-
ஞாயிறு மதியம்
திருப்தியாய் சாப்பிட்டு
சன்னலருகில் சாய்நாற்காலியில்
முயங்கிக் கிடந்தேன்.
நல்ல கவிதை ஒன்று வந்தது.
தன்னியல்புக்கேற்ப தன்னைத்தானே எழுதிக்கொள்ள
தாளையும் எழுதுகோலையும் தேடியது.
அலங்கோலமான அறையில் எனக்கே கிடைக்கா அவை.
காணாமல் சோர்ந்துபோய் மிதியடியில் தடுக்கி வீழ்ந்தது.
கெட்ட கவிதை ஒன்று வந்தது
முகத்தில் நீரடித்து
முடியைப் பிடித்து அதட்டி எழுப்பி
'எழுதடா' என்றது.
பீறிட்டெழுந்த
கறங்கு வெள்ளருவிப் பாய்ச்சலில்
எத்தனை எழுதினேன்
எனக்கே எண்ணிக்கை தெரியவில்லை.
-
3 comments:
;-)
இது நல்ல கவிதையா? இல்லையா? ;)
ரமணி,
என்ன சொல்ல. கணக்கு வழக்கில்லாம போச்சு.
தங்கமணி,
இது என்னங்க கேள்வி. நல்ல கவிதை தானே தன்னை எழுதிக்கிறமாதிரி, நல்ல விமரிசங்களையும் தானே உற்பத்தி பண்ணிக்கும். நீங்க கெட்ட கவிஞரா இருந்தாலும் நல்ல கவிதை உங்களை எழுத வைச்சுக்குறது போல நீங்க கெட்ட விமரிசகராக இருந்தாலும் உங்க கிட்ட இருந்து நல்ல விமரிசனத்தை வாங்கிக்கும். நடப்பன நடாய் கிடப்பன கிடாய் போல எழுதுவன விடாய் ...
அருள்
Post a Comment