Saturday, December 29, 2007

taare zameen par - ஐ முன் வைத்து சில குறிப்புகள்

1. திரையரங்கில் சென்று நான் பார்த்த திரைப்படங்கள் கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளில் நாலைந்துதான் இருக்கும். (அதில் மூன்று லோர்ட் ஆப் த ரிங்ஸ்). பையனுக்கு விடுமுறை விட்டவுடன் ஒரு படத்துக்கு கூட்டிப் போகிறேன் என்று சொல்லியிருந்தேன். இது அவனுக்கு திரையரங்கில் இரண்டாவது படம். அவனும் அம்மாவும் சேர்ந்து பக்கத்தில் 'தாரே ஜமீன் பர்' ஓடுது போலாம் என்று முடிவு செய்துவிட்டார்கள். ஹிந்திப் படம் என்பதால் பலியாடு போல நானும் தலையை ஆட்டிவிட்டேன். இதுவரை ஆமீர் கான் படம் பாத்ததில்லை. 'ஆத்தி க்யா கண்டாலா' பாட்டு பாத்து மட்டும், பரவாயில்லை அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே போல இந்திக்காரங்களுக்கும் தைரியமாக இசையமைக்க வருது போல இருக்குது என்று நினைத்திருக்கிறேன். மத்தபடி ஷியாம் பெனகல், ஸ்மீதா பட்டேல், அந்தக்கால அமிதாப், 'பன்னா கி தமன்னா' மும்தாஜ் - ஓட முடிந்தது நம்ம இந்தி சினிமா.

2. நம்ம பதிவர்கள் பலபேர் இந்தப்படத்தை பற்றி எழுதியிருக்கிறார்கள். நான் எதிர்பார்க்கவே இல்லை, நல்ல படம். கதை இப்போதே எல்லோருக்கும் தெரிந்திருக்கும். படம் பார்க்கும்போது பையன் எப்படா "நம்ம அப்பா போலவே இல்ல அம்மா?" என்று சொல்லிவிடுவானோ என்று பயந்துகொண்டே பார்த்தேன். முடிந்தவுடன் கேட்டதுக்கு நீ அப்பிடியெல்லாம் இல்லை என்று சொன்னானோ பிழைத்தேனோ. மேலும் அவன் அம்மாவுக்கும் எனக்கும் நடுவில் உட்கார்ந்திருந்தான். எனக்கு புரியாத போதெல்லாம் மொழிபெயர்த்ததும் அவன்தான். பல சமயங்களில் கண்கலங்கியது உண்மைதான். ஆனால் பையன் படத்தை இயல்பாக சிரித்துக்கொண்டேதான் பார்த்தான். நான் பார்த்தவரை குழந்தைகள் யாரும் படத்தைப் பார்த்து வருந்தியதாகவோ அழுததாகவோ தெரியவில்லை. ஆனால் வளர்ந்தவர்கள் ஏறக்குறைய எல்லோரும் ஒருவித இறுக்கத்துடனும், கலக்கத்துடனும் தான் வெளியே வந்தார்கள். திரைப்படத்தின் நாயகனான தர்ஷீல் படும் இடர்களைவிட, ஒவ்வொருவருள்ளும் தாம் இழந்த, தாம் பிறரை இழக்கத்தூண்டிக்கொண்டிருக்கும், வாழ்வின் வகையறியாத் தருணங்களை மீண்டும் காண்பதால் பீரிடும் தன்னிரக்கம் தான் காரணம் என்று தோன்றுகிறது. படத்தில் சில அபாரமான காட்சிகளும் நிகழ்வுகளும் உள்ளன. ஒரு சிறுவனுக்கு ஐஸ் கேண்டி வாங்கிக்கொடுத்து தன் தோளில் அமர்த்திச் செல்லும் ஒரு சட்டையில்லாத் தொழிலாளியின் நடை பலகாலம் எனக்கு நினைவில் இருக்கும்.

3. சொற்கள், சொற்கள் சொற்கள் என எங்கும் என்றும் எல்லோராலும் இடைவிடாது இறுக்கி அடுக்கப்பட்டு மானுடமே திணறிக்கொண்டிருக்கும் காலம் நமது. சொற்கள் இன்றி அறிவு இல்லை, அன்பு இல்லை, கனவு இல்லை, காட்சி இல்லை என சொற்களின் சர்வாதிகாரம் உலுக்கும் நமது வாழ்வில் காண், கேள், தொடு புலன்கள் ஏதோ நாம் பரிணாமத்தில் கழற்றிப்போட்ட முட்டையின் ஓடுபோல சிதறிப்போய்விட்டன. மனிதனின் திறமையை, திறனை அளக்கும் கோல்கள் எல்லாம் சொற்களின் கூட்டச் சுமைகளாகவே இருக்கும்வரை பெரும்பான்மை மழைலையர் நம் சமுதாயத்தின் பார்வையில் தோற்றவர்களாகவே கருதப்படுவர். தேர்வுகளில் தோற்றல் என்பது ஒரு குழந்தையின் மானுடத்திற்கே விடப்படும் சவால் என்பதை உணரும் வரை எத்தகைய கல்விச் சீர்திருத்தங்களாலும் எதுவும் சாதித்துவிடமுடியாது.

4. சொற்களைச் செயலற்றதாக ஆக்கும் ஆக்கங்கள் எப்படிச்செய்யலாம்? சொற்களின் கூட்டங்கள் தூண்டும் நேர்கோட்டுச் சிந்தனையை, அது கட்டும் அறிவின் அடுக்குகளை, அறியும் முறைகளை எவ்வாறு செயலிழக்கச் செய்வது? கூத்தும் இசையும், கூத்தின் முறையும் காட்டும் அனைவரிடமும் சொல்லக் கதைகள் உள்ளனவா மனிதனிடம் இன்னும்? மையமழித்த சொல்லாடல்கள், குவியமறுக்கும் தர்க்கக் கோர்வுகள், எழுத்துகளாகச் சிதைந்த சொற்கூட்டங்கள் என நவயுகத்துக் கலைமுயற்சிகளை உள்வாங்கிச் செரித்து மேனடுக்குகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறது இன்றைய அறிவியல் - அடுத்த கட்ட, அடுத்த தள அறிவடுக்குகள் எவை? முன்பு அலைத்துப் போட்ட அதே கச்சாப்பொருள்களைக்கொண்டே அறிவுப்புலங்களும், கலைத் தேர்வுகளும் புதுக்க, வடிவமைக்கப் பட்டுக்கொண்டிருக்கின்றன. மாற்றுச் சிந்தனைமுறைகள் என அடையாளப்படுத்தப் பட்டவை தழையுரமாக்கப் பட்டு விளைந்த விருட்சங்களின் காடு சூழ் உலகு இன்றையது. அதனுள் உறங்கும் குறளிகளை எழுப்ப இன்றைய தொழில் நுட்பம் விரவிய சூழலை எப்படி கலைப்பார்கள் நம் கலையார்வலர்கள்?

5. நம் அனைவருக்கும் குழந்தைகள் பிடிக்கிறார்கள். அவர்களுக்காக நாம் உருவாக்கிக்கொண்டிருக்கும் உலகம் யாருக்குமே பிடிக்கவில்லை. குழந்தைகள் நமக்காக ஒரு உலகை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கான அழைப்புகள் நமக்குப் புரிவதில்லை. புரிந்துகொள்ளும் முயற்சியில் பெரியவர்கள் எடுக்கும் முதல் தளிர்நடைகளில் ஒன்று இந்தத் திரைப்படம். பல தடுமாற்றங்கள் உள்ளன. மதிப்பெண்கள் குறித்த போட்டிகளை எதிர்க்கும் ஒரு கதையில் அத்தகைய போட்டிகளில் பங்கெடுக்க இயலாத, தேவையில்லாத ஒரு குழந்தை மற்றொரு 'போட்டியில்' வெல்வதே படத்தின் உச்சகட்டக் காட்சி. நிஜ வாழ்வில் ' வெற்றி' என்ற சொல்லையே கேட்கத் தேவையில்லாத வாழ்வே இக்குழந்தைகளுக்கு நாம் அளிக்கும் ஒரே அர்த்தமுள்ள தேர்வாக இருக்கமுடியும்.

6. சிறப்பான ஒளிப்பதிவு. நிறைய ஹார்மோனிகா, கிதார் இழையும் ப்ரொக்ரெஸிவ் ராக் போன்ற இசை , அவசரப்படாத படக்கோர்ப்பு, சிறுவனின் அருமையான நடிப்பு என பல வகைகளிலும் நல்ல படம்.

7. சொற்களை எதிர்த்துப் பேசும் இடுகையில் எத்தனை சொற்கள் !

10 comments:

Anonymous said...

ஆமீர் கான் படம் என்றாலே, மீடியா ஓவரா ஜால்ரா போடுமே, இதுவும் அது போலதான் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இல்லை என்று பார்த்தவர்கள் நிறைய பேர் சொல்கிறார்கள். நாளைக்குப் பார்த்துட்டு வந்து சொல்றேன்

பத்மா அர்விந்த் said...

I watch sarigama - little chmpion song competition show on zee Tv, only show that I watch from an Indian channel. some weeks ago, one kid begged judges to give her a A , otherwise her mom will get angry and yell at her.
One kid was voted out of the show by public. One father challenged her total votes as he arranged people to vote from 6 computers from a browsing center in Jaipur, two from gujrat etc and he himself casted more than 1 lakh. It was so sad to see the girl's embarrassment when her father admitted to have voted for her.

yesterday, the judge, sonu nigam was critizing a young kid who got voted out for being very serious all the time.he asked the kid why he was always so serious, and the kid had no reply. adith Narayan, host of teh show asked the mother who said sobbing that he is growing in such an environment, where there is poverty, no electricity etc. he goes to school for free, as she irons clothes for teahcers for free. this is the first time he ever got to sing on a stage, and she asked the judge how would he not be shy, serious. during christmas week, the show host presented him a MP3 player and said that he was only kid who had no MP3 player and still looking to hear and practize the song through radio. Instead of encouraging him, we openly tease him, bulley him because he does not have money to ask people to vote for him like others who admit spending 70000 rs on votes. what are we teaching kids thorugh these competitions, that we can get votes for money, or we dont need to appreciate real talent? we put so much pressure on these kids, and steal their chilhood. I still remember that kids face, and eyes filled with tear. No, we wont let competition go away, neither we will stop who is mightier, intellegent than the other.if you get a chance watch this show for the artificiality and also to understand the kids, and how it differs with family background. There is one more kid who sings very well, but will soon be eliminated (his father happens to be autorickshaw driver) and he can not buy votes.

மோகனா இசை said...

//மதிப்பெண்கள் குறித்த போட்டிகளை எதிர்க்கும் ஒரு கதையில் அத்தகைய போட்டிகளில் பங்கெடுக்க இயலாத, தேவையில்லாத ஒரு குழந்தை மற்றொரு 'போட்டியில்' வெல்வதே படத்தின் உச்சகட்டக் காட்சி. நிஜ வாழ்வில் ' வெற்றி' என்ற சொல்லையே கேட்கத் தேவையில்லாத வாழ்வே இக்குழந்தைகளுக்கு நாம் அளிக்கும் ஒரே அர்த்தமுள்ள தேர்வாக இருக்கமுடியும்.
//

I got this in my mind, but i don know how to express that in word. You are 100% true in this statement :)

பினாத்தல் சுரேஷ் said...

நல்ல பதிவு அருள்செல்வன்

//அத்தகைய போட்டிகளில் பங்கெடுக்க இயலாத, தேவையில்லாத ஒரு குழந்தை மற்றொரு 'போட்டியில்' வெல்வதே படத்தின் உச்சகட்டக் காட்சி//

இது எனக்கும் உறுத்தத்தான் செய்தது. ஆனால் திரைப்படத்தின் மையக்கருத்தை ஆணி அடித்தது மாதிரி சொல்வதற்கு இதைப் பயன்படுத்தியிருக்கலாம். (மன்னிச்சு விட்டுடலாம் :-)

பத்மா சொல்லியிருக்கும் தகவல்கள் மேலும் கலங்கடிக்கின்றன.

சிறில் அலெக்ஸ் said...

ரெம்ப நல்ல தீம்ல படம் வந்திருக்குண்ணு நினைக்கிறேன்.

என் மனைவி அடிக்கடி சொல்றதுண்டு, நம் குழந்தைகளளப் பொருத்தவரை நாமெல்லாம் சுயநலக்காரர்கள் என்று.

100% உண்மை.

நிறைய விவாதிக்கலாம் ..படம் பார்த்துவிட்டு மேலும்..

Anonymous said...

அருள், இன்னிக்குத்தான் போய் பார்த்தேன். நீங்க சொல்லி இருப்பது நூற்றுக்கு நூறு சரி. இந்த படத்தைப் பற்றி'ப்ளாகு' பண்ணி, அருமை பெருமைகளைப்ப் போற்றிப் புகழ்வேண்டும் என்ற உணர்வு கூட வரவிடாமல் என்னைத் தடுத்துவிட்டதும் , ஹைபர்னேஷனில் இருந்த உங்களை 'வந்து எழுதிட்டு போக' வைத்ததும், படத்தின் வெற்றி.

பத்மா : நல்ல வேளை நீங்கள் சென்னையில் இல்லை. இருந்திருந்தால், சன்,ராஜ், விஜய், ஜெயா தொலைக்காட்சிகளில் இப்படி குழந்தைகளைப் போட்டு படுத்தி எடுத்ததைப் பார்க்க நேரிட்டிருக்கு. இது பற்றி நாராயண் ஒரு முறை எழுதியிருந்தார், [ அருள், எச்சூஸ்மீ ஃபர் தி விளம்பரம் :-)]

குழந்தைகளின் உலகம் வேறானது, அங்கே தோழமையும், நட்பும், நேசமும் பெருகி ஒடும். ஆனால், இம்மாதிரியான நிகழ்ச்சிகள் அவர்களுடையே competitive spirit-னை உருவாக்குகிறேன் என்கிற பெயரில் அவர்களின் தன்னம்பிக்கையினை முளையிலேயே கிள்ளி எறிகின்றன. அவர்களின் கண்ணீரும் புன்னகையும் ஊடக விருந்தாக பரிமாறப்படுகின்றன. இதைப் பார்க்கும் மற்ற பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஊடகங்களில் காட்டப்படும் குழந்தைகளோடு ஒப்பு நோக்கி கரித்துக் கொட்டுகிறார்கள். என் எதிர் ப்ளாட்டில் இருக்கும் அம்மணிக்கு என் மொத்த ப்ளாக்கே கேட்பதுப் போல தன் 8 வயது பெண்ணை சொல்லால் சித்ரவதை செய்யாமல் ஒரு நாள் போகாது. ஒப்புநோக்கல் என்பது இந்தியர்களுக்கே உரிய குணமாகி போனதாலோ என்னமோ, நாம் அமெரிக்காவில் முதல் நாள் குடிக்கப்படும் காபியினைக் கூட இந்திய ரூபாயில் ஒப்பு நோக்காமல் இருக்க மாட்டோம். 'அவ எப்படி பாடறா பாரு', 'உன்னோட கூடப் படிக்கிறவன் மேத்ஸ்ல 100 out of 100 நீயும் இருக்கியே' என வார்த்தை விளாசல்களுக்கு தப்பாத குழந்தைகள் தமிழகத்தில் இருக்க முடியாது. Peer pressure என்றால் என்ன என்பதை இன்றைய குழந்தைகளைப் பார்த்து கற்றுக் கொள்ள முடியும்

arulselvan said...

பிரகாஷ்,
>>>ஆமீர் கான் படம் என்றாலே, மீடியா ஓவரா ஜால்ரா போடுமே, இதுவும் அது போலதான் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.
ஆமாமா. நானும் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தேன். நல்லவேளை அப்படியில்லை.

பத்மா,
நீங்கள் சொல்வது மிக பயங்கரமாக இருக்கிறது. தேசிய மகளிர் கமிஷன் (National Commission for Women: http://ncw.nic.in/) போல தேசிய குழந்தைகள் கமிஷன் எனும் உச்ச அமைப்பை ஏற்படுத்தி, குழந்தைகளை வைத்து விளம்பரம் செய்தல், இப்படி மடத்தனமான போட்டிகள் வைத்து 'திறமைகளை' வளர்த்தல் போன்றவற்றை கண்காணிக்க வேண்டும். தொலைக்காட்சியின் அத்தனை விளம்பரங்களிலும் இப்போது குழந்தைகள்தான் வருகிறார்கள். வரைமுறையே இல்லாமல் போயிருக்கிறது. ஊடகங்கள் இதைப் பற்றி அலட்டிக்கொள்வதில்லை. அவையே தமக்குத்தானே நெறிப்படுத்தும் அமைப்புகளை ஏற்படுத்திக்கொள்ளலாம். அதற்கான முதிர்ச்சி அவர்களிடம் இப்போதைக்கு இல்லை. தொலைக்காட்சியில் எந்தமொழிக்குத் திருப்பினாலும் பத்து நிமிடத்தில் நமக்கு ரத்தக் கொதிப்பு வந்துடும்.

வள்ளி,
நன்றி. திரைப்படம் முடியும்போது எல்லோருக்கும் ஒருவித சந்தோஷத்தைக் கொடுக்கும் முடிவு அது. தாம் இதுவரை செய்த பாவங்களுக்கெல்லாம் கதையின் அந்தமுடிவே பிராயச்சித்தம் போல எல்லோரும் திருப்தியாக எழுந்து வந்து விட்டோம். ஒரு ஈஷானுக்கு பதிலாக அந்தப் பள்ளியில் இரண்டு பேர் அப்படி இருந்தால் என்ன ஆகும். யார் பர்ஸ்ட்? படு அபத்தம்.

சுரேஷ்,
படம் பல வகையில் நன்றாக இருந்தது. முடிவைப்பற்றி அவ்வளவாக அலட்டிக் கொள்ள வேண்டாம்தான். மொத்தத்தில் முடிவில் நம்ம வாழ்க்கையைப் போலவே அபத்தமாகவும் ஆனால் பலதருணங்களில் அழகானதாகவும் அபாரமானதாகவும் நெகிழ்வானதாகவும் இருந்தது படம்.
சிறில்,
கண்டிப்பாக பார்க்கவும். குழந்தைகளோடு.
பிரகாஷ்
என்ன சொல்ல.
யூனிட் டெஸ்ட், மிட் டெர்ம், டெர்ம் டெஸ்ட் என்று ஐந்தாம் வகுப்புக்கு வரிசையாக தேர்வுகள். என்னத்தைப் படிக்கிறார்கள் என்றே தெரியவில்லை.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைக்கு இந்த இடுகைக்கான பின்னோட்டங்களை அனுப்பிக்கொண்டிருந்தபோது பையன் நான் எப்போதோ வாங்கிக்கொடுத்த ஒரு காம்பஸ்ஸை வைத்து விளையாடிக்கொண்டிருந்தான். அதில் ரசமட்டம் போல சமதளத்தை அறிய நீரை நிரப்பி ஒரு காற்றுக்குமிழியை வைத்திருந்தார்கள். எதுக்கு இந்தக்குமிழ், உள்ளே என்ன நீரா எண்ணெய்யா இதெல்லாம் எதுக்கு என்று கேள்விகளைக்கேட்டு துளைத்துக்கொண்டிருந்தான். நான் அது சமதளத்தின் மீது காம்பஸை வைக்கிறோமா என காட்ட என்று சொல்லி எப்படி எந்தப்பக்கம் மேலே தூக்கி இருக்கிறது எனப்பார்ப்பது என விளக்கிக்கொண்டிருந்தேன். உடனே அறையின் அனைத்து மூலைகள், நாற்காலியின் பிடி, மேசையின் மேல்தளம், சுவர்ப்பிடி என எல்லாவற்றிலும் வைத்துப் பார்த்து விட்டு, you know what, appaa, nothing in this world is flat என்று சொல்லி சிரிக்க ஆரம்பித்து வட்டான். உண்மையிலேயே சமதளம் என்பது கிடையாது, முயற்சி செய்து நாம்தான் கட்ட வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தேன். சொரசொரப்பில்லாமல் வழுவழு என்று இருக்கும் மேசைத்தளம் கூட சமதளமாக இல்லை என்பதை கண்டுபிடித்து ஆச்சரியமாய் அதையே சொல்லிக்கொண்டிருக்கிறான். இதற்கு பதிலாக அவன் எத்தனை நூறு மதிப்பெண்கள் பெற்றாலும் எனக்கு அவை வேண்டாம்.
=========================================

சிறில் அலெக்ஸ் said...

//இதற்கு பதிலாக அவன் எத்தனை நூறு மதிப்பெண்கள் பெற்றாலும் எனக்கு அவை வேண்டாம். //

So true.

:)

Anonymous said...

என்ன நடக்குது கோவையில் உள்ள பள்ளிகளில்..இரண்டு மாதங்களில் நேற்று மூன்றாவது சம்பவம் நடந்தேறியுள்ளது. குழந்தைகள் ஆசிரியர்களால் தாக்கப்படும் சம்பவங்களைத்தான் சொல்லவருகிறேன். அதிலும் பெண் ஆசிரியைகள் சம்பந்தப்படுவது பெரும் அதிர்ச்சி. இத்தலைமுறை குழந்தைகளின் நிலைபற்றி பல ப்ளாக்குகளில் பல பதிவுகள் எழுதப்பட்டுள்ளன.

தேர்வுகள் நடக்கும் நேரத்தில் ஒரு இரண்டாம் வகுப்பு மாணவன் மண்டை தாக்கப்பட்டுள்ளது நேற்று. பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில். ஆசிரியை பதவி நீக்கம். அது போதுமா? மாணவனின் மனோ நிலையில் ஏற்படும் குழப்பங்களுக்கு எதை பதவி நீக்கம் செய்வது?...தேர்வு பயம், மதிப்பெண் பயம், ரேங்க் ப்ரச்சனைகள், சம்மர் கேம்ப் பயமுறுத்தல்கள் (இதற்கு தனி ப்ளாக் போடலாம்) இத்தனை அழுத்தங்களுடன் ஆசிரியர்களின் அட்டேக்கும் சேர்ந்தால்..அந்த பிஞ்சு மனங்களின் நிலை என்ன..இப்பொழுதுள்ள ஆசிரியர்களும், பெற்றோர்களும் தங்கள் பள்ளிக் காலத்தை ஒரு முறை நினைத்துப் பார்க்கட்டும்...

PPattian said...

அருமையான குறிப்புகள்.

நான் கூட சொல்லிக் கொண்டிருந்தேன். பேசாம இஷானுக்கு ஒரு மூன்றாவது பரிசோ, நாலாவது பரிசோ கொடுத்து கொஞ்சம் ரியலிஸ்டிக்காக முடிச்சிருக்கலாம் என்று. :)