Wednesday, July 09, 2008

கடவுளின் போர்வீரர்கள்

சமுதாயத்தின் எல்லாத் தளங்களிலும் நாத்திகர்கள் எல்லாக் காலத்திலும் அவமானப்படுத்தப் பட்டும், அவர்களுக்கு தகுதியான முறையான இடம் மறுக்கப்பட்டுமே இருக்கிறார்கள். கடவுள் நம்பிக்கையே ஒருவனுக்கு மானுட அறத்தை கற்பித்துவிடும் என்ற இன்னொரு நம்பிக்கையே இதற்கு அடிப்படையாக உள்ளது. மனிதர்கள் சேர்ந்து வாழ கண்டுகொண்ட மக்களாட்சியும் அதன் பல்வேறு அதிகார மையங்களும் இந்த அபத்த நிலையிலிருந்து மாறவில்லை என்பது நாம் அனைவரும் உணர்வதுதான். ஒரு நாட்டின் காவல்துறை, நீதித்துறை, ராணுவம் முதலியவை கடவுள் நம்பிக்கையாளர்களாலும் மதவாதிகளாலும் நிரம்பும் போது அதனால் ஏற்படும் விளைவுகளை சமன்செய்ய வழிகள் வேண்டும். ஆனால் மக்களாட்சி எனும் மெல்லிய போதை புகைமண்டிய சூழல் நம்மை சிந்திக்க விடாமல் மயக்க்ிக்கொண்டிருக்கிறது.


மக்களாட்சியின் த்லைமைப் பீடத்தில் எப்போதும் தன்னை வைத்துப் பார்த்துக்கொள்ளும் அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் ஈராக் போரில் பணிசெய்த போது அவரது இறைமறுப்பு நிலைக்காக அவர் ஒதுக்கப் பட்டதையும் , அதனால் அவரது ராணுவ வேலைக்கே வினையாக ஆனதையும் எடுத்துக்காட்டி அமெரிக்க அரசின் மீது வழக்குத் தொடுத்துள்ளார். சி என் என் செய்தி. . அமெரிக்க ராணுவம் ஒரு கிருத்துவ ராணுவம் எனக்கூறும் அவர் இது சட்டத்துக்குப் புறம்பானது என வழக்குத் தொடர்கிறார். வழிபாடு செய்யாவிட்டால் மற்றவர்களிட ம்ிருந்து ஒதுங்கி நிற்கவேண்டும் என்று ஆணையிட்டார்கள் என்றும் கூறுகிறார். இன்னொரு ஓய்வு பெற்ற விமான வீரர் ஒருவர் ஏறக்குறைய 8000 வீரர்கள் கிருத்துவ மதத்தை தழுவ வற்புறுத்தப் படுவதாக தம்மிடம் முறையிடுகிறார்கள் என்று கூறுகிறார். பெண்டகன் ஐ பெண்டகோஸ்டல்கன் என ஏளனம் செய்யும் இவர் உலகின் அனைத்து அமெரிக்கத் தளங்களிலும் இத்தகைய கிருத்துவக் குழுக்களின் உறுப்பினர்கள் உயர் அதிகாரிகளாக உள்ளனர் என அறியப்படுகிறது என்கிறார்.


ஏறக்குறைய ஒரு நூற்றைம்பது ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பெரும் ஆத்திக அலை உலகமெங்கும் பரவிக்கொண்டிருக்கிறது. சிக்கலான தற்கால வாழ்வும், பெருகிவரும் பொருளாதார சமூக பிரச்சனைகளும், நவீன வாழ்வு உடைத்தெறிந்த குடும்ப உறவுப் பொதிகளும் ஒரு மனிதனுக்கு ஏற்படுத்தும் கலக்கத்தை கடவுளன்றி வேறு யாரும் சரிசெய்யமுடியுமென்று தெரிய
வில்லை. அதனால் இது ஒரு ஆத்திக நூற்றாண்டாகத்தான் பரிமளிக்கப் போகிறது. நாத்திகச் சேரிகள் உருவாகும் நாள் தொலைவில் இல்லை.

-

4 comments:

Unknown said...

உலகம் தோன்றிய காலம் முதல் இன்றுவரை எல்லா நூற்றாண்டும் ஆத்திக நூற்றாண்டுதான். நாத்திகர்களுக்கான சேரிகள் எந்த காலத்திலும் உருவாக்கப்பட்டதில்லை. இனிமேலும் உருவாகாது என நம்புகிறேன்.

இதை தட்டையாக ஆத்திகம்,நாத்திகம் என அணுகுவதை விட சீர்திருத்தம்,பழமைவாதம் என்ற கோணத்தில் அணுகுவது தான் பொருத்தமாக இருக்கும்.இன்றைய மதங்கள் ஆயிரமாண்டுக்கு முந்தைய இவற்றின் வடிவங்களை விட பெரிதும் மாறியுள்ளனவா இல்லையா?உதா: இன்றைய கிறிஸ்தவம் ஆயிரமாண்டுக்கு முந்தைய கிறிஸ்துவத்தை விட மாறியிருக்கிறதா இல்லையா?

மாற்றத்தை நிராகரிக்கும் மதங்கள் தூக்கி எறியப்படும்.மாற்றத்தை ஏற்கும் மதங்கள் தம்மை தாமே சீர்திருத்தி கொள்ளும்.காலத்தின் போக்கில் மதங்கள் வரும்,போகும்..கடவுள் எனும் கோட்பாடு மனித இனம் இருக்கும்வரை நிலைத்து நிற்கும்.

Jayaprakash Sampath said...

கடவுள் நம்பிக்கையில்லாத இளைஞர்களை நான் சமீப காலமாக நான் பார்க்கவில்லை.

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு நிர்ப்பந்தம் :-) காரணமாக, வீட்டுப்பக்கத்தில் உள்ள கோவிலுக்குப் போக நேர்ந்தது. திருக்கல்யாண உற்சவம். நிரம்பி வழிந்த கூட்டத்தில், குறைந்த பட்சம் எழுபது சதவீதத்தினர், இருபதுகளில் இருக்கும் ஆண், பெண் உள்ளிட்ட இளைஞர் கூட்டம்.

arulselvan said...

செல்வன்,


>>உலகம் தோன்றிய காலம் முதல் இன்றுவரை எல்லா நூற்றாண்டும் ஆத்திக நூற்றாண்டுதான்.


ஆமா. 20 ஆம் நூற்றாண்டில் சில நாடுகளில் அரசு இறையிலிக் கொள்கைகளை அரசின் நிலைபாடாக கொள்ளும் வரை. ஆனால் வரலாற்றில் இது ஒரு சிறு blip தான்.


>>நாத்திகர்களுக்கான சேரிகள் எந்த காலத்திலும் உருவாக்கப்பட்டதில்லை.


நாத்திகர்கள் கூட்டம் கூட்டமாக இருக்க அத்தனை பேர்களும் இருந்தது இல்லை, எப்படியாவது சமூகம் அவர்களை தண்டித்து விடும்.

>>>கடவுள் எனும் கோட்பாடு மனித இனம் இருக்கும்வரை நிலைத்து நிற்கும்.


மனிதனின் அறிவு படைத்த கற்பிதங்கள் எதுவும் இதுவரை வழக்கொழிந்து போய்விடவில்லை, கடவுள் மட்டும் தப்பமுடியுமா.

arulselvan said...

பிரகாஷ்,
>>கடவுள் நம்பிக்கையில்லாத இளைஞர்களை நான் சமீப காலமாக நான் பார்க்கவில்லை.
--நானும்தான். நகரத்தில் சிட்டுக்குருவிகளைப்போல் இவர்களும் அருகிவிட்டார்கள்.
>>பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு நிர்ப்பந்தம் :-) காரணமாக, வீட்டுப்பக்கத்தில் உள்ள கோவிலுக்குப் போக நேர்ந்தது. திருக்கல்யாண உற்சவம். நிரம்பி வழிந்த கூட்டத்தில், குறைந்த பட்சம் எழுபது சதவீதத்தினர், இருபதுகளில் இருக்கும் ஆண், பெண் உள்ளிட்ட இளைஞர் கூட்டம்.

--அதிலும் இளைஞர்கள் செழிப்பாக இருக்கும் இக்காலத்தில் எல்லோரும் வாழ்க்கையை அநுபவிப்பார்கள் என்று பார்த்தால் மோட்சத்துக்கு இப்பவே துண்டு போடுவதிலேயே குறியாக இருக்கிறார்கள். :-)