Wednesday, March 19, 2008

ஆர்தர் சி கிளார்க் - 90: Arthur C Clarke
உயர்நுட்ப மாயாவி (Arthur C Clarke)

"மிக்க வளர்சியடந்த உயர்நுட்பத்தை மந்திரவாதத்திலிருந்து வேறுபடுத்திப் பார்ப்பது கடினம்"
என்று எழுதிய அறிபுனை எழுத்தாளர் ஆர்த்தர். சி. க்ளார்க் இன்று மரணமடைந்தார். இவரை நான் எப்படி கண்டுகொண்டேன் என்பது விளையாட்டான ஒரு நிகழ்வு.
எழுபதுகளில் பொள்ளாச்சி ஒரு கிராமம் போலத்தான் இருந்தது. சைக்கிளை எடுத்து ஒரு மிதி மிதித்தால் பதினைந்து இருபது நிமிடத்துக்குள் ஊரின் எந்த எல்லைக்கும் சென்றுவிடலாம். ஊரில் நாலே நாலு திரையரங்குகள்தான். கோடைவிடுமுறையில் பத்தாம் வகுப்பிலிருந்து பதினொன்றாம் வகுப்பு செல்லும் பையனை இன்னும் பொத்திப் பொத்திவைக்கக் கூடாது என்று, 'தம்பியையும் கூட்டிக்கொண்டு ஏதாவது ஒரு சினிமாவுக்குப் போடா' என்று அப்பா விடுதலை அளிக்க தம்பியுடன் சேர்ந்து திட்டம் தீட்டினேன். வீட்டுக்குப் பக்கம் இருப்பது நல்லப்பா தியேட்டர்தான் ஆனால் எம்ஜியார் படங்கள் கோபாலிலோ அல்லது கலைமகள் தியேட்டரிலோதான் வரும். ஆனால் என் வாழ்க்கையின் குறிக்கோள் அப்போதெல்லாம் முறையே : 1. ஒரு சாமியாராவது, 2. ஒரு விஞ்ஞானியாவது. (நல்லவேளையாக இந்த இரண்டு குறிக்கோள்களையும் நான் எட்டவில்லை. ) அதற்காக போஸ்டரில் இரண்டு விண்வெளிவீரர்கள் பூமியின் மீது மிதப்பதைப் போல காத்தியிருப்பதைப் பார்த்து இந்தப் படம்தான் என்று முடிவு செய்து விட்டேன். நான் ஒருமாதிரி தம்பியைத் தேத்தி நல்லப்பாவில் ஆங்கிலப் படத்துக்கு மார்னிங் ஷோ போலாம் என்று மனோவசியம் செய்து விட்டேன். அப்படி சென்றது 2001 A Space Odyssey என்ற படம். படம் முடிந்து தம்பி ரொம்ப கடுப்பாகிவிட்டான். எனக்கும் ஒன்றும் புரியவில்லை. ஆனால் அப்படத்தின் காட்சிகளை நாங்கள் என்றும் மறந்ததும் இல்லை. பின்பு பலமுறை தியேட்டர்களிலும் அடர்வட்டுகளிலும் பார்த்தாலும் அந்த முதல் அனுபவம் புதியதானது. அந்த வருடத்தில் முன்பின்னாக சில அறிபுனை படங்களை நல்லப்பா அரங்கு திரையிட்டது. Logan's Run, Soylent Green போன்ற படங்கள். இவற்றையெல்லாம் வார இறுதி காலைக்காட்சிகளாக என்னையும் சேர்த்து ஒரு 40 அல்லது 50 ஆட்கள் பார்த்தார்கள். இடைவேளை யில் பத்து இருபதுபேர் வெளியேறியும் விடுவார்கள். எதற்காக இதையெல்லாம் தமிழகத்தின் ஒருமூலையில் ஒரு திரையரங்கு காட்டிக்கொண்டிருந்தது, யார் அந்த முடிவை எடுத்தார்கள் என்பதெல்லாம் இன்னும் எனக்கு விளங்கவில்லை.

2001 ஐ இயக்கியவர் ஸ்தான்லி கூப்ரிக். கதை ஆர்தர் சி கிளார்க்கினுடையது. ஹாலிவுட்டின் தலையான படங்களுள் ஒன்று. பிரையன் ஆல்டிஸ் வார்த்தைகளில் சொல்வதானால் அப்போதே அறிபுனை திரிமூர்த்தி டைனோஸார்களில் ஒருவராக கிளார்க் இருந்தார். மற்ற இருவர் ஐஸாக் அசிமாவ், ராபர்ட் ஹைன்லைன். இவர்கள் மூவரும் ஒரு ஆயிரம் கதைகளையாவது எழுதியிருப்பார்கள். தமிழில் அறிபுனை எழுத முயற்சிக்குமுன் நம் நண்பர்கள் இதில் 10% மாவது படித்து விடுவது நல்லது. இதைப்பற்றி பின்னர். இதில் ஐசக் அஸிமாவ் ஒரு எழுத்து இயந்திரம். கதை கட்டுரை என அவர் எழுதிக்குவித்தவை ஏராளம். அஸிமாவ் மூலக்கூறு உயிரியல் கற்றவர். கிளார்க் பொறியியல் கற்றவர். இவர்கள் எழுதும் கதைகளில் அறிவியல் அபத்தங்கள் அனேகமாக இருக்காது. இப்படி நடக்கலாம், இதெல்லாம் கண்டுபிடிக்கப்படலாம் என்ற முன்பார்வை இருக்கும் ஆனால் அடிப்படைத் தவறுகள் செய்யமாட்டார்கள். அதனால் பள்ளி மாணவர்களுக்கு அறிமுகம் செய்ய சரியானவர்கள். அறிவியல் நுட்பம் இவற்றிலிருந்து கிளைபிரிந்து படரும் புனைவும் அழகும் அறியவும் உணரவும் சரியான தொடக்கக் கோடுகள்.
அறிபுனைவுகளை ஒரு கழுகுப் பார்வையில் இரண்டாகப் பிரிக்கலாம். முறையாக அறிவியல் கற்றவர்களால் பெரும்பாலும் எழுதப்படும் கடுஅறிபுனைவுகள். அறிவியல் கற்றவர்களாலும் மற்றவர்களாலும் எழுதப்படும் மென்அறிபுனைவுகள். இக்கூறுபடுத்துதல் ஒரு அரட்டைக்கான முன்னேற்பாடுதான் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் - இரண்டிலும் விதிவிலக்குகள் உண்டு. கடுபுனைவுகளில் அறிவியலோ தொழில் நுட்பமோ கறாராக இருக்கும். அறிவியல்/நுட்பம் கற்றவர்களுக்கு இதனால் இத்தகைய கதைகள் பெரும் வாசிப்பு இன்பத்தைத் தரவல்லன. அவ்வளவாக இவற்றில் பயிற்சி இல்லாவிட்டால் ஒரு மொழிபெயர்க்கப் பட்ட கவிதையப் படிப்பது போலத்தான் இருக்கும். அறிவியலும் ஒரு மொழிதான், சொல்லாடல் தான் என்பதை அறிந்தவர்கள் இதை உணர்வார்கள். இத்தகைய கடு புனைவுகளை எழுதுபவர்கள் முன்பு ஆர்தர் சி கிளார்க், வெர்னர் வின்ஞ், ஹால் க்ளமெண்ட், லாரி நிவன், கிரிகோரி பென்போர்ட், க்ரெக் பெர், இவர்களைப் போன்றவர்கள். அனலோக் என்ற அறிபுனை இதழில் அனேகமாக கடுபுனைவுகளே வரும். அவை ஒரு வகைமாதிரியாகவே இப்போதும் உள்ளன. தற்போது இதில் இயன் வாட்ஸன், ஸ்டீபன் பாக்ஸ்டர், ஆலன் ஸ்தீல் என பலர். கிளார்க் இவர்கள் எல்லோருக்கும் மூத்த தலைமுறையைச் சேர்ந்தவர். அறிபுனைவு அடர்காட்டில் அதிர அதிர அலைந்து திரிந்த ஒரு டைனோஸார். எல்லாவிதமான அறிபுனைகளையும் நான் விரும்பிப் படித்தாலும் கடுபுனைவுகள் தரும் இன்பமே தனி.

கிளார்க் எழுதிய சிறுகதைகளும் மிக அருமையானவை. ஆங்கிலத்தில் எழுதப் படிக்கத்தெரிந்த அனைவரும் படித்திருக்கவேண்டும் என்று கூறத்தகுந்த ஒருகதை "கடவுளின் ஒரு பில்லியன் நாமங்கள்" எனும் கதை.நாகார்ஜுனனும் , அகத்தியர் குழும நிறுவுனர் மருத்துவர் ஜெயபாரதி அவர்களும் இதை தமிழில் எழுதிஉள்ளனர். தேடிப் படியுங்கள். எனக்குப் பிடித்த கிளார்க் கதைகள் என்றால், ராந்தேவூ வித் ராமா, 2010, சைல்ட்ஹுட்ஸ் எண்ட் என்பவை. அவருடய கதைகளில் தூவிக்கிடந்த பல நுட்ப கருவிகளும், சூழல்களும் ஹாலிவுட் கடந்த இருபதாண்டுகளாக உருவாக்கித் தள்ளும் பல அறிபுனை திரைப்படங்களில் பயன்படுத்தப்படுவதைப் பார்க்கலாம். சக்கைப்போடுபோடும் டெர்மினேட்டரோ, மாட்றிக்ஸ் படங்களோ, ஏலியன்களோ, 1940-1970 வரை எழுதிய அறிபுனை முன்னோடிகளின் காட்சிப்படுத்துதல் இல்லாமல் சாத்தியமில்லை. விரிவாக எழுதவேண்டிய இழை இது.

அறிபுனைவுகள் நமது சிந்தனைப் பரப்பை வெகு தூரத்துக்கு நீட்டிவிடுகின்றன என்பதே உண்மை.

தமிழில் ஏன் உருப்படியாக ஒரு அறிபுனைவும் இல்லை என்பது பெரிய கேள்விக்குறி. தமிழில் உலகத்தரம் வாய்ந்த சிறுகதைகள் உள்ளன, தற்காலக் கவிதைகள் உள்ளன, நெடுங்கதைகள் உள்ளன. ஆனால் அறிபுனைவுகள் மட்டும்ம சோகையடித்துக் கிடக்கின்றன. ஆனால் இந்திய மொழிகளில் மராத்தியிலும், இந்தியிலும், வங்காளியிலும் உள்ள சில கதைக்கருக்களை அம்மொழி நண்பர்கள் விவரிக்கக் கேட்டிருக்கிறேன். தமிழில் அப்படி ஏதுமில்லை என்பது வருத்தமூட்டும் செய்தி. சுஜாதா எழுதியதெல்லாம் Fanzine அளவுக்கு மேல் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். மற்றவர்களைப்பற்றி சொல்லவே வேண்டியது இல்லை. யார் கோபப்பட்டாலும் பரவாயில்லை என்று இதை எழுதவேண்டிய தருணம் வந்துவிட்டது. தமிழகத்தில் எல்லோரும் நிரலாளர் ஆகும் முயற்சியில் ஒரு தலைமுறையே அறிவியலிலும், பொறியியலிலும் மிகவும் பின்தங்கி இருப்பதாகவே படுகிறது. கர்னாடகமும் அதே நிலையில்தான். கல்கத்தா, ஜாதவ்பூர் போன்ற இடங்களில்தான் இயல்பியலும் பூனா போன்ற இடங்களில் தான் பொறி வடிவமைப்பதிலும் முன்னோடியாக இருக்கின்றன. அறிபுனைவுகள் ஒரு ஊக்குக் காரணியாக பயன்படும் பல தளங்களில் இவையும் சில என சொல்லத்தோன்றுகிறது. துப்பறியும் கதைகள் எபிஸ்தமோலஜிகல் விடுதலையைத் தருவதுபோல அறிபுனைவுகள் ஓண்டொலோஜிகல் விடுதலையைத் தருகின்றன. குழந்தைகளின் உலகை நாம் திரும்பப்பெறுவதற்கான முயற்சியின் முதல் அடிகளாக இவை இருக்கக்கூடும்.1. Wikipedia

2. பிற அறிபுனை எழுத்தாளர்கள் பற்றி:

i. தாயுமாகி நின்றாள்
ii. வாண்டா மெகிந்தாயர்
iii. சில புத்தகங்கள்
iv. ஒக்தோவியா பட்லர்
v. ஸ்தானிஸ்லா லெம்


--

Sunday, March 09, 2008

4 கார்ட்டூன்கள்

அறிவியல் தொடர்பான நான்கு கார்ட்டூன்கள். சற்றே பழையவை ; 1986 ஆம் வருடத்தில் போட்டவை. இவற்றுக்கு முன்பு போட்ட சில கார்ட்டூன்கள் அப்போது வெளிவந்துகொண்டிருந்த ஸயன்ஸ் டுடே இதழில் வெளிவந்தன. அப்போதைய ஆசிரியர் முகுல் ஷர்மா (அவர்தாங்க நம்ம கொங்கொணோ சென்-ஷர்மா இருக்காங்களே அவங்க அப்பா ). கார்ட்டூனுக்கு நூறு ரூபாய் சன்மானம்! அப்போதைய ஸயன்ஸ் டுடே பள்ளி கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கக்கூடியயதாக இருந்தது. 1978 ஆம் ஆண்டு வந்த கருந்துளைகள் (black holes) பற்றிய ஒரு கட்டுரையைப் படித்து நான் வகுப்பில் ஆசிரியர் தினத்தன்று உரையாற்றியது நினைவில் இருக்கிறது.
அருள் மொகொல்வானே என்று கையொப்பம் இட்டுருக்கிறேன். மொகொல்வானே என்பது என்ன மொழிச் சொல் என்றும் அதற்கு என்ன பொருள் என்றும் நீங்களே கண்டுபிடித்துக்கொள்ளவும். ஆனால் அது பொருள் அல்ல. நீங்கள் கண்டுபிடிக்கும் மொழியின் ஒரு சகோதர மொழியில் இன்னும் சற்று நெருக்கமான பொருள். :-)

Monday, March 03, 2008

காளி-தாஸ் 6 கவிதைகள்

வளரும் பருவத்தில் படித்து வந்தவர்கள் ஒவ்வொருவராக விடைபெறுகிறார்கள்.
ஆத்மாநாம் நடத்திய " ழ " இதழில் 1979 -81 வாக்கில் வெளிவந்த காளி-தாஸ் இன் கவிதைகள் ஆறு. படங்களைச் சொடுக்கவும்.

==