Sunday, November 30, 2008

மும்பாய் பயங்கரவாதம்

மும்பாய் பயங்கரவாதம்


  மும்பாயில் நடந்தது உலகு தழுவிய இஸ்லாமிய பயங்கரவாதத்தின் இரண்டாவது இந்தியத் தாக்குதல் என்றே கூறலாம். இன்றைக்கு மூன்று ஆண்டுகளுக்கு  முன் நடந்த பெங்களூர்த் தாக்குதல் முதலாவது. அதைப் பற்றிய எனது பதிவு இங்கே . அப்போது காலம் கடந்து விட்டது என்று எழுதியிருந்தேன். அது இந்தியாவின் மூளையைக் குறிவைத்த செயல். இது நாட்டின் பொருள் வளத்துக்குக் குறி. இத்தகைய பயங்கரவாதச் செயல்களிலிருந்து மக்களைப் பாதுகாக்க அரசு மூன்றாண்டுகளாக எந்தவித முன்னெடுப்பும் செய்யவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. மன்னிக்க முடியாத குற்றம். காங்கிரஸ் (யூபிஏ) அரசுக்கு தன்னை மறைத்துக்கொள்ள எந்தவித காரணங்களும் இல்லை.  சில குறிப்புகள்:

1. பலரும் பயங்கரவாதிகளுக்கு மதம் இல்லை என்று திரும்பத் திரும்ப ஏன் கூறுகிறார்கள். எதைக் காரணமாகக் கொண்டும் பயங்கரவாதத்தைச் செய்யலாம். மதம்தான் உலகசரித்திரத்தில் மிக அதிகமான பயங்கரவாத உயிர்க்கொலைகளுக்கு காரணம். அடுத்த காரணம் நாடு. நடந்தது இஸ்லாமிய பயங்கரவாதம்- இதில் எந்த  சந்தேகமும் இல்லை. பாகிஸ்தான், பங்களாதேச முஸ்லிம்கள் இதில் சம்பத்தப் பட்டிருந்ததாக இப்போது செய்திகள் தெரிவிக்கின்றன. 

2. இது நடக்கும் போது இந்தியாவில் ஒரு கூட்டத்தில் பேட்டி அளித்துக்கொண்டிருந்தார் பாகிஸ்தானிய அயலுறவு அமைச்சர் ஷா குரேஷி. தொலைக்காட்சியில் காட்டிக்கொண்டிருக்கும்போதே அவருக்கு பிரணாப் முகர்ஜியிடமிருந்து தொலை பேசி அழைப்பு. ஆரவாரமாக பேச ஆரம்பித்த குரேஷியின் முகம் இறுகி வெறுமனே "ஹாங் ஜி", "ஜி" என்று கேட்டுக்கொண்டிருந்தார். தொலைக்காட்சியில் அவரை வறுத்து எடுத்து விட்டார்கள். பாகிஸ்தானின் உளவுப் பிரிவு தலைவர் இந்தியாவிற்கு வருவார் என்று கூறிய குரேஷி இன்று பாகிஸ்தான் சென்றவுடன் 'எங்கள் கைகள் சுத்தமாக இருக்கின்றன. பாகிஸ்தானின் ஆதரவுக்கு ஆதாரம் கொடுங்கள்' என்று எப்போதும் போல் கூறுகிறார். இந்தியாவிற்கு எந்த பாகிஸ்தானிய அரசும் சற்றும் உதவி செய்யாது என்பது தெளிவு. இதில் டிப்ளமேடிக்காக அணுகலாம் என்ற முயற்சிக்கே வழியில்லை போலத்தான் திரும்பத் திரும்பத் தெரிகிறது. இந்தியா என்ன செய்யவேண்டும் ?

3. பாகிஸ்தான் முழுவதுமாக சிதைந்து கொண்டு இருக்கிறது. பலூச்சி, வடமேற்குப் பிராந்தியங்கள் அனைத்தும் மோசமாகிக் கொண்டிருக்கின்றன. பொருளாதாரம் அடிமட்டத்துக்குப் போய்விட்டது. ராணுவமும் உளவுத்துறையும் சிவிலியன் அதிகாரத்தில் இல்லை. அமெரிக்கா ஆப்கான் எல்லையில் இஷ்டத்துக்கு என்னமோ செய்கிறது. ஏகப்பட்ட ஆயுதங்கள் பொதுமக்களிடம் பரவி உள்ளன. அணுஆயுத பலமிக்க கட்டுக்கடங்காத ராணுவம், மோசமான நம்பிக்கையில்லாத பொருளாதாரம், மத அடிப்படைவாத மீட்டெழுச்சி, பிராந்த்தியங்களில் உள்நாட்டுப்போர், அமெரிக்க-மேற்கத்தியப் படைகளின் ஊடுருவல் என அனைத்துக் கோணங்களிலும் பெரும் உள்வெடிப்புக்கு தயாராகி வருகிறது. இந்தியாவிற்கு இதனால் எந்த விதத்திலும் நிம்மதி கிடைக்கப் போவது இல்லை. தற்காப்புதான் ஒரே வழி.

4. இன்றைக்கு மேற்கத்தியர்கள் சம்பத்தப் பட்டிருப்பதால் அமெரிக்கா பிரிட்டன் போன்ர நாடுகளில் சற்றே இந்திய ஆதரவு குரல் கேட்கிறது. அதைதாண்டி எந்த வித தீர்மானமான முடிவுக்கும் இந்நாடுகளின் ஆதரவு இந்தியாவிற்குக் கிடைக்காது.  இந்தப் பிரச்சினையில் இந்தியா எப்போதும் போல் தனித்துத் தான் எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

5. அதிரடிப் படைகளை நாடுமுழுவதும் பரவலாக்குதலும் உடனடி பிரயோகத்திற்கான செயல் கேந்திரங்களை அமைப்பதும் என்றோ நடந்திருக்க வேண்டியவை. மற்றபடி பாதுகாப்புப் படைகள் அனைத்தும் பழைமையாகிக் கொண்டு இருக்கின்றன. கப்பல் படை போதுமான நீர்மூழ்கிகள், போர்க்கப்பல்கள் இல்லாமல் இருக்கிறது. விமானங்களும் இற்றைப்படுத்தப் படவில்லை.

6. காஷ்மீர் பிரச்சனை இந்திய முஸ்லிம்களின் முழுப் பிரச்சனை அல்ல. ஆட்களைக் கவர முதல் கட்ட ஈர்ப்புக்கு மட்டுமே அதை பயன்படுத்த முடியும். மற்றபடி பெரும்பான்மையான இந்திய முஸ்லிம்களின் பிரச்சனை மற்ற எல்லோருக்கும் இருக்கும் பிழைப்பு பற்றியதுதான். வளர்ந்து வரும் இந்திய பொருளாதாரத்தில் தங்களையும் இணத்துக்கொள்ளலாம் என பெரும்பான்மை மக்களின் அனைத்து பொருளாதார அடுக்குகளிலும் இருக்கும் மக்களுக்குத் தோன்றும் ஒரு மாய நம்பிக்கை கூட முஸ்லிம்களுக்கு இல்லை. இதற்குக் காரணம் மிக முக்கியமாக இஸ்லாமிய மதப் படிப்புதான் காரணம். அதை மற்றவர்களால் சரி செய்ய இயலாது.

7. நாட்டின் அரசியல் கட்சிகளில் நான் பெரிசு நீ பெரிசு என்று பேச ஒன்றுமில்லை. கடந்த பிஜே பி அரசு பாதுகாப்பாக வெளியே கொண்டுபோய் விட்டுவந்த மசூத் அஸார், ஒமார் ஷேக் போன்றவர்களை கடந்த ஆண்டுகளில் இந்தியாவில் நடந்த பல பயங்கரவாதச் செயல்களுடன் சம்பந்தப் படுத்தி பல அறிக்கைகள் உள்ளன. இத்தகைய செயல்களில் காங்கிரசும் பிஜேபியும் ஒரே அளவு அரசியல் தகுதிதான் கொண்டவர்கள். அசிங்கமான அரசியல் செய்ய முயன்ற மோடியை இறந்த அதிரடிப் படைத் தலைவர்  ஹேமந்த் கார்கரேயின் மனைவி  நடத்தியதை நாடே பார்க்கிறது. 

8. இஸ்ரேலில் இருந்து  நாங்கள் உதவி இருந்தால் உயிர் இழப்பைத் தடுத்திருக்கலாம் என்று குரல்கள் வருகின்றன. பயங்கரவாதிகளின் குறியே மிக அதிகமானவர்களைக் கொல்லுதல் என்று இருக்கும்போது இந்தியப் படையினர் செய்ததே சரி. இதற்கெல்லாம் பிற நாடுகளின் உதவிகளை பெறத் தேவையில்லை. புலனாய்விலும் துப்புகளை பகிர்ந்து கொள்வதிலும் உலகளாவிய புரிந்துணர்வு இருந்தால் பலதைத் தடுக்கலாம்.

9.  உயிர் இழந்த பொதுமக்களுக்கும், பணியில் உயிர் துறந்த படை வீரர்களுக்கும் அஞ்சலி.

10.  பொறுப்பேற்று அமைச்சர் சிவராஜ் பாடீல், செயலாளர் எம். கே. நாராயணன் முதலியோர் பதவித்துறப்பு செய்துள்ளதாக செய்திகள் வருகின்றன. இப்போதாவது அமைச்சரவை சில முடிவுகளை எடுப்பதற்கு நன்றி சொல்லத்தான் முடியும்.உருப்படியாக வேறு திட்டங்கள் வந்தால் சரி.

-

Friday, October 24, 2008

எறிந்த விமானங்கள்
நிலவு போய்ச்சேர எறிந்த விமானங்கள்
உள்/வெளி பேதம் மறந்து அலையும் கனப்பரப்பு.
கற்கள் பெயரக் கலைந்தோடும் எறும்பின் கூட்டம்.
தழலும் கருவேலம் புகையும்
குழல்வழி சென்று நிரப்பிய
அம்மாவின் மூச்சுப்பைகள்
போல்
முப்பரிமாணத்தில் விரியும் இம்மாநகர்
இன்னும் எவ்வளவு கொள்ளும்?
படர்சிதைவுச் சமவெளியின் அப்பால்
மலைச் சரிவுகளில் அளையும்
ஊர்திகளின் தொலைமுடுக்குப் பொறிகள்
இயக்க வரிசையில் நிற்கும் நான் கேட்கிறேன்:
உயிர்வளியை அடக்கிச் செல்லும் குழல் வர்த்தகா
வேகும் அரிசியின் மணம் போன்றதா நிணமும்.-

Wednesday, October 15, 2008

சினிமாவும், நானும் ...

இரண்டு விஷயங்களைப் பற்றி பதிவு எழுதக்கூடாது என்று நீண்டநாட்களாக வைத்திருந்தேன். ஒன்று சினிமா விமரிசனம். இரண்டாவது கிரிக்கெட். இதை முறித்து தாரே ஜமீன் பர் படத்தைப் பற்றி எழுதியதால் சினிமாவைப் பற்றிய விரதம் முடிஞ்சு போச்சு. இப்போது மதி வழியாக வந்த சினிமா மீமை வைத்து இந்தப் பதிவு.

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவு தெரிந்து கண்ட முதல் சினிமா. என்ன உணர்ந்தீர்கள்?
எனக்கு நன்றாக நினைவிருக்கும் முதல் படம் ஹட்டாரி. பெரும் பாதிப்பு. ஒட்டகச் சிவிங்கி, காண்டாமிருகம் என்று கனவெல்லாம் நிறைந்த சினிமா. நாலாம் கிளாஸ் படிக்கும்போது பார்த்தது. அதை வைத்து நானும் என் தம்பியும் வரைந்த ஓவியங்களுக்கு மாநில அளவிலான போட்டியில் எங்கள் இருவருக்குமே தத்தம் வயதுக்கான இரண்டாவது பரிசு!. அப்புறம் வா ராஜா வா, அகத்தியர், திருமலை தென்குமரி என்று இப்போதும் நினைவிருக்கும் படங்கள்.

2.கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த சினிமா?
தசாவதாரம். பையனும் மனைவியும் நன்றாக ரசித்தார்கள்.
ஆங்கிலத்தில்: கடைசி ஜேம்ஸ்பாண்ட் படம்.


3.கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
சிவாஜி. சங்கரும் இந்தக்கால ரஜினியும் சேர்ந்தால் என்ன உணர்வு வரும்? அதேதான்.

4.மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா
'தாக்கிய' என்பதற்கு பதில் பிடித்த என்று வைத்துக்கொண்டால், ஒரு லிஸ்ட்:
புதிய பறவை, சிவகங்கைச் சீமை, ஆயிரத்தில் ஒருவன், அந்த நாள், வல்லவன் ஒருவன், பதினாறு வயதினிலே, மூடு பனி, ஜானி, அவள் அப்படித்தான்.

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
எம்ஜீயார் உலகம் சுற்றும் வாலிபன் வெளியிட்டபோது அந்தப் படம் பார்த்து விட்டு இதுக்கு ஏன் இவ்வளவு கலாட்டா என்று நினைத்தது. படம் அப்போது பிடித்திருந்தது.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?
ஒன்றுமில்லை.

6.தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
ஒரு காலத்தில் அனத்து சிறுபத்திரிக்கைகளிலும் வருவதை தவறாமல் படித்ததுண்டு. இப்போது இணையத்திலேயே நண்பர்கள் சிலபேர் அருமையாக எழுதுகிறார்கள்.

7.தமிழ்ச்சினிமா இசை?
பாடல்களைச் சொல்கிறீர்கள் என்றால், இசையில்லாத தமிழ் சினிமா எனக்கு மிகவும் அந்நியமாக இருக்கும். தமிழ் சினிமாப் பாட்டு எனக்கு கற்றுத்தராத ஒன்று என்று எதுவுமில்லை எனச் சொல்லும் அளவுக்கு சினிமா பாட்டு பிடிக்கும். மிகப் பிடித்த பாடகர்: டி. எம். சவுந்திரராஜன், மிகப் பிடித்த பாடகி: எல்.ஆர். ஈஸ்வரி, மிகப்பிடித்த இசையமைப்பாளர்கள்: இளையராஜா, எம்.எஸ். வி.
டூயட் பாட்டு எதுக்கு என்று கேட்பவர்களைப் பார்த்து, அரவிந்தனின் போக்குவெய்யிலில் ஹரிபிரசாத் சொளராசியா எதுக்கோ அதுக்கு என்று சொல்லத்தோன்றுகிறது. சினிமாவே ஒரு கட்டமைக்கப்பட்ட புரளிதான். இதில் அமைப்பியல்/வடிவ இயல் ரீதியில் சினிமாப் பாட்டுக்கு என்ன எதிர்ப்பு இருக்கமுடியும். தமிழ்ப் படங்களில் சினிமாப் பாட்டு வருவது அபத்தம் என்று சொல்பவர்கள் முதலில் ஐசன்ஸ்டைன்னின் The Film Sense மட்டுமாவது படித்துவிட்டு வந்தால் ஏதாவது விவாதிக்கலாம். உலகச்சினிமாவில் பாட்டு இல்லை என்றால், தமிழ்ச் சினிமா என்ன செய்யும்.
பழைய இந்திப் பாடல்களும் நிறையப் பிடிக்கும். கிஷோர் குமார், ஆஷா, ஆர்.டி. பர்மன் அங்கே பிடித்தவர்கள்.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
இந்தியத் திரைப்படங்கள்: 70/ 80 களில் வந்த ஹிந்தி பேரலல் படங்கள் அனைத்தும், கன்னட கிராமிய புராணிகங்கள் (காடு, சம்ஸ்கரா,சோமன துடி, காடு குதிரே, ஒந்தானொந்து காலதல்லி...), மலையாளத்தின் அடூர், அரவிந்தன் படங்கள் அனைத்தும் என ஒருகாலத்தில் ஒரு சுற்று சுற்றியதுண்டு. 15 வருடங்களாக பார்ப்பதில்லை.
உலகத்திரைப்படங்கள்: 90 க்கு முன் வந்த கிளாசிக்ஸ் என அறியப்படும் ஐரோப்பிய, ரஷ்ய, ஜப்பானிய, அமெரிக்க படங்களில் ஏகதேசம் பார்த்திருப்பேன். அதுக்கப்புறம் இல்லை. பிடித்த இயக்குனர்களும், படங்களும் பல. பெரிய பட்டியலாகும் என்பதால் தரவில்லை.ஏனோ சினிமா போதும் என்று அப்போது தோன்றிவிட்டது. நிறுத்திவிட்டேன்.

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
இல்லை.

10.தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நன்றாகத்தான் இருக்கிறது. ஹாலிவுட், இந்திப் படங்களின் பாதிப்பில் இந்திய மொழிச் சினிமாக்கள் ஏறக்குறைய அழிந்துபோய்க்கொண்டு இருக்கின்றன. தமிழ் ஒன்றுதான் தாக்குப் பிடிக்கிறது. அதற்கு தமிழ் மசாலா படங்களைத்தான் காரணம் சொல்ல முடியும். ரஜினி, விஜய், கமலஹாசன், வடிவேலு, அஜித், விக்ரம் போன்றவர்கள் தான் காரணம். வேறுவிதமாக நல்ல படங்கள் எடுக்கலாம் என நினைப்பவர்கள் செயல்பட முடிவதும் இந்த மசாலாப் படங்கள் ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் சந்தையின் காரணமாகத்தான். இல்லா விட்டால் Ivan the terrible II க்கு ஏற்பட்ட கதிதான். சமரசங்கள் யாருடன் செய்யவேண்டும்? அரசுடனா, அதிகாரத்துடனா, மக்களுடனா? மக்கள் சந்தையில் சமரசங்கள் செய்வதே மேல் என்று படுகிறது. புது இயக்குனர்கள் நன்றாகவே செய்கிறார்கள்.

11.அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
96-06 பத்தாண்டுகள் சென்னையில் இருந்தேன். ஒரு தமிழ்படம் கூட பார்க்கவில்லை! வீட்டில் தொலைக்காட்சி இணைப்பும் தரவில்லை. அதனால் எனக்கு ஒன்றும் ஆகாது. தமிழர்களுக்கு பொதுவாக பைத்தியம் பிடிக்கலாம்.

நான் அழைக்கவேண்டும் என்று நினைப்பவர்களை ஏற்கனவே மற்றவர்கள் அழைத்து விட்டார்கள். எனவே விருப்பமிருக்கும் அனைவரும் எழுதலாம்.

Tuesday, October 14, 2008

ஒரு வரி விமரிசனம்

அறிவியல் என்பது ஒரு முறை செய்யப்பட்ட அறி முறைதான். ஆனாலும் எது அறிவியல் எது அறிவியல் இல்லை என்பது பெரும் வாதங்களுக்கு வழிவகுக்கும் ஒரு கேள்வியாகும். "மொசப் புடிக்கிற நாயை மூஞ்சியப் பாத்தா தெரியாதா" என்பது கோவை மாவட்ட சொலவடை. முயல், உடும்பு வேட்டைக்கு முன்னெல்லாம் நாயோடுதான் மக்கள் செல்வார்கள். அதேபோல சில துறைகளைப் பார்த்தாலே அது அறிவியலா இல்லையா என்பது தெரிந்துவிடும். காட்டாக, சோதிடம், தேர்தல் மக்கள் கணிப்பு இதெல்லாம் அறிவியல் இல்லை. சிலவற்றை இதில் சேர்க்கலாமா முடியாதா என்று குழப்பம் வரும். மொழியியல், சமூகவியல், பொருளாதாரம் என்பன. இவை அறிவியலின் முறைகளை பயன்படுத்துகின்றன, ஆனால் அறிவியல் ஆகமுடியுமா என்பது கேள்விக்குறியது.

இப்போது எதற்கு இதைப்பற்றி? அறிவியல் என்பது முறையாக்கப்பட்ட அறிவின் சுருக்கெழுத்து என்றால் கணிதம் அறிவியலின் சுருக்கெழுத்து எனக்கொள்லலாம். இது ஒரு பார்வைதான். இப்படியெல்லாம் அறிவியலையும் கணிதத்தையும் குறுக்க நான் முயற்சிக்கவில்லை. கணிதம் ஒரு சுருக்கெழுத்தாக இருப்பதாலேயே அதனால் குறைவான் நேரத்தில், குறைவான சொற்களில் மிக அதிக 'விஷயங்களை'ச் சொல்ல முடிகிறது. கணிதத்தில் அழகும் இத்தகைய நோக்குடனே பேணப்படுகிறது.

ஆனால் கணிதம் ' செய்வது ' என்பது கணிதத் தேற்றங்கள்போல சுருக்கமானது அல்ல. அவ்வளவு தெளிவானதும் அல்ல. ஜான் கார்லோ ரோடா (Gian-Carlo Rota ) என்ற ஒரு கணித அறிஞர் பத்தாண்டுகளுக்கு முன்பு வரை இருந்தார். அவர் கூறுவது போல
" கணிதம் என்பது முறையான நிரூபணங்களைப் பற்றியது அல்ல. எது உண்மையாக இருக்கவேண்டும் என்று நாம் உள்ளுனர்வின் மூலம் அறிந்தபிறகே முறைப்படுத்தல் நிகழ்கிறது" கணிதத்தை எளிமையாக கற்பிப்பதிலும், அதற்கும் மெய்யியலுக்கும் இடையேயான தொடர்பைப்பற்றியும் மிகவும் அக்கறை கொண்டவர் ரோடா. இவரைப் பற்றி நிறைய எழுதலாம்.

அவர் "அட்வான்ஸஸ் இன் மாதமாடிக்ஸ்" என்ற துறைசார் இதழுக்கு ஆசிரியராக இருந்தார். நான் பொறியியல் மாணவனாக இருந்தாலும் அந்த இதழை தவறாமல் படிப்பேன். எனக்கு அதில் இருக்கும் கணிதம் ஒன்றும் புரியாது. இதழின் கடைசி பகுதியில் ரோடா புது கணித புத்தகங்களைப் பற்றிய மதிப்புரைகள் எழுதுவார். அது ஒன்றுதான் எனக்கு அதில் புரியும். அதற்காகவே படிப்பேன். ஒரே பக்கத்தில் பல புத்தகங்களுக்கு மதிப்புரை இருக்கும். மதிப்புரை என்றால் அநேகமாக ஒரு பத்திக்கு மிகாது. ஒரு வரி மதிப்புரையும் உண்டு. துறைசார் நகைச்சுவைகள் நிறைய உண்டு. படமே இல்லாமல் லெம்மா- தேற்றம்- நிரூபணம் என வரும் கணிதப் புத்தகங்களை பிரித்து மேய்ந்துவிடுவார். ஒருமுறை ஒரு புத்தகத்தை, 'இது நார்மன் ஸ்டீன்ராடுக்கு (ஒரு புகழ் பெற்ற கணிதவியலாளர்) அவர் நண்பர் எழுதிய கடிதம் போல இருக்கிறது. இதை எந்த மாணவன் படிப்பான்' என்று காட்டமாக விமரிசித்து இருந்தார். அப்போதுதான் நான் ஸ்டீன்ராடின் புத்தகம் ஒன்றை முழுதுமாக செராக்ஸ் செய்து வந்திருந்தேன். நூலகத்தில் இதைப் படித்து சத்தமாக சிரித்து விட்டேன்.
நண்பர் ரோசாவசந்த் தமிழில் யாரோ ஒரு எழுத்தாளர் 12000 பக்க நூல் ஒன்றை எழுதிக்கொண்டிருப்பதாக ட்விட்டரில் ஒரு கிசுகிசு சொல்லி இருந்தார். படித்து விட்டு கண்டிப்பாக ஒரே ஒரு வரி விமரிசனம் செய்யவேண்டும் போல இருக்கிறது. எப்ப நூல் வரும்?

Tuesday, October 07, 2008

2008 இயல்பியல் நொபல் பரிசு (2008 Physics Nobel )

இந்த வருட இயல்பியல் நொபெல் பரிசு மிக செறிவான ஒரு துறைக்கு கிடைத்திருக்கிறது. துகள் இயல்பியல் எனப்படும் அனைத்துப் பொருண்மையின் அடிப்படைகளை, பொருண்மை-வினை இயல்புகளை ஆராயும் இப்புலம் இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதியில் துவங்கி வெகு வேகமாக வளர்ந்த ஒரு துறையாகும். துகள் இயல்பியல், ஆதாரமான கேள்விகளை எழுப்பும் துறையாதலால் அதிக அளவில் கணிதமயமாக்கப்பட்ட ஒன்றும் ஆகும். ஏறக்குறைய உயர்கணிதத்தின் எல்லைகளை விரிவாக்குவதிலும் இத்துறையின் பங்கு கணிசமானது.

மூன்று ஜப்பானிய இயல்பியலாளர்கள் இப்பரிசினை இவ்வாண்டு தமக்குள் பங்கிட்டுக்கொள்கிறார்கள்.
அவர்கள்:

1. அமெரிக்காவின் சிகாகோ பல்கலையைச் சார்ந்த யோஇசிரோ நம்பு (Yoichiro Nambu)

2. ட்சுகுபா, ஜப்பானின் உயர்சக்தி துகள்முடுக்கி ஆய்வகத்தைச் சேர்ந்த மகோடோ கொபயாஷி
(Makoto Kobayaashi)

3. கியோதோ பல்கலை, ஜப்பானைச் சார்ந்த தொஷிஹிதே மஸ்காவா (Toshihide Maskawa)


இவர்களுக்கு இப்பரிசினை பெற்றுத்தந்த ஆய்வு இயற்கையில் சீர்மை எப்படி தானாக பிளக்கிறது அல்லது உடைகிறது என்பதைப் பற்றியதாகும். சீர்மை என்பது நாம் எல்லோரும் அன்றாடம் உணர்வதுதான். ஒரு உதாரணமாக கடைகளில் அடுக்கடுக்காய் அடுக்கிவைக்கப் பட்ட ஆரஞ்சுப் பழங்கள், சூரியகாந்திப்பூவில் அழகாய் சீராய் அடுக்கப் பட்டுள்ள விதைகள் என்று நாம் அனுதினமும் காண்பவை சீர்மைக்கு காட்டுகளாக கொள்ளலாம். இத்தகைய சீர்மைகளை கணிதத்தில் குரூப் தியரி எனப்படும் தொகுதிகளை ஆய்ந்து அறிகிறோம். இயல்பியலின் பல சமன்பாடுகளை இத்தகைய தொகுதிகளின் அடிப்படையில் வகைப்படுத்த இயலும். அத்தகைய வகைப்படுத்தப் பட்ட சமன்பாடுகளின் சில மாறிலிகளை (invariants) கணிப்பது மிக அழகானதான ஒரு இயல்பியல் வகைபடுத்தலாகும்.
மேற்கண்ட மூவரும் துகள் இயல்பியலின் அடிப்படைச் சமன்பாடுகளில் இயற்கையாக இத்தகைய சீர்மை எப்படி தானாக முறிக்கின்றன என்பதைப் பற்றியதாகும். விவரமாக அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

Friday, October 03, 2008

இப்பவும் அப்பவும் ...

நண்பர்கள் வாரணம் ஆயிரம் பாட்டொன்று பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். கேட்டபோது ஏனோ இரண்டு மூன்று பழைய பாடல்கள் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. என்ன செய்வது....

இதை முதலில் கேளுங்கள்.
ஆனா இது அதுக்கு தாத்தா
ஆனா கடவுள் உலவும் இடம் இங்கே ...
எஞ்சாய்!.

Sunday, September 14, 2008

அறிவின் உண்மை
அறிவிற்கு பல பரிமாணங்கள் உண்டு. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் மனிதன் கல்லைச் சிதைத்து கூர்முனையாக்கி கோலில் பிணைத்து அடுமா எறிந்து பற்றி உண்டு களித்ததிலிருந்து துவங்குவது அவன் அறிவு. குடி அழைக்கவும், விலங்கு கனி இருப்பிடம் உரைக்கவும், களி கூவவும் உருவாக்கிய மொழி அறிவின் சுமை மிருகமாய் இன்றுவரை உள்ளது. மொழி தன் அழகைக்கண்டு தன்னாட்சி பெறும் முன்னரே காட்சிக் கவன் சொல்லாடல் மானுடத்துக்கு ஓவியமாகவும் பிரதிமைகளாகவும்
உணர் முறையாய் ஆகிவிட்டவை. மானுடத்தின் அடையாளச் செயல்பாடுகளாகிய இவை அனைத்தும் ஆன அறிமுறைகள் மனிதக் குழுக்களின் இருப்பு, பெருப்பு, புவிப் பரவல் என்று நமது வரலாற்றின் கதைதான். இதில் அறிவு என்பது உண்மையாகவும், உண்மை என்பது அறிவியலாகவும் காலப்போக்கில் நடந்த குறுக்கம் இன்று அறிவியலை மனிதனின் அறிவுத்தேடலின் கூர்முனையாக்கி வைத்திருக்கிறது. நமது ஆதி முன்னோர்களின் எறிகோலின் கூர்முனை இன்றைய அறிவியலின் முப்பாட்டன் என்பதை அறிவியல் புழங்குவோரும் அவர் எதிர் வழக்காடுவோரும் என்றும் நினைவிலிருத்துவது தேவை.

இருபத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஆய்வுச் சாலையில் என் அறையின் தனிமையில் எழுதிய கவிதை ஒன்று. மூன்று ஆண்டுகளுக்கு முன் ஒரு முறை வலையில் இட்டது. இன்று மறுபடியும்.ஆய்வுக்கூடத்தின் இழுப்பறைகள்
--------------------------------------------------------------


சீசாக்களில் அடைத்து அடுக்கடுக்காய்த் தேவதைகள்
குளிர் அறைகளின் சுவர்களெங்கும்
இவையன்றோ கோடிகோடி மனிதர்க்கு உணவளித்தன
இவையன்றோ குழந்தைகளின் ஆரோக்கியம் கொடுத்தன
இவையன்றோ மூச்சுக்காற்றையும் எரிபொருளையும்
தீப்பற்றா வீடுகளையும் தந்தன
ஆயினும் ஒரு அதிகாலையில் கண்டேன்
அவற்றின் பற்களில் மனித ரத்தத்தை
அவற்றின் நகங்களூடே மனித தசைத்துணுக்குகளை
அவற்றின் சட்டைப்பைகளில் மனித எலும்பு உதிரிகளை
குளிர் அறையின் மென்மையான சிலுசிலுப்பில்
தேவதைகளின் இளந்தூக்கப்பொழுதில்
நான் பிடுங்கினேன் அவற்றின் பற்களை நகங்களை ஆடைகளை
சீசாக்களை உடைத்து எறியும்முன்
மூடிகளைப் பதுக்கிக்கொண்டேன்
வரும்சீசாக்களுக்கும் பொருந்துகின்றன இதே மூடிகள்

(ஜூலை, 1986)


நண்பர் நாகார்ச்சுனனுடன் நடத்திக் கொண்டிருக்கும் தொடர் உரையாடலின் ஒரு கண்ணி இது.


=

Tuesday, July 29, 2008

ஒரே ஒரு பின் நவீனத்துவ சுட்டி

இவ்வளவு நாள் எழுதிய பதிவுகளில் பின் நவீனத்துவம் பற்றி ஒருமுறை கூட நான் எழுதியதில்லை. அறுபதுகளில் இருத்தலியலும் புதுக் கவிதையும், எழுபதுகளில் அந்நியமாதலும் ஹைக்கூவும் எண்பதுகளில் அமைப்பியலும் குறுநாவல்களும் தொண்ணூறுகளில் மாயயதார்த்தமும் பெருங்கதைகளும் இந்த பத்தாண்டில் பின்நவீனத்துவமும் கண்ட கலைப் படைப்புகளுமாக ஒரு பேஷன் ஷோ போல தமிழ் இலக்கியம் தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பது. இதில் இலக்கியப் போக்குகளை கவனிக்காமல் நாம் பாட்டுக்கு படித்துக்கொண்டே இருப்பதுதான் எளிதான செயல். தத்துவமும் கலைப்படைப்பும் ஒன்றாக வேறு இயங்குவதால் இன்னும் சற்று உற்சாகம் கூடும் என்பதற்கு இன்றைய இலக்கியங்களே சாட்சி. அதிலும் பின் நவீனத்துவக் கட்டுரைகள் நல்லதொரு வாசிப்பனுபவம். ஆங்கிலம் அறிந்தவர்கள் தமக்கேயான இத்தகைய கட்டுரைகளை தாமே உருவாக்கிக்கொள்ள ஒரு "தானியங்கி கட்டுரை உருவாக்கி" ஒன்றை வடித்துள்ளார்கள்.
கீழ்கண்டதை பக்தியுடன் வாய்விட்டுப் படித்து கடைசி வரியை சொடுக்கவும்.

பாலும் தெளிதேனும்
பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு
நான் தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்கு

பின்நவீக் கருத்தொன்று தா
-

Tuesday, July 15, 2008

புன்னகையில் மின்சாரம் - கலையும் வடிவும்.

(அன்றாட மெய்யியல் - 2)
----------------


1. கலையை யாரும் வெற்றிடத்தில் வடிப்பதில்லை. நம் நாட்டுக்கலைகள் முழுவதும் கூட்டுக்கலைகள்தாம். அல்லது கலைஞன் தன்னைத் தானே முன்னிறுத்தாதவைதாம். பாடல்கள், ஆடல்கள், சிற்பம், ஓவியம் என. பலர் சேர்ந்தோ அல்லது பெயரே சொல்லாமலோ வடித்து விட்டுப்போன கலை நிகழ்வுகளே தமிழ் வரலாறு. இயல் சொல்லும் எழுத்து மட்டும் தனியானது. அதுவும் எழுத்து அல்ல. பலருக்கும் எழுதப் படிக்கத் தெரியாது என்பதால் பாடல் தான். சங்கத்திலிருந்து சென்ற நூற்றாண்டு வரை. தனிமனிதன் தன் படைப்பாக்கத்தினால் தூண்டப்பட்டு எழுதி அதை பல படிகளாக தொழில் நுட்பத்தின் உதவியால் புத்தகங்களாக மாற்றி பிரதிகளாக்கி வாசக சந்தைக்கு விற்று ஒரு தனித்துவ மிக்க 'எழுத்தாளனாக' மாறியது தமிழ் வரலாற்றில் மிகச் சமீபத்தில். இன்றும் நிகழ் கலையின் பிரதியான திரைப்படமே நம் மக்களின் அதி முக்கிய கலை நுகர்வுப் பொருள்.
2. தமிழ்த் திரைப்படங்களில் தவிர்க்க முடியாத, என்னைப் பொருத்தவரை தவிர்க்கக் கூடாத, ஒரு கூறான திரைப்பாடல்களைப் படமாக்குதல் பற்றியது இப்பதிவு. என்னைக்கேட்டால் தமிழில் நிகழும் மிகப் பெரிய, அதிக அளவில் படைப்புத் திறமை மிக்க, ஒரே கலை வடிவம் திரைப்பாடல்கள்தான். திரைப்பாடல்களை பாடல், இசை, நடனம், நடிகர்கள், காட்சி அமைப்பு என எல்லாம் அமைந்த ஒரு கலைப் பொதியாகவே நான் அணுகுகிறேன். தமிழ் படங்கள் அனேகமாக நான் பார்ப்பதில்லை. ஆனால் தினமும் சன் மியூசிக் தொலைக்காட்சி தவறாமல் உண்டு. அதனால் அனேகமாக அனைத்துப் பாடல்களும் பார்த்து விடுவேன். இத்தப் பதிவில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு பாடல் + அதன் படமாக்கல் பற்றி.

3. 1992 ஆம் வருடத்திய ராஜா இசையில் பிரபுதேவா நடனம் கட்டமைத்த "புன்னகையில் மின்சாரம்". ராஜாவைப் பற்றியோ பாடலைப் பற்றியோ அதிகம் சொல்லவேண்டியதில்லை.மொட்டை என்றைக்குமே contemporary தான், சங்கப் பாடல்கள் போல. சீரிளமைத் திறம். மற்றதை பார்ப்போம்.பிரபு தேவாவின் நடனக் கட்டமைப்பில் எப்போதுமே புவியீர்ப்பு விசை குறைவு. முதன்முதலாக ' லாலாக்கு டோல் டப்பி மா' பாடலை பார்த்தவுடன் மனதில் நிலைத்தது அவர் திரைச் செவ்வகத்தின் பாதி உயரத்தில் ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கத்துக்கு தரைக்கு மேல் ஒரு இணைகோடாகத் தாவியதுதான். ஒரு கலைஞன் தன் கலைக்கு திருப்பிக் கொடுப்பது அதன் ஆதார வார்த்தைகளை உருவாக்கிச் சேர்ப்பதுதான். (vocabulary ). கலைஞனின் வடிவச் சோதனைகள் சிறந்த படைப்புத் திறம் இருப்பவர்களின் படைப்பில் இயல்பாக நிகழும். இருபதாம் நூற்றாண்டில் ஓவியர்கள் இதை வெளிப்படையாக அறிவித்து நிகழ்த்திக் காட்டினார்கள். ஒவ்வொரு வடிவப் பரிசோதனையும் ஒரு மானிபெஸ்டோவுடன், தர்க்க ரீதியாக , அழகியல் ரீதியாக அறிமுகப் படுத்தப் பட்டது. வடிவமும் உள்ளடக்கமும் பற்றிய விவாதங்களின் நீட்சியாக அவற்றிற்கு உடன் சேர்த்துப் பொருள்கொள்ளத்தக்க வகையில் இவை அமைந்தன. இது கலையின் மெய்யியல் ( Philosophy of Art) கறார்தன்மை பெற மிகவும் உதவியாகவும் இருந்தது. அதை பற்றி பின்னொருமுறை பார்ப்போம். பிரபுதேவா உள்ளிட்ட நடனஅமைப்பாளர்கள் தமிழ் சினிமாவில் சாதித்தது நிறைய. தமிழ்ப் படப் பாடல்பொதிகளின் கூறுமொழி, அதன் அலகுகள் மற்றும் கட்டமைப்பு மிகவும் நுட்பமானது, நாளும் புதுப்பித்துக்கொண்டே இருப்பது.


4. ஒரு ஓவியம் வரைப்படுவது ஒரு செவ்வக திரைப்பரப்பில். அதன் செவ்வக வடிவமே நாம் எப்படி ஓவியத்தை படிக்கிறோம் என்பதைத் தீர்மானிக்கிறது. ஒரு புத்தகம் வரிவரியாக நம்மைப் படிக்கத்தூண்டுகிறது. எழுத்தாளனால் நிகழ்ச்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கப்படுகின்றன. காலத்தில் ஒன்றன் பின் ஒன்றாக நமக்கு கதையைக் கூறுகிறான் கதை ஆசிரியன். எழுத்து அதனாலேயே லீனியர் - அதாவது நேர்கூறல் வகை சார்ந்தது. ( நான் லீனியர் எழுத்து எனப்படும் வடிவப் பரிசசோதனை பற்றி வேறு ஒரு முறை). ஆனால் ஒரு ஓவியம் அப்படியில்லை. முழுவதுமாக ஒரேயடியாக தன்னை உங்கள் முன் வைக்கிறது. அதை நீங்கள் படிக்க ஒரு வரிசையை அது தீர்மானிப்பதில்லை. உங்களுக்கே விட்டுவிடுகிறது. (ஓவியத்தின் அக ஒழுங்கு பற்றியும் விரிவாக பின்னால்) .
திரைப்படமும் ஒரு செவ்வகத் திரைப்பரப்பில்தான் நமக்கு காட்டப்படுகிறது. ஆனால் இதில் ஓவியம், புத்தகம் இவற்றின் இரு கூறல்முறைகளும் சேர்ந்து விடுகின்றன. அதாவது ஓவியம்போல முழு தாக ஒரு காட்சி அமைப்பு உங்களுக்கு முன்னால் உள்ளது. அந்த ஒரு காட்சியே ஓவியம்போல் ஒரு கதையை நமக்குச் சொல்லவேண்டும். அதோடுகூடி காட்சி, காலத்தில் வேறு மாறுகிறது. அடுத்த அடுத்த காட்சிகள் புத்தகத்தின் அடுத்த அடுத்த வரிகளைப்போல காலத்தில் வருகின்றன. இப்படி ஓவியம், எழுத்து என இரு கலைவடிவங்களையும் உள்ளக்கியது திரைப்படம். அதோடு இசை எனும் இன்னொரு பரிமாணம் கூடுதலாக. இப்படி பல பரிமாணங்களை தன்னுள்ளே கொண்டிருக்கும் ஒரு கலைப் படைப்பை மனிதன் நுகர்வானா, இல்லை இதில் ஏதோ ஒன்றை தேர்ந்தெடுப்பானா?. திரைப்படம் தமிழகத்தின் ஆகப்பெரும்பான்மையான கலைப் பொருளாக இருப்பதில் நமக்குப் பெருமையாக அல்லவா இருக்க வேண்டும்.

5. சரி இந்தப் பாடலுக்கு வருவோம்.

(அ). முதலில் திரைச் செவ்வகத்தை பார்ப்போம். இந்தப்பாடல் காட்சி சாதாரணமாக நமக்குக் காட்டப் படும் திரைக் காட்சி போல நீளம், அகலம், உயரம் என மூன்று பரிமாணங்களைக் காட்டுவதல்ல. இது ஒரு இருபரிமாண கட்டமைப்பு. தமிழக செப்புத்தகட்டுச் சிற்பங்கள் போல (நந்தகோபாலின் ஃபிரண்டல் சிற்பங்கள்). பிரபுதேவா காமிராவை விட்டு தூரப்ப் போவது அல்லது காமிராவை நோக்கி அருகில் வருவது எனும் மூன்றாவது ஆழப் பரிமாணத்தை முடிந்தவரை ஆகக் குறைவாகவே பயன் படுத்துகிறார். நடன அசைவுகள், நகர்வுகள் அனைத்தும் ஏறக்குறைய திரைச் செவ்வகத்தின் குறுக்காகவே இடதிலிருந்து வலது, வலதிலிருந்து இடது என அமைக்கப் பட்டுள்ளன. இது நடனத்திற்கு ஒரு தட்டையான ஸ்டைலைஸ்ட் தன்மையைக் கொடுக்கிறது. இப்பாடலின் பெரும் பலம் அது.

(ஆ). இரண்டாவது நடனத்தைப் பற்றியது.
இசையிலும் நடனத்திலும் இரண்டு இழைகள் உள்ளன. ஒன்று சீராக ஆற்றொழுக்கு போல நழுவும் மொலடியில் அமைந்த பாட்டின் ராகம். இன்னொன்று வெட்டி வெட்டி staccato வாக நிரவும் தாள கதி. ராஜா இதையெல்லாம் அலட்சியமாக செய்வார். ஆனால் பிரபுதேவா அவருக்கு இணையாக காட்டும் திறனைக் காணவேண்டும். நடனக் கட்டமைப்பில் நளினமும் உண்டு, வெட்டி வெட்டி சொடுக்கித் தாவலும் உண்டு. (இதை விஜயகாந்துக்கே அமைக்கும் துணிவு!) . விஜயகாந்தும் பானுபிரியாவும் குறுக்கு நெடுக்காக நகர்வது மெலொடியின் ஏற்ற இறக்கங்களுக்கு ஒத்த காலத் துணுக்குகளில். ஆனால் அவர்கள் கைகள் கால்கள் இயங்குவது தாளத்தின் கதியில். முன்னதை விட இது விரைவானது, வெட்டி வெட்டி அமைந்தது. இரண்டு கால அலகுகளை ஒரே சமயத்தில் அமைத்திருக்கிறார் பிரபு தேவா. அட்டகாசம்.

(இ) மூன்றாவது பின்னணியில் உள்ள மினிமலிஸம். Clutter இல்லாத ஒரு பின்னணி. கூறுபொருள் மட்டுமே வெளித்தெரிய அமைத்த வடிவம். மீண்டும் ஓவியப் பரிசோதனைகள்தான் நினைவுக்கு வருகிறன.
இந்தப் பாடல் வடிவஇயல்வாதிகளுக்கு ஒரு விருந்து. (A formalist delight).


பின்குறிப்பு:
1. தாளத்துக்கு canned loop களைப் பயன்படுத்தி ஹிட் மேல் ஹிட் கொடுக்கும் ஹாரிஸ் ஜெயராஜ் ஒருவாரத்துக்கு தூங்கும் முன் இந்தப் பாடலை ஒருமுறை அதன் தாளகதிக்காக மட்டும் கேட்டால் பரவாயில்லை.
2. அஜீத்தின் பில்லாவுக்கு இந்தப்பாட்டை அப்படியே திரும்பவும் ரீமிக்ஸ் செய்யாமல் படம் பிடித்திருக்கலாம் - ஒரு செபியா பின்னணியில். தூள் பறந்திருக்கும்.ஆனால் பானுபிரியாவுக்கு எங்கே போவது? சரிதான்.
3. இதேபோல ஏறக்குறைய ஸ்பிரிட்டில் உள்ள இன்னொரு பாடல் இது.
http://www.veoh.com/videos/v64804045geq2cap
ஆனால் புன்னகையில் மின்சாரம் போல இல்லை.


இந்தப் பாடலின் இசைக்கோர்வையைப் பற்றி பா.ராகவனின் பதிவு. இதையும் படியுங்கள். முழுமைஅடையும்.

--

Friday, July 11, 2008

அன்றாட மெய்யியல்

முழுமையின் முயக்கம் (Pretense of the whole )
=======================================


நேற்றைக்கு சில நண்பர்களுடன் செடிகொடிகள் சூழ்ந்த ஒரு இடத்தில் டீ குடித்துக்கொண்டு இருந்தோம். எதிர்பாராமல் ஒரு பட்டாம்பூச்சி படபடத்து முகத்துக்கு அருகில் பறந்தது.
"Here goes another tsunami generator " என்று நான் சொல்ல, சிரித்துக்கொண்டே நண்பன் உடனே
"Watch out, there may be a storm in your tea cup" என்றான். இப்படி நாம் எல்லோரும் கெயாஸ் தியரி பற்றி உளரிக்கொட்டிக்கொண்டு இருப்பதைப் போல கொஞ்சம் மெய்யியலையும் போட்டுப் பார்த்தால் என்ன தோன்றியது. இந்தியாவில் அதுவும் தமிழ் மொழிக்காரர்களுக்கு வாராத மெய்யியலா. அதனால்தான் இந்த அன்றாட மெய்யியல். வெறும் naive உரையாடல் மட்டும்தான். கறாராக வேண்டுமானால் வேறு எப்போதாவது.

ஆதி முதலில் ஆரம்பித்துப் பார்க்கலாம். இப்பொழுதெல்லாம் மதவாதிகள், கலை- இலக்கியக்காரர்கள், சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் இவர்களில் ஆரம்பித்து தெருநாய் ஆர்வலர்கள் வரை அனைவருக்கும் இடைவிடாது மெல்லக்கிடைத்த அவல் அறிவியல் போல இருக்கிறது. ஏதேனும் ஒன்று என்றால் உடனே ரிடக் ஷனிஸம், விவிசெக் ஷன் என்று கிளப்பிவிடுகிறார்கள். நாங்கள் எல்லாம் பூரணத்தை பூரணத்துக்குள் திணித்து பூரணமான எங்கள் வாயில் லபக் என்று ஒரே முழுங்கு முழுங்கிவிடுவோம். அறிவியல் மட்டும்தான் பூரணத்தை பொடியாக்கி கால் தொடையெல்லாம் சிந்திக்கொண்டு தப்புத்தப்பாய் சாப்பிடுகிறது என்பது இவர்கள் முனகல். அப்படி என்னதான் அது, அறிவியலின் ரிடக் ஷனிஸப் பிரச்சினை?

இவர்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு நம்பிக்கை என்னவென்றால் அறிவியல் இயற்கையை அப்படியே முழுமையான ஒன்றாகப் பார்ப்பதில்லை. கூறுபோடுகிறது. அந்த குட்டிக் குட்டி கூறுகளை மட்டும் ஆராய்ந்து ஏதோ புரிந்துகொண்டு அதையெல்லாம் சேர்த்துக்கொள்கிறது. அப்புறம் அந்த முழுமைக்கு பதிலாக இந்தக் கூறுகளைப் பற்றி அறிந்ததையே சேர்த்து வைத்துக்கொண்டு முழுமையை அறிந்து விட்டதுபோல் பாவனை செய்கிறது. இந்தப் பாவனையை எங்களால் தாங்கமுடியவில்லை.
இதுதாங்க விஷயம். ஒரு எடுத்துக்காட்டைப் பார்ப்போம்.

ரசம் வைக்கவேண்டுமானால் என்ன செய்வது. பருப்பு வேகவைத்த தண்ணீர், கரைத்த புளி, உப்பு, பெருங்காயம், எண்ணெய், கருவேப்பிலை, மல்லித் தழை, சீரகம், மிளகு, மிளகாய் இப்படி பலதையும் எடுத்துக் கொள்கிறோம். ஒவ்வொன்றும் தனித்தனியே ஒவ்வொரு சுவை. ரசம் வைத்தாயிற்று. இப்போது ரசத்தின் சுவை என்ன? ரசம் என்பது முழுமை. நாம் பயன்படுத்தும் நானாவிதப் பொருள்களும் அதன் உள்ளுறை கூறுகள். அவற்றின் சுவைகளையெல்லாம் எப்படியாவது சேர்த்தால் ரசத்தின் சுவை வந்துவிடாது. அறிவியல் இப்படி ஒவ்வொரு கூறுகளின் குணங்களை அறிந்துகொண்டு அவற்றைச் சேர்த்தால் முழுமையின் குணங்களையும் முழுதாக அறிந்துவிடலாம் என கருதுகிறது, அது பிழை.

முழுமையின் குணங்களை இப்படி குறுக்கமுடியாது. இந்த குறுக்குப் பார்வைதான் ரிடக் ஷனிஸம். இதுதான் அறிவியலின் மாபெரும்
குறை. என்றைக்கும் அதனால் முழுமையை அறியமுடியாது. அதற்கு ஆன்மீகம் (சாமி?), கலை போன்ற முழுமையைத் தேடும் வழிவகைகள் இருக்கின்றன. சற்றே ஒதுங்கி இரும் பிள்ளாய். அதெல்லாம் நாங்க பாத்துக்கிறோம். சரி, அறிவியலும் கலையும் எப்படி முழுமையைப் பார்க்கின்றன?


-

Wednesday, July 09, 2008

கடவுளின் போர்வீரர்கள்

சமுதாயத்தின் எல்லாத் தளங்களிலும் நாத்திகர்கள் எல்லாக் காலத்திலும் அவமானப்படுத்தப் பட்டும், அவர்களுக்கு தகுதியான முறையான இடம் மறுக்கப்பட்டுமே இருக்கிறார்கள். கடவுள் நம்பிக்கையே ஒருவனுக்கு மானுட அறத்தை கற்பித்துவிடும் என்ற இன்னொரு நம்பிக்கையே இதற்கு அடிப்படையாக உள்ளது. மனிதர்கள் சேர்ந்து வாழ கண்டுகொண்ட மக்களாட்சியும் அதன் பல்வேறு அதிகார மையங்களும் இந்த அபத்த நிலையிலிருந்து மாறவில்லை என்பது நாம் அனைவரும் உணர்வதுதான். ஒரு நாட்டின் காவல்துறை, நீதித்துறை, ராணுவம் முதலியவை கடவுள் நம்பிக்கையாளர்களாலும் மதவாதிகளாலும் நிரம்பும் போது அதனால் ஏற்படும் விளைவுகளை சமன்செய்ய வழிகள் வேண்டும். ஆனால் மக்களாட்சி எனும் மெல்லிய போதை புகைமண்டிய சூழல் நம்மை சிந்திக்க விடாமல் மயக்க்ிக்கொண்டிருக்கிறது.


மக்களாட்சியின் த்லைமைப் பீடத்தில் எப்போதும் தன்னை வைத்துப் பார்த்துக்கொள்ளும் அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் ஈராக் போரில் பணிசெய்த போது அவரது இறைமறுப்பு நிலைக்காக அவர் ஒதுக்கப் பட்டதையும் , அதனால் அவரது ராணுவ வேலைக்கே வினையாக ஆனதையும் எடுத்துக்காட்டி அமெரிக்க அரசின் மீது வழக்குத் தொடுத்துள்ளார். சி என் என் செய்தி. . அமெரிக்க ராணுவம் ஒரு கிருத்துவ ராணுவம் எனக்கூறும் அவர் இது சட்டத்துக்குப் புறம்பானது என வழக்குத் தொடர்கிறார். வழிபாடு செய்யாவிட்டால் மற்றவர்களிட ம்ிருந்து ஒதுங்கி நிற்கவேண்டும் என்று ஆணையிட்டார்கள் என்றும் கூறுகிறார். இன்னொரு ஓய்வு பெற்ற விமான வீரர் ஒருவர் ஏறக்குறைய 8000 வீரர்கள் கிருத்துவ மதத்தை தழுவ வற்புறுத்தப் படுவதாக தம்மிடம் முறையிடுகிறார்கள் என்று கூறுகிறார். பெண்டகன் ஐ பெண்டகோஸ்டல்கன் என ஏளனம் செய்யும் இவர் உலகின் அனைத்து அமெரிக்கத் தளங்களிலும் இத்தகைய கிருத்துவக் குழுக்களின் உறுப்பினர்கள் உயர் அதிகாரிகளாக உள்ளனர் என அறியப்படுகிறது என்கிறார்.


ஏறக்குறைய ஒரு நூற்றைம்பது ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பெரும் ஆத்திக அலை உலகமெங்கும் பரவிக்கொண்டிருக்கிறது. சிக்கலான தற்கால வாழ்வும், பெருகிவரும் பொருளாதார சமூக பிரச்சனைகளும், நவீன வாழ்வு உடைத்தெறிந்த குடும்ப உறவுப் பொதிகளும் ஒரு மனிதனுக்கு ஏற்படுத்தும் கலக்கத்தை கடவுளன்றி வேறு யாரும் சரிசெய்யமுடியுமென்று தெரிய
வில்லை. அதனால் இது ஒரு ஆத்திக நூற்றாண்டாகத்தான் பரிமளிக்கப் போகிறது. நாத்திகச் சேரிகள் உருவாகும் நாள் தொலைவில் இல்லை.

-

Wednesday, June 18, 2008

firefox 3.0

நேற்று வெளியிடப்பட்ட ஃப்யர் ஃபாக்ஸ் 3.0 உலவியில் தமிழ் எழுத்துக்கள் தொடர்பான வழு ஒன்று சரி செய்யப்பட்டிருப்பது போல் தெரிகிறதே. இப்போது align justify சரியாகக்கப்பட்டிருக்கிறது எனத் தோன்றுகிறது. பயன்படுத்திப் பாருங்கள். இன்னும் அனைத்து ப்ளக்-இன் களும் ஏட்-ஆன் களும் இற்றைப் படுத்தப் படவில்லை. அதற்கு சில காலம் ஆகலாம்.

உயர் கல்வி, IIT, மற்றும் ...

-

கடந்த சில தினங்களாக ஐஐடி சேர்க்கை, எஸ்ஸி/எஸ்டி மாணவர்களை கூண்டோடு வெளியேற்றுதல் போன்ற காரணங்களைக் கொண்டு செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. நாட்டில் உயர்கல்வி என்பது அனைத்துத் துறைகளின் முன்னேற்றத்திற்கும் எஞ்சின் போல. நாம் ஐடியில் வல்லரசு, செய்மதி விடுவதில் உலகில் மூன்றாம் இடம், முக்குக்கு முக்கு அணு உலை கட்டி மின்சக்தி பெருக்குவோம் என்றெல்லாம் பெருமைப்படுமுன் முதலில் கல்வி ஒழுங்காக இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். நம் நாட்டில் செய்விக்க முடியாத சில மின்னணு பாகங்களை அமெரிக்காவிலிருந்து கடத்தி, நமது எரிகணை ஆய்வுக்கு உதவியதாக நேற்றுத்தான் அமெரிக்க/சிங்கப்பூர் தொடர்புடைய இந்தியத் தொழில் நிறுவனம் ஒன்றின் மேலாளரை அமரிக்க நீதிமன்றம் சிறைக்கு அனுப்பி இருக்கிறது. அந்த நிறுவனமோ நாங்கள் நாட்டுக்காக சேவை செய்தோம் என்கிறார்கள். எல்லோரும் இப்போது சுக நினைப்பில் மிதந்து கொண்டிருக்கும் படி நமது அறிவியல் தொழில் நுட்பவியலாளர்களால் உலகத்தர சாதங்களை வடிவமைக்க இயலுமானால் ஏன் இத்தகைய சாதனங்களைக் கடத்தி மாட்டிக்கொள்ள வேண்டும். நம்மிடம் இருப்பது போதாது எனும் உணர்வு முதலில் வேண்டும். பின்புதான் அதை நிவர்த்திக்க வழிதேடமுடியும். இதில் இப்போது மத்திய அரசின் உயர் ஆய்வுக்கூடங்களில் பணியில் இருக்கும் அறிவியல், நுட்பஇயலாளரும் கூண்டோடு வெளியேறி தனியார் துறைக்குப் போய்க்கொண்டிருக்கிறார்கள் என்று தொடர்ந்து செய்திகள் வருகின்றன. தனியார் துறையில் என்ன உலகத்தரமான ஆராய்ச்சி நடைபெறும் என்பதை அங்கு பணிபுரியும் நண்பர்களை கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.

அரசு அடிப்படை, இரண்டாம் நிலை (உயர் பள்ளி) கல்வியை சரியாக மக்களுக்கு கொடுக்கட்டும் மீதமெல்லாம் தனியார் கவனித்துக் கொள்வார்கள் என்ற சிறுபிள்ளைத்தனமான வாதங்கள் போக, இருக்கும் ஐஐடி, என்ஐடி போன்ற சற்றே தரமான கல்விக்கூடங்களின் கதி என்ன என்பதே இப்போது பெரும் பிரச்சனையாக உள்ளது. ஐஐடி நுழைவுத்தேர்வின் கட் ஆஃப் மதிப்பெண்கள் இயல்பியல், வேதியியல், கணிதம் இவற்றுக்கு 48, 55, 37 என்று அறிவித்திருந்தாலும், அவர்களே கொடுத்த மதிப்பெண்பட்டியல் படி கணக்கிட்டால் அத் 4, 7, 6 என்று பரிதாபகரமாக இருப்பதைக் காட்டுகிறது என்கிறார் மேற்கண்ட இணைப்பில் ஒரு ஐஐடி பேராசிரியர். என்னதான் நடக்கிறது என்று எல்லோரும் மண்டையை உடைத்துக்கொள்ளும் முன்பு ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும். தரம் என்பது அந்தந்த வருடத்துக்காக விண்ணப்பிக்கும் மாணவர்களைப் பொருத்தது என்பதுதான். இவ்வளவுதானா சென்ற ஆண்டு நம் அனைத்திந்திய மெரிட் லிஸ்ட் மானவர்களின் தரம் என்று கேள்வி கேட்டால் பதில் ஆம் என்பதுதான். இது மிக போட்டியுள்ள, மாணவர்கள் ஒன்றாம் வகுப்பிலிருந்தே பயிற்சி செய்யும் ஐஐடி நுழைத்தேர்வின் நிலை, ஆய்வகங்களில் உயர் ஆய்வு செய்ய வரும் அறிவியல் நுட்ப மாணவர்களின் தரம் என்னவாக இருக்கும் என்று யூகிக்கத்தான் முடியும்.


-

Thursday, June 12, 2008

இயற்கை ஒவ்வாமை

புல்லாகிப் பூண்டாகி
சிறுபெரு உருவமாய்ப் பலதாகி
இயற்கையாய் குரங்கிலிருந்து வந்த மனிதன்
தன்னைச் சுற்றி
செயல் கையாய் இயக்கி எழுந்தான்
எங்கு கண்டாலும் ஏன் குமைகிறீர்கள்
சக செயற்கை விலங்குகளே?
அபத்தமாய்க் குவிந்து கிடக்கும் மலைகளும்
அர்த்தமன்றி உலவித்திரியும் நதிகளும்
நிறைந்த இப்பூமியைத் தப்ப
ஒரே ஒரு வளை தோண்டி வாழ்கிறேன் நான்
உள்ளே நுழையுமுன்
காலைத் துடைத்து மிதியடியில்
இயற்கையை விட்டு வாரும்


-

Saturday, June 07, 2008

இந்திய அறிவியலாளர்கள், கடவுள், மதம், இன்ன பிற ....

இந்திய அறிவியலாளர்கள் கீழ்கண்டவற்றைப்பற்றி என்ன கருத்துக் கொண்டிருக்கிறார்கள்? ஒரு கருத்துக் கணிப்பு.


1. ஏன் அறிவியல் துறைக்கு வந்தீர்கள்
2. அறிவியல் நோக்கு , பொதுமக்கள் , அரசு
3. அறிவியலில் பெண்கள் நிலை

5. மரபு மருத்துவங்கள்
6. வேத அறிவியல், ஆயுர்வேதம்
7. ராக்கட் விடுவதற்கு திருமலையான் அநுக்கிரகம் கோறல்
8. மரக்கறி

9. ஆன்மீகம்
10. கடவுள்


போன்ற பல முக்கியமான, சமுதாயத்தைப் பாதிக்கும் விஷயங்களைப்பற்றி இந்திய அறிவியலாளர்கள் என்ன நினைக்கிறார்கள். கண்டிப்பாக பொதுமக்கள் கவனத்திற்கு போக வேண்டிய ஒரு கருத்துக் கணிப்பு.


முழுவதும் பெற சுட்டி:


http://cruller.cc.trincoll.edu/NR/rdonlyres/D98B14DA-CC70-4CA2-B270-EA0A6E9B4006/0/WholeIndiaReport.pdfயாராவது நேரம் இருந்தால் மொழிபெயருங்கள். விவாதிக்க நிறைய இருக்கிறது.

Thursday, June 05, 2008

கவிதைகளின் செயல்திறன் : A triptych

1. நடு:
ளிகசியும் கரும்படலங்கள் ஒட்டி
கண்ணாடிகளை நாற்புறமும் ஏற்றி
குளிரூட்டியின் காற்று சிலுசிலுக்க
மெல்லிசை ததும்ப விரையும்
இக்கவிதையின் உள்ளிருந்து
நகரைக் கடக்கையில்
வெப்பமும் தூசியும் கழிவும்
ஊடே மிதக்கும் கனவும்
உள்ளடக்கி அலையும்
மனிதர்களை கவனமாகத் தவிர்த்து
சந்திகளில் கவிதைகளின் நெரிசலில் ஊர்ந்து
நகரில் திரிகையில்


நகரின் பழக்கங்களோ மாறிவிட்டன
கூட்டம் கூடிவந்து
சாலைகளில் நடுவில் விரிந்து
கவிதைகளை வழிமறிக்கின்றார்
எவர்கவிதை எம்மாநிலம் எம்மொழி
எனக்கண்டு வகைபிரித்து
அனுப்புகிறார் வேறுதிக்கில்
சொற்களின் கரும் படலத்தைக் கிழித்து
எழுத்தின் கண்ணாடி இறுக்கத்தை நொறுக்கி
நகரம் தன் முழு விசைச் சுழிப்புடன்
இக்கவிதையின் உள் பாய்ந்து
நம் முகத்தில் அறைகையில்
உணர்வதில்லை நாம்
கவிதையின் திறனை

அரச படைகள் அதிர ஊரும்
தெருக்களின் முனையெங்கும்
எரியூட்டிய கவிதைகள்
கருகிப் புகையும் இக்காலம்
நம் கவிதை விரையும்
செயல்திறனைக் கணிக்கும்
நேரமா நண்பா இது ...

2. வலது:
சொற்களின் உயிர்அரணை முன்செலுத்தி
பதுங்கிமுன்னேறுகிறது எதிரிகள் படை
அரணை துளைக்கும் ஆயுதங்கள் இல்லை
அரணைக் குழப்பும் கொல்லிகள் கண்ட
அறிவியலாளரைக் களப்பலி கொடுத்தோம்
அரணைத் தாவும் விலங்குகள் வளர்த்த
ஆயர்குடிகளை அயல்பெயரச் செய்தோம்
தம்முயிர் ஈந்தும் அரணை சிதைக்கும்
வெல்வலி மாந்தர் சிந்தை கலைத்தோம்
கண்உணரா பொருள் சாந்து பூசி
இணைந்து இணைத்து அரணாய் கட்டிய
இச்சொற்களின் கூட்டத்தை
மொழிந்து ஒலித்து நிறுத்த முயல்


3. இடது:
வித்தின் உன்மத்தமாய்
உறைந்து கிடக்கின்றன சொற்கள்
அறுவடையில் பிரித்தும்
ஆழ விதைத்தும்
காத்திருக்கும் கழனிகளில்
வெடித்து உயரும் பேருருவங்களின்
பார்வையில் தப்ப முயலும் குழுக்கள்
ஆகாது இயலாது நண்பா
ஆழப் பரவி வாழும்
கதிரியக்கம் போல்
கவிதை கலந்த நிலம் நமது
அடுத்தடுத்த தலைமுறைகள்
தப்பாது பரிணாமிக்கும்
எவ்வெவ்வாறோ

Saturday, May 17, 2008

பேராசிரியர்: எஸ். கே. ஆர் (Prof. S. K. Rangarajan)

பேராசிரியர்: எஸ். கே. ஆர்

எஸ்கேஆர் என்றே அறியப்பட்ட பேராசிரியர் கிருஷ்ணமாச்சாரி ரங்கராஜன் கடந்த 29 ஆம் தினம் தம் 75ஆம் அகவையில் காலமானார். இந்திய அறிவியல் கழகத்தில் கனிம வேதியியல் துறையில் பணிபுரிந்தார். மாணவனாக இருக்கும் போது பல முறை அவர் பேசக் கேட்டிருக்கிறேன். இஅக- விற்கு என்று சில தனித்தன்மைகள் உண்டு. அங்கு பணிபுரியும் அறிவியலாளர்களில் பலரும் தம் துறைதவிர பிற அறிவியல் துறைகளிலும் சிறப்பான தேர்ச்சி உடையவர்களாகவும் அத்துறைகளில் சரளமாக இயங்கக் கூடியவர்களாகவும் இருந்தார்கள். அறிவியல் என்பது துறை துறையாய் ஒன்றோடொன்று தொடர்பில்லாமல் பிரிக்கப்பட்ட பெட்டிகளால் ஆனது என்பது போன்ற பொதுப் புத்தி மயமான பிம்பம் அறிவியலாளர் செயல்படும் போது பார்த்தால் முற்றிலும் தகர்ந்துவிடும். இதை நமது ஊடகங்கள் சரிவர மக்களிடம் கொண்டு சேர்ப்பதில்லை.

துறைக்கட்டுகளால் இறுக்கப்படாத அறிவியல் இயக்கத்துக்கு ஒரு எடுத்துக்காட்டு எஸ் ஆர் கே. அவர் வேதியியல் துறையில், குறிப்பாக மின்வேதியியல் துறையில் இயங்கினார். இரும்பு துருப்பிடிப்பது, மின்சேமக்கலன்களின் இயக்கம், முலாம் பூசுதலின் அடிப்படை போன்ற அன்றாட வாழ்வில் காணும் பல பயனுறு செய்கைகள் இத்துறையில் பயிலப்படுகின்றன. ரங்கராஜன் இப்புலத்தின் கணித அமைப்புகளை, அடிப்படைகளை தேர்ந்த்து ஆராய்ந்தவர். குவாண்ட இயங்கியலைலக் கொண்டு மூலக்கூறுகளின் வேதிச் செயல்பாட்டை விளக்கும் பிரிவு குவாண்ட வேதியியல் என்று அழைக்கப் படுகிறது. இதைக்கொண்டே மேற்சொன்ன மின்வேதியியல் இப்போது கட்டமைக்கப் பட்டுள்ளது. இயல்பியலில் இருப்பது போன்றே இத்துறையிலும் கணிதமே இந்த குவாண்டம்மின் வேதியியலுக்கு மொழியாக உள்ளது. ஆனால் இயல்பியலில் பயிலப்படும் குவாண்டம் நிகழ்வுகளும் வேதியியலில் பயிலப்படும் குவாண்டம் நிகழ்வுகளும் வேறு வேறு நீட்டல் அலகுகளில் அமைந்தவை. அதனால் பயன்படுத்தப் படும் கணிதமும் சற்றே வேறுவகையானது. இதைப்பற்றி பின்னர் விரிவாக எழுதலாம். ரங்கராஜன் கணிதத்தில் தேர்ந்த ஒரு அறிவியலாளர், அதனால் இத்துறையில் இயங்குவது இயல்பாக இருந்தது.

ரங்கராஜன் எப்பொழுதும் நிறைய மாணாக்கர்களை பெற்றவரல்லர். எப்போதுமே ஒன்றோ அல்லது இரண்டோ மாணவர்கள்தாம் அவரிடம் முனைவர் பட்டத்திற்காக பயின்று கொண்டிருப்பார்கள். ஆனால் யாரும் அவரிடம் சென்று இயல்பாக உரையாடலாம். எங்களைப் போன்ற பொறியியல் மாணவர்கூட. அனைவருக்கும் இயல்பாக, சரளமாக எதுவும் மிச்சம் வைக்காமல் கொடுக்கும் அறிவுத்திறம் அவருடையது. மிகுந்த மனிதநேயமும் ஆழ்ந்த முற்போக்கு சிந்தனையும் கொண்டவர். மாணவர்களிடமும் தொழிலாளர்களிடமும் நெருக்கமாக இயல்பாக பழகியவர். அவரைப் பற்றி பல நிகழ்வுகளைச் சொல்லலாம். சொல்லாமலும் இருக்கலாம். பல சிறந்த முனைவர் பட்ட ஆய்வுகளை நடத்த வழிகாட்டிய அவர் முனைவர் பட்டமே பெற்றிருக்கவில்லை. இளங்கலைப் பட்டம் மட்டுமே பெற்றிருந்தார். அது வேறு காலம். அப்போது வேறு வகையான அறிவியலாளர்கள் இருந்தார்கள்.

Wednesday, March 19, 2008

ஆர்தர் சி கிளார்க் - 90: Arthur C Clarke
உயர்நுட்ப மாயாவி (Arthur C Clarke)

"மிக்க வளர்சியடந்த உயர்நுட்பத்தை மந்திரவாதத்திலிருந்து வேறுபடுத்திப் பார்ப்பது கடினம்"
என்று எழுதிய அறிபுனை எழுத்தாளர் ஆர்த்தர். சி. க்ளார்க் இன்று மரணமடைந்தார். இவரை நான் எப்படி கண்டுகொண்டேன் என்பது விளையாட்டான ஒரு நிகழ்வு.
எழுபதுகளில் பொள்ளாச்சி ஒரு கிராமம் போலத்தான் இருந்தது. சைக்கிளை எடுத்து ஒரு மிதி மிதித்தால் பதினைந்து இருபது நிமிடத்துக்குள் ஊரின் எந்த எல்லைக்கும் சென்றுவிடலாம். ஊரில் நாலே நாலு திரையரங்குகள்தான். கோடைவிடுமுறையில் பத்தாம் வகுப்பிலிருந்து பதினொன்றாம் வகுப்பு செல்லும் பையனை இன்னும் பொத்திப் பொத்திவைக்கக் கூடாது என்று, 'தம்பியையும் கூட்டிக்கொண்டு ஏதாவது ஒரு சினிமாவுக்குப் போடா' என்று அப்பா விடுதலை அளிக்க தம்பியுடன் சேர்ந்து திட்டம் தீட்டினேன். வீட்டுக்குப் பக்கம் இருப்பது நல்லப்பா தியேட்டர்தான் ஆனால் எம்ஜியார் படங்கள் கோபாலிலோ அல்லது கலைமகள் தியேட்டரிலோதான் வரும். ஆனால் என் வாழ்க்கையின் குறிக்கோள் அப்போதெல்லாம் முறையே : 1. ஒரு சாமியாராவது, 2. ஒரு விஞ்ஞானியாவது. (நல்லவேளையாக இந்த இரண்டு குறிக்கோள்களையும் நான் எட்டவில்லை. ) அதற்காக போஸ்டரில் இரண்டு விண்வெளிவீரர்கள் பூமியின் மீது மிதப்பதைப் போல காத்தியிருப்பதைப் பார்த்து இந்தப் படம்தான் என்று முடிவு செய்து விட்டேன். நான் ஒருமாதிரி தம்பியைத் தேத்தி நல்லப்பாவில் ஆங்கிலப் படத்துக்கு மார்னிங் ஷோ போலாம் என்று மனோவசியம் செய்து விட்டேன். அப்படி சென்றது 2001 A Space Odyssey என்ற படம். படம் முடிந்து தம்பி ரொம்ப கடுப்பாகிவிட்டான். எனக்கும் ஒன்றும் புரியவில்லை. ஆனால் அப்படத்தின் காட்சிகளை நாங்கள் என்றும் மறந்ததும் இல்லை. பின்பு பலமுறை தியேட்டர்களிலும் அடர்வட்டுகளிலும் பார்த்தாலும் அந்த முதல் அனுபவம் புதியதானது. அந்த வருடத்தில் முன்பின்னாக சில அறிபுனை படங்களை நல்லப்பா அரங்கு திரையிட்டது. Logan's Run, Soylent Green போன்ற படங்கள். இவற்றையெல்லாம் வார இறுதி காலைக்காட்சிகளாக என்னையும் சேர்த்து ஒரு 40 அல்லது 50 ஆட்கள் பார்த்தார்கள். இடைவேளை யில் பத்து இருபதுபேர் வெளியேறியும் விடுவார்கள். எதற்காக இதையெல்லாம் தமிழகத்தின் ஒருமூலையில் ஒரு திரையரங்கு காட்டிக்கொண்டிருந்தது, யார் அந்த முடிவை எடுத்தார்கள் என்பதெல்லாம் இன்னும் எனக்கு விளங்கவில்லை.

2001 ஐ இயக்கியவர் ஸ்தான்லி கூப்ரிக். கதை ஆர்தர் சி கிளார்க்கினுடையது. ஹாலிவுட்டின் தலையான படங்களுள் ஒன்று. பிரையன் ஆல்டிஸ் வார்த்தைகளில் சொல்வதானால் அப்போதே அறிபுனை திரிமூர்த்தி டைனோஸார்களில் ஒருவராக கிளார்க் இருந்தார். மற்ற இருவர் ஐஸாக் அசிமாவ், ராபர்ட் ஹைன்லைன். இவர்கள் மூவரும் ஒரு ஆயிரம் கதைகளையாவது எழுதியிருப்பார்கள். தமிழில் அறிபுனை எழுத முயற்சிக்குமுன் நம் நண்பர்கள் இதில் 10% மாவது படித்து விடுவது நல்லது. இதைப்பற்றி பின்னர். இதில் ஐசக் அஸிமாவ் ஒரு எழுத்து இயந்திரம். கதை கட்டுரை என அவர் எழுதிக்குவித்தவை ஏராளம். அஸிமாவ் மூலக்கூறு உயிரியல் கற்றவர். கிளார்க் பொறியியல் கற்றவர். இவர்கள் எழுதும் கதைகளில் அறிவியல் அபத்தங்கள் அனேகமாக இருக்காது. இப்படி நடக்கலாம், இதெல்லாம் கண்டுபிடிக்கப்படலாம் என்ற முன்பார்வை இருக்கும் ஆனால் அடிப்படைத் தவறுகள் செய்யமாட்டார்கள். அதனால் பள்ளி மாணவர்களுக்கு அறிமுகம் செய்ய சரியானவர்கள். அறிவியல் நுட்பம் இவற்றிலிருந்து கிளைபிரிந்து படரும் புனைவும் அழகும் அறியவும் உணரவும் சரியான தொடக்கக் கோடுகள்.
அறிபுனைவுகளை ஒரு கழுகுப் பார்வையில் இரண்டாகப் பிரிக்கலாம். முறையாக அறிவியல் கற்றவர்களால் பெரும்பாலும் எழுதப்படும் கடுஅறிபுனைவுகள். அறிவியல் கற்றவர்களாலும் மற்றவர்களாலும் எழுதப்படும் மென்அறிபுனைவுகள். இக்கூறுபடுத்துதல் ஒரு அரட்டைக்கான முன்னேற்பாடுதான் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் - இரண்டிலும் விதிவிலக்குகள் உண்டு. கடுபுனைவுகளில் அறிவியலோ தொழில் நுட்பமோ கறாராக இருக்கும். அறிவியல்/நுட்பம் கற்றவர்களுக்கு இதனால் இத்தகைய கதைகள் பெரும் வாசிப்பு இன்பத்தைத் தரவல்லன. அவ்வளவாக இவற்றில் பயிற்சி இல்லாவிட்டால் ஒரு மொழிபெயர்க்கப் பட்ட கவிதையப் படிப்பது போலத்தான் இருக்கும். அறிவியலும் ஒரு மொழிதான், சொல்லாடல் தான் என்பதை அறிந்தவர்கள் இதை உணர்வார்கள். இத்தகைய கடு புனைவுகளை எழுதுபவர்கள் முன்பு ஆர்தர் சி கிளார்க், வெர்னர் வின்ஞ், ஹால் க்ளமெண்ட், லாரி நிவன், கிரிகோரி பென்போர்ட், க்ரெக் பெர், இவர்களைப் போன்றவர்கள். அனலோக் என்ற அறிபுனை இதழில் அனேகமாக கடுபுனைவுகளே வரும். அவை ஒரு வகைமாதிரியாகவே இப்போதும் உள்ளன. தற்போது இதில் இயன் வாட்ஸன், ஸ்டீபன் பாக்ஸ்டர், ஆலன் ஸ்தீல் என பலர். கிளார்க் இவர்கள் எல்லோருக்கும் மூத்த தலைமுறையைச் சேர்ந்தவர். அறிபுனைவு அடர்காட்டில் அதிர அதிர அலைந்து திரிந்த ஒரு டைனோஸார். எல்லாவிதமான அறிபுனைகளையும் நான் விரும்பிப் படித்தாலும் கடுபுனைவுகள் தரும் இன்பமே தனி.

கிளார்க் எழுதிய சிறுகதைகளும் மிக அருமையானவை. ஆங்கிலத்தில் எழுதப் படிக்கத்தெரிந்த அனைவரும் படித்திருக்கவேண்டும் என்று கூறத்தகுந்த ஒருகதை "கடவுளின் ஒரு பில்லியன் நாமங்கள்" எனும் கதை.நாகார்ஜுனனும் , அகத்தியர் குழும நிறுவுனர் மருத்துவர் ஜெயபாரதி அவர்களும் இதை தமிழில் எழுதிஉள்ளனர். தேடிப் படியுங்கள். எனக்குப் பிடித்த கிளார்க் கதைகள் என்றால், ராந்தேவூ வித் ராமா, 2010, சைல்ட்ஹுட்ஸ் எண்ட் என்பவை. அவருடய கதைகளில் தூவிக்கிடந்த பல நுட்ப கருவிகளும், சூழல்களும் ஹாலிவுட் கடந்த இருபதாண்டுகளாக உருவாக்கித் தள்ளும் பல அறிபுனை திரைப்படங்களில் பயன்படுத்தப்படுவதைப் பார்க்கலாம். சக்கைப்போடுபோடும் டெர்மினேட்டரோ, மாட்றிக்ஸ் படங்களோ, ஏலியன்களோ, 1940-1970 வரை எழுதிய அறிபுனை முன்னோடிகளின் காட்சிப்படுத்துதல் இல்லாமல் சாத்தியமில்லை. விரிவாக எழுதவேண்டிய இழை இது.

அறிபுனைவுகள் நமது சிந்தனைப் பரப்பை வெகு தூரத்துக்கு நீட்டிவிடுகின்றன என்பதே உண்மை.

தமிழில் ஏன் உருப்படியாக ஒரு அறிபுனைவும் இல்லை என்பது பெரிய கேள்விக்குறி. தமிழில் உலகத்தரம் வாய்ந்த சிறுகதைகள் உள்ளன, தற்காலக் கவிதைகள் உள்ளன, நெடுங்கதைகள் உள்ளன. ஆனால் அறிபுனைவுகள் மட்டும்ம சோகையடித்துக் கிடக்கின்றன. ஆனால் இந்திய மொழிகளில் மராத்தியிலும், இந்தியிலும், வங்காளியிலும் உள்ள சில கதைக்கருக்களை அம்மொழி நண்பர்கள் விவரிக்கக் கேட்டிருக்கிறேன். தமிழில் அப்படி ஏதுமில்லை என்பது வருத்தமூட்டும் செய்தி. சுஜாதா எழுதியதெல்லாம் Fanzine அளவுக்கு மேல் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். மற்றவர்களைப்பற்றி சொல்லவே வேண்டியது இல்லை. யார் கோபப்பட்டாலும் பரவாயில்லை என்று இதை எழுதவேண்டிய தருணம் வந்துவிட்டது. தமிழகத்தில் எல்லோரும் நிரலாளர் ஆகும் முயற்சியில் ஒரு தலைமுறையே அறிவியலிலும், பொறியியலிலும் மிகவும் பின்தங்கி இருப்பதாகவே படுகிறது. கர்னாடகமும் அதே நிலையில்தான். கல்கத்தா, ஜாதவ்பூர் போன்ற இடங்களில்தான் இயல்பியலும் பூனா போன்ற இடங்களில் தான் பொறி வடிவமைப்பதிலும் முன்னோடியாக இருக்கின்றன. அறிபுனைவுகள் ஒரு ஊக்குக் காரணியாக பயன்படும் பல தளங்களில் இவையும் சில என சொல்லத்தோன்றுகிறது. துப்பறியும் கதைகள் எபிஸ்தமோலஜிகல் விடுதலையைத் தருவதுபோல அறிபுனைவுகள் ஓண்டொலோஜிகல் விடுதலையைத் தருகின்றன. குழந்தைகளின் உலகை நாம் திரும்பப்பெறுவதற்கான முயற்சியின் முதல் அடிகளாக இவை இருக்கக்கூடும்.1. Wikipedia

2. பிற அறிபுனை எழுத்தாளர்கள் பற்றி:

i. தாயுமாகி நின்றாள்
ii. வாண்டா மெகிந்தாயர்
iii. சில புத்தகங்கள்
iv. ஒக்தோவியா பட்லர்
v. ஸ்தானிஸ்லா லெம்


--

Sunday, March 09, 2008

4 கார்ட்டூன்கள்

அறிவியல் தொடர்பான நான்கு கார்ட்டூன்கள். சற்றே பழையவை ; 1986 ஆம் வருடத்தில் போட்டவை. இவற்றுக்கு முன்பு போட்ட சில கார்ட்டூன்கள் அப்போது வெளிவந்துகொண்டிருந்த ஸயன்ஸ் டுடே இதழில் வெளிவந்தன. அப்போதைய ஆசிரியர் முகுல் ஷர்மா (அவர்தாங்க நம்ம கொங்கொணோ சென்-ஷர்மா இருக்காங்களே அவங்க அப்பா ). கார்ட்டூனுக்கு நூறு ரூபாய் சன்மானம்! அப்போதைய ஸயன்ஸ் டுடே பள்ளி கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கக்கூடியயதாக இருந்தது. 1978 ஆம் ஆண்டு வந்த கருந்துளைகள் (black holes) பற்றிய ஒரு கட்டுரையைப் படித்து நான் வகுப்பில் ஆசிரியர் தினத்தன்று உரையாற்றியது நினைவில் இருக்கிறது.
அருள் மொகொல்வானே என்று கையொப்பம் இட்டுருக்கிறேன். மொகொல்வானே என்பது என்ன மொழிச் சொல் என்றும் அதற்கு என்ன பொருள் என்றும் நீங்களே கண்டுபிடித்துக்கொள்ளவும். ஆனால் அது பொருள் அல்ல. நீங்கள் கண்டுபிடிக்கும் மொழியின் ஒரு சகோதர மொழியில் இன்னும் சற்று நெருக்கமான பொருள். :-)

Monday, March 03, 2008

காளி-தாஸ் 6 கவிதைகள்

வளரும் பருவத்தில் படித்து வந்தவர்கள் ஒவ்வொருவராக விடைபெறுகிறார்கள்.
ஆத்மாநாம் நடத்திய " ழ " இதழில் 1979 -81 வாக்கில் வெளிவந்த காளி-தாஸ் இன் கவிதைகள் ஆறு. படங்களைச் சொடுக்கவும்.

==

Thursday, February 28, 2008

சுஜாதா ...


சுஜாதாவுக்காக.நான் கிராமத்தில் நான்காம் வகுப்பு படிக்கும்போது சனிக்கிழமைதான் குமுதம் வரும். வாராவாரம் பிற வீட்டுச் சாமான்களுடன் பொள்ளாச்சியியிலிருந்து அப்பா குமுதம் கல்கண்டு விகடன் எல்லாம் வாங்கி வருவார். குழந்தைகளுக்கு அதெல்லாம் படிக்க அனுமதி கிடையாது. ஆனால் எப்படியும் படித்து விடுவோம். என்ன இருக்கிறது என்று பார்க்கும் ஆர்வம்தான். அப்போது தான் அனிதா இளம் மனைவி வந்துகொண்டிருந்தது. வாரா வாரம் படிப்பேன். அவ்வளவாகப் புரியாவிட்டாலும். மோனிகாவின் மீது சிந்திய பீச்மெல்பா என்பது என்ன என்பது எனக்குத்தெரிய இன்னும் பதினைந்து வருடம் காத்திருந்தேன். ஜனசங் கூட்டத்தினர் பாரத் மாதா கி ஜை என்று கத்தியதை ஒரு பசுமாடு சந்தேகத்துடன் திரும்பிப் பார்த்தது என்று எழுதியது இன்னும் நினைவில் இருக்கிறது. He was irreverent to the core. அப்போதெல்லாம் குமுதம் உள்ளங்கை அளவில் பத்துப்பதினைந்து பக்கம் இலவச இணைப்பு ஒன்று கொடுப்பார்கள். வாரியார் கதைகள் ஆரம்பித்து என்னென்னமோ வரும். அதில் ஒஉ இலவச இணைப்பாக வந்ததுதான் சுஜாதாவின் "பிளேன் ஓட்டக்கற்றுக் கொண்டேன்". இந்த குட்டிப் பிரசுரத்தை பல ஆண்டுகள் நான் ஏனோ வைத்திருந்தேன். அப்புறம் சில ஆண்டுகள் கழித்து தினமணிக்கதிரில் வானமெனும் வீதியிலே எழுதினார். இவையெல்லாம் பள்ளிப் பருவத்தில் ஒரு சிறுவனின் மனதில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் பல ஆண்டுகள் கழித்துத்தான் அவர்களுக்கே புலனாகும். உயர்பள்ளியில் முற்றிலுமாக சிறுபத்திரிக்கைகள் வசம் சென்றுவிட்டேன். அங்கேயும் சுஜாதா இல்லாமல் போய்விடவில்லை. அதுக்கப்புறம் எவ்வளவோ எழுதினார். அவர் எழுதியதில் ஒரு 70 சதம் படித்திருப்பேன். இப்போதைக்குப் போதும். சென்றுவாருங்கள் சுஜாதா. அனைத்துக்கும் நன்றி.


Tuesday, February 19, 2008

Flush The Lit.அய்ம்பது ஆண்டுகால திராவிட இயக்கங்களால் முற்றிலுமாக கலையுணர்வு சிதைக்கப்பட்டு, திரிக்கப்பட்ட அழகுணர்ச்சியோடு, எம் முன்னோர்களின் மகா காவியங்களையும் பெரும் உள்ளொளி கண்ட உயர் இலக்கியங்களையும் தேறாமல் மெக்காலே வழியில் மூளைச்சலவை செய்யப்பட்ட வெற்று அறிவியலும், நுட்பமும், மருத்துவமும், நிரலாண்மையும் போன்ற அறவலியற்ற போலி அறிவுப்புலங்களை மனனித்து சோற்றுக்காய் அறிவை விற்றுப் பிழைக்கும் பெருந்தமிழ்க்கூட்டமாகிய நாங்கள், .........

கடும் உழைப்பாளிகளும் , பெரும் படிப்பாளர்களும், சிலுவையென எங்களுக்காய்ச் சுமந்து எம் பண்பாட்டு பாரமனைத்தும் இழுத்தலையும் தமிழ் இலக்கிய சிருஷ்டிப் பிதாமகற்கு சொல்லதெல்லாம்,

leave us alone.

ஒரு பேச்சுக்கு கேட்கிறேன், இருபதாம் நூற்றாண்டு தமிழ் இலக்கியமனைத்தையும் (ஆமாமா , பாரதி உட்படத்தான் ) தூக்கிக் கடாசிவிட்டால் தமிழ் மொழிக்கு ஏதாவது இழப்பா என்ன? பின்ன ஏம்பா இந்தச் சலம்பு சலம்புறிய.

Wednesday, January 23, 2008

project madurai - மதுரைத் திட்டம்

நண்பர்களே

மதுரைத்திட்டம் எனப்படும் தமிழ் இலக்கியத் தளம் "ஹேக்" செய்யப்பட்டது என்றும் அதில் ஏற்றப்பட்டிருந்த தமிழ் ஆக்கங்கள் முடக்கப்பத்துள்ளதாகவும் ஓசை செல்ல வருந்தி எழுதி இருந்தார்.

மதுரைத் திட்டத் தலைவர் கல்யாணசுந்தரம் இன்று அகத்தியர் (http://groups.yahoo.com/group/agathiyar/) மற்றும் தமிழ் உலகம்( http://groups.yahoo.com/group/tamil-ulagam/) இணையக்குழுமங்களில் திட்டத் தரவுகள் பாதுகாப்பாக இருப்பதாகவும், இன்னொரு இடைமுகத்துடன் வெள்ளோட்டத்தில் உள்ளதென்றும் தெரிவித்திருக்கிறார். அதன் சுட்டி இதோ:

http://www.projectm adurai.org. vt.edu/newpm2/


திரு கல்யாணசுந்தரத்தின் மடல்:

----------
Dear Friends:

We are aware that for the past few days tamil.net webserver
is no longer accessible (from which Project Madurai website
was running). We do not know yet the reasons. I have
written to Bala Pillai and to the webmaster for details.

No need to worry about loosing PM website altogether.
Project Madurai is very much aliver and we will make sure
that its etext collections are available free on the Net all
the time ;-)

We have been working recently on a new/revamped version
of Project Madurai website. You can view the beta version
of this site at

http://www.projectm adurai.org. vt.edu/newpm2/

We are planning to move this version to tamil.net version as
when it is available. We are also exploring the possibiliity
of running Project Madurai website from an independent
web hosting account of our own. We will post the details
soon.

In the mean time, Project Madurai etexts can be accessed
from the above test version running from Virginia Tech Univ.

We also have mirror sites of Project Madurai running from
Digital LIbrary of India webservers located at IISc, Bangalore

http://bharani. dli.ernet. in/pmadurai

and from the INFITT website

http://www.infitt. org/pmadurai

anbudan
Kalyan

Monday, January 07, 2008

இ. தி. 61 ?

போட்டா போட்டி ..


-

சே, வர வர யாரு எதச்செய்யரதுன்னு வகைதொகையில்லாமப் போச்சு. இனி இவனுங்களோடவேற போட்டி போடணுமா ...