Sunday, July 29, 2007

கார்டூன்கள் - சில கருத்துகள்...

-

சென்ற இடுகையின் மிக நீஈஈஈஈண்டுவி ட்ட ஒரு பின்னோட்டம் அடுத்த இடுகையின் முன்னுரையாக இங்கு:


>> கார்ட்டூன் வரைவதும் படம் வரைவதும் ஒன்றா?

நம் எல்லோருக்குமே தெரியும். நிச்சயம் வேறு வேறுதான். ஆனால் இங்கு கார்ட்டூன் பற்றி நான் எழுதியது அவற்றையே நிறைய என் பதிவில் போட்டிருப்பதால் - எடுத்துக்காட்ட உதவியாய். பலவகைப் படங்கள் இப்பதிவில் இருக்கின்றன, இல்லஸ்ட்ரேஷன் போலவும். ஆனால் அவை குறைவு. மேலும் அவை பெயின்ட் மட்டும் கொண்டு வரையப்பட்டவை அல்ல. அதனால் இந்த இடுகைக்கு மட்டும் கார்ட்டூன் = வரைதல் சரியா.

பதிவிற்கு வெளியில் பேசினால் வரைகலை என்பதே பெரும் நிலப்பரப்பு. ஒரு ஓவியத்தை எளிதாக அணுக வரைதல் + தீற்றல் (sketching+painting) எனப் பிரிக்கலாம். சிலர் வரைதலில் சிறப்பாக இருப்பார்கள். சிலர் தீற்றலில். ஆனால் வரைதல்தான் அடிப்படை என்பதிலிருந்து மாறி நவீன ஓவியம் பல ஓவியர்களின் முயற்சிகளுக்குப் பின் வெறும் தீற்றலாகவும் இருக்கலாம் என்ற முறைக்கு கடந்த மூன்று நூற்றாண்டுகளாக நகர்ந்து வந்துவிட்டது. இப்போது வரைதல் ஒரு stylised/stylish genre. கருப்பு வெள்ளைப் படங்களைப் போல. தனிப்பட்டமுறையில் பேப்பர், துணி இவற்றில் நான் ஒரு வரைவன். நல்ல தீற்றன் அல்ல. ஆனால் கணினி தீற்றலை நன்கு கற்றுக்கொள்ள பொறுமை இல்லாதிருக்கும் என்னைப்போன்ற சோம்பேறிகளுக்கும் நல்ல தீற்றும் சாத்தியத்தை அளித்திருக்கிறது. :-)


>> கார்ட்டூன் என்பது வரைதலுடன் நின்று விடுகிறதா அல்லது வரைதலில் துவங்குகிறதா?

கார்ட்டூனில் வெறும் வரைதல் மட்டுமே இருக்கும் மொழியில்லாக் கார்ட்டூகள் உண்டு. வரைதலில் துவங்கி மொழியைச் சேர்த்து முழுமை பெரும் கார்ட்டூன்கள். மொழியே இல்லாமல் வரைதல் மட்டும் கொண்டு ஆனால் மொழியின் அர்த்தத்துடன் இருக்கும் விஷுவல் பன்னிங் வகை கார்ட்டூன்கள் உண்டு. Punning is the lowest form of humour - இல்லையா; இந்தகாரணத்துக்காகவே ஹிந்துவின் கேசவ் சில சமயம் கொஞ்சம் எரிச்சலூட்டக்கூடிய கார்ட்டூனிஸ்ட்.


>> வரையத் தெரிந்தால் கார்ட்டூனிஸ்ட் ஆகிவிடலாமா? கார்ட்டூன் வரைய மேட்டர் பிடிப்பது எப்படி?

வரையத் தெரிந்தால் மட்டுமே கார்ட்டூனிஸ்ட் ஆக முடியாது இல்லையா. சற்றே அபத்தத்தை உணரும் மனநிலை வேண்டும். சற்று அபத்தம், சற்று அனைத்து அதிகார எதிர்ப்பு, சற்று எள்ளல் தன்மை, சற்று முட்டாள்தனம் எல்லாம் இயல்பாக கலந்தால்தான் நல்ல கார்ட்டூன். மேட்டர் விஷயம் ரொம்ப சுலபம். நாம் வாழும் அனைத்துக் கணங்களும், அனைத்து நிகழ்வுகளும் முன்னே சொன்ன அபத்தம், எதிர்ப்பு,.. இன்னபிற கூறுகளுடன்தான் இருக்கின்றன அல்லவா. அதை உணரத் தெரிந்தால் போதும். என் இந்தப் பதிவில் நிறைய அறிவியல் தொடர்பான கார்ட்டூன்கள் இருக்கின்றன. அவை வேண்டும் என்றே ஒரு சீரியஸான அறிவியல் பார்வையை உடைத்து எனக்கு நானே உள்வாங்கிக்கொள்ள நான் பயன்படுத்தும் வழிமுறைகள். அந்த வகையில் அவை மிகவும் பெர்சனல் எனக்கொள்ளலாம். மற்றவை பல வகையில் playing to the gallery. தப்பில்லை இல்லையா. :-)


>> படத்தை மறைத்துவிட்டு வாசகத்தைப் படித்தாலோ அல்லது வாசகத்தை மறைத்து விட்டு படத்தைப் பார்த்தாலோ கார்ட்டூன் விளங்கக் கூடாது என்று ஒரு இலக்கணத்தை, குமாரி கமலாவின் வீட்டுக்காரரும், மால்குடிக்காரரின் இளையருமான லெச்சுமண் ஒரு முறை சொன்னார், அது பற்றி உங்கள் கருத்து என்ன?

அவரின் கார்ட்டூன்களில் இருந்தே இதற்கு மறுதலைகளைக் காட்டலாம். எழுபதுகளில் இருந்து அவரது கார்ட்டூன்களை பார்த்துக்கொண்டே இருக்கிறேன்.
அவரது ஒரு பேட்டர்ன் பார்க்கலாம்:
ஒரு இடிந்த கூடிச் சுவர், கீழே தரையில் கிழிந்த துணியும், கலைந்த தலை,தாடியுடன் ஒரு ஏழை ஒருக்களித்து தரையில் கிடக்கிறான். பின்னணியில் ஒரு குடிசை. பக்கத்தில் ஒரு மாங்கரெல் நாய் ... இரண்டு பேண்ட், மூக்குக் கண்ணாடி போட்ட மீசையில்லாத அரசு அலுவலர் இருவர்.
கீழே இரண்டு நாட்களுக்கு முன் அரசு அறிவித்த திட்டத்தைப் பற்றி ஒரு கிண்டல் வாக்கியம். இதுதான் டெம்ப்ளேட். இந்தப்படத்தை வைத்து கடந்த முப்பது வருஷத்தில் அவர் ஒரு ஐயாயிரம் கார்ட்டூன் போட்டிருப்பாரா? இந்த கிரியேட்டிவிட்டி எனும் கலைஞர்களின் சிருஷ்டித்தன்மை பற்றி அறிவியலில் சில முக்கியமான கருத்துப் பரிமாற்றங்கள் உண்டு. அவற்றை பரவலாக்க வேண்டும். தத்துவ பூச்சாண்டி காட்டுவதற்காக அல்ல. இந்த சிருஷ்டித்தன்மைக்கும் ஒரு இரைதேடும் எறும்பின் தேடலுக்கும் இருக்கும் வித்தியாசங்களைப் (அப்படி ஏதாவது இருந்தால்) புரிந்து கொள்ள.


-

No comments: