Tuesday, July 15, 2008

புன்னகையில் மின்சாரம் - கலையும் வடிவும்.

(அன்றாட மெய்யியல் - 2)
----------------


1. கலையை யாரும் வெற்றிடத்தில் வடிப்பதில்லை. நம் நாட்டுக்கலைகள் முழுவதும் கூட்டுக்கலைகள்தாம். அல்லது கலைஞன் தன்னைத் தானே முன்னிறுத்தாதவைதாம். பாடல்கள், ஆடல்கள், சிற்பம், ஓவியம் என. பலர் சேர்ந்தோ அல்லது பெயரே சொல்லாமலோ வடித்து விட்டுப்போன கலை நிகழ்வுகளே தமிழ் வரலாறு. இயல் சொல்லும் எழுத்து மட்டும் தனியானது. அதுவும் எழுத்து அல்ல. பலருக்கும் எழுதப் படிக்கத் தெரியாது என்பதால் பாடல் தான். சங்கத்திலிருந்து சென்ற நூற்றாண்டு வரை. தனிமனிதன் தன் படைப்பாக்கத்தினால் தூண்டப்பட்டு எழுதி அதை பல படிகளாக தொழில் நுட்பத்தின் உதவியால் புத்தகங்களாக மாற்றி பிரதிகளாக்கி வாசக சந்தைக்கு விற்று ஒரு தனித்துவ மிக்க 'எழுத்தாளனாக' மாறியது தமிழ் வரலாற்றில் மிகச் சமீபத்தில். இன்றும் நிகழ் கலையின் பிரதியான திரைப்படமே நம் மக்களின் அதி முக்கிய கலை நுகர்வுப் பொருள்.
2. தமிழ்த் திரைப்படங்களில் தவிர்க்க முடியாத, என்னைப் பொருத்தவரை தவிர்க்கக் கூடாத, ஒரு கூறான திரைப்பாடல்களைப் படமாக்குதல் பற்றியது இப்பதிவு. என்னைக்கேட்டால் தமிழில் நிகழும் மிகப் பெரிய, அதிக அளவில் படைப்புத் திறமை மிக்க, ஒரே கலை வடிவம் திரைப்பாடல்கள்தான். திரைப்பாடல்களை பாடல், இசை, நடனம், நடிகர்கள், காட்சி அமைப்பு என எல்லாம் அமைந்த ஒரு கலைப் பொதியாகவே நான் அணுகுகிறேன். தமிழ் படங்கள் அனேகமாக நான் பார்ப்பதில்லை. ஆனால் தினமும் சன் மியூசிக் தொலைக்காட்சி தவறாமல் உண்டு. அதனால் அனேகமாக அனைத்துப் பாடல்களும் பார்த்து விடுவேன். இத்தப் பதிவில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு பாடல் + அதன் படமாக்கல் பற்றி.

3. 1992 ஆம் வருடத்திய ராஜா இசையில் பிரபுதேவா நடனம் கட்டமைத்த "புன்னகையில் மின்சாரம்". ராஜாவைப் பற்றியோ பாடலைப் பற்றியோ அதிகம் சொல்லவேண்டியதில்லை.மொட்டை என்றைக்குமே contemporary தான், சங்கப் பாடல்கள் போல. சீரிளமைத் திறம். மற்றதை பார்ப்போம்.பிரபு தேவாவின் நடனக் கட்டமைப்பில் எப்போதுமே புவியீர்ப்பு விசை குறைவு. முதன்முதலாக ' லாலாக்கு டோல் டப்பி மா' பாடலை பார்த்தவுடன் மனதில் நிலைத்தது அவர் திரைச் செவ்வகத்தின் பாதி உயரத்தில் ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கத்துக்கு தரைக்கு மேல் ஒரு இணைகோடாகத் தாவியதுதான். ஒரு கலைஞன் தன் கலைக்கு திருப்பிக் கொடுப்பது அதன் ஆதார வார்த்தைகளை உருவாக்கிச் சேர்ப்பதுதான். (vocabulary ). கலைஞனின் வடிவச் சோதனைகள் சிறந்த படைப்புத் திறம் இருப்பவர்களின் படைப்பில் இயல்பாக நிகழும். இருபதாம் நூற்றாண்டில் ஓவியர்கள் இதை வெளிப்படையாக அறிவித்து நிகழ்த்திக் காட்டினார்கள். ஒவ்வொரு வடிவப் பரிசோதனையும் ஒரு மானிபெஸ்டோவுடன், தர்க்க ரீதியாக , அழகியல் ரீதியாக அறிமுகப் படுத்தப் பட்டது. வடிவமும் உள்ளடக்கமும் பற்றிய விவாதங்களின் நீட்சியாக அவற்றிற்கு உடன் சேர்த்துப் பொருள்கொள்ளத்தக்க வகையில் இவை அமைந்தன. இது கலையின் மெய்யியல் ( Philosophy of Art) கறார்தன்மை பெற மிகவும் உதவியாகவும் இருந்தது. அதை பற்றி பின்னொருமுறை பார்ப்போம். பிரபுதேவா உள்ளிட்ட நடனஅமைப்பாளர்கள் தமிழ் சினிமாவில் சாதித்தது நிறைய. தமிழ்ப் படப் பாடல்பொதிகளின் கூறுமொழி, அதன் அலகுகள் மற்றும் கட்டமைப்பு மிகவும் நுட்பமானது, நாளும் புதுப்பித்துக்கொண்டே இருப்பது.


4. ஒரு ஓவியம் வரைப்படுவது ஒரு செவ்வக திரைப்பரப்பில். அதன் செவ்வக வடிவமே நாம் எப்படி ஓவியத்தை படிக்கிறோம் என்பதைத் தீர்மானிக்கிறது. ஒரு புத்தகம் வரிவரியாக நம்மைப் படிக்கத்தூண்டுகிறது. எழுத்தாளனால் நிகழ்ச்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கப்படுகின்றன. காலத்தில் ஒன்றன் பின் ஒன்றாக நமக்கு கதையைக் கூறுகிறான் கதை ஆசிரியன். எழுத்து அதனாலேயே லீனியர் - அதாவது நேர்கூறல் வகை சார்ந்தது. ( நான் லீனியர் எழுத்து எனப்படும் வடிவப் பரிசசோதனை பற்றி வேறு ஒரு முறை). ஆனால் ஒரு ஓவியம் அப்படியில்லை. முழுவதுமாக ஒரேயடியாக தன்னை உங்கள் முன் வைக்கிறது. அதை நீங்கள் படிக்க ஒரு வரிசையை அது தீர்மானிப்பதில்லை. உங்களுக்கே விட்டுவிடுகிறது. (ஓவியத்தின் அக ஒழுங்கு பற்றியும் விரிவாக பின்னால்) .
திரைப்படமும் ஒரு செவ்வகத் திரைப்பரப்பில்தான் நமக்கு காட்டப்படுகிறது. ஆனால் இதில் ஓவியம், புத்தகம் இவற்றின் இரு கூறல்முறைகளும் சேர்ந்து விடுகின்றன. அதாவது ஓவியம்போல முழு தாக ஒரு காட்சி அமைப்பு உங்களுக்கு முன்னால் உள்ளது. அந்த ஒரு காட்சியே ஓவியம்போல் ஒரு கதையை நமக்குச் சொல்லவேண்டும். அதோடுகூடி காட்சி, காலத்தில் வேறு மாறுகிறது. அடுத்த அடுத்த காட்சிகள் புத்தகத்தின் அடுத்த அடுத்த வரிகளைப்போல காலத்தில் வருகின்றன. இப்படி ஓவியம், எழுத்து என இரு கலைவடிவங்களையும் உள்ளக்கியது திரைப்படம். அதோடு இசை எனும் இன்னொரு பரிமாணம் கூடுதலாக. இப்படி பல பரிமாணங்களை தன்னுள்ளே கொண்டிருக்கும் ஒரு கலைப் படைப்பை மனிதன் நுகர்வானா, இல்லை இதில் ஏதோ ஒன்றை தேர்ந்தெடுப்பானா?. திரைப்படம் தமிழகத்தின் ஆகப்பெரும்பான்மையான கலைப் பொருளாக இருப்பதில் நமக்குப் பெருமையாக அல்லவா இருக்க வேண்டும்.

5. சரி இந்தப் பாடலுக்கு வருவோம்.

(அ). முதலில் திரைச் செவ்வகத்தை பார்ப்போம். இந்தப்பாடல் காட்சி சாதாரணமாக நமக்குக் காட்டப் படும் திரைக் காட்சி போல நீளம், அகலம், உயரம் என மூன்று பரிமாணங்களைக் காட்டுவதல்ல. இது ஒரு இருபரிமாண கட்டமைப்பு. தமிழக செப்புத்தகட்டுச் சிற்பங்கள் போல (நந்தகோபாலின் ஃபிரண்டல் சிற்பங்கள்). பிரபுதேவா காமிராவை விட்டு தூரப்ப் போவது அல்லது காமிராவை நோக்கி அருகில் வருவது எனும் மூன்றாவது ஆழப் பரிமாணத்தை முடிந்தவரை ஆகக் குறைவாகவே பயன் படுத்துகிறார். நடன அசைவுகள், நகர்வுகள் அனைத்தும் ஏறக்குறைய திரைச் செவ்வகத்தின் குறுக்காகவே இடதிலிருந்து வலது, வலதிலிருந்து இடது என அமைக்கப் பட்டுள்ளன. இது நடனத்திற்கு ஒரு தட்டையான ஸ்டைலைஸ்ட் தன்மையைக் கொடுக்கிறது. இப்பாடலின் பெரும் பலம் அது.

(ஆ). இரண்டாவது நடனத்தைப் பற்றியது.
இசையிலும் நடனத்திலும் இரண்டு இழைகள் உள்ளன. ஒன்று சீராக ஆற்றொழுக்கு போல நழுவும் மொலடியில் அமைந்த பாட்டின் ராகம். இன்னொன்று வெட்டி வெட்டி staccato வாக நிரவும் தாள கதி. ராஜா இதையெல்லாம் அலட்சியமாக செய்வார். ஆனால் பிரபுதேவா அவருக்கு இணையாக காட்டும் திறனைக் காணவேண்டும். நடனக் கட்டமைப்பில் நளினமும் உண்டு, வெட்டி வெட்டி சொடுக்கித் தாவலும் உண்டு. (இதை விஜயகாந்துக்கே அமைக்கும் துணிவு!) . விஜயகாந்தும் பானுபிரியாவும் குறுக்கு நெடுக்காக நகர்வது மெலொடியின் ஏற்ற இறக்கங்களுக்கு ஒத்த காலத் துணுக்குகளில். ஆனால் அவர்கள் கைகள் கால்கள் இயங்குவது தாளத்தின் கதியில். முன்னதை விட இது விரைவானது, வெட்டி வெட்டி அமைந்தது. இரண்டு கால அலகுகளை ஒரே சமயத்தில் அமைத்திருக்கிறார் பிரபு தேவா. அட்டகாசம்.

(இ) மூன்றாவது பின்னணியில் உள்ள மினிமலிஸம். Clutter இல்லாத ஒரு பின்னணி. கூறுபொருள் மட்டுமே வெளித்தெரிய அமைத்த வடிவம். மீண்டும் ஓவியப் பரிசோதனைகள்தான் நினைவுக்கு வருகிறன.
இந்தப் பாடல் வடிவஇயல்வாதிகளுக்கு ஒரு விருந்து. (A formalist delight).


பின்குறிப்பு:
1. தாளத்துக்கு canned loop களைப் பயன்படுத்தி ஹிட் மேல் ஹிட் கொடுக்கும் ஹாரிஸ் ஜெயராஜ் ஒருவாரத்துக்கு தூங்கும் முன் இந்தப் பாடலை ஒருமுறை அதன் தாளகதிக்காக மட்டும் கேட்டால் பரவாயில்லை.
2. அஜீத்தின் பில்லாவுக்கு இந்தப்பாட்டை அப்படியே திரும்பவும் ரீமிக்ஸ் செய்யாமல் படம் பிடித்திருக்கலாம் - ஒரு செபியா பின்னணியில். தூள் பறந்திருக்கும்.ஆனால் பானுபிரியாவுக்கு எங்கே போவது? சரிதான்.
3. இதேபோல ஏறக்குறைய ஸ்பிரிட்டில் உள்ள இன்னொரு பாடல் இது.
http://www.veoh.com/videos/v64804045geq2cap
ஆனால் புன்னகையில் மின்சாரம் போல இல்லை.


இந்தப் பாடலின் இசைக்கோர்வையைப் பற்றி பா.ராகவனின் பதிவு. இதையும் படியுங்கள். முழுமைஅடையும்.

--

14 comments:

Jayaprakash Sampath said...

just brilliant!

Vijayashankar said...

Very Nice!

Narain said...

முதலில் பாராட்டுகள். தொடர்ச்சியாக, பிரபுதேவா பற்றி பேசியதற்கு. தமிழ் திரைப்படங்கள் ஆரம்பித்த காலத்திலிருந்த காலங்கடந்த மேதைகள் என பேசும்போது வெறுமனே பாகவதர், சின்னப்பா, பின் எம்.ஆர்.ராதா, சந்திரபாபு என நீளும் வரிசையில் பிரபுதேவாவிற்கு ஒரு முக்கியமான இடமுண்டு. தமிழ் சினிமா நாயகர்களில் அனாயசமாக நகைச்சுவையையும், சண்டையையும், நடனத்தையும் நிகழ்த்திக் காட்டிய முதல் நபர் பிரபு தேவா. இப்போது இயக்குநர் ஆகிவிட்டதால் நாயகன் பிரபுதேவாவினை தேட அவர் நடித்த படங்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

இளையராஜாவினை எந்த அளவிற்கு கொண்டாடுகிறோமோ, அதற்கு இணையாக கொண்டாட படவேண்டிய இன்னொரு நபர் பிரபுதேவா என்பதில் எவ்விதமான சந்தேகங்களுமில்லை. ஆரம்பகால படங்களிலிருந்து பல பாடல்களை பிரபுதேவாவின் உச்சக்கட்ட கலைசிருஷ்டிக்கும், ஒரு கலையின் வடிவத்தினை ரசிக்கும்படியாக மாற்றியமைத்தற்கும் சொல்லலாம்.

தமிழ் பண்டிதர்கள் "முக்காலா முக்காபுலா" விற்கான சர்ச்சையில் ஈடுபட்டிருந்தபோது, அற்புதமாக ஒரு வெஸ்டர்ன் நடனத்தின் கூறுகளை உள்வாங்கி ஆனால் இந்தியரசிகனின் பரப்பு வெளியில் அதை மாற்றியமைத்த பெருமை தேவாவிற்கு உண்டு. அந்த பாடலை கூர்ந்து நோக்கினால், மிக கடினமான, நொடியில் மாறக்கூடிய அசைவுகளை தனக்கும், தன் குழுவிற்கும் வைத்துக் கொண்டு, அதனூடே மிக சுலபமாக ஆடக்கூடிய அசைவுகளை நக்மாவிற்கு கொடுத்து மொத்த பாடலின் கலாஅனுபவத்தினை ஒரு சேர மாற்றி வெளியில் வரும்போது "அந்த பொண்ணு பிரபுதேவாவுக்கு ஈகுவலா ஆடுதுல்ல" என சொல்லவைத்திருப்பதின் பிண்ணனியில் இருப்பது பிரபுதேவா என்கிற டான்ஸ் மாஸ்டர் மற்றுமல்ல, மிக தீவிரமான, கூர்மையான கலாரசிகன்.

தமிழ் சினிமாவின் நடனங்கள் என்பவை எல்லாமே கடந்த 60 வருட காலத்தில் வெறும் அசைவுகளாகவே பரிமணத்திருக்கின்றன. இந்நிலையில், இந்திய சினிமாவில் பிரபுதேவா செய்திருக்கக் கூடிய விஷயங்கள், தாராளாமான ஏராளம். நீங்கள் குறிப்பிட்ட பாடலுக்கு இணையாக பிரபுதேவா பின்னி பெடலெடுத்திருக்கும் பாடல்கள் பல உண்டு.

உதாரணமாய் "காத்தடிக்குது, காத்தடிக்குது" பாடல். ஒரு சேரிக்கான களியாட்ட பாடலில் இராமாயணத்தின் சாராம்சத்தினை நவீனத்துடன் (இலக்குமணன், துப்பாக்கியோடு மான் வேட்டையாட போதல். ஒல்லியான ஒரு நபர், ஜடாயு போல எதிர்த்து கூட்டத்தில் பறந்து விழுதல்) 30 வினாடிகளில் வெறும் அசைவுகளை கொண்டே கட்டமைத்திருக்கும் சாமர்த்தியமும், சாதுர்யமும், நுண்ணிய கலை அரசியலும் பிரமிக்கதக்கவை. பிரபுதேவா ஜனரஞ்சக பாடல்களில் செய்திருக்கும் experimentations மற்றும extrapolation இன்னமும் அறிவுஜீவி வட்டாரங்களும், நவீன நாடக குருக்களும் இன்னமும் பண்டிதர்களுக்காக பேசிக் கொண்டிருக்கும் கட்டமைப்புகளை விட நவீனமானது.

தினேஷ் மாஸ்டரும், பிரபுதேவாவும் இணைந்து அமைத்திருக்கும் "வசந்த முல்லை போல வந்து - போக்கிரி" பாடல் பாருங்கள். மிக நுண்ணிய ரசனையும், லாவகமும் இல்லாமல் இவ்வளவு கோர்வையாக சொல்ல மிக அதிகபட்ச கலாரசனையும், கலைவடிவம் பற்றிய தெளிவான பார்வையும் வேண்டும்

//தமிழ்த் திரைப்படங்களில் தவிர்க்க முடியாத, என்னைப் பொருத்தவரை தவிர்க்கக் கூடாத, ஒரு கூறான திரைப்பாடல்களைப் படமாக்குதல் பற்றியது இப்பதிவு. என்னைக்கேட்டால் தமிழில் நிகழும் மிகப் பெரிய அதிக அளவில் படைப்புத் திறமை மிக்க ஒரே கலை வடிவம் திரைப்பாடல்கள்தான்.//

இதை இன்னமும் ஜோல்னா பையோடு துருக்கிய படங்கள் பார்த்து, "4 பாட்டு, 3 பைட் இல்லாம தமிழ்ப்படம் எப்ப வருதோ, அப்பதான் நாம ஒலக தரத்துல படம் எடுக்கமுடியும்" என்று சுற்றிக் கொண்டிருக்கும் என் முன்னாளைய நண்பர்களுக்கு படிக்க சமர்ப்பிக்கிறேன் ;)

Boston Bala said...

நன்றி... நன்றி :)

Jayaprakash Sampath said...

நாராயண் கமண்ட்டும் சூப்பர்...

இசை, நடனம், பாடல் வரிகள், கலைa அமைப்பு, பாடலின் ப்ளேஸ்மெண்ட் என்று எத்தனை பண்பட்ட திறமைகள் ஒன்றிணைந்து இப்படி ஒரு முழுமையான கலா அனுபவத்தை நமக்குத் தருகிறது என்று யோசித்துப் பார்க்கவே பிரமிப்பாக இருக்கிறது.

சிறில் அலெக்ஸ் said...

மன்னிக்கவும்.
எடிட்டிங்கை விட்டால் பாடலில் எதுவுமே பிரம்மாதமாய் தெரியலியே?

சில விஷயங்களை டெக்னிக்கல் விஷயம் தெரிந்தவர்கள்தான் இரசிக்க முடியும். இதுவும் அப்படித்தானோ.

இளையராஜாவின் மிகச் சுமாரான ஒரு மெட்டு இது எனத் தோன்றுது. Jut my opinion.

arulselvan said...

சிறில்,
1. நான் எடிடிங் பற்றி எழுதவே இல்லையே. எழுதி இருக்கவேண்டும். ஆனால் எடிடிங் இந்தப் பாடலுக்கு எவ்வளவு 'நல்லது' செய்திருக்கிறது என்பதை raw footage ஐ பார்த்தால்தான் சொல்லமுடியும். ஏனென்றால் இந்தப் பாடலில் தெரிந்தே இரு பரிமாணங்களை மட்டும் அதிகம் பயன்படுத்தி இருக்கிறார்கள் என நினைக்கிறேன். அதை செய்யக்கூடிய முடிவு இருவரிடம்தான் இருக்கிறது. படத்தின் இயக்குனர் அல்லது பாடல் காட்சி கட்டமைப்பாளர். இதில் நான் பிரபு தேவாவின் பங்கே அதிகம் இருக்கும் என நினைக்கிறேன். அவருடைய பிற பாடல்களைப் பார்க்கும்போது.
2. மெட்டு பற்றியும் நான் ஏதும் கூறவில்லை. தாள கதியைத் தவிர. சாதரணமான மெட்டு என்றாலும் எல்லோருக்கும் பிடித்திருக்கலாம் அல்லவா?
3. எடிடிங்கும், மெட்டும் எனது focus இலே இல்லை. அவை துணை நடிகர்கள்தான்.
4. நான் பேசுவது இந்தப் பாடலின் காட்சி வடிவ அமைப்பு பற்றி. அதை வடிவவாதத்தைன் மூலம் அணுகுதல். அதுதான் எனது விவாதத்திற்கு வேண்டும்.

அருள்

பாரதிய நவீன இளவரசன் said...

மிக நல்ல பதிவு. பல விஷயங்களைத் தெரிந்துகொண்டேன்.

நன்றி.

Anonymous said...

இந்த பதிவிலே மறுமொழிபவர்கள் பெயர் தெரிய மாட்டேன் என்கிறது.. வார்ப்பிலே ஒரு சிக்கல் இருக்கிறது... மேல் விவரங்களுக்கு,

http://valaipadhivan.blogspot.com/2008/07/said.html

arulselvan said...

prakash
yes. will fix it tomorrow.
a changed template resulted in this.
arul

Voice on Wings said...

//தமிழ்த் திரைப்படங்களில் தவிர்க்க முடியாத, என்னைப் பொருத்தவரை தவிர்க்கக் கூடாத,//

இதை நாராயணனும் சிலாகித்திருக்கிறார். ஒரு திரைப்படத்திற்குப் பாடல் காட்சிகள் தேவையில்லை என்பதை (ஜோல்னா பையின் துணையில்லாமலேயே) உறுதியாக நம்புகிறேன். வீட்டில் குறுந்தகடுகளில் படம் பார்க்கும்போது இந்தப் பாடல் காட்சிகளை forward / skip செய்துவிட்டுத்தான் பார்ப்பது வழக்கம். கதையோட்டத்திற்கு மிகப் பெரிய தடைக்கல்லாக இருப்பது இந்தப் பாடல் காட்சிகள்.

Videos என்ற கலைவடிவம் மேற்கில் MTVயால் கொண்டு வரப்பட்டு உலகனைத்திற்கும் விநியோகமாகிக் கொண்டிருக்கிறது. அதை stand-aloneஆக நம்மால் ரசிக்க முடிகிறது. அவ்வாறான படைப்புகளை திரைப்படம் என்ற சட்டகத்திற்குள் வைக்காமல் தனியாக அவற்றை சந்தைப் படுத்தலாம் என்பது எனது கருத்து.

நீங்கள் தந்துள்ள பாடல் காட்சியை மிகவும் ரசித்தேன் என்பதையும் குறிப்பிட்டுக் கொள்கிறேன். ஆனால் படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது plotடுக்கு நடுவே இதை ரசித்திருக்க முடியுமா என்று சந்தேகமாகத்தான் உள்ளது. அவ்விதத்தில், படைப்பாளியின் உழைப்புக்கு நியாயம் வழங்கப்படாமல் போகும் வாய்ப்பும் ஏற்பட்டு விடுகிறது, இப்படி வலுக்கட்டாயமாக பாடல் காட்சியைப் பார்வையாளன் மீது திணிப்பதால்.

Unknown said...

எனக்கு இசை பற்றிய நுணுக்கங்கள் தெரியாது. இசையை கேட்பவன் என்ற ரீதியிலேயே இதை எழுத முற்படுகிறேன்.

பீத்தோவனின் ‘Fifth symphony'யையும் அதன் வடிவம் சார்ந்த நோக்கில் ஆராயலாம். வியன்னா மீது நெப்போலியன் படையெடுத்து ஆக்ரமித்த சமயத்தில் ”Fifth symphony" உருவாக்கப்பட்டது. ‘Fifth symphony'க்கு பீத்தோவன் இட்ட பெயர் ”Fate knocking at the Door". ‘Fifth symphony'இன் ஆரம்பமும் அவ்வாறே -‘காலன் கதவைத் தட்டுவது போலவே' (”டடட டான்ன் டடட டான்ன்”) - இருக்கும். இவ்வகை ‘Fate Motif"ஐ அந்த முழு compositionலும் காணலாம்.


இவ்வகை 'semiotic analysis' வடிவம் சார்ந்த புரிதலுக்கு அவசியமானது. வடிவ அமைப்பின் கூட்டைக் கொண்டே பரந்த தளத்தை, உள்விரிவை, அடர்த்தியை உணர முடியாது. ஆனால் இவ்வகை முறைமைகளை மட்டும் கொண்டு ‘Fifth symphony' ஒருவருள் எழுப்பும் எண்ணற்ற படிமங்களை முழுமையாக விவரிக்க இயலாது. இதையே வேறு வகையில் சொன்னால், 'வடிவம்' exterior dimension ஆகும். அது ஒருவருள் - படைப்பாளியுள், வாசகருள் - எழுப்பும் படிமங்கள் interior dimesion. இரண்டுமே முக்கியமானது.

எனக்கு 'How to Name it'ல் வரும் ‘Do Anything'இன் preludeஐ கேட்கும் பொழுதெல்லாம் ஒரு சிறுமி செம்மண் படிந்த ஆளில்லாத வீதியொன்றில் சைக்கில் ஓட்ட கற்றுக் கொள்வது போலும் அதன் ‘crescendo'வின் போது முதல் சைக்கில் ‘balance' கிடைத்துவிட்டது போலவும், அந்த உவகையில் சிறிது தூரம் அவள் பயனிப்பது போன்ற ஒரு படிமமே தோன்றும். மற்றொருவருக்கு வேறு விதமாக தோன்றலாம். இவற்றை புறவய அளவுகோள்கள் மட்டும் கொண்டு அறிந்து கொள்ள முடியாது.

அதே போல் 'ராக்கம்மா கையத்தட்டு' வேறு வகை படிமத்தை என்னுள் எழுப்பும்.. ‘தென்றல் வந்து தீண்டும் போது' வேறு வகை படிமத்தை. both interior and exterior dimensions are important. semiotic analysis ,sliding chain of signifiers etc are good approaches but that alone is not reflective of the entire spectrum.

Balaji said...

actually i want to write the comment in tamil,but ok.why dont you write in an understandable manner.
why you are using such difficult tamil (?)any way you will ask what is difficult and easy tamil.
if you publish this comment it is going to create flak among your fans
my request is write it in easy tamil
and not compromising on the quality and quantity

arulselvan said...

பாலாஜி,


கடினமான தமிழில் வேண்டுமென்றே நான் எழுதவில்லை.
எனக்குத் தெரிந்த தமிழில், முடிந்த அளவு எளிமையாகவே எழுதுகிறேன்.
எழுத முயற்சியும் செய்கிறேன்.

ஏதாவது குறிப்பிட்ட இடத்தில் தவறென்று பட்டால் சொல்லவும். இல்லை கடினமாக இருந்தாலும் சொல்லவும். தாராளமாக எளிமைப்படுத்த/விளக்க/விவாதிக்க முடியும்.

அருள்