Wednesday, June 18, 2008

firefox 3.0

நேற்று வெளியிடப்பட்ட ஃப்யர் ஃபாக்ஸ் 3.0 உலவியில் தமிழ் எழுத்துக்கள் தொடர்பான வழு ஒன்று சரி செய்யப்பட்டிருப்பது போல் தெரிகிறதே. இப்போது align justify சரியாகக்கப்பட்டிருக்கிறது எனத் தோன்றுகிறது. பயன்படுத்திப் பாருங்கள். இன்னும் அனைத்து ப்ளக்-இன் களும் ஏட்-ஆன் களும் இற்றைப் படுத்தப் படவில்லை. அதற்கு சில காலம் ஆகலாம்.

உயர் கல்வி, IIT, மற்றும் ...

-

கடந்த சில தினங்களாக ஐஐடி சேர்க்கை, எஸ்ஸி/எஸ்டி மாணவர்களை கூண்டோடு வெளியேற்றுதல் போன்ற காரணங்களைக் கொண்டு செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. நாட்டில் உயர்கல்வி என்பது அனைத்துத் துறைகளின் முன்னேற்றத்திற்கும் எஞ்சின் போல. நாம் ஐடியில் வல்லரசு, செய்மதி விடுவதில் உலகில் மூன்றாம் இடம், முக்குக்கு முக்கு அணு உலை கட்டி மின்சக்தி பெருக்குவோம் என்றெல்லாம் பெருமைப்படுமுன் முதலில் கல்வி ஒழுங்காக இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். நம் நாட்டில் செய்விக்க முடியாத சில மின்னணு பாகங்களை அமெரிக்காவிலிருந்து கடத்தி, நமது எரிகணை ஆய்வுக்கு உதவியதாக நேற்றுத்தான் அமெரிக்க/சிங்கப்பூர் தொடர்புடைய இந்தியத் தொழில் நிறுவனம் ஒன்றின் மேலாளரை அமரிக்க நீதிமன்றம் சிறைக்கு அனுப்பி இருக்கிறது. அந்த நிறுவனமோ நாங்கள் நாட்டுக்காக சேவை செய்தோம் என்கிறார்கள். எல்லோரும் இப்போது சுக நினைப்பில் மிதந்து கொண்டிருக்கும் படி நமது அறிவியல் தொழில் நுட்பவியலாளர்களால் உலகத்தர சாதங்களை வடிவமைக்க இயலுமானால் ஏன் இத்தகைய சாதனங்களைக் கடத்தி மாட்டிக்கொள்ள வேண்டும். நம்மிடம் இருப்பது போதாது எனும் உணர்வு முதலில் வேண்டும். பின்புதான் அதை நிவர்த்திக்க வழிதேடமுடியும். இதில் இப்போது மத்திய அரசின் உயர் ஆய்வுக்கூடங்களில் பணியில் இருக்கும் அறிவியல், நுட்பஇயலாளரும் கூண்டோடு வெளியேறி தனியார் துறைக்குப் போய்க்கொண்டிருக்கிறார்கள் என்று தொடர்ந்து செய்திகள் வருகின்றன. தனியார் துறையில் என்ன உலகத்தரமான ஆராய்ச்சி நடைபெறும் என்பதை அங்கு பணிபுரியும் நண்பர்களை கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.

அரசு அடிப்படை, இரண்டாம் நிலை (உயர் பள்ளி) கல்வியை சரியாக மக்களுக்கு கொடுக்கட்டும் மீதமெல்லாம் தனியார் கவனித்துக் கொள்வார்கள் என்ற சிறுபிள்ளைத்தனமான வாதங்கள் போக, இருக்கும் ஐஐடி, என்ஐடி போன்ற சற்றே தரமான கல்விக்கூடங்களின் கதி என்ன என்பதே இப்போது பெரும் பிரச்சனையாக உள்ளது. ஐஐடி நுழைவுத்தேர்வின் கட் ஆஃப் மதிப்பெண்கள் இயல்பியல், வேதியியல், கணிதம் இவற்றுக்கு 48, 55, 37 என்று அறிவித்திருந்தாலும், அவர்களே கொடுத்த மதிப்பெண்பட்டியல் படி கணக்கிட்டால் அத் 4, 7, 6 என்று பரிதாபகரமாக இருப்பதைக் காட்டுகிறது என்கிறார் மேற்கண்ட இணைப்பில் ஒரு ஐஐடி பேராசிரியர். என்னதான் நடக்கிறது என்று எல்லோரும் மண்டையை உடைத்துக்கொள்ளும் முன்பு ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும். தரம் என்பது அந்தந்த வருடத்துக்காக விண்ணப்பிக்கும் மாணவர்களைப் பொருத்தது என்பதுதான். இவ்வளவுதானா சென்ற ஆண்டு நம் அனைத்திந்திய மெரிட் லிஸ்ட் மானவர்களின் தரம் என்று கேள்வி கேட்டால் பதில் ஆம் என்பதுதான். இது மிக போட்டியுள்ள, மாணவர்கள் ஒன்றாம் வகுப்பிலிருந்தே பயிற்சி செய்யும் ஐஐடி நுழைத்தேர்வின் நிலை, ஆய்வகங்களில் உயர் ஆய்வு செய்ய வரும் அறிவியல் நுட்ப மாணவர்களின் தரம் என்னவாக இருக்கும் என்று யூகிக்கத்தான் முடியும்.


-

Thursday, June 12, 2008

இயற்கை ஒவ்வாமை

புல்லாகிப் பூண்டாகி
சிறுபெரு உருவமாய்ப் பலதாகி
இயற்கையாய் குரங்கிலிருந்து வந்த மனிதன்
தன்னைச் சுற்றி
செயல் கையாய் இயக்கி எழுந்தான்
எங்கு கண்டாலும் ஏன் குமைகிறீர்கள்
சக செயற்கை விலங்குகளே?
அபத்தமாய்க் குவிந்து கிடக்கும் மலைகளும்
அர்த்தமன்றி உலவித்திரியும் நதிகளும்
நிறைந்த இப்பூமியைத் தப்ப
ஒரே ஒரு வளை தோண்டி வாழ்கிறேன் நான்
உள்ளே நுழையுமுன்
காலைத் துடைத்து மிதியடியில்
இயற்கையை விட்டு வாரும்


-

Saturday, June 07, 2008

இந்திய அறிவியலாளர்கள், கடவுள், மதம், இன்ன பிற ....

இந்திய அறிவியலாளர்கள் கீழ்கண்டவற்றைப்பற்றி என்ன கருத்துக் கொண்டிருக்கிறார்கள்? ஒரு கருத்துக் கணிப்பு.


1. ஏன் அறிவியல் துறைக்கு வந்தீர்கள்
2. அறிவியல் நோக்கு , பொதுமக்கள் , அரசு
3. அறிவியலில் பெண்கள் நிலை

5. மரபு மருத்துவங்கள்
6. வேத அறிவியல், ஆயுர்வேதம்
7. ராக்கட் விடுவதற்கு திருமலையான் அநுக்கிரகம் கோறல்
8. மரக்கறி

9. ஆன்மீகம்
10. கடவுள்


போன்ற பல முக்கியமான, சமுதாயத்தைப் பாதிக்கும் விஷயங்களைப்பற்றி இந்திய அறிவியலாளர்கள் என்ன நினைக்கிறார்கள். கண்டிப்பாக பொதுமக்கள் கவனத்திற்கு போக வேண்டிய ஒரு கருத்துக் கணிப்பு.


முழுவதும் பெற சுட்டி:


http://cruller.cc.trincoll.edu/NR/rdonlyres/D98B14DA-CC70-4CA2-B270-EA0A6E9B4006/0/WholeIndiaReport.pdfயாராவது நேரம் இருந்தால் மொழிபெயருங்கள். விவாதிக்க நிறைய இருக்கிறது.

Thursday, June 05, 2008

கவிதைகளின் செயல்திறன் : A triptych

1. நடு:
ளிகசியும் கரும்படலங்கள் ஒட்டி
கண்ணாடிகளை நாற்புறமும் ஏற்றி
குளிரூட்டியின் காற்று சிலுசிலுக்க
மெல்லிசை ததும்ப விரையும்
இக்கவிதையின் உள்ளிருந்து
நகரைக் கடக்கையில்
வெப்பமும் தூசியும் கழிவும்
ஊடே மிதக்கும் கனவும்
உள்ளடக்கி அலையும்
மனிதர்களை கவனமாகத் தவிர்த்து
சந்திகளில் கவிதைகளின் நெரிசலில் ஊர்ந்து
நகரில் திரிகையில்


நகரின் பழக்கங்களோ மாறிவிட்டன
கூட்டம் கூடிவந்து
சாலைகளில் நடுவில் விரிந்து
கவிதைகளை வழிமறிக்கின்றார்
எவர்கவிதை எம்மாநிலம் எம்மொழி
எனக்கண்டு வகைபிரித்து
அனுப்புகிறார் வேறுதிக்கில்
சொற்களின் கரும் படலத்தைக் கிழித்து
எழுத்தின் கண்ணாடி இறுக்கத்தை நொறுக்கி
நகரம் தன் முழு விசைச் சுழிப்புடன்
இக்கவிதையின் உள் பாய்ந்து
நம் முகத்தில் அறைகையில்
உணர்வதில்லை நாம்
கவிதையின் திறனை

அரச படைகள் அதிர ஊரும்
தெருக்களின் முனையெங்கும்
எரியூட்டிய கவிதைகள்
கருகிப் புகையும் இக்காலம்
நம் கவிதை விரையும்
செயல்திறனைக் கணிக்கும்
நேரமா நண்பா இது ...

2. வலது:
சொற்களின் உயிர்அரணை முன்செலுத்தி
பதுங்கிமுன்னேறுகிறது எதிரிகள் படை
அரணை துளைக்கும் ஆயுதங்கள் இல்லை
அரணைக் குழப்பும் கொல்லிகள் கண்ட
அறிவியலாளரைக் களப்பலி கொடுத்தோம்
அரணைத் தாவும் விலங்குகள் வளர்த்த
ஆயர்குடிகளை அயல்பெயரச் செய்தோம்
தம்முயிர் ஈந்தும் அரணை சிதைக்கும்
வெல்வலி மாந்தர் சிந்தை கலைத்தோம்
கண்உணரா பொருள் சாந்து பூசி
இணைந்து இணைத்து அரணாய் கட்டிய
இச்சொற்களின் கூட்டத்தை
மொழிந்து ஒலித்து நிறுத்த முயல்


3. இடது:
வித்தின் உன்மத்தமாய்
உறைந்து கிடக்கின்றன சொற்கள்
அறுவடையில் பிரித்தும்
ஆழ விதைத்தும்
காத்திருக்கும் கழனிகளில்
வெடித்து உயரும் பேருருவங்களின்
பார்வையில் தப்ப முயலும் குழுக்கள்
ஆகாது இயலாது நண்பா
ஆழப் பரவி வாழும்
கதிரியக்கம் போல்
கவிதை கலந்த நிலம் நமது
அடுத்தடுத்த தலைமுறைகள்
தப்பாது பரிணாமிக்கும்
எவ்வெவ்வாறோ