Tuesday, February 19, 2008

Flush The Lit.அய்ம்பது ஆண்டுகால திராவிட இயக்கங்களால் முற்றிலுமாக கலையுணர்வு சிதைக்கப்பட்டு, திரிக்கப்பட்ட அழகுணர்ச்சியோடு, எம் முன்னோர்களின் மகா காவியங்களையும் பெரும் உள்ளொளி கண்ட உயர் இலக்கியங்களையும் தேறாமல் மெக்காலே வழியில் மூளைச்சலவை செய்யப்பட்ட வெற்று அறிவியலும், நுட்பமும், மருத்துவமும், நிரலாண்மையும் போன்ற அறவலியற்ற போலி அறிவுப்புலங்களை மனனித்து சோற்றுக்காய் அறிவை விற்றுப் பிழைக்கும் பெருந்தமிழ்க்கூட்டமாகிய நாங்கள், .........

கடும் உழைப்பாளிகளும் , பெரும் படிப்பாளர்களும், சிலுவையென எங்களுக்காய்ச் சுமந்து எம் பண்பாட்டு பாரமனைத்தும் இழுத்தலையும் தமிழ் இலக்கிய சிருஷ்டிப் பிதாமகற்கு சொல்லதெல்லாம்,

leave us alone.

ஒரு பேச்சுக்கு கேட்கிறேன், இருபதாம் நூற்றாண்டு தமிழ் இலக்கியமனைத்தையும் (ஆமாமா , பாரதி உட்படத்தான் ) தூக்கிக் கடாசிவிட்டால் தமிழ் மொழிக்கு ஏதாவது இழப்பா என்ன? பின்ன ஏம்பா இந்தச் சலம்பு சலம்புறிய.

17 comments:

-/பெயரிலி. said...

உர்ர்ர்ர்ர்ர்ர்ர்....
;-)

Ayyanar Viswanath said...

நச்! :)

Anonymous said...

அது!

மு. சுந்தரமூர்த்தி said...

அருள்,
நீங்களுமா?

எதற்கும், உங்களுக்கு நீங்கள் பேசும் பொருளைப் பற்றிய அடிப்படை அறிவோ அல்லது நுண்ணுணர்வோ இருக்கிறதா என்பதை சோதித்துப் பார்த்துவிட்டு மேற்கொண்டு பேசுங்கள்.

Anonymous said...

Dear Sir
Who wrote those first lines...? Need to give a strong reply to that guy.

Regards,
Ganesh

arulselvan said...

>>>
அருள்,
நீங்களுமா?
==============
என்றால் என்ன அர்த்தம்? நான் மெக்காலே படிப்பு படிக்கலையா, இல்லை கூலிக்கு அறிவை விக்கலையா? மத்தபடி,
===========
>>>எதற்கும், உங்களுக்கு நீங்கள் பேசும் பொருளைப் பற்றிய அடிப்படை அறிவோ அல்லது நுண்ணுணர்வோ இருக்கிறதா என்பதை சோதித்துப் பார்த்துவிட்டு
======================
சோதித்தால், 'இல்லை' என்று வருகிறது. ஆனால் இப்படி பொருண்மையில் மயங்காமல் ஞான மார்க்கத்தில் ஓர்த்தால்
"ஆமாம்" என்று வருகிறது. என்ன செய்யலாம்?
======================
>>>
மேற்கொண்டு பேசுங்கள்.
=============
சரிதான்.
===========
கணேஷ்,
Who wrote those first lines...? Need to give a strong reply to that guy.
======
I did. That is the position that some seem to take.
A mild form of reply is the title of the post
=========
ரமணி, அய்யனார், டீசே,
பாத்து. எப்படியாவது தமிழைக் காப்பாதறதுக்கு ஒண்ணும் முயற்சி செய்யாமல் இருங்கப்பா. உலகமயமாகீட்டீங்க, பண்டமயமாகாமல் இருந்தால் சரி.
:-)
அருள்

Anonymous said...

இதில உள்ள நுண் அரசியல் எம் போன்ற பாமரர்களுக்கு விளங்காது
என்பதால் கோனார் உரையுடன் வெளியிடவும்.

Anonymous said...

தமிழ் மொழி மறைந்து போனால் ஏதாவது ஒரு இழப்பா? இல்லை,
எத்தனையோ மொழிகள் மறைந்தது போல் இன்னொரு மரணம் அவ்வளவுதான்.
மனிதர்களே பூண்டற்றுப் போனால்தான்
ஏதாவது ஒரு இழப்பா?. இல்லை பல
உயிரின வகைகள் அழிந்த பின்னும்
இயற்கை இருக்கிறது, பிற உயிரினங்கள் உள்ளன.
ஆகவே எது இல்லாமல் போனாலும்
பூமியே இல்லாமல் போனாலும்
என்ன வேறுபாடு, ஒன்றுமில்லை.
பிரபஞ்ச அளவில் எதன் இருப்பும்,
இன்மையும் ஒன்றுதான்.

ஒன்று செய்யுங்கள், பாரதிக்கு முந்தைய காலத் தமிழில் பேசி,
எழுதிப் பாருங்கள். இழப்பா இல்லையா
என்று தெரியும்.

டேவிட் ஷாக்லி இனவெறியாளர் என்பதற்காக அவர் கண்டுபிடித்ததை
நிராகரிக்கிறீர்களா இல்லை வாட்ஸன்
உளறுகிறார் என்பதால் ரெட்டை ஹெலிக்ஸ் இல்லை என்றாகிவிடுமா.

arulselvan said...

நண்பரே,
-------------
>>>பிரபஞ்ச அளவில் எதன் இருப்பும்,
இன்மையும் ஒன்றுதான்.
------------------
ஆம். இது தத்துவம், உண்மை. நான் தூக்கி எறியச் சொன்னது ஒரு அரசியல் செய்கையாக.
---------------
>>>ஒன்று செய்யுங்கள், பாரதிக்கு முந்தைய காலத் தமிழில் பேசி,
எழுதிப் பாருங்கள். இழப்பா இல்லையா
என்று தெரியும்.
--------------------------
பாரதியின் தமிழ் நடையை விட தற்காலத் தமிழ் நடை மிகவும் ஆழமாகவும், அழகாகவும் வீச்சுடனும் வளர்ந்துள்ளது என்பதை தமிழ் கற்கும் எல்லோரும் அறிவார்கள். இது ஒன்றும் பாரதியின் குறையல்ல என்பதும் அவனுடைய பங்களிப்பின் மீதே நாம் உருவாகுகிறோம் என்பதையும் முன் தலைமுறையை விட நாம் வளர்ந்திருக்கிறோம் என்பது இயல்பு என்பதையும் ஏற்றுக்கொள்வதில் தயக்கமிருக்காது என்று நினைக்கிறேன்.

இந்த இடுகையின் மைய்யம் பாரதியைப் பற்றியது அல்ல. நூற்றாண்டு இலக்கியத்தைப் பேசும்போது அந்தக் காலகட்டத்தில் மிகப்பெரிய இலக்கிய ஆளுமை என்பதால் பாரதியின் பெயரைக் குறிப்பிட்டிருக்கிறேன் என்பதும் அனைவருக்கும் புரியும். நீங்கள் சற்றே கலவரமடைந்து விட்டதாகத் தெரிகிறது.
--------------
>>>டேவிட் ஷாக்லி இனவெறியாளர் என்பதற்காக அவர் கண்டுபிடித்ததை
நிராகரிக்கிறீர்களா இல்லை வாட்ஸன்
உளறுகிறார் என்பதால் ரெட்டை ஹெலிக்ஸ் இல்லை என்றாகிவிடுமா.
------------------
அறிவியல் உண்மைகளை யாரும் மறுக்கமுடியாது. ஆனால் அதே ஷாக்லியால் இன்று எந்த சிறந்த பல்கலைக்கழகத்திலும் முன்புபோல் உரையாற்ற முடியாது அல்லவா. அரசியல் நிலைபாடுகளுக்கு அதற்கான விலையும் அரசியல் எதிர்வினையும், நிச்சயம் உண்டு. தனிமனிதரின் கருத்துச் சுதந்திரமும் ஒரு குமுகாயத்தின் சமநிலையும் ஒரு முரணியக்க பரிமாற்றம் தானே.

அருள்

Anonymous said...

அருள் - உங்களுக்கு கோபம் கூட வருமா? :-)

தன்னைத் தவிர்த்தும் எழுத்தாளர்களும் வாசக உலகமும் இயங்கமுடியுமென்பது தெரிந்தும் தலைவீக்கத்தைத் தணிக்கமுடியாத ஜெயமோகன் (அது குறித்தான பதிவுதான் இது என்று ஊகிக்கிறேன்) போன்ற 'பிதாமகச்' சுண்டைக்காய்கள், தான் புதிதாகக் கற்றுக்கொள்ளும் எந்தவொரு விஷயத்தையும், சமகாலத்தின் மிக முக்கியமான, நிராகரிக்க இயலாத ஒரு போக்காக பில்டப் கொடுத்து நிறுவ முயல்வதைப் படிக்கநேர்வது கடுப்பேற்றும் விஷயம்தான், ஒப்புக்கொள்கிறேன். அவரோடு உரையாடுவதற்கு தகுதி வேண்டும், கூசிச் சுருங்கும் உயிர்கள் என்றெல்லாம் என்று எழுதியிருந்ததைப் படிக்கையில், அதீத தன்னம்பிக்கை என்பதைவிட, கேரளத்துக்கே உரித்தான மொட்டைத் திமிர் என்றுதான் பட்டது. பெரியார் குறித்து எழுதியிருந்த வாசகருக்கு எழுதியிருந்த பதிலிலும், பல காலம் முன்பு தங்கமணிக்கு கீதை குறித்து எழுதியிருந்த பதிலிலும், பதிலைத் தொடங்குமுன்பே, 'இதுகுறித்து நாகரிகமாகக் கேள்வி எழுப்பியதற்கு நன்றி' என்ற ஆழ்நீரோட்டத்துடன் தான் பதில் தொடங்கியிருக்கும். இதுதான் இந்த சுயபிரஸ்தாப இலக்கிய ஜல்லி லாரி, தனது பிரசங்கத்தைத் தொடங்குமுன்பே தன்னுடன் உரையாடுபவர்கள் குறித்து கொண்டிருக்கும் அபிப்ராயம். சவக்கிடங்கு முழுதாகப் பிணங்கள்தான் நிறைந்திருக்கும் (பராமரிக்கப்படவில்லையெனில் சில புழு பூச்சிகளும் கூட) என்ற எளிய உண்மை போல, மனிதர்களாலும் அவர்களின் அவசங்களாலும் மட்டு(மே)ம் நிரம்பிய ஜெயமோகனின் புனைவுலகு கூட, மேற்பூச்சு அலங்காரங்களைத் தாண்டி, ஏமாற்றமளிக்கும் வகையிலான வெறும் observational craft மட்டுமே - இதைத் தாண்டி எந்த விதத்திலும் மேலெழுந்து நிற்பதில்லை என்பதை அவரது புனைவுகளை அணுகிப் படிக்கத் தெரிந்த எந்த வாசகனாலும் உணர முடியும். பிற நுண்கலைகள் குறித்த இவரது எந்தவொரு கருத்தும்கூட (ஏதாவது இருந்தால் தானே) அதே 'அக ஒளி, மன எழுச்சி, பேரியக்கம்' ரீதியிலான ஜல்லியடிகள் மட்டுமே - குறைந்தபட்சம் நான் வாசித்தவரையில் (நான் வாசிக்காத ஒரு புத்தகத்தில் ஒருவேளை நான் வாசித்த பலவற்றிலும் இல்லாத ஒரிஜினாலிட்டி ஒளிந்து கிடக்கலாம், யாருக்குத் தெரியும். அப்போது ஒரு வாசகனாக எனது தோல்வியை ஒப்புக்கொண்டால் போகிறது - நம்மை விட்டால் வேறு எவனுமே புத்திசாலி இல்லை என்று நினைக்குமளவு முட்டாப் பாண்டிகளுக்கு விவரம் பத்தாதே). பேப்பர்பேக் மனோதத்துவத்தைக் கூழாக்கி உள்ளே பாய்ச்சி, தயிர்வடையாக வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்காத எந்தவொரு சராசரி இந்தியனுக்கும் தெரிந்திருக்கக்கூடிய புராண தொன்மங்களையும் ஏதோ இப்போதுதான் இவை புதிதாகக் கூறப்படுவதாகப் புது மொந்தையிலிருந்து இறக்கிய பழைய அயிட்டத்தை சைடில் கொஞ்சம் விட்டு (பத்மாவதி சரித்திரமானாலும் சரி பிள்ளையார் புராணமானாலும் சரி கீதையானாலும் சரி சிலப்பதிகாரமோ மகாபாரதமோ ஆனாலும் சரி) வழிய வழிய குணாம்சக் கஞ்சி சட்டி சட்டியாக (மணிரத்னம் படங்களில் வரும் வாயாடிக் குழந்தைகள் தான் நினைவுக்கு வரும்) வலுக்கட்டாயமாகப் புகட்டி எழுப்பப்படும் பாத்திரங்களால் நிரம்பி வழியும் இவரது புனைவுகளின் அடிப்படையில்தான் இந்தப் பீற்றல் எழுகிறதென்றால், சுயமாகப் படித்து உணரமுடியும் வாசகன் எவனாலும், வசீகரிக்கும் எழுத்துக்களாயினும் இவ்வளவு பெரிய பீற்றலுக்குத் தகுதியுள்ளதா இல்லையா என்பதை எளிதில் பிரித்துணர முடியும். அவரது அ-புனைவுகள், முன்பு சொல்லப்பட்டவைகளை உரத்துக் கூறுபவையே தவிர, தன்னளவில் அசலான பார்வைகள் ஏதும் கொண்டவை அல்ல என்பது என் வரையிலான புரிதல். தனது படைப்புக்களனைத்தும் வெறுமனே மனிதர்களால் நிரப்பப்பட்டிருப்பதை உணர்ந்தாரோ இல்லையோ, பஷீர் நாய்களைப்பற்றியும் பிற பிராணிகளைப் பற்றியும் எழுதியிருக்கிறார் என்று ஜெயமோகனை பிராணிகள் பற்றிய ஒரு 'பெருந்தரிசனத்தில்' கொண்டு போய் விடுகிறது. நல்லவேளை ஜாக் லண்டனும் வால்ட் டிஸ்னியும் தமிழ்நாட்டில் பிறக்கவில்லை. முற்றிலும் கறாரான அகவயமான தளத்தில், முற்றிலும் மனிதர்களை மட்டுமே எழுதி தன்னையும் தன்னால் எழுதப்படும் மனிதர்களைச் சிதைக்கத் தயங்காத கலைஞராகிய நகுலன், அவரது தகுதிக்கு மீறிப் பாராட்டப்பட்டவராம்!!!! முன்பு, விஷ்ணுபுரம் வெளியான தருணத்தில், அதற்கு முன்னுரை எழுத சுஜாதாவிடம் கேட்டிருந்ததாக அப்போது படித்தேன். எவ்வளவு நாசூக்கான உத்தி - சுஜாதாவிடம் முன்னுரை வாங்குவது அல்ல; விஷ்ணுபுரம் சுஜாதாவைத் தாண்டியது என்ற வெகு தெளிவான பிரக்ஞையோடு, சுஜாதாவின் முன் அதை வைத்து 'உன்னால் இதற்கு முன்னுரையாவது எழுதமுடியுமா' என்று தான் அவரைத் 'தாண்டிவிட்டதை' பஸ்மாசுரன் போல உணர்த்துவது!! பள்ளியில், நான் சென்ட்டம் நான் சென்ட்டம் என்று பரீட்சைக்குப் பரீட்சை பேப்பரை ஆட்டிக்கொண்டு திரிந்து, நீ எவ்வளவு நீ எவ்வளவு என்று கேட்டுக்கொண்டு திரியும் முதல்பெஞ்சுப் பயல்களின் சல்லித்தனம் போன்றதைத் தாண்டி இதில் வேறேதும் இல்லை என்றுதான் அப்போது தோன்றியது. இது, ஜெயமோகனின் அரசியலையெல்லாம் படிப்பதற்கு முன்பே, விஷ்ணுபுரத்தை ஒரு சாதாரண வாசகனாகப் படித்த காலத்தில். இந்த வகையிலான சில்லறைத்தனமான மனக்கண்ணாமூச்சிகளின் வெளிப்பாடு போன்றதுதான் தற்போதைய அவரது 'பகடிகள்/அங்கதங்கள்' என்று தோன்றுகிறது. ஆற்றூர் ரவிவர்மா டார்த்தீனியத்தில் வரும் கருப்பன் போல ஹெ ஹெ ஹெ என்று நளினமின்றிச் சிரிப்பவர்/தமிழ் முழுக்கத் தெரியாவிட்டாலும் மொழிபெயர்த்து வைத்தவர், நாகார்ஜுனன் மூன்று வேளையும் தயிர்சோறு தின்றுவிட்டு உலக இலக்கிய வேப்பிலை அடிக்கப்பட்ட தில்லக்கேணி/மைலாப்பூர் குடுமி அம்பி, ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன் ரெம்ப்ராண்ட் ஓவியங்களைப் 'பார்க்கும்' கரிய குண்டர், பிறர் பில் கொடுத்தால் மட்டும் நன்றாகத் தின்னும் ஆட்டோமேட்டிக் பாப்கார்ன் யந்திரம் கோணங்கி, ஆங்கில இலக்கியம் படித்த தன் பெரிய உதடுகளால் கண்டிப்பான தோரணையில் விரலை ஆட்டி ஆட்டிப் பேசும் எஸ்.ராமகிருஷ்ணன், எம்ஜியார், சிவாஜிகணேசன் - இதெல்லாம் அவரது பத்தி பிறரைப் பற்றி உருவாக்கும் பிம்பங்கள் - அவற்றைப் படித்த பிறருக்கும், படித்து முடித்தபின் நினைவில் தங்கியது இதுவாக இருந்தால், ஏத்துவது போல ஏத்தி இறக்குவது என்பார்களே, அதைத் தவிர இந்த அங்கதத்தில் வேறு எந்தவொரு இழவும் இல்லை என்று தாராளமாகச் சொல்லலாம். இது எப்படி இருக்கிறதெனில், ஒரு குயவன் வீட்டுக்கு இன்னொரு குயவன் போகிறான், பானை செய்வது குறித்துப் பேசுகிறார்கள், திரும்பி வரும் இன்னொரு குயவன் முதல் குயவனின் அப்பன் மூக்கில் சளி வடிகிறது, மனைவி மேல் வீச்சம் அடிக்கிறது, வீடு முழுக்க குப்பை என்று சொன்னாலும், இதில் தொக்கி நிற்பது இதில் உட்கார்ந்து என்னத்தை இவன் பானை செய்கிறானோ என்று வக்கிரக் கிண்டல் என்றிருக்கையில் சகித்துக்கொள்ளவா முடியும்? எழுத்தாளன் நாயக்கனா செட்டியா அம்பியா தேவனா என்று எவனாவது கேட்டானா? இல்லை இவர் அடையாளங்காட்டிய எழுத்தாளர்களெல்லாம் யாராவது ஜாதி அரசியலை முன்வைத்து எழுதுகிறார்களா? அவன் எழுதுவதிலுள்ள கலாச்சார நுண்புலங்களைப் புரிந்துகொள்ள அவன் ஜாதி தேவை என்ற சப்பை விளக்கத்தில்தான் இது கொண்டுபோய் விடும். அங்கதம் என்ற போர்வை போர்த்தினாலும், தன்னை மீறியவர்களுக்கு செக் வைக்க பொதுவாக உபயோகிக்கப்படும் உத்தி இது என்பதும், அங்கதத்தை விமர்சனத்துக்காக உபயோகிக்காமல் ஒரு escape/defense mechanismஆக உபயோகிக்கிறவர்கள் கையில் இது கிடைக்கும்போது எவ்வளவு அசிங்கமாக இருக்கும் என்பதையும் இதுமாதிரிப் பத்திகளைப் படிக்கும்போது உணரமுடிவது பிறருக்கும் சாத்தியமாகியிருக்கும் என்று நம்புகிறேன். அவரது பத்திகளின் he said she said anecdotes பெரும்பாலானவை தினமலர் பாணியிலான 'என்று மக்கள் நினைக்கிறார்கள்' பாணியிலானவை என்பதுதான் என்பது என் ஊகம். பம்பு இருக்கு பைப்பு இல்லை என்னும் அற்புதமான எம்ஜியார் குறித்த சொற்றொடர் ஒரு 'அப்பாவி கிராமத்து வெள்ளந்தியிடம்'தான் (இந்த அப்பாவி வெள்ளந்தி என்பது இன்னொரு க்ளிஷே) வந்திருக்க வாய்ப்பு இருக்கும், 'பேரர், சாலட்' 'லைப்பாய் சோப்பின் இனிய மணம்' என்று ஆத்மவிசாரமிக்க வாக்கியங்களை எழுதும் ஜெயமோகனின் நுணுக்கிச் செதுக்கிச் சீர்ப்படுத்தப்பட்ட கலா பீரங்கியின் வாயிலிருந்து ஒரு பேரோசையுடன் வந்திருக்கச் சாத்தியமில்லை இல்லையா? தனக்குள்ளிருகும் வண்டலையெல்லாம் வெளித்தள்ளச் சாத்தியப்படும்போது 'பொதுவா என்ன சொல்றாய்ங்கன்னா' என்று ஆரம்பித்து வெளித்தள்ளுவது கால காலமாக இருந்து வரும் ஒரு டப்பா உத்தி.

ஆக, திரைப்படங்களில் சிவாஜியின் ஓவர் ஆக்டிங்கை கிண்டலடிக்கும் இந்த கரைகண்ட வல்லாளரின் பேட்டியொன்றையும் குமுதத்தில் பார்த்தேன். அடடா. அடடா. எனக்கு பொதுவா மலையாளப் படங்கள்தான் பிடிக்கும் - அங்கேல்லாம் அடக்கமா நடிப்பாங்க (கையை மென்மையாக ஆட்டி ஆட்டி சொன்னதாக நினைவு). அடக்கமா என்பது 'ஓவர் ஆக்டிங்' இல்லாமல் என்று சொல்ல முனைந்தாலும், தமிழ்ப் படங்களுக்குப் போட்டியாக டிங்கிரி டிங்காலே போடும் எத்தனை மசாலா மலையாளப் படங்கள் இருக்கின்றன என்று நம்மை மாதிரி முட்டாப் பாண்டிகளுக்கு எங்கே தெரிந்திருக்கப் போகிறது சொல்லுங்கள். அதுவும், சிவாஜியை ஓவர் ஆக்டிங் என்று கிண்டலடிக்கும் இவர் படைத்த புனைவுப் பாத்திரங்களின் ஓவர் ஆக்டிங், precociousness முன்னால் சிவாஜிகணேசன் பிச்சை வாங்கவேண்டும். முன்னே பின்னே மலையாளப் படங்கள் பார்த்திருப்போமா நாமெல்லாம். தமிழ்நாட்டு எழுத்தாளன் போய் கேரளத் தொலைக்காட்சியில், 'அங்கே தமிழ்ப் படங்கள் எல்லாம் இங்கே மலையாள நாடு மாதிரி செக்ஸ் படங்களா இருக்காது, ஹீரோவும் ஹீரோயினும் சும்மா மரத்தைத்தான் சுத்தி வருவாங்க, அத்தோட கட் பண்ணிருவாங்க' என்றால் எப்படி இருக்கும்! அட, எல்லாரும் சொல்லும் அடூர் பற்றி சொல்கிறாரே ஜெயமோகன், அற்புதமான திரைப்பட ரசனை இருக்கும் போல என்று ரசிகக் குஞ்சு நான் நினைத்துக்கொண்டு, தொடர்ந்து பார்த்தேன். மேல்நாட்டுப் படங்களில் ஜாலியான செர்ஜியோ லியோனி படங்கள்தான் பிடிக்குமாம். சீரியஸான படங்களில் அவ்வளவாக விருப்பமில்லையாம் (அதற்கும் ஆன்மீக, தத்துவ, இன்னபிற பயிற்சிகளும் லொட்டு லொசுக்கும் தேவை இல்லையா என்று நம்மைப் போன்ற முட்டாப் பாண்டிகள் கேட்கக் கூடாது?). ஆர்தர் வில்சன் குறித்த பதிவில்கூட, அவர் படம் பார்த்துக்கொண்டிருப்பார், இவர் 'என்னங்க நடக்குது படத்தில' என்று அப்பாவியாகக் கேட்பார். நடப்பதைத் தாண்டி வில்சன் ஒளியமமப்பைக் கூர்ந்து கவனிக்கிறார் என்று எழுத முயல்வதிலும்கூட, தனது 'முனைப்பை'ப் பொருத்தி விட வேண்டும்!!! ஜார்ஜ் புஷ் வெற்றி பெற்று பதவிக்கு வந்தது கூட, இந்த மாதிரி ஒரு அப்பிராணி folk charm அவருக்கு இருக்கிறதென்று ஊடகங்கள் கட்டமைத்ததால்தான் - he's a guy who you can have a beer with என்ற ரீதியில். அந்தப் பேட்டியில், மெக்கென்னாஸ் கோல்டில் அப்படியே அந்த பருந்து காட்டுவானே முதல்ல என்று இன்னொரு வழக்கமான தில்லாலங்கடி. மெக்கென்னாஸ் கோல்டு காலத்து கிழடுகள் (மரியாதைக்குறைவாக அல்ல, பொதுவாகச் சொல்கிறேன்) எவற்றிடம் அந்தப் படம் பற்றிக் கேட்டாலும் மெக்கென்னாஸ் கோல்டா, அந்த பருந்து(கழுகு) வர்ற சீன் தானே? என்பார்கள் - ரஜினின்னா யாரு, இந்த சிகரெட்டைத் தூக்கிப் போட்டு வாயில பிடிப்பானே, அவந்தானே என்று இங்கே சந்தித்த ஒரு போன தலைமுறை மலையாளி என்னிடம் கேட்டது போல. சந்தர்ப்பமிருந்தால் மெக்கென்னாஸ் கோல்டு பார்த்த யாரிடமும் கேட்டு உறுதி செய்துகொள்ளலாம். அந்தப் பருந்து அப்படியே கீழ பார்க்குது, சின்னச் சின்னதா மனிதர்கள் என்ன செஞ்சுட்டிருக்காங்க என்று சர்வே விடும் கழுகு அப்படியே தத்துவ விசாரத்துக்குப் போய்விடுகிறது. வேறு படங்களை அவர் பார்த்திருக்கவில்லை என்றோ, ஏன் இந்தப் படம் குறித்துக் குறிப்பிடவில்லை என்றோ குறைகூறுவதற்காக அல்ல (மெக்கென்னாஸ் கோல்டும் செர்ஜியோ லியோனும் மட்டும் பிடிக்கிற நீரெல்லாம் என்னத்தை சினிமா பார்த்து, சிவாஜியோட ஓவர் ஆக்டிங்கையும் எம்ஜியாரின் பம்பு பைப்பையும் பத்தி கருத்து சொல்லிக் கிழிச்சீரு முதல்ல நல்ல படங்களை பார்த்துட்டு வாரும் என்று மொட்டையாகச் சொல்ல முட்டாள் பாண்டிகள் நமக்கு நா கூசுகிறதே, என்ன செய்ய. அதுக்கும் சொல்லிவிட்டாரே, பெர்க்மன் படங்கள் மனதுக்கு நெருக்கமானது என்று!! அட, பெர்க்மனைத் தெரியாத தமிழ் சிறுபத்திரிகை ஆசாமிகளைக் காட்டுங்கள் பார்ப்போம், வலைவீசித்தான் தேடவேண்டும்), தமிழ் சினிமா மிகப்பெரும் மாற்றத்துக்கு உள்ளாகிக்கொண்டிருக்கிறது (கஸ்தூரி மான் இழுக்கும் வண்டியுடன் இலக்கிய அண்டார்டிகாவிலிருந்து வரும் கிறிஸ்துமஸ் தாத்தாவாகிய நான் சினிமாக் களத்துக்குள் நுழையும்போது என்பது implied இங்கே) என்று இவர் சொல்வதும்கூட ஒரு வகையில் இப்படிப்பட்டதுதான் என்று தோன்றுகிறது - நான் போயி பார்த்தேன், எடம் நல்லா இருக்கு, பாயை விரிச்சு சௌகரியமா உக்கார்ந்து பலகாரம் சாப்பிடத் தோதா இருக்கு, நல்ல இடந்தேன் என்று அங்கீகாரம் கொடுப்பதற்கு முன்னால், இவரை நம்பிப் படிக்கும் வாசகர்களில் எத்தனை பேர், எல்லாம் அது ஒரு டப்பா இடமா இருக்கும், அவ்வளவு தூரத்தில இருக்கே, பாம்பு இருக்குமோ பல்லி இருக்குமோ என்ற ரீதியிலான முந்தைய முன்னெச்சரிக்கைச் சங்கூதலின் விளைவாக செல்லவேண்டிய தளங்களுக்குச் செல்லாமல் விட்டார்களோ. கல்லூரி படம் குறித்து எழுதியதும் இதே போலத்தான் தோன்றுகிறது - பல நாள் இட்லி தின்னாதவன் கடைசியாக ஒரு நாள் இட்லி தின்றால் ஆஹா, இட்லி போன்ற ஒரு காப்பிய உணவு எங்கேயும் இல்லை என்பது மாதிரி. இட்லிக்குப் பதில் இங்கே படம், அவ்வளவு தான். எழுத்தாளர்கள் குறித்த இவரது கருத்துக்களும் இதே போன்றவைதான் என்பது நான் கண்டவரையிலான உண்மை. போர்ஹே போஸ்டர்களை ஒட்டுகிறார்கள், காலம் போர்ஹே பெயரை அழிக்கும் என்று சற்று காலம் முன்பு சொன்னவர் இப்போது, போர்ஹே இருந்திருந்தால் ஒரு மதத்தை நிறுவியிருப்பார் என்கிறார். பெரும் ஆக்கங்களை எழுதாத ஆக்கங்கெட்ட கூகையான போர்ஹேஸ் போன்றவர்களின் எழுத்துக்கள் இன்றி லத்தீன் அமெரிக்க நாவல் இல்லை என்ற நிலை இருக்க, லத்தீன் அமெரிக்காவிலிருந்து உம்பர்த்தோ ஈக்கோ, கால்வினோ என்று எழுத்தாளர்களிலிருந்து, ஃபூக்கோவிலிருந்து ருஷ்டீ வரை ஈர்த்த போர்ஹேஸ் எழுதிய அதிகபட்ச நீளமுள்ள கதையே பதினைந்து பக்கமாக இருக்க, அப்போதைய காப்பியப் பிரேமையில் இதுகுறித்துப் புரிந்துகொள்ளத் தவறியோ என்னமோ ஒரு உறுதியான நிராகரிப்பு பிட்டைப் போட்டுவிட்டு, இப்போது பேக்கடித்து மதத்தை நிறுவியிருப்பாராம் மண்ணாங்கட்டியை நிறுவியிருப்பாராம். போர்ஹேஸை ஒரு உதாரணமாகக் கொள்வது, இந்த தலைவீங்கிச் சுண்டைக்காய்களைத் தாண்டியும் உலக இலக்கியம் எவ்வளவு பரந்துபட்டது, அகன்றது என்று இவர் உளறுவதையெல்லாம் நம்பிப் படிக்கவேண்டியதையும் படிக்காமல் போய்விடக்கூடியவர்களுக்காகத்தான். இத்தனைக்கும் போர்ஹேஸ் 'ஒரு' எழுத்தாளர் மட்டுமே. இன்றைக்கு சுஜாதாவைத் தனது முன்னோடியாகக் கொண்டிருப்பதை தமிழ் இலக்கிய உலகில் ஒரு பெரிய புரட்சியாகச் சித்தரிப்பது போல, ஜி.கே.செஸ்டர்டனையும் அவரது 'Father Brown' கதைகளையும் போர்ஹேஸ் முன்னோடியாகக் கொண்டிருப்பதையும், புனைபெயரில் ராஜேஷ்குமார் ஸ்டைலில் துப்பறியும் கதைகளை எழுதியதையும் ஒரு 'புரட்சி' யாக போர்ஹேஸ் சுயதம்பட்டமடித்து எழுதி நான் படித்ததில்லை!! அசலில் பார்த்தால், அவரது எழுத்துக்களனைத்துமே தன்னைச் சுற்றியிருப்பவற்றின் அளவுகடந்த விஸ்தீரணத்தைத் தனது கதைகளின்மூலம் 'குறிப்பாலுணர்த்த' முயன்றதாகத்தானிருக்கும். வார்த்தைச் சிக்கனம், சொற்களுக்கிடையிலான மௌனம், வெறும் பரோக்கியலிசத்தைத் தாண்டிய cosmopolitanism - இதெல்லாம் போர்ஹேஸ் 'முன்னிறுத்தாத', ஆனால் தன் கதைகளில் 'எழுத மட்டும் செய்த' விஷயங்கள். இவற்றுக்கும் ஜெயமோகனுக்கும் துளியாவது சம்பந்தம் இருக்குமா? இல்லை, இருந்ததன் கூறுகள் எவற்றுக்காவது அவர் எழுத்தில் தடயங்கள் இருக்கிறதா? தன் எழுத்தை விமர்சிக்கும் பிறரைக்குறித்துப் பேசும் இந்த சுண்டைக்காய் பிறகு எந்த முகத்தை வைத்துக்கொண்டு விமர்சிப்பவனெல்லாம் மடையன் கூசிச் சுருங்கும் உயிர்கள் என்று இப்படி பட்டாக்கத்தி மேல் பட்டாக்கத்தியாகப் போட்டுத் தள்ளுகிறது? இதையெல்லாம் சொன்னால், தமிழ்க் கலாச்சாரத்தை முன்னிறுத்துபவன் நான், நமது மண் வேர் வெங்காயம் என்று பிரசங்கங்களைக் கேட்க வேண்டிவரும். மண், வேர், வெங்காயம் என்று பேசுபவனை தல்ஸ்தோயும் தாஸ்தாயெவ்ஸ்கியும் படித்திருக்கவேண்டும் என்று மடக்கலாம். குமுதம் விகடன் படித்து வருபவனை, சிறுபத்திரிகைகளில் நடப்பது குறித்த எந்த அறிவுமற்றவர்கள் என்று மடக்கலாம், கொஸாக்குகளையும் பனியையும் கற்பனை செய்துகொண்டு, ராதுகா பப்ளிஷர்ஸ் புத்தகங்களில் மட்டுமே அபாக்கியமாகத் தனது தொடக்கத்தைக் கொண்டுவிட்டவர்களிடம், அவர்களுக்கு வெகுஜன இலக்கியம், pulp குறித்த புரிதல் எப்படி இல்லை என்று அவனையும் மடக்கி அடிக்கலாம். பல்ப்பையும் படித்து சிறுபத்திரிகையையும் படித்தவனாக இருந்தால் ஆன்மீக, தத்துவ விசாரமும் விளக்கெண்ணெயும் இருக்க வேண்டும் என்று டபுள் இம்பாக்ட் கொடுக்கலாம். ஆனாலும் சுவாரஸ்யமான உத்திதான். இதெல்லாம் இப்படித்தான் இருக்கிறது - இது போர்ஹேஸ் குறித்து மட்டும் அல்ல; பொதுவாக வேறு எந்த எழுத்துக்கும் கூட. போர்ஹே/xyz நல்ல ரைட்டர் தான். அதை நான் இப்போதான் புரிஞ்சுக்கிட்டேன், பிறர் முன்னாடியே இதுபத்திச் சொல்லியிருந்தாலும், இப்ப நான் படிச்சுப் புரிஞ்சுட்ட மாதிரி அப்ப அவங்க புரிஞ்சுட்டிருக்க முடியாது, அவங்களுக்கு நுண்ணுணர்வோ நமது கலாச்சாரம் பாரம்பரியம் ஆன்மீகம் என்பதுகுறித்த எந்த ஒரு அறிவுமோ கிடையாது. நீ கூசிச் சுருங்கும் உயிர். கல்கி குறித்த இவரது பார்வைகளும் இப்படித்தான் 'மாறி' வந்திருக்கிறதென்று நினைக்கிறேன். மேற்கத்தியான் எல்லாம் கெளங்கு விக்கின மாதிரிப் பேசற, அதருக்கத்தைப் போய் தருக்கம் தொடாத மரமண்டைகள் (உபயம்: அய்யர், காடு). ஆனா மேற்கத்தியானுக்கு நம்ம கலாச்சாரம் மேல லேட்டஸ்டா ஆர்வம் வந்திருக்கு - ஜூம்பா லஹரி மாதிரி இந்திய எழுத்தாளர்கள் வழி (அவள் நிற்கிறாள், அலமாரியைத் திறக்கிறாள். அரிசிநொறுக்கை (அதாங்க, ரைஸ் க்ரிஸ்பீஸ்) எடுத்து மிளகாய்த் தூளுடன் போட்டு பிரட்டித் தின்கிறாள்). சிவசங்கரி போன்றவர்களின் ஆக்கங்கள் படிக்கும் பாக்கியம் வாய்க்கப்பெறாதவர்கள் (துளி கடுகு கறிவேப்பிலை போட்டு தாளித்து, வெண்ணெயை ரொட்டியில் தடவி இத்யாதி), இருபத்தோராம் நூற்றாண்டில் கிளங்கு தின்னு விக்கின மாதிரி தஸ் புஸ் ஆங்கிலம் பேசும் மேற்கத்திய லிட்டராட்டி போஸ்ட்கலோனியல் கால்வாயில எங்கே தனது 'காலை'க் கழுவுது என்று இதன் மூலம் அறிந்து கொள்ளலாம் (வெளிப்படையாகப் பேசாத பாண்டிகளால் 'காலை'க் கழுவுது என்றுதான் சொல்ல முடியும்; குண்டியைக் கழுவுது என்று வெளிப்படையாகச் சொல்ல வெக்கப்படமாட்டானா பாண்டி?). அப்போ ஒருமுறை சொன்ன கருத்தை எழுத்தாளன் மாற்றிக்கொள்ளவே கூடாதா? நிச்சயம் மாற்றிக் கொள்ளலாம், ஆனால் வாசகத் தளத்தில் இருப்பவனை மரமண்டை என்று சொல்லி பின் தன் கருத்தைச் சொல்லும் எழுத்தாளக் குஞ்சுகள், சற்று காலம் கழித்து தன் கருத்தை மாற்றிக் கொள்கிறேன் கருவாட்டை மீனாக்குகிறேன் என்றால் எரிச்சல் ஏற்படுவது நியாயம்தானே? தனது Order of thingsன் முன்னுரையில், இந்தப் புத்தகத்தைப் படிக்குமளவு முயற்சியெடுக்கும் வாசகன் இதை எப்படியும் அர்த்தப்படுத்திக்கொள்ளலாம் என்று நன்றியுடன் கூறுகிறேன் என்னும் எழுத்தாளர்கள் எங்கே, என் உலகம் வெளியே உள்ளதைவிட பெரியது,ஆழமானது. இந்த விவாதங்களை எழுதுபவர்கள் யார்? அவர்களுக்கு என்ன முகம் உள்ளது? என்ன எழுதியிருக்கிறார்கள்? என்ன படித்திருக்கிறார்கள்?தங்க¨ளையே வெட்கி கூசிச்சுருங்கும் சிற்றுயிர்கள். யார் ஏற்றாலும் இல்லையாயினும் நான் தமிழ் வரலாற்றில் என்றும் இடம்பெறும் ஆளுமை. என்னுடன் உரையாடவும் என்னைப்பற்றி பொருட்படுத்தும்படி எதையாவது எழுதவும்கூட ஒருவருக்கு அதற்கான தகுதி வேண்டும் என்று எழுதும் இந்த சல்லிப்பயல்கள் எங்கே.

சாமானிய வாசகன் விகடன் குமுதம் படித்து ஜெயமோகனின் புனைவுகளை படிக்க வந்தால் அவனை மிரட்டுமளவு ஒரு 'மொழி'யைக் கட்டமைத்துக் கொள்ள வேண்டும். ஆக, அந்த மிரட்டல் அங்கே தேவை - கதைக்கான அடர்த்தியான மொழி அவரைக்காய் கூட்டுப்பொரியல் என்று. அதை ஊடுருவி அதன் தத்துவ தரிசனங்களையும் தருக்கச் சுழல்களையும் தாண்டி இலக்கிய முக்தி அடைய, சுயபிரயத்தனமும் பயிற்சியும் தேவை - சும்மா வாழைப்பழத்தை உரிச்சு வாயிலும் வைப்பார்களா என்ன? ஆனால் கோணங்கி போன்றவர்களிடமிருந்து வெடிப்பது ஆட்டோமாட்டிக் பாப்கார்ன் யந்திரம், நகுலன் ஓவர்ரேட்டட் எழுத்தாளர், சுந்தர ராமசாமி எழுதறதுக்கு முன்னாடி ரொம்ப யோசிக்கிறார், எனவே அதில ஒரு twang இல்லை - அதே யுக்தி இது. இதெல்லாம் எப்படி? நான் நேராப் பார்த்துட்டேன். இப்படித்தான் இவர் எழுதுறார், இதுதான் இவர் யோசிக்கிற விசயம், இதுதான் இவர் படிச்சிருக்கார் இதை இவர் படிக்கலை, அது ஒண்ணும் இலக்கியம் படைக்கிறதுக்கு சரியான வழியாத் தெரியலை, ஆரம்பிச்சா அப்படியே கடகடன்னு எழுதித் தள்ளிட வேண்டாமா? (உபரியாக, தமிழ் எழுத்தாளர்களின் முதன்முதலில் பாத்டப்பைப் பார்த்தது சுந்தர ராமசாமி வீட்டில்தான் என்றும் 'பதிந்து' வைத்துவிட்டால், பொருந்தவேண்டிய இடத்தில் தானாக அது பொருந்திக்கொள்ளும்). பாண்டிப்பயல்களின் மொழியில் pubic hairக்கு வார்த்தை இல்லை என்று அங்கதப் பத்தி எழுதும் இவரின் 'மலம்' கதையில், கதை முழுக்க மலம் மலம் மலம் மலமோ மலம்தான். மருந்துக்குக்கூட 'பீ' கிடையாது, பொறவு என்ன? அவ்வளவு அக்கறை இருந்தால் pubic hairக்கு வார்த்தை கேட்ட மூத்த எழுத்தாளருக்கு நாஞ்சில் பாசையில் சிதிமயிர் என்று எடுத்துக் கொடுத்திருப்பதுதானே. ஓ, அதை நாங்களெல்லாம் செய்யமாட்டோம் திராவிட இயக்கத்தில் ஊறி வந்த பாண்டிக்குஞ்சுகள்தான் செய்யும், இல்லையா. மலம் கதையில்கூட, சுத்தமாகக் கழுவித் துடைக்கப்பட்டு, தேய்த்தால் ர்ரிங்க் என்று சத்தம் வரும்படியான டோட்டோ சான் ரேஞ்சு பீங்கான் கக்கூசுகள்தான், அங்கேதான் ஒரு சின்ன துணுக்கு மலம் கிடக்கும் - கிளாரிட்டி/நான் கிளாரிட்டி காண்ட்ராஸ்ட்டு பிட்டுகள் இவை. எந்த மடச் சாமியார், அவரது தொண்டரடிப்பொடிகள் குறித்த கதையோ அது என்பது வேறு விஷயம். பெரியார் பற்றி இவர் எழுதுவதும் இதே தோரணையில்தானோ என்று தோன்றுகிறது. தல்ஸ்தோயும் தாஸ்தாயெவ்ஸ்கியும் படித்திராத, ஆன்மீக விழைவு இல்லாத ஒரு ஆசாமியை ஒரு சிந்தனையாளராக ஒத்துக்கொள்வதில் ஜெயமோகன் போன்றவர்களுக்கு சிக்கல் இருப்பது நியாயம் தானே. வின்ஸ்டன் சர்ச்சில் மாதிரி 'தன் இலக்கியப் பங்களிப்புக்காக' குறைந்தபட்சம் ஒரு நோபல் பரிசாவது வாங்கியிருக்க வேண்டாமோ? அப்படியே போனாலும், பெரியார் இருந்திருக்கவில்லை என்றாலும் ஜெயமோகனுக்கு என்ன கவலை, அவர் என்ன கக்கத்தில் துண்டை வைத்துக்கொண்டு செருப்புப் போடாமல் நடந்திருக்கப் போகிறாரா, இல்லை கல்லூரி அட்மிஷனுக்கு நேர்முகத் தேர்வுகள் என்ற பெயரில் ஆப்பு அடிக்கப்பட்டு வருந்தியிருக்கப் போகிறாரா இல்லை இவர் சென்று கண்டு களிக்கும் பேராலயங்களுக்கு உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டிருக்கப் போகிறதா. இல்லை, அனைத்தையும் விட முக்கியமாக, இவரது எழுத்தை இவரது ஜாதி அடிப்படையில் யாராவது நிராகரிக்கப் போகிறார்களா (இவரை விமர்சிக்கும், தாக்கும் எழுத்தாளர்கள் கூட). ஆக, பிறப்பாலும் பிரச்சினை இல்லை, முக்கியமான தொழிலிலும் (எழுத்து) சுற்றியிருக்கும் கும்பல் விமர்சித்தாலும் கூட, ஜாதி அடிப்படையில் தனது தொழிலை நிராகரிக்குமளவு மடத்தனமற்ற கும்பல் - லௌகீக வாழ்க்கையில் எங்கேயாவது போனாலும் அவமானப்படுத்தப்பட இயலாத வாய்ப்பு - பிறகு என்ன இழவுக்கு ஜாதியைப்பற்றி எழுதுவதும், அதை ஒழிக்க வழியமைத்துக் கொடுத்தவர்களையும் குத்தல் நக்கல் பண்ணுவது, இல்லை, 2008ல் எனக்கிருக்கும் ஆன்மீகத் தேட்டமும் அறிவும் 1930களில் இவருக்கு இல்லை என்ற ரீதியில் குழப்ப வேண்டியது. இன்று ஈ.வெ.ரா இருந்திருந்தால் பக்கத்தில் அமரவைத்துப் பேசியிருப்பாராம். பேசி இருக்கத்தான் செய்வார் - என்னை விட்டால் உலகத்தில் வேறு சமூக சீர்திருத்தவாதியே இல்லை, என்னை விமர்சிப்பவனெல்லாம் கூசிச் சுருங்கும் உயிர், அடிமடையன் என்றா இந்தத் தலைவீங்கியை மாதிரி சொல்லியிருக்கப் போகிறார்? மலையாளிகள் ஜாதி பற்றி வெளிப்படையாகப் பேசுவார்கள் கிழிப்பார்கள் என்று அடுத்து ஏதோ சொல்கிறார். மலையாளி என்ன இழவுக்கு ஜாதியைப் பற்றிப் 'பேச' வேண்டும். குஞ்சுண்ணி நாயர், பொந்தன் நம்பூதிரி, சும்பன் பிள்ளை என்று பேருக்குப் பின்னால் இருப்பது போதாதா? கேரள சினிமாவில் நாயர் 'லோபி' இருக்கிறது என்று மலையாள நடிகர் திலகன் சற்று காலம் முன்பு வருத்தப்பட்டிருந்தார். சேச்சே, அப்படியெல்லாம் இருக்குமா மலையாள தேசத்திலே? பாண்டிகள்தான் கேவலம். பாண்டிப் படங்களில் நடிக்கும் ஆர்யா என்ற பையனும் கூட 'பாய்' பையந்தான் (இன்சைடர் இன்பர்மேசன்). பாண்டிகள் பேரிலிருந்து ஜாதியைக் கழற்றி வைத்துவிட்டார்கள். புதிய தலைமுறை ஜாதியை முற்றிலும் கழற்றப் பார்க்கிறது, அடுத்த தலைமுறையில் மீதி இருப்பதும் காணாமல் போகவேண்டுமென்றுதான் நம்பிக்கை வைக்கவேண்டும். கிராமங்களில் இருக்கும் ஜாதி வெறிக்கு எதிர்ப்பு இருக்கத்தான் செய்கிறது. கேரளத்தை விட ஜனத்தொகை அதிகமுள்ள தமிழ்நாட்டில் பிரச்னைகளும் அதிகமாகத்தான் இருக்கும். கர்நாடகா ஆந்திராவில், ஏன் கேரளத்திலும் இருப்பது போல ஒன்றிரண்டு ஜாதிகளின் ஆதிக்கத்திலா மொத்த மாநிலத்தின் அரசியலும் இருக்கிறது? லிங்காயத்துகள், கம்மாக்கள் ரெட்டிகளைத் தாண்டி ஆந்திரா கர்நாடகாவில் யாருடைய ஆதிக்கமாவது (பிரதிநிதித்துவமாவது) இருக்கிறதா? எது எப்படி இருந்தாலும், உலகமே இடிந்து விழுந்தாலும் எழுத்தாளனுக்கு வெரைட்டி தேவை. மனித ஜென்மங்கள் குசு விட்டாலும் கூட அதில் வெரைட்டி இருப்பதில்தான் அப்சர்வேஷனல் அய்யாசாமி எழுத்தாளர்களின் இருப்பே இருக்கிறது. அதே மாதிரி, நமது தமிழ் பாரம்பரியத்திலுள்ள ஜாதிகளும் ஏதோவொரு காரணத்துக்குத்தானே இருக்கும், எத்தனை வெரைட்டி இருக்கு - அவனவனுக்கு ஒரு சாப்பாடு, அவனவனுக்கு ஒரு தாலி, சடங்கு, கிடாவெட்டு, ஒவ்வொருத்தன் ஒவ்வொரு மாயிரிப் பேசுகான், இந்த எழுத்தாளன் தேவமாரு, அவன் ஆசாரிப்பய, அவன் செட்டி அவன் அம்பி - வெரைட்டி இருந்தாத்தானே நல்லது. எவன் தேவன் எவன் நாயக்கன் எவன் செட்டி என்று கண்டுபிடிக்க சொல்லக்கூடத் தேவையில்லையே, எழுத்தாளனைப் பார்க்க ஊட்டுக்குப் போகும்போது அங்கே பழைய தலைமுறை மாட்டி வைத்திருக்கும் ஜாதிச்சங்க காலண்டரையோ, அல்லது இருக்கும் இடத்தின் புழக்கத்தையோ வைத்துக்கூட ஊகிக்க முடியாதா? ஊகித்து, பிறகு இவன் இன்ன ஜாதி என்று கல்வெட்டில் பதிந்து வைத்துவிட்டால் போகிறது. நமது சமூகக் கட்டமைப்பில் காலைக்குக் காலை கலாச்சாரக் கள் இறக்க எளக்கியவாதி முண்டங்களுக்கு ஜாதியும் தேவை தானே - வேறு விசயமே உலகத்தில் இல்லை பாருங்கள். அதில் கூட, கி.ராஜநாராயணன் போன்ற பிறரைப் படிப்பதைவிட இதுமாதிரி 'அங்கதங்களை' படிக்கும்போதுதான் எரிச்சல் வருகிறது. எரிச்சல் நகைச்சுவையை ரசிக்க முடியாமல் போவதால் இல்லை, நகைச்சுவை என்ற பெயரில் பரிமாறப்படும் சாக்கடையின் வீச்சத்தால். முட்டாப் பாண்டிகளுக்கு அதுதான் அடுத்து தேவை. கல்லூரியில் படிக்கும்போது தெற்கிலிருந்து வரும் நாடார் பையன்களை பொதுவாக 'பனையேறி கொட்டை தேஞ்சு போன' கோஷ்டிகள் என்று இன்னொரு கும்பல் (குறிப்பாக, இதுவுமே ஒரு தென்தமிழகக் கும்பல்) கிண்டலடிக்கும் - ஆக, இதிலுள்ள 'அங்கத' உணர்வை ரசிப்போமா நாம்? தோழர்களுக்கு நடுவில் என்றால் சரி, அது தான் கிண்டலடிக்கும் மற்றவனுடனான சௌஜன்யத்தைப் பொறுத்தது. அதைத் தாண்டி, பொதுவில் எழுதும்போது 'நாடார்கள் பனையேறிப் பனையேறி கொட்டை தேஞ்சுபோன கோஷ்டிகள்' என்று மற்றொரு தமிழன் எழுதுவதற்கும் 'கறுப்பர்களுக்கு சாமான் வளர்ந்துள்ள அளவு மூளை வளர்ந்திருக்கலாம்' என்று ஒரு வெள்ளைக்காரன் எழுதுவதற்கும் பெரிய வித்தியாசமில்லை - இரண்டும் அங்கதம் அல்ல - கேவலமான ரசனை. டைகர் உட்ஸை கால்ஃபில் யாராவது தோற்கடிக்க வேண்டுமென்றால் அவரை lynch செய்தால்தான் முடியும் என்று நிஜ நகைச்சுவையுடன் சொல்லப்பட்ட விஷயம் எவ்வளவு விமர்சனங்களை எழுப்பியது (டைகர் உட்ஸே அதை பெரிய விஷயமில்லை என்று சொல்லிவிட்ட போதும்) - இந்த மாதிரி இலக்கியவாதிகளுக்கு ஜாதியும் அது சார்ந்த கூறுகளும் வைத்து வெளிப்படையாகப் பேசி ஆசாரியின் திருப்புளியும் செட்டியாரின் தொந்தியும் நம்பூதிரியின் குடுமியும் அப்படியே இருந்தால் வண்டி ஓடும் என்ற நிலைமை இருந்தால், அந்த கேவலமான நிலைமையை நினைத்து நொந்துகொள்ளத்தான் முடியும். கழுத்தில் சுடப்பட்ட எம்ஜியாரின் பம்பு பைப்பு வசனத்தை விடலைகள் பேசும், மூத்த எழுத்தாளராகிய இவர் பேசுவது சரியா? இதே ஜெயமோகன் ஒரு பெண்ணாயிருந்து, வன்புணரப்பட்டு, அந்த விஷயம் தெரிந்த ஒரு எழுத்தாளர் இவர் நடந்து வருவதைப் பார்த்து 'என்ன பேண்டுட்டு கழுவாதவ மாதிரி நடந்து வரே' என்றால் அதில் என்ன இழவு அங்கதம் இருக்கிறது.

ஜெயமோகன் தான் எழுதியதை வலைப்பதிவில் போட்டுவைக்க ஆரம்பித்தது ஒருவகையில் நல்லதுதான் - அவரது 'neo-urbanized parochial' hyperpedagogical classicmongerism சில விஷயங்களை என்ன விதமான சீழ்பிடித்த பார்வையோடு அணுகுகிறது என்று படிப்பவர்கள் தெரிந்துகொள்ள வசதியாக இருக்கும்.

-சன்னாசி

மு. சுந்தரமூர்த்தி said...

யோவ் சன்னாசி, இப்பிடியா? இன்னிக்கி வேலைக்கு ஒரு மணி நேரம் லேட்.

Kasi Arumugam said...

அருள், இப்படி சன்னாசியை எழுதவைத்தற்கே உங்களுக்கு ஒரு மோதிரம் போடலாம்:-)

-/பெயரிலி. said...

சன்னாசியா? சன்னதமாடியா? ;-)

நான் என்ன பாவம் செய்தேன் உமக்கு? ஒரு வெள்ளி சனியிலே போட்டால் சந்தோசமாயிருந்து இன்னும் இரண்டு தரம் வாசிப்பேனே!!

ஜெமோவைச் சொல்லிக் குற்றமில்லை. அவரைத் தாங்குகிறவர்கள் அவருடைய அந்த தலைவீக்கத்தையும் சேர்த்துத் தாங்கிறதைப் பார்த்தால் ஏன் அவர் இப்படியெல்லாம் எழுதமாட்டார்?

Anonymous said...

ஜெயமோகனின் வலைப்பதிவில் எழுத்தாளர்களின் சாதி பற்றி எழுதியதிற்கு ஏன் வலைப்பதிவில் எவருமே கடுமையான கண்டனத்துடன் எதையும் எழுதவில்லையென யோசித்துக்கொண்டிருந்தேன். சன்னாசியால் சாத்தியப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதே ஜெமோ, சிலவருடங்களுக்கு முன், வெ.சாவிற்கு நான் எழுதிய விமர்சனத்திற்கு, ஏதோ ஒரு புள்ளியில் இவ்வாறான புரிதலை வந்தடைவதற்கு வெசாவின் சாதியப்பின்புலம் காரணமாய் இருக்கலாம் (கவனிக்க: இருக்கலாம்) என்ற ஒரு விமர்சனமுறையில் சொன்னதற்கே, இந்த டிசே தமிழன் போன்றவர்கள் இப்படித்தான் சாதியைப் பார்த்துக்கொண்டுதிரிவார்களென திருப்பித் தாக்கியவர் என்பதை இன்னொருமுறை நினைவுபடுத்திக்கொள்கின்றேன் (உரையாடல் திசைமாறுவதன் அபாயத்தில் அதற்காய் மன்னிப்பும் அந்தப்பொழுதில் கேட்டிருக்கின்றேன்). இன்றைக்கு நாகார்ஜூனன் போன்றவர்களை 'அம்பி' என்று (இதெல்லாம் அங்கதமாம்! தூ...) வம்பளத்துக்கொண்டிருக்கும்போது...இந்தாளின் புத்தகங்களையெடுத்து எங்களை நாங்களே அடித்துக்கொள்ளவேண்டும் போலக்கிடக்கிறது. நாகார்ஜூனனின் நேர்காணலை முன்வைத்து ஆதவன் தீட்சணயா நாகார்ஜூனனின் பின்புலத்தைக் கேள்விகேட்டபோது (ஆதவனின் கேள்வியில் நியாய்மிருந்ததென நினைக்கின்றேன்) அதற்கு மறுவினையாற்றிய நாகார்ஜூனன், கோணங்கியை வைத்து நாகார்ஜூனனையும் ஜெமோ 'நக்கலடித்த' பதிவுக்கு கடுமையாய் எதிர்வினையாற்றாதது என்னைப்பொறுத்தவரை ஏமாற்றமாகவேயிருந்தது.
......
ஜெமோ, தன்னோடு உரையாடுயாடுவதற்கு, வாசகருக்கு 'தகுதி' வேண்டுமென்கிறார். சாதிச் சான்றித்ழ் வேண்டுமென்பது விளங்குகின்றது. வேறு என்ன மண்ணாங்கட்டியெல்லாம் 'தகுதிகளாக' வேண்டும் என்று அவரோ அவரைத் தாங்கிக்கொண்டிருக்கும் பக்தகோடிகளோ கெதியாய்ச் சொல்லட்டுமாக.

Sridhar V said...

சன்னாசி,

you hit the nail on its head - ஒரே அடிதான். உள்ளே அப்படியே இறங்கிடுச்சி. இப்படி ஒரு வலிமையான வாதத்தை நான் எப்பொழுதும் படித்தது இல்லை.

நீங்க அடிக்கடி எழுதாதது எங்களுடைய துர்பாக்கியம்தான்ம் :-(

-/சுடலை மாடன்/- said...

சுந்தரமூர்த்தி வேலைக்கு ஒரு மணி நேரம்தான் லேட்டு. என்னுடைய வேலையிலோ இன்னைக்கு வேட்டு :-) வேலையில் மதிய உணவு வேளையில் தெரியாத்தனமா நான் சன்னாசி எழுதியதைப் படிக்க ஆரம்பித்து முடிக்கவும் முடியாமல் என்ன வேலையிலிருந்தாலும், மீதியைப் படிக்கனுமேன்னு நினச்ச நினப்பிலே எந்த வேலையும் உருப்படியாச் செய்யாம பட்ட அல்லல். இப்பதான் படிச்சு முடிச்சேன். சன்னாசியுடைய முழுவீச்சையும் இன்னிக்குதான் பார்த்தேன் :-) ஜெயமோகனுக்கு பதிலடியோ இல்லியோ, இலக்கிய வாசனையிலிருந்து கொஞ்ச ஆண்டுகளாக ஒதுங்கியிருந்த எனக்கு கொஞ்சம் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. மதி கந்தசாமி அவருடைய பதிவில் சொல்லியது போல் ஜெயமோகன் மாதிரி ஆட்கள் எழுதியவற்றை மூலையில் எறிந்து விட்டு எஞ்சியதையாவது படிக்க ஆரம்பிக்கலாம்னு ஆசை வந்திருக்கு.

ஜெயமோகன் புத்தக வெளியீட்டு விழாவில் ஜெயகாந்தன் சொன்னது:

"ஜெயமோகனின் ரப்பர் நாவலையே நான் முதலில் படித்தேன். என்னை மிகவும் கவர்ந்த நாவல் அது. அதன் பிறகு விஷ்ணுபுரம் நாவலை படிக்க முயன்றேன். என்னால் உள்ளே செல்ல முடியவில்லை. முன்பு ஒரு கூட்டத்தில் நான் சொன்னதுபோல அது தன் வாசல்களை சாத்திக் கொண்டுவிட்டது. இன்னமும் திறக்கவில்லை.
:
:
:
நான் பொதுவாக அதிகமாக வாசிப்பவனல்ல என்னை ஒரு வாசகன் என்றேன் சொல்லிக் கொள்ள மாட்டேன்."


ஜெயகாந்தன் என்ற இந்த வாசகனைப் பற்றி ஜெயமோகன் உள்ளூர என்ன நினைப்பார் என்று யோசித்துப் பார்த்தேன். இவர் ஜெயகாந்தனைப் பற்றி வெளியிலே எழுதியதும், ஜெயகாந்தன் இவரைப் பற்றி எழுதியவையும் முற்றிலும் சுயமுரண்பாடுகளே என்பது வேறு விசயம்.

நன்றி - சொ. சங்கரபாண்டி

Anonymous said...

பதிவும் சூடு, சன்னாசியும் பதிலும் சூடோ சூடு, தணிக்க சந்திரபாபு பாடல்களைக் கேட்கப்போகிறேன் :)
சன்னாசி நிமிடத்துக்கு 1000 வார்த்தை பேசி, 2000 வார்த்தை உள்ளீடுவாரோ :).
an eternal முதிரா மனம் :)