Wednesday, October 15, 2008

சினிமாவும், நானும் ...

இரண்டு விஷயங்களைப் பற்றி பதிவு எழுதக்கூடாது என்று நீண்டநாட்களாக வைத்திருந்தேன். ஒன்று சினிமா விமரிசனம். இரண்டாவது கிரிக்கெட். இதை முறித்து தாரே ஜமீன் பர் படத்தைப் பற்றி எழுதியதால் சினிமாவைப் பற்றிய விரதம் முடிஞ்சு போச்சு. இப்போது மதி வழியாக வந்த சினிமா மீமை வைத்து இந்தப் பதிவு.

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவு தெரிந்து கண்ட முதல் சினிமா. என்ன உணர்ந்தீர்கள்?
எனக்கு நன்றாக நினைவிருக்கும் முதல் படம் ஹட்டாரி. பெரும் பாதிப்பு. ஒட்டகச் சிவிங்கி, காண்டாமிருகம் என்று கனவெல்லாம் நிறைந்த சினிமா. நாலாம் கிளாஸ் படிக்கும்போது பார்த்தது. அதை வைத்து நானும் என் தம்பியும் வரைந்த ஓவியங்களுக்கு மாநில அளவிலான போட்டியில் எங்கள் இருவருக்குமே தத்தம் வயதுக்கான இரண்டாவது பரிசு!. அப்புறம் வா ராஜா வா, அகத்தியர், திருமலை தென்குமரி என்று இப்போதும் நினைவிருக்கும் படங்கள்.

2.கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த சினிமா?
தசாவதாரம். பையனும் மனைவியும் நன்றாக ரசித்தார்கள்.
ஆங்கிலத்தில்: கடைசி ஜேம்ஸ்பாண்ட் படம்.


3.கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
சிவாஜி. சங்கரும் இந்தக்கால ரஜினியும் சேர்ந்தால் என்ன உணர்வு வரும்? அதேதான்.

4.மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா
'தாக்கிய' என்பதற்கு பதில் பிடித்த என்று வைத்துக்கொண்டால், ஒரு லிஸ்ட்:
புதிய பறவை, சிவகங்கைச் சீமை, ஆயிரத்தில் ஒருவன், அந்த நாள், வல்லவன் ஒருவன், பதினாறு வயதினிலே, மூடு பனி, ஜானி, அவள் அப்படித்தான்.

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
எம்ஜீயார் உலகம் சுற்றும் வாலிபன் வெளியிட்டபோது அந்தப் படம் பார்த்து விட்டு இதுக்கு ஏன் இவ்வளவு கலாட்டா என்று நினைத்தது. படம் அப்போது பிடித்திருந்தது.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?
ஒன்றுமில்லை.

6.தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
ஒரு காலத்தில் அனத்து சிறுபத்திரிக்கைகளிலும் வருவதை தவறாமல் படித்ததுண்டு. இப்போது இணையத்திலேயே நண்பர்கள் சிலபேர் அருமையாக எழுதுகிறார்கள்.

7.தமிழ்ச்சினிமா இசை?
பாடல்களைச் சொல்கிறீர்கள் என்றால், இசையில்லாத தமிழ் சினிமா எனக்கு மிகவும் அந்நியமாக இருக்கும். தமிழ் சினிமாப் பாட்டு எனக்கு கற்றுத்தராத ஒன்று என்று எதுவுமில்லை எனச் சொல்லும் அளவுக்கு சினிமா பாட்டு பிடிக்கும். மிகப் பிடித்த பாடகர்: டி. எம். சவுந்திரராஜன், மிகப் பிடித்த பாடகி: எல்.ஆர். ஈஸ்வரி, மிகப்பிடித்த இசையமைப்பாளர்கள்: இளையராஜா, எம்.எஸ். வி.
டூயட் பாட்டு எதுக்கு என்று கேட்பவர்களைப் பார்த்து, அரவிந்தனின் போக்குவெய்யிலில் ஹரிபிரசாத் சொளராசியா எதுக்கோ அதுக்கு என்று சொல்லத்தோன்றுகிறது. சினிமாவே ஒரு கட்டமைக்கப்பட்ட புரளிதான். இதில் அமைப்பியல்/வடிவ இயல் ரீதியில் சினிமாப் பாட்டுக்கு என்ன எதிர்ப்பு இருக்கமுடியும். தமிழ்ப் படங்களில் சினிமாப் பாட்டு வருவது அபத்தம் என்று சொல்பவர்கள் முதலில் ஐசன்ஸ்டைன்னின் The Film Sense மட்டுமாவது படித்துவிட்டு வந்தால் ஏதாவது விவாதிக்கலாம். உலகச்சினிமாவில் பாட்டு இல்லை என்றால், தமிழ்ச் சினிமா என்ன செய்யும்.
பழைய இந்திப் பாடல்களும் நிறையப் பிடிக்கும். கிஷோர் குமார், ஆஷா, ஆர்.டி. பர்மன் அங்கே பிடித்தவர்கள்.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
இந்தியத் திரைப்படங்கள்: 70/ 80 களில் வந்த ஹிந்தி பேரலல் படங்கள் அனைத்தும், கன்னட கிராமிய புராணிகங்கள் (காடு, சம்ஸ்கரா,சோமன துடி, காடு குதிரே, ஒந்தானொந்து காலதல்லி...), மலையாளத்தின் அடூர், அரவிந்தன் படங்கள் அனைத்தும் என ஒருகாலத்தில் ஒரு சுற்று சுற்றியதுண்டு. 15 வருடங்களாக பார்ப்பதில்லை.
உலகத்திரைப்படங்கள்: 90 க்கு முன் வந்த கிளாசிக்ஸ் என அறியப்படும் ஐரோப்பிய, ரஷ்ய, ஜப்பானிய, அமெரிக்க படங்களில் ஏகதேசம் பார்த்திருப்பேன். அதுக்கப்புறம் இல்லை. பிடித்த இயக்குனர்களும், படங்களும் பல. பெரிய பட்டியலாகும் என்பதால் தரவில்லை.ஏனோ சினிமா போதும் என்று அப்போது தோன்றிவிட்டது. நிறுத்திவிட்டேன்.

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
இல்லை.

10.தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நன்றாகத்தான் இருக்கிறது. ஹாலிவுட், இந்திப் படங்களின் பாதிப்பில் இந்திய மொழிச் சினிமாக்கள் ஏறக்குறைய அழிந்துபோய்க்கொண்டு இருக்கின்றன. தமிழ் ஒன்றுதான் தாக்குப் பிடிக்கிறது. அதற்கு தமிழ் மசாலா படங்களைத்தான் காரணம் சொல்ல முடியும். ரஜினி, விஜய், கமலஹாசன், வடிவேலு, அஜித், விக்ரம் போன்றவர்கள் தான் காரணம். வேறுவிதமாக நல்ல படங்கள் எடுக்கலாம் என நினைப்பவர்கள் செயல்பட முடிவதும் இந்த மசாலாப் படங்கள் ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் சந்தையின் காரணமாகத்தான். இல்லா விட்டால் Ivan the terrible II க்கு ஏற்பட்ட கதிதான். சமரசங்கள் யாருடன் செய்யவேண்டும்? அரசுடனா, அதிகாரத்துடனா, மக்களுடனா? மக்கள் சந்தையில் சமரசங்கள் செய்வதே மேல் என்று படுகிறது. புது இயக்குனர்கள் நன்றாகவே செய்கிறார்கள்.

11.அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
96-06 பத்தாண்டுகள் சென்னையில் இருந்தேன். ஒரு தமிழ்படம் கூட பார்க்கவில்லை! வீட்டில் தொலைக்காட்சி இணைப்பும் தரவில்லை. அதனால் எனக்கு ஒன்றும் ஆகாது. தமிழர்களுக்கு பொதுவாக பைத்தியம் பிடிக்கலாம்.

நான் அழைக்கவேண்டும் என்று நினைப்பவர்களை ஏற்கனவே மற்றவர்கள் அழைத்து விட்டார்கள். எனவே விருப்பமிருக்கும் அனைவரும் எழுதலாம்.

No comments: