Wednesday, June 18, 2008

உயர் கல்வி, IIT, மற்றும் ...

-

கடந்த சில தினங்களாக ஐஐடி சேர்க்கை, எஸ்ஸி/எஸ்டி மாணவர்களை கூண்டோடு வெளியேற்றுதல் போன்ற காரணங்களைக் கொண்டு செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. நாட்டில் உயர்கல்வி என்பது அனைத்துத் துறைகளின் முன்னேற்றத்திற்கும் எஞ்சின் போல. நாம் ஐடியில் வல்லரசு, செய்மதி விடுவதில் உலகில் மூன்றாம் இடம், முக்குக்கு முக்கு அணு உலை கட்டி மின்சக்தி பெருக்குவோம் என்றெல்லாம் பெருமைப்படுமுன் முதலில் கல்வி ஒழுங்காக இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். நம் நாட்டில் செய்விக்க முடியாத சில மின்னணு பாகங்களை அமெரிக்காவிலிருந்து கடத்தி, நமது எரிகணை ஆய்வுக்கு உதவியதாக நேற்றுத்தான் அமெரிக்க/சிங்கப்பூர் தொடர்புடைய இந்தியத் தொழில் நிறுவனம் ஒன்றின் மேலாளரை அமரிக்க நீதிமன்றம் சிறைக்கு அனுப்பி இருக்கிறது. அந்த நிறுவனமோ நாங்கள் நாட்டுக்காக சேவை செய்தோம் என்கிறார்கள். எல்லோரும் இப்போது சுக நினைப்பில் மிதந்து கொண்டிருக்கும் படி நமது அறிவியல் தொழில் நுட்பவியலாளர்களால் உலகத்தர சாதங்களை வடிவமைக்க இயலுமானால் ஏன் இத்தகைய சாதனங்களைக் கடத்தி மாட்டிக்கொள்ள வேண்டும். நம்மிடம் இருப்பது போதாது எனும் உணர்வு முதலில் வேண்டும். பின்புதான் அதை நிவர்த்திக்க வழிதேடமுடியும். இதில் இப்போது மத்திய அரசின் உயர் ஆய்வுக்கூடங்களில் பணியில் இருக்கும் அறிவியல், நுட்பஇயலாளரும் கூண்டோடு வெளியேறி தனியார் துறைக்குப் போய்க்கொண்டிருக்கிறார்கள் என்று தொடர்ந்து செய்திகள் வருகின்றன. தனியார் துறையில் என்ன உலகத்தரமான ஆராய்ச்சி நடைபெறும் என்பதை அங்கு பணிபுரியும் நண்பர்களை கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.

அரசு அடிப்படை, இரண்டாம் நிலை (உயர் பள்ளி) கல்வியை சரியாக மக்களுக்கு கொடுக்கட்டும் மீதமெல்லாம் தனியார் கவனித்துக் கொள்வார்கள் என்ற சிறுபிள்ளைத்தனமான வாதங்கள் போக, இருக்கும் ஐஐடி, என்ஐடி போன்ற சற்றே தரமான கல்விக்கூடங்களின் கதி என்ன என்பதே இப்போது பெரும் பிரச்சனையாக உள்ளது. ஐஐடி நுழைவுத்தேர்வின் கட் ஆஃப் மதிப்பெண்கள் இயல்பியல், வேதியியல், கணிதம் இவற்றுக்கு 48, 55, 37 என்று அறிவித்திருந்தாலும், அவர்களே கொடுத்த மதிப்பெண்பட்டியல் படி கணக்கிட்டால் அத் 4, 7, 6 என்று பரிதாபகரமாக இருப்பதைக் காட்டுகிறது என்கிறார் மேற்கண்ட இணைப்பில் ஒரு ஐஐடி பேராசிரியர். என்னதான் நடக்கிறது என்று எல்லோரும் மண்டையை உடைத்துக்கொள்ளும் முன்பு ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும். தரம் என்பது அந்தந்த வருடத்துக்காக விண்ணப்பிக்கும் மாணவர்களைப் பொருத்தது என்பதுதான். இவ்வளவுதானா சென்ற ஆண்டு நம் அனைத்திந்திய மெரிட் லிஸ்ட் மானவர்களின் தரம் என்று கேள்வி கேட்டால் பதில் ஆம் என்பதுதான். இது மிக போட்டியுள்ள, மாணவர்கள் ஒன்றாம் வகுப்பிலிருந்தே பயிற்சி செய்யும் ஐஐடி நுழைத்தேர்வின் நிலை, ஆய்வகங்களில் உயர் ஆய்வு செய்ய வரும் அறிவியல் நுட்ப மாணவர்களின் தரம் என்னவாக இருக்கும் என்று யூகிக்கத்தான் முடியும்.


-

No comments: