Thursday, February 28, 2008

சுஜாதா ...


சுஜாதாவுக்காக.நான் கிராமத்தில் நான்காம் வகுப்பு படிக்கும்போது சனிக்கிழமைதான் குமுதம் வரும். வாராவாரம் பிற வீட்டுச் சாமான்களுடன் பொள்ளாச்சியியிலிருந்து அப்பா குமுதம் கல்கண்டு விகடன் எல்லாம் வாங்கி வருவார். குழந்தைகளுக்கு அதெல்லாம் படிக்க அனுமதி கிடையாது. ஆனால் எப்படியும் படித்து விடுவோம். என்ன இருக்கிறது என்று பார்க்கும் ஆர்வம்தான். அப்போது தான் அனிதா இளம் மனைவி வந்துகொண்டிருந்தது. வாரா வாரம் படிப்பேன். அவ்வளவாகப் புரியாவிட்டாலும். மோனிகாவின் மீது சிந்திய பீச்மெல்பா என்பது என்ன என்பது எனக்குத்தெரிய இன்னும் பதினைந்து வருடம் காத்திருந்தேன். ஜனசங் கூட்டத்தினர் பாரத் மாதா கி ஜை என்று கத்தியதை ஒரு பசுமாடு சந்தேகத்துடன் திரும்பிப் பார்த்தது என்று எழுதியது இன்னும் நினைவில் இருக்கிறது. He was irreverent to the core. அப்போதெல்லாம் குமுதம் உள்ளங்கை அளவில் பத்துப்பதினைந்து பக்கம் இலவச இணைப்பு ஒன்று கொடுப்பார்கள். வாரியார் கதைகள் ஆரம்பித்து என்னென்னமோ வரும். அதில் ஒஉ இலவச இணைப்பாக வந்ததுதான் சுஜாதாவின் "பிளேன் ஓட்டக்கற்றுக் கொண்டேன்". இந்த குட்டிப் பிரசுரத்தை பல ஆண்டுகள் நான் ஏனோ வைத்திருந்தேன். அப்புறம் சில ஆண்டுகள் கழித்து தினமணிக்கதிரில் வானமெனும் வீதியிலே எழுதினார். இவையெல்லாம் பள்ளிப் பருவத்தில் ஒரு சிறுவனின் மனதில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் பல ஆண்டுகள் கழித்துத்தான் அவர்களுக்கே புலனாகும். உயர்பள்ளியில் முற்றிலுமாக சிறுபத்திரிக்கைகள் வசம் சென்றுவிட்டேன். அங்கேயும் சுஜாதா இல்லாமல் போய்விடவில்லை. அதுக்கப்புறம் எவ்வளவோ எழுதினார். அவர் எழுதியதில் ஒரு 70 சதம் படித்திருப்பேன். இப்போதைக்குப் போதும். சென்றுவாருங்கள் சுஜாதா. அனைத்துக்கும் நன்றி.


16 comments:

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

//ஜனசங் கூட்டத்தினர் பாரத் மாதா கி ஜை என்று கத்தியதை ஒரு பசுமாடு சந்தேகத்துடன் திரும்பிப் பார்த்தது என்று எழுதியது இன்னும் நினைவில் இருக்கிறது. He was irreverent to the core.//

//இவையெல்லாம் பள்ளிப் பருவத்தில் ஒரு சிறுவனின் மனதில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் பல ஆண்டுகள் கழித்துத்தான் அவர்களுக்கே புலனாகும்.//

உண்மைதான்.

இப்போது நிறைய விமர்சனங்கள் இருந்தாலும் சிறுவயதில் ஆர்வத்துடன் வாசித்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன. தமிழ் இணையத்துக்கு வந்த புதிதில் அம்பலம் சாட்டில் பேசியதும் விவாதித்ததும்கூட நினைவுக்கு வருகின்றன.

சுஜாதா அவர்களின் மறைவுக்கு அஞ்சலி!

மதி

Anonymous said...

உறக்கம் வரவில்லை. நிறைய இழந்தது போல் இருக்கிறது. ராணி காமிக்ஸ், ராஜேஷ்குமார் நாவலோடு நின்று கொண்டிருந்தவனை குமுதம், ஆனந்தவிகடன், குங்குமம் என அடுத்த கட்டத்திற்கு அழைத்துப்போனவர். சுஜாதா இல்லாவிட்டால் சத்தியமாக நான்கு வரிகள் கூட என்னால் எழுதியிருக்க முடியாது. அன்னாருக்கு அஞ்சலி.

ராம்கி

Vassan said...

70 களின் ஆரம்பத்தில் குமுதம் இலவசமாக 8" X 5" அளவில் ஒரு துண்டு இணைப்பை தந்து கொண்டிருந்தது. குமுதம் படிக்க அப்போது அனுமதி கிடையாது எனக்கு. இதில், சுஜாதா அவர் குடும்பத்துடன் கீழத்தஞ்சை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்ததை பற்றி எழுதியிருந்தார். முதலில் படித்த ஓரிரு குமுதங்களில், சுஜாதா பற்றிய ஞாபகத்தில் இதுதான் முதலில் வருகிறது. பூம்புகார் செல்லும் வழியில் கார் கோளாறு பற்றி அங்கதத்துடன் எழுதியிருந்தார். முத்தாய்ப்பாக அவருடைய அம்மாவின் ஊர் எங்கள் ஊர் பக்கம் - திருநாங்கூர் என பெருமையுடன் எழுதியிருந்ததை படித்து வீதிப்பையன்களெல்லாம் பூரித்து போனதும் நன்றாக நினைவிலுள்ளது.

அன்னாரின் குடும்பத்திற்கு எமது உளமார்ந்த இரங்கல்கள்.

வவ்வால் said...

ஆழ்ந்த வருத்தங்களும், அஞ்சலியும்!

Anonymous said...

கலாபூர்வமான ரசனைக்கு அப்பாற்பட்டது, மேம்போக்கானது என்று பொதுவாக இடக்கையால் புறந்தள்ளப்படும் நகர்ப்புற மனோபாவத்தை (இருத்தலியல் பிரச்சினைகளைத் தாண்டிய urban psyche) சுஜாதா தவிர பிற எழுத்துக்களில் எங்காவது பார்க்க முடிந்திருக்கிறதா என்று யோசித்துக்கொண்டே...ஏ தான் இருக்கிறேன்!! சமீபத்தில் அவரது எழுத்துக்களைத் தொடர்ந்து படிக்கவில்லையாயினும், அவர் மேலும் இன்னும் சுவாரஸ்யம் இருப்பதற்கு அதுவுமொரு காரணம். எத்தனையோ புத்தகங்கள், எத்தனையோ முறை திரும்பத் திரும்பப் படித்திருப்பேன் - பால்யகால நினைவுகளில் சுஜாதாவுக்கு முக்கியமான இடமுண்டு. அவரது குடும்பத்தாருக்கு என் மனமார்ந்த இரங்கல்கள்.

-சன்னாசி

மு. சுந்தரமூர்த்தி said...

வருத்தத்துடன் திரும்பிப் பார்க்கவைக்கும் செய்தி.

சுஜாதாவிடம் கண்டு பிரமித்தவை மொழிநடையும், ரேஞ்சும். அவரிடம் பிடித்த குணம் சிறுபத்திரிகை எழுத்தாளர்கள் வெளிநாட்டு எழுத்தாளர்கள் பெயர்களை உதிர்த்துக்கொண்டிருந்ததற்கு இணையாக தன்னுடைய வாசகர்களிடையே தன்னையே முன்னிலைப்படுத்திக்கொண்டிருக்காமல் அதிகம் அறியப்படாத தமிழ் எழுத்தாளர்களையும் அடையாளம் காட்டிக்கொண்டிருந்தது.

தமிழ்ப் பேரவை விழாவிற்கு வந்திருந்தபோது அவர் பேசிய பல விஷயங்கள் நினைவுக்கு வருகின்றன ("கம்ப்யூட்டரின் கதை" புத்தகத்தைப் பற்றி கேள்வி வந்தபோது மிகவும் கேஷுவலாக "அது உங்கள மாதிரி படிச்சவுங்களுக்கு இல்ல. ஆட்டோ ஓட்டுறவங்க, SSLC படிச்சுட்டு வீட்ல ஹார்மோனியம் வாசிச்சிட்டு இருப்பாங்களே அந்தமாதிரி சாதாரண ஆளுங்களுக்காக" மாதிரியான விஷயங்கள்).

Anonymous said...

அறிவுய்திகளுக்கும், சில்லறைகளுக்கும் இடையில் சிக்கித் தவித்த / தவிக்கும் என் போன்ற லட்சக்ககணக்கானவர்களுக்கு சுஜாதா ஒரு வரம். இன்னையோட போச்சு.

துளசி கோபால் said...

மனமார்ந்த அஞ்சலிகள்.

Kasi Arumugam said...

என்ன சொல்வதென்று தெரியவில்லை. இளமைக்காலத்தில் சுஜாதாவை எல்லாத்துக்குமே ஆசானாக வரிந்துகொண்டிருந்த பல்லாயிரக்கணக்கானவர்களில் நானும் ஒருவன். 'ஏன் எதற்கு எப்படி' ஜூனியர் விகடனில் வந்தபோது அதன் கட்டிங்குகளை வரிசையாக சேர்த்துவைத்து மீண்டும் மீண்டும் வாசித்த நினைவுகள்! சுஜாதாவின் அறிவியல் விளக்கங்கள் எளிமையானவை, முதல்படியில் நிற்கும் வாசகரை விரட்டாமல் வாஞ்சையுடன் சொல்லிக் கொடுப்பவை. (சிலர் அங்கேயே நின்றுவிடுவது அவர் தவறல்லவே) விமர்சனங்கள் கிடக்க, சுஜாதாவின் இடம் இன்னொருவரால் என்றும் இட்டு நிரப்பப்பட முடியாதது.

-/பெயரிலி. said...

தமிழ் வாசகருலகத்துக்குப் புதுக்கருக்களையும் மொழிநடையையும் புகுத்தியவர் என்றவளவிலே அவரின் கடந்த கால இடம் முக்கியமானது. அவரின் குடும்பத்தினருக்கும் வாசகர்களும் வருத்தத்தினைத் தெரிவிக்கிறேன்

Sundar Padmanaban said...

மனசு வருத்தமாக இருக்கும் போதெல்லாம் அவரது எழுத்துகளை எடுத்து வாசிக்க ஆரம்பித்து - சோகக் கதையாக இருந்தாலும் ஏதாவது ஒரு வரிகளில் புன்னகையை ஒளித்து வைத்திருப்பார் என்ற 100% உத்திரவாதம் இருப்பதால் - லேசாக்கிக்கொண்ட நாட்கள் நினைவிலாடுகின்றன.

மதி சொன்ன அம்பல அரட்டையும் நினைவுக்கு வருகிறது. ஒரு முதியவரிடம் பேசுகிறோம் என்ற நினைப்பே எழாதபடி நம் வயதொத்த பரபரப்பான இளைஞனிடம் பேசிக்கொண்டிருக்கிறோம் என்ற நினைப்பைத் தந்த இளமை அவரது எண்ணங்களிலும் எழுத்துகளிலும் ஐந்து தலைமுறைகளாக மாறாதிருந்தது.

என்னைப் பொருத்தவரை நினைவுகளில் சட்டென வெற்றிடத்தை உணர்கிறேன்.

அவரது மறைவு குறித்து வரும் பதிவுகளும் செய்திகளும் கண்ணில் படாமலேயே போயிருக்கக்கூடாதா என்ற ஆதங்கமே மிஞ்சியிருக்கிறது.

போய்வாருங்கள் ஸார்.

பிரிவோம். சந்திப்போம்.

cheena (சீனா) said...

ஆழந்த அனுதாபங்கள் -ஆன்மா சாந்தி அடைவதாக

arulselvan said...

சன்னாசி

>>நகர்ப்புற மனோபாவத்தை (இருத்தலியல் பிரச்சினைகளைத் தாண்டிய urban psyche) சுஜாதா தவிர பிற எழுத்துக்களில் எங்காவது பார்க்க முடிந்திருக்கிறதா என்று யோசித்துக்கொண்டே...ஏ தான் இருக்கிறேன்!!
----
இதுதான் முக்கியம். தமிழில் ரொம்ப ரேர். இன்றைக்கும் கூட, தமிழர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் என்ன வாழ்வு வாழ்ந்தாலும் இந்த மனப்பண்பு அவர்களிடம் வருவதே இல்லை என்பதே நான் பார்ப்பது. இது வெறும் 'logo display' இல் வருவதில்லை என்பதும் ஒரு கிராமத்து தாத்தாவிடம் இருக்கும் அர்பனிஸம் கூட பலரிடம் காணமுடியாதென்பதும் கூட. அவரைப்பார்த்து உருவான எழுத்தாளர்களோ அவரின் தீவிர வாசகர்களோகூட இப்படி இல்லை.
சுஜாதா அந்த விஷயத்தில் தனி.

அருள்

-/சுடலை மாடன்/- said...

மற்றும் சிலர் இங்கு சொன்னது போல், நவீனக் கருத்துக்களையும், அறிவியல் செய்திகளையும் கவர்ச்சிகரமான ஆனால் எளிய நடையில் தமிழ் வாசகர்களுக்கு அளித்தவர் என்ற முறையில் தமிழுக்கு சுஜாதாவின் பங்களிப்பு மிகப்பெரியது. ஆனால் தமிழில் நல்ல இலக்கியம் படிக்க வேண்டுமானால் மற்ற சில எழுத்தாளர்களைப் படியுங்கள் என்று அவர் வெளிப்படையாக பல நேர்காணல்களில் குறிப்பிட்டிருக்கிறார். அவருடைய சிறுகதைகளில் சிலவும், அறிவியல் படைப்புகளும் என்னை அதிகம் ஈர்த்தவை.

சுஜாதாவின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்புதான். என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி - சொ. சங்கரபாண்டி

ஜமாலன் said...

//இவையெல்லாம் பள்ளிப் பருவத்தில் ஒரு சிறுவனின் மனதில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் பல ஆண்டுகள் கழித்துத்தான் அவர்களுக்கே புலனாகும். உயர்பள்ளியில் முற்றிலுமாக சிறுபத்திரிக்கைகள் வசம் சென்றுவிட்டேன். அங்கேயும் சுஜாதா இல்லாமல் போய்விடவில்லை. அதுக்கப்புறம் எவ்வளவோ எழுதினார். அவர் எழுதியதில் ஒரு 70 சதம் படித்திருப்பேன். இப்போதைக்குப் போதும். சென்றுவாருங்கள் சுஜாதா. அனைத்துக்கும் நன்றி.//

வழிமொழிகிறேன்.எனது அனுபவமும் அதே. சுஜாத தமிழின் நவீன எழத்துநடை மற்றும் நகர்ப்புற இளைஞர்களின் ஆர்வங்களை எழத்தாக்கியவர்.

பெயரிலி கூறியதுபோல அவரது கடந்தகாலம் என்பது அவர் பின்பற்றிய அரசிலையும் மீறிய தமிழ் எழுத்து நடையின் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றே.

குடும்பத்தினருக்க எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

Nithi said...

சுஜாதா அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த வருத்தங்களும், அஞ்சலியும்!