி எழுப்பி
'எழுதடா' என்றது.
பீறிட்டெழுந்த
கறங்கு வெள்ளருவிப் பாய்ச்சலில்
எத்தனை எழுதினேன்
எனக்கே எண்ணிக்கை தெரியவில்லை.


-

Microsoft Paint - மைக்ரொசாப்ட் பெயின்ட் (குறிப்புகள்)

நண்பர்களுக்கு
இப்பொழுது நடந்துகொண்டிருக்கும் வரைகலை போட்டியை ஒட்டி சிந்தாநதி இந்த பதிவை இட்டுள்ளார். இதில் மைக்ரோஸாப்ட் பெயின்ட் செயலியைப் பயன்படுத்தி எப்படி படம் போடுவது என்று விளக்கியுள்ளார்.
நான் பல வரைகலை செயலிகளைப் பயன்படுத்தினாலும், MS-PAINT கொண்டே வரைந்த பெரும்பாலான சித்திரங்களை என் பதிவில் இட்டுள்ளேன்.
நம்முடைய பல முயற்சிகளுக்கும் இந்த செயலியே போதுமானது.
இந்த செயலியைக்கொண்டு என்னவெல்லாம் செய்யமுடியும் என்பதை செயல் முறையில் காட்ட சில சுட்டிகளை கீழே கொடுத்துள்ளேன்.
நண்பர்களுக்கு பயன்படலாம்.
(சுட்டிகளில் வழவழ என்று நிறைய வார்த்தைகளும் இருக்கும். அதையெல்லாம் படிக்காமல் படங்களை மட்டும் பார்க்கவும்)
எல்லாமே சாதாரண ஒரு எலியைக் கொண்டு வரைந்தவைதான்.
என் பதிவில் இருக்கும் பிற படங்கள் வேறு செயலிகளைக்கொண்டு வரைந்தவை. அவை layering, gradients போன்ற அடுத்த நிலை வசதிகளைக்கொண்டு வரைந்தவை.
வினாக்கள் இருந்தால் பட்டறையில் மட்டிக்கொள்ளுவேன். (:-)
(குறிப்பு: போட்டியில் எனது எந்தப் படமும் இல்லை)
போட்டியில் ஈடுபடும் நண்பர்களுக்கு வாழ்த்து.

எண்களின்மீது சொடுக்கவும்.

அ.

1
2
3
4
5
6
7
8
9ஆ.

1
2
3


இ.

1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16

(போதும்.....)
(எ-கலப்பையில் தமிழ் தட்டச்சுவது எப்படி என்ற தலைப்பில் என் அனைத்து இடுகைகளுக்கும் இணைப்புக் கொடுத்து ஒரு இடுகை போடமாட்டேன் என்று உறுதியளிக்கிறேன்)


--