Thursday, February 28, 2008

சுஜாதா ...


சுஜாதாவுக்காக.நான் கிராமத்தில் நான்காம் வகுப்பு படிக்கும்போது சனிக்கிழமைதான் குமுதம் வரும். வாராவாரம் பிற வீட்டுச் சாமான்களுடன் பொள்ளாச்சியியிலிருந்து அப்பா குமுதம் கல்கண்டு விகடன் எல்லாம் வாங்கி வருவார். குழந்தைகளுக்கு அதெல்லாம் படிக்க அனுமதி கிடையாது. ஆனால் எப்படியும் படித்து விடுவோம். என்ன இருக்கிறது என்று பார்க்கும் ஆர்வம்தான். அப்போது தான் அனிதா இளம் மனைவி வந்துகொண்டிருந்தது. வாரா வாரம் படிப்பேன். அவ்வளவாகப் புரியாவிட்டாலும். மோனிகாவின் மீது சிந்திய பீச்மெல்பா என்பது என்ன என்பது எனக்குத்தெரிய இன்னும் பதினைந்து வருடம் காத்திருந்தேன். ஜனசங் கூட்டத்தினர் பாரத் மாதா கி ஜை என்று கத்தியதை ஒரு பசுமாடு சந்தேகத்துடன் திரும்பிப் பார்த்தது என்று எழுதியது இன்னும் நினைவில் இருக்கிறது. He was irreverent to the core. அப்போதெல்லாம் குமுதம் உள்ளங்கை அளவில் பத்துப்பதினைந்து பக்கம் இலவச இணைப்பு ஒன்று கொடுப்பார்கள். வாரியார் கதைகள் ஆரம்பித்து என்னென்னமோ வரும். அதில் ஒஉ இலவச இணைப்பாக வந்ததுதான் சுஜாதாவின் "பிளேன் ஓட்டக்கற்றுக் கொண்டேன்". இந்த குட்டிப் பிரசுரத்தை பல ஆண்டுகள் நான் ஏனோ வைத்திருந்தேன். அப்புறம் சில ஆண்டுகள் கழித்து தினமணிக்கதிரில் வானமெனும் வீதியிலே எழுதினார். இவையெல்லாம் பள்ளிப் பருவத்தில் ஒரு சிறுவனின் மனதில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் பல ஆண்டுகள் கழித்துத்தான் அவர்களுக்கே புலனாகும். உயர்பள்ளியில் முற்றிலுமாக சிறுபத்திரிக்கைகள் வசம் சென்றுவிட்டேன். அங்கேயும் சுஜாதா இல்லாமல் போய்விடவில்லை. அதுக்கப்புறம் எவ்வளவோ எழுதினார். அவர் எழுதியதில் ஒரு 70 சதம் படித்திருப்பேன். இப்போதைக்குப் போதும். சென்றுவாருங்கள் சுஜாதா. அனைத்துக்கும் நன்றி.


Tuesday, February 19, 2008

Flush The Lit.அய்ம்பது ஆண்டுகால திராவிட இயக்கங்களால் முற்றிலுமாக கலையுணர்வு சிதைக்கப்பட்டு, திரிக்கப்பட்ட அழகுணர்ச்சியோடு, எம் முன்னோர்களின் மகா காவியங்களையும் பெரும் உள்ளொளி கண்ட உயர் இலக்கியங்களையும் தேறாமல் மெக்காலே வழியில் மூளைச்சலவை செய்யப்பட்ட வெற்று அறிவியலும், நுட்பமும், மருத்துவமும், நிரலாண்மையும் போன்ற அறவலியற்ற போலி அறிவுப்புலங்களை மனனித்து சோற்றுக்காய் அறிவை விற்றுப் பிழைக்கும் பெருந்தமிழ்க்கூட்டமாகிய நாங்கள், .........

கடும் உழைப்பாளிகளும் , பெரும் படிப்பாளர்களும், சிலுவையென எங்களுக்காய்ச் சுமந்து எம் பண்பாட்டு பாரமனைத்தும் இழுத்தலையும் தமிழ் இலக்கிய சிருஷ்டிப் பிதாமகற்கு சொல்லதெல்லாம்,

leave us alone.

ஒரு பேச்சுக்கு கேட்கிறேன், இருபதாம் நூற்றாண்டு தமிழ் இலக்கியமனைத்தையும் (ஆமாமா , பாரதி உட்படத்தான் ) தூக்கிக் கடாசிவிட்டால் தமிழ் மொழிக்கு ஏதாவது இழப்பா என்ன? பின்ன ஏம்பா இந்தச் சலம்பு சலம்புறிய.