Tuesday, July 29, 2008

ஒரே ஒரு பின் நவீனத்துவ சுட்டி

இவ்வளவு நாள் எழுதிய பதிவுகளில் பின் நவீனத்துவம் பற்றி ஒருமுறை கூட நான் எழுதியதில்லை. அறுபதுகளில் இருத்தலியலும் புதுக் கவிதையும், எழுபதுகளில் அந்நியமாதலும் ஹைக்கூவும் எண்பதுகளில் அமைப்பியலும் குறுநாவல்களும் தொண்ணூறுகளில் மாயயதார்த்தமும் பெருங்கதைகளும் இந்த பத்தாண்டில் பின்நவீனத்துவமும் கண்ட கலைப் படைப்புகளுமாக ஒரு பேஷன் ஷோ போல தமிழ் இலக்கியம் தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பது. இதில் இலக்கியப் போக்குகளை கவனிக்காமல் நாம் பாட்டுக்கு படித்துக்கொண்டே இருப்பதுதான் எளிதான செயல். தத்துவமும் கலைப்படைப்பும் ஒன்றாக வேறு இயங்குவதால் இன்னும் சற்று உற்சாகம் கூடும் என்பதற்கு இன்றைய இலக்கியங்களே சாட்சி. அதிலும் பின் நவீனத்துவக் கட்டுரைகள் நல்லதொரு வாசிப்பனுபவம். ஆங்கிலம் அறிந்தவர்கள் தமக்கேயான இத்தகைய கட்டுரைகளை தாமே உருவாக்கிக்கொள்ள ஒரு "தானியங்கி கட்டுரை உருவாக்கி" ஒன்றை வடித்துள்ளார்கள்.
கீழ்கண்டதை பக்தியுடன் வாய்விட்டுப் படித்து கடைசி வரியை சொடுக்கவும்.

பாலும் தெளிதேனும்
பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு
நான் தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்கு

பின்நவீக் கருத்தொன்று தா
-

Tuesday, July 15, 2008

புன்னகையில் மின்சாரம் - கலையும் வடிவும்.

(அன்றாட மெய்யியல் - 2)
----------------


1. கலையை யாரும் வெற்றிடத்தில் வடிப்பதில்லை. நம் நாட்டுக்கலைகள் முழுவதும் கூட்டுக்கலைகள்தாம். அல்லது கலைஞன் தன்னைத் தானே முன்னிறுத்தாதவைதாம். பாடல்கள், ஆடல்கள், சிற்பம், ஓவியம் என. பலர் சேர்ந்தோ அல்லது பெயரே சொல்லாமலோ வடித்து விட்டுப்போன கலை நிகழ்வுகளே தமிழ் வரலாறு. இயல் சொல்லும் எழுத்து மட்டும் தனியானது. அதுவும் எழுத்து அல்ல. பலருக்கும் எழுதப் படிக்கத் தெரியாது என்பதால் பாடல் தான். சங்கத்திலிருந்து சென்ற நூற்றாண்டு வரை. தனிமனிதன் தன் படைப்பாக்கத்தினால் தூண்டப்பட்டு எழுதி அதை பல படிகளாக தொழில் நுட்பத்தின் உதவியால் புத்தகங்களாக மாற்றி பிரதிகளாக்கி வாசக சந்தைக்கு விற்று ஒரு தனித்துவ மிக்க 'எழுத்தாளனாக' மாறியது தமிழ் வரலாற்றில் மிகச் சமீபத்தில். இன்றும் நிகழ் கலையின் பிரதியான திரைப்படமே நம் மக்களின் அதி முக்கிய கலை நுகர்வுப் பொருள்.
2. தமிழ்த் திரைப்படங்களில் தவிர்க்க முடியாத, என்னைப் பொருத்தவரை தவிர்க்கக் கூடாத, ஒரு கூறான திரைப்பாடல்களைப் படமாக்குதல் பற்றியது இப்பதிவு. என்னைக்கேட்டால் தமிழில் நிகழும் மிகப் பெரிய, அதிக அளவில் படைப்புத் திறமை மிக்க, ஒரே கலை வடிவம் திரைப்பாடல்கள்தான். திரைப்பாடல்களை பாடல், இசை, நடனம், நடிகர்கள், காட்சி அமைப்பு என எல்லாம் அமைந்த ஒரு கலைப் பொதியாகவே நான் அணுகுகிறேன். தமிழ் படங்கள் அனேகமாக நான் பார்ப்பதில்லை. ஆனால் தினமும் சன் மியூசிக் தொலைக்காட்சி தவறாமல் உண்டு. அதனால் அனேகமாக அனைத்துப் பாடல்களும் பார்த்து விடுவேன். இத்தப் பதிவில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு பாடல் + அதன் படமாக்கல் பற்றி.

3. 1992 ஆம் வருடத்திய ராஜா இசையில் பிரபுதேவா நடனம் கட்டமைத்த "புன்னகையில் மின்சாரம்". ராஜாவைப் பற்றியோ பாடலைப் பற்றியோ அதிகம் சொல்லவேண்டியதில்லை.மொட்டை என்றைக்குமே contemporary தான், சங்கப் பாடல்கள் போல. சீரிளமைத் திறம். மற்றதை பார்ப்போம்.பிரபு தேவாவின் நடனக் கட்டமைப்பில் எப்போதுமே புவியீர்ப்பு விசை குறைவு. முதன்முதலாக ' லாலாக்கு டோல் டப்பி மா' பாடலை பார்த்தவுடன் மனதில் நிலைத்தது அவர் திரைச் செவ்வகத்தின் பாதி உயரத்தில் ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கத்துக்கு தரைக்கு மேல் ஒரு இணைகோடாகத் தாவியதுதான். ஒரு கலைஞன் தன் கலைக்கு திருப்பிக் கொடுப்பது அதன் ஆதார வார்த்தைகளை உருவாக்கிச் சேர்ப்பதுதான். (vocabulary ). கலைஞனின் வடிவச் சோதனைகள் சிறந்த படைப்புத் திறம் இருப்பவர்களின் படைப்பில் இயல்பாக நிகழும். இருபதாம் நூற்றாண்டில் ஓவியர்கள் இதை வெளிப்படையாக அறிவித்து நிகழ்த்திக் காட்டினார்கள். ஒவ்வொரு வடிவப் பரிசோதனையும் ஒரு மானிபெஸ்டோவுடன், தர்க்க ரீதியாக , அழகியல் ரீதியாக அறிமுகப் படுத்தப் பட்டது. வடிவமும் உள்ளடக்கமும் பற்றிய விவாதங்களின் நீட்சியாக அவற்றிற்கு உடன் சேர்த்துப் பொருள்கொள்ளத்தக்க வகையில் இவை அமைந்தன. இது கலையின் மெய்யியல் ( Philosophy of Art) கறார்தன்மை பெற மிகவும் உதவியாகவும் இருந்தது. அதை பற்றி பின்னொருமுறை பார்ப்போம். பிரபுதேவா உள்ளிட்ட நடனஅமைப்பாளர்கள் தமிழ் சினிமாவில் சாதித்தது நிறைய. தமிழ்ப் படப் பாடல்பொதிகளின் கூறுமொழி, அதன் அலகுகள் மற்றும் கட்டமைப்பு மிகவும் நுட்பமானது, நாளும் புதுப்பித்துக்கொண்டே இருப்பது.


4. ஒரு ஓவியம் வரைப்படுவது ஒரு செவ்வக திரைப்பரப்பில். அதன் செவ்வக வடிவமே நாம் எப்படி ஓவியத்தை படிக்கிறோம் என்பதைத் தீர்மானிக்கிறது. ஒரு புத்தகம் வரிவரியாக நம்மைப் படிக்கத்தூண்டுகிறது. எழுத்தாளனால் நிகழ்ச்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கப்படுகின்றன. காலத்தில் ஒன்றன் பின் ஒன்றாக நமக்கு கதையைக் கூறுகிறான் கதை ஆசிரியன். எழுத்து அதனாலேயே லீனியர் - அதாவது நேர்கூறல் வகை சார்ந்தது. ( நான் லீனியர் எழுத்து எனப்படும் வடிவப் பரிசசோதனை பற்றி வேறு ஒரு முறை). ஆனால் ஒரு ஓவியம் அப்படியில்லை. முழுவதுமாக ஒரேயடியாக தன்னை உங்கள் முன் வைக்கிறது. அதை நீங்கள் படிக்க ஒரு வரிசையை அது தீர்மானிப்பதில்லை. உங்களுக்கே விட்டுவிடுகிறது. (ஓவியத்தின் அக ஒழுங்கு பற்றியும் விரிவாக பின்னால்) .
திரைப்படமும் ஒரு செவ்வகத் திரைப்பரப்பில்தான் நமக்கு காட்டப்படுகிறது. ஆனால் இதில் ஓவியம், புத்தகம் இவற்றின் இரு கூறல்முறைகளும் சேர்ந்து விடுகின்றன. அதாவது ஓவியம்போல முழு தாக ஒரு காட்சி அமைப்பு உங்களுக்கு முன்னால் உள்ளது. அந்த ஒரு காட்சியே ஓவியம்போல் ஒரு கதையை நமக்குச் சொல்லவேண்டும். அதோடுகூடி காட்சி, காலத்தில் வேறு மாறுகிறது. அடுத்த அடுத்த காட்சிகள் புத்தகத்தின் அடுத்த அடுத்த வரிகளைப்போல காலத்தில் வருகின்றன. இப்படி ஓவியம், எழுத்து என இரு கலைவடிவங்களையும் உள்ளக்கியது திரைப்படம். அதோடு இசை எனும் இன்னொரு பரிமாணம் கூடுதலாக. இப்படி பல பரிமாணங்களை தன்னுள்ளே கொண்டிருக்கும் ஒரு கலைப் படைப்பை மனிதன் நுகர்வானா, இல்லை இதில் ஏதோ ஒன்றை தேர்ந்தெடுப்பானா?. திரைப்படம் தமிழகத்தின் ஆகப்பெரும்பான்மையான கலைப் பொருளாக இருப்பதில் நமக்குப் பெருமையாக அல்லவா இருக்க வேண்டும்.

5. சரி இந்தப் பாடலுக்கு வருவோம்.

(அ). முதலில் திரைச் செவ்வகத்தை பார்ப்போம். இந்தப்பாடல் காட்சி சாதாரணமாக நமக்குக் காட்டப் படும் திரைக் காட்சி போல நீளம், அகலம், உயரம் என மூன்று பரிமாணங்களைக் காட்டுவதல்ல. இது ஒரு இருபரிமாண கட்டமைப்பு. தமிழக செப்புத்தகட்டுச் சிற்பங்கள் போல (நந்தகோபாலின் ஃபிரண்டல் சிற்பங்கள்). பிரபுதேவா காமிராவை விட்டு தூரப்ப் போவது அல்லது காமிராவை நோக்கி அருகில் வருவது எனும் மூன்றாவது ஆழப் பரிமாணத்தை முடிந்தவரை ஆகக் குறைவாகவே பயன் படுத்துகிறார். நடன அசைவுகள், நகர்வுகள் அனைத்தும் ஏறக்குறைய திரைச் செவ்வகத்தின் குறுக்காகவே இடதிலிருந்து வலது, வலதிலிருந்து இடது என அமைக்கப் பட்டுள்ளன. இது நடனத்திற்கு ஒரு தட்டையான ஸ்டைலைஸ்ட் தன்மையைக் கொடுக்கிறது. இப்பாடலின் பெரும் பலம் அது.

(ஆ). இரண்டாவது நடனத்தைப் பற்றியது.
இசையிலும் நடனத்திலும் இரண்டு இழைகள் உள்ளன. ஒன்று சீராக ஆற்றொழுக்கு போல நழுவும் மொலடியில் அமைந்த பாட்டின் ராகம். இன்னொன்று வெட்டி வெட்டி staccato வாக நிரவும் தாள கதி. ராஜா இதையெல்லாம் அலட்சியமாக செய்வார். ஆனால் பிரபுதேவா அவருக்கு இணையாக காட்டும் திறனைக் காணவேண்டும். நடனக் கட்டமைப்பில் நளினமும் உண்டு, வெட்டி வெட்டி சொடுக்கித் தாவலும் உண்டு. (இதை விஜயகாந்துக்கே அமைக்கும் துணிவு!) . விஜயகாந்தும் பானுபிரியாவும் குறுக்கு நெடுக்காக நகர்வது மெலொடியின் ஏற்ற இறக்கங்களுக்கு ஒத்த காலத் துணுக்குகளில். ஆனால் அவர்கள் கைகள் கால்கள் இயங்குவது தாளத்தின் கதியில். முன்னதை விட இது விரைவானது, வெட்டி வெட்டி அமைந்தது. இரண்டு கால அலகுகளை ஒரே சமயத்தில் அமைத்திருக்கிறார் பிரபு தேவா. அட்டகாசம்.

(இ) மூன்றாவது பின்னணியில் உள்ள மினிமலிஸம். Clutter இல்லாத ஒரு பின்னணி. கூறுபொருள் மட்டுமே வெளித்தெரிய அமைத்த வடிவம். மீண்டும் ஓவியப் பரிசோதனைகள்தான் நினைவுக்கு வருகிறன.
இந்தப் பாடல் வடிவஇயல்வாதிகளுக்கு ஒரு விருந்து. (A formalist delight).


பின்குறிப்பு:
1. தாளத்துக்கு canned loop களைப் பயன்படுத்தி ஹிட் மேல் ஹிட் கொடுக்கும் ஹாரிஸ் ஜெயராஜ் ஒருவாரத்துக்கு தூங்கும் முன் இந்தப் பாடலை ஒருமுறை அதன் தாளகதிக்காக மட்டும் கேட்டால் பரவாயில்லை.
2. அஜீத்தின் பில்லாவுக்கு இந்தப்பாட்டை அப்படியே திரும்பவும் ரீமிக்ஸ் செய்யாமல் படம் பிடித்திருக்கலாம் - ஒரு செபியா பின்னணியில். தூள் பறந்திருக்கும்.ஆனால் பானுபிரியாவுக்கு எங்கே போவது? சரிதான்.
3. இதேபோல ஏறக்குறைய ஸ்பிரிட்டில் உள்ள இன்னொரு பாடல் இது.
http://www.veoh.com/videos/v64804045geq2cap
ஆனால் புன்னகையில் மின்சாரம் போல இல்லை.


இந்தப் பாடலின் இசைக்கோர்வையைப் பற்றி பா.ராகவனின் பதிவு. இதையும் படியுங்கள். முழுமைஅடையும்.

--

Friday, July 11, 2008

அன்றாட மெய்யியல்

முழுமையின் முயக்கம் (Pretense of the whole )
=======================================


நேற்றைக்கு சில நண்பர்களுடன் செடிகொடிகள் சூழ்ந்த ஒரு இடத்தில் டீ குடித்துக்கொண்டு இருந்தோம். எதிர்பாராமல் ஒரு பட்டாம்பூச்சி படபடத்து முகத்துக்கு அருகில் பறந்தது.
"Here goes another tsunami generator " என்று நான் சொல்ல, சிரித்துக்கொண்டே நண்பன் உடனே
"Watch out, there may be a storm in your tea cup" என்றான். இப்படி நாம் எல்லோரும் கெயாஸ் தியரி பற்றி உளரிக்கொட்டிக்கொண்டு இருப்பதைப் போல கொஞ்சம் மெய்யியலையும் போட்டுப் பார்த்தால் என்ன தோன்றியது. இந்தியாவில் அதுவும் தமிழ் மொழிக்காரர்களுக்கு வாராத மெய்யியலா. அதனால்தான் இந்த அன்றாட மெய்யியல். வெறும் naive உரையாடல் மட்டும்தான். கறாராக வேண்டுமானால் வேறு எப்போதாவது.

ஆதி முதலில் ஆரம்பித்துப் பார்க்கலாம். இப்பொழுதெல்லாம் மதவாதிகள், கலை- இலக்கியக்காரர்கள், சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் இவர்களில் ஆரம்பித்து தெருநாய் ஆர்வலர்கள் வரை அனைவருக்கும் இடைவிடாது மெல்லக்கிடைத்த அவல் அறிவியல் போல இருக்கிறது. ஏதேனும் ஒன்று என்றால் உடனே ரிடக் ஷனிஸம், விவிசெக் ஷன் என்று கிளப்பிவிடுகிறார்கள். நாங்கள் எல்லாம் பூரணத்தை பூரணத்துக்குள் திணித்து பூரணமான எங்கள் வாயில் லபக் என்று ஒரே முழுங்கு முழுங்கிவிடுவோம். அறிவியல் மட்டும்தான் பூரணத்தை பொடியாக்கி கால் தொடையெல்லாம் சிந்திக்கொண்டு தப்புத்தப்பாய் சாப்பிடுகிறது என்பது இவர்கள் முனகல். அப்படி என்னதான் அது, அறிவியலின் ரிடக் ஷனிஸப் பிரச்சினை?

இவர்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு நம்பிக்கை என்னவென்றால் அறிவியல் இயற்கையை அப்படியே முழுமையான ஒன்றாகப் பார்ப்பதில்லை. கூறுபோடுகிறது. அந்த குட்டிக் குட்டி கூறுகளை மட்டும் ஆராய்ந்து ஏதோ புரிந்துகொண்டு அதையெல்லாம் சேர்த்துக்கொள்கிறது. அப்புறம் அந்த முழுமைக்கு பதிலாக இந்தக் கூறுகளைப் பற்றி அறிந்ததையே சேர்த்து வைத்துக்கொண்டு முழுமையை அறிந்து விட்டதுபோல் பாவனை செய்கிறது. இந்தப் பாவனையை எங்களால் தாங்கமுடியவில்லை.
இதுதாங்க விஷயம். ஒரு எடுத்துக்காட்டைப் பார்ப்போம்.

ரசம் வைக்கவேண்டுமானால் என்ன செய்வது. பருப்பு வேகவைத்த தண்ணீர், கரைத்த புளி, உப்பு, பெருங்காயம், எண்ணெய், கருவேப்பிலை, மல்லித் தழை, சீரகம், மிளகு, மிளகாய் இப்படி பலதையும் எடுத்துக் கொள்கிறோம். ஒவ்வொன்றும் தனித்தனியே ஒவ்வொரு சுவை. ரசம் வைத்தாயிற்று. இப்போது ரசத்தின் சுவை என்ன? ரசம் என்பது முழுமை. நாம் பயன்படுத்தும் நானாவிதப் பொருள்களும் அதன் உள்ளுறை கூறுகள். அவற்றின் சுவைகளையெல்லாம் எப்படியாவது சேர்த்தால் ரசத்தின் சுவை வந்துவிடாது. அறிவியல் இப்படி ஒவ்வொரு கூறுகளின் குணங்களை அறிந்துகொண்டு அவற்றைச் சேர்த்தால் முழுமையின் குணங்களையும் முழுதாக அறிந்துவிடலாம் என கருதுகிறது, அது பிழை.

முழுமையின் குணங்களை இப்படி குறுக்கமுடியாது. இந்த குறுக்குப் பார்வைதான் ரிடக் ஷனிஸம். இதுதான் அறிவியலின் மாபெரும்
குறை. என்றைக்கும் அதனால் முழுமையை அறியமுடியாது. அதற்கு ஆன்மீகம் (சாமி?), கலை போன்ற முழுமையைத் தேடும் வழிவகைகள் இருக்கின்றன. சற்றே ஒதுங்கி இரும் பிள்ளாய். அதெல்லாம் நாங்க பாத்துக்கிறோம். சரி, அறிவியலும் கலையும் எப்படி முழுமையைப் பார்க்கின்றன?


-

Wednesday, July 09, 2008

கடவுளின் போர்வீரர்கள்

சமுதாயத்தின் எல்லாத் தளங்களிலும் நாத்திகர்கள் எல்லாக் காலத்திலும் அவமானப்படுத்தப் பட்டும், அவர்களுக்கு தகுதியான முறையான இடம் மறுக்கப்பட்டுமே இருக்கிறார்கள். கடவுள் நம்பிக்கையே ஒருவனுக்கு மானுட அறத்தை கற்பித்துவிடும் என்ற இன்னொரு நம்பிக்கையே இதற்கு அடிப்படையாக உள்ளது. மனிதர்கள் சேர்ந்து வாழ கண்டுகொண்ட மக்களாட்சியும் அதன் பல்வேறு அதிகார மையங்களும் இந்த அபத்த நிலையிலிருந்து மாறவில்லை என்பது நாம் அனைவரும் உணர்வதுதான். ஒரு நாட்டின் காவல்துறை, நீதித்துறை, ராணுவம் முதலியவை கடவுள் நம்பிக்கையாளர்களாலும் மதவாதிகளாலும் நிரம்பும் போது அதனால் ஏற்படும் விளைவுகளை சமன்செய்ய வழிகள் வேண்டும். ஆனால் மக்களாட்சி எனும் மெல்லிய போதை புகைமண்டிய சூழல் நம்மை சிந்திக்க விடாமல் மயக்க்ிக்கொண்டிருக்கிறது.


மக்களாட்சியின் த்லைமைப் பீடத்தில் எப்போதும் தன்னை வைத்துப் பார்த்துக்கொள்ளும் அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் ஈராக் போரில் பணிசெய்த போது அவரது இறைமறுப்பு நிலைக்காக அவர் ஒதுக்கப் பட்டதையும் , அதனால் அவரது ராணுவ வேலைக்கே வினையாக ஆனதையும் எடுத்துக்காட்டி அமெரிக்க அரசின் மீது வழக்குத் தொடுத்துள்ளார். சி என் என் செய்தி. . அமெரிக்க ராணுவம் ஒரு கிருத்துவ ராணுவம் எனக்கூறும் அவர் இது சட்டத்துக்குப் புறம்பானது என வழக்குத் தொடர்கிறார். வழிபாடு செய்யாவிட்டால் மற்றவர்களிட ம்ிருந்து ஒதுங்கி நிற்கவேண்டும் என்று ஆணையிட்டார்கள் என்றும் கூறுகிறார். இன்னொரு ஓய்வு பெற்ற விமான வீரர் ஒருவர் ஏறக்குறைய 8000 வீரர்கள் கிருத்துவ மதத்தை தழுவ வற்புறுத்தப் படுவதாக தம்மிடம் முறையிடுகிறார்கள் என்று கூறுகிறார். பெண்டகன் ஐ பெண்டகோஸ்டல்கன் என ஏளனம் செய்யும் இவர் உலகின் அனைத்து அமெரிக்கத் தளங்களிலும் இத்தகைய கிருத்துவக் குழுக்களின் உறுப்பினர்கள் உயர் அதிகாரிகளாக உள்ளனர் என அறியப்படுகிறது என்கிறார்.


ஏறக்குறைய ஒரு நூற்றைம்பது ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பெரும் ஆத்திக அலை உலகமெங்கும் பரவிக்கொண்டிருக்கிறது. சிக்கலான தற்கால வாழ்வும், பெருகிவரும் பொருளாதார சமூக பிரச்சனைகளும், நவீன வாழ்வு உடைத்தெறிந்த குடும்ப உறவுப் பொதிகளும் ஒரு மனிதனுக்கு ஏற்படுத்தும் கலக்கத்தை கடவுளன்றி வேறு யாரும் சரிசெய்யமுடியுமென்று தெரிய
வில்லை. அதனால் இது ஒரு ஆத்திக நூற்றாண்டாகத்தான் பரிமளிக்கப் போகிறது. நாத்திகச் சேரிகள் உருவாகும் நாள் தொலைவில் இல்லை.

-