Saturday, December 29, 2007

taare zameen par - ஐ முன் வைத்து சில குறிப்புகள்

1. திரையரங்கில் சென்று நான் பார்த்த திரைப்படங்கள் கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளில் நாலைந்துதான் இருக்கும். (அதில் மூன்று லோர்ட் ஆப் த ரிங்ஸ்). பையனுக்கு விடுமுறை விட்டவுடன் ஒரு படத்துக்கு கூட்டிப் போகிறேன் என்று சொல்லியிருந்தேன். இது அவனுக்கு திரையரங்கில் இரண்டாவது படம். அவனும் அம்மாவும் சேர்ந்து பக்கத்தில் 'தாரே ஜமீன் பர்' ஓடுது போலாம் என்று முடிவு செய்துவிட்டார்கள். ஹிந்திப் படம் என்பதால் பலியாடு போல நானும் தலையை ஆட்டிவிட்டேன். இதுவரை ஆமீர் கான் படம் பாத்ததில்லை. 'ஆத்தி க்யா கண்டாலா' பாட்டு பாத்து மட்டும், பரவாயில்லை அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே போல இந்திக்காரங்களுக்கும் தைரியமாக இசையமைக்க வருது போல இருக்குது என்று நினைத்திருக்கிறேன். மத்தபடி ஷியாம் பெனகல், ஸ்மீதா பட்டேல், அந்தக்கால அமிதாப், 'பன்னா கி தமன்னா' மும்தாஜ் - ஓட முடிந்தது நம்ம இந்தி சினிமா.

2. நம்ம பதிவர்கள் பலபேர் இந்தப்படத்தை பற்றி எழுதியிருக்கிறார்கள். நான் எதிர்பார்க்கவே இல்லை, நல்ல படம். கதை இப்போதே எல்லோருக்கும் தெரிந்திருக்கும். படம் பார்க்கும்போது பையன் எப்படா "நம்ம அப்பா போலவே இல்ல அம்மா?" என்று சொல்லிவிடுவானோ என்று பயந்துகொண்டே பார்த்தேன். முடிந்தவுடன் கேட்டதுக்கு நீ அப்பிடியெல்லாம் இல்லை என்று சொன்னானோ பிழைத்தேனோ. மேலும் அவன் அம்மாவுக்கும் எனக்கும் நடுவில் உட்கார்ந்திருந்தான். எனக்கு புரியாத போதெல்லாம் மொழிபெயர்த்ததும் அவன்தான். பல சமயங்களில் கண்கலங்கியது உண்மைதான். ஆனால் பையன் படத்தை இயல்பாக சிரித்துக்கொண்டேதான் பார்த்தான். நான் பார்த்தவரை குழந்தைகள் யாரும் படத்தைப் பார்த்து வருந்தியதாகவோ அழுததாகவோ தெரியவில்லை. ஆனால் வளர்ந்தவர்கள் ஏறக்குறைய எல்லோரும் ஒருவித இறுக்கத்துடனும், கலக்கத்துடனும் தான் வெளியே வந்தார்கள். திரைப்படத்தின் நாயகனான தர்ஷீல் படும் இடர்களைவிட, ஒவ்வொருவருள்ளும் தாம் இழந்த, தாம் பிறரை இழக்கத்தூண்டிக்கொண்டிருக்கும், வாழ்வின் வகையறியாத் தருணங்களை மீண்டும் காண்பதால் பீரிடும் தன்னிரக்கம் தான் காரணம் என்று தோன்றுகிறது. படத்தில் சில அபாரமான காட்சிகளும் நிகழ்வுகளும் உள்ளன. ஒரு சிறுவனுக்கு ஐஸ் கேண்டி வாங்கிக்கொடுத்து தன் தோளில் அமர்த்திச் செல்லும் ஒரு சட்டையில்லாத் தொழிலாளியின் நடை பலகாலம் எனக்கு நினைவில் இருக்கும்.

3. சொற்கள், சொற்கள் சொற்கள் என எங்கும் என்றும் எல்லோராலும் இடைவிடாது இறுக்கி அடுக்கப்பட்டு மானுடமே திணறிக்கொண்டிருக்கும் காலம் நமது. சொற்கள் இன்றி அறிவு இல்லை, அன்பு இல்லை, கனவு இல்லை, காட்சி இல்லை என சொற்களின் சர்வாதிகாரம் உலுக்கும் நமது வாழ்வில் காண், கேள், தொடு புலன்கள் ஏதோ நாம் பரிணாமத்தில் கழற்றிப்போட்ட முட்டையின் ஓடுபோல சிதறிப்போய்விட்டன. மனிதனின் திறமையை, திறனை அளக்கும் கோல்கள் எல்லாம் சொற்களின் கூட்டச் சுமைகளாகவே இருக்கும்வரை பெரும்பான்மை மழைலையர் நம் சமுதாயத்தின் பார்வையில் தோற்றவர்களாகவே கருதப்படுவர். தேர்வுகளில் தோற்றல் என்பது ஒரு குழந்தையின் மானுடத்திற்கே விடப்படும் சவால் என்பதை உணரும் வரை எத்தகைய கல்விச் சீர்திருத்தங்களாலும் எதுவும் சாதித்துவிடமுடியாது.

4. சொற்களைச் செயலற்றதாக ஆக்கும் ஆக்கங்கள் எப்படிச்செய்யலாம்? சொற்களின் கூட்டங்கள் தூண்டும் நேர்கோட்டுச் சிந்தனையை, அது கட்டும் அறிவின் அடுக்குகளை, அறியும் முறைகளை எவ்வாறு செயலிழக்கச் செய்வது? கூத்தும் இசையும், கூத்தின் முறையும் காட்டும் அனைவரிடமும் சொல்லக் கதைகள் உள்ளனவா மனிதனிடம் இன்னும்? மையமழித்த சொல்லாடல்கள், குவியமறுக்கும் தர்க்கக் கோர்வுகள், எழுத்துகளாகச் சிதைந்த சொற்கூட்டங்கள் என நவயுகத்துக் கலைமுயற்சிகளை உள்வாங்கிச் செரித்து மேனடுக்குகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறது இன்றைய அறிவியல் - அடுத்த கட்ட, அடுத்த தள அறிவடுக்குகள் எவை? முன்பு அலைத்துப் போட்ட அதே கச்சாப்பொருள்களைக்கொண்டே அறிவுப்புலங்களும், கலைத் தேர்வுகளும் புதுக்க, வடிவமைக்கப் பட்டுக்கொண்டிருக்கின்றன. மாற்றுச் சிந்தனைமுறைகள் என அடையாளப்படுத்தப் பட்டவை தழையுரமாக்கப் பட்டு விளைந்த விருட்சங்களின் காடு சூழ் உலகு இன்றையது. அதனுள் உறங்கும் குறளிகளை எழுப்ப இன்றைய தொழில் நுட்பம் விரவிய சூழலை எப்படி கலைப்பார்கள் நம் கலையார்வலர்கள்?

5. நம் அனைவருக்கும் குழந்தைகள் பிடிக்கிறார்கள். அவர்களுக்காக நாம் உருவாக்கிக்கொண்டிருக்கும் உலகம் யாருக்குமே பிடிக்கவில்லை. குழந்தைகள் நமக்காக ஒரு உலகை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கான அழைப்புகள் நமக்குப் புரிவதில்லை. புரிந்துகொள்ளும் முயற்சியில் பெரியவர்கள் எடுக்கும் முதல் தளிர்நடைகளில் ஒன்று இந்தத் திரைப்படம். பல தடுமாற்றங்கள் உள்ளன. மதிப்பெண்கள் குறித்த போட்டிகளை எதிர்க்கும் ஒரு கதையில் அத்தகைய போட்டிகளில் பங்கெடுக்க இயலாத, தேவையில்லாத ஒரு குழந்தை மற்றொரு 'போட்டியில்' வெல்வதே படத்தின் உச்சகட்டக் காட்சி. நிஜ வாழ்வில் ' வெற்றி' என்ற சொல்லையே கேட்கத் தேவையில்லாத வாழ்வே இக்குழந்தைகளுக்கு நாம் அளிக்கும் ஒரே அர்த்தமுள்ள தேர்வாக இருக்கமுடியும்.

6. சிறப்பான ஒளிப்பதிவு. நிறைய ஹார்மோனிகா, கிதார் இழையும் ப்ரொக்ரெஸிவ் ராக் போன்ற இசை , அவசரப்படாத படக்கோர்ப்பு, சிறுவனின் அருமையான நடிப்பு என பல வகைகளிலும் நல்ல படம்.

7. சொற்களை எதிர்த்துப் பேசும் இடுகையில் எத்தனை சொற்கள் !

Wednesday, December 05, 2007

இ.தி. 60?


" ங்கா...ங்கா...ங்கா... "

" உஷ்..., லொட லொடன்னு பேசாம எல்லாத்தையும் நல்லா கவனிச்சுப்ப பாருடா. இல்லைன்னா வளர்ந்தப்புறம் ஒரு குரங்கோடக் கூட போட்டிபோட முடியாது... "


Chimps beat humans in memory test
http://news.bbc.co.uk/2/hi/science/nature/7124156.stm