Sunday, November 30, 2008

மும்பாய் பயங்கரவாதம்

மும்பாய் பயங்கரவாதம்


  மும்பாயில் நடந்தது உலகு தழுவிய இஸ்லாமிய பயங்கரவாதத்தின் இரண்டாவது இந்தியத் தாக்குதல் என்றே கூறலாம். இன்றைக்கு மூன்று ஆண்டுகளுக்கு  முன் நடந்த பெங்களூர்த் தாக்குதல் முதலாவது. அதைப் பற்றிய எனது பதிவு இங்கே . அப்போது காலம் கடந்து விட்டது என்று எழுதியிருந்தேன். அது இந்தியாவின் மூளையைக் குறிவைத்த செயல். இது நாட்டின் பொருள் வளத்துக்குக் குறி. இத்தகைய பயங்கரவாதச் செயல்களிலிருந்து மக்களைப் பாதுகாக்க அரசு மூன்றாண்டுகளாக எந்தவித முன்னெடுப்பும் செய்யவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. மன்னிக்க முடியாத குற்றம். காங்கிரஸ் (யூபிஏ) அரசுக்கு தன்னை மறைத்துக்கொள்ள எந்தவித காரணங்களும் இல்லை.  சில குறிப்புகள்:

1. பலரும் பயங்கரவாதிகளுக்கு மதம் இல்லை என்று திரும்பத் திரும்ப ஏன் கூறுகிறார்கள். எதைக் காரணமாகக் கொண்டும் பயங்கரவாதத்தைச் செய்யலாம். மதம்தான் உலகசரித்திரத்தில் மிக அதிகமான பயங்கரவாத உயிர்க்கொலைகளுக்கு காரணம். அடுத்த காரணம் நாடு. நடந்தது இஸ்லாமிய பயங்கரவாதம்- இதில் எந்த  சந்தேகமும் இல்லை. பாகிஸ்தான், பங்களாதேச முஸ்லிம்கள் இதில் சம்பத்தப் பட்டிருந்ததாக இப்போது செய்திகள் தெரிவிக்கின்றன. 

2. இது நடக்கும் போது இந்தியாவில் ஒரு கூட்டத்தில் பேட்டி அளித்துக்கொண்டிருந்தார் பாகிஸ்தானிய அயலுறவு அமைச்சர் ஷா குரேஷி. தொலைக்காட்சியில் காட்டிக்கொண்டிருக்கும்போதே அவருக்கு பிரணாப் முகர்ஜியிடமிருந்து தொலை பேசி அழைப்பு. ஆரவாரமாக பேச ஆரம்பித்த குரேஷியின் முகம் இறுகி வெறுமனே "ஹாங் ஜி", "ஜி" என்று கேட்டுக்கொண்டிருந்தார். தொலைக்காட்சியில் அவரை வறுத்து எடுத்து விட்டார்கள். பாகிஸ்தானின் உளவுப் பிரிவு தலைவர் இந்தியாவிற்கு வருவார் என்று கூறிய குரேஷி இன்று பாகிஸ்தான் சென்றவுடன் 'எங்கள் கைகள் சுத்தமாக இருக்கின்றன. பாகிஸ்தானின் ஆதரவுக்கு ஆதாரம் கொடுங்கள்' என்று எப்போதும் போல் கூறுகிறார். இந்தியாவிற்கு எந்த பாகிஸ்தானிய அரசும் சற்றும் உதவி செய்யாது என்பது தெளிவு. இதில் டிப்ளமேடிக்காக அணுகலாம் என்ற முயற்சிக்கே வழியில்லை போலத்தான் திரும்பத் திரும்பத் தெரிகிறது. இந்தியா என்ன செய்யவேண்டும் ?

3. பாகிஸ்தான் முழுவதுமாக சிதைந்து கொண்டு இருக்கிறது. பலூச்சி, வடமேற்குப் பிராந்தியங்கள் அனைத்தும் மோசமாகிக் கொண்டிருக்கின்றன. பொருளாதாரம் அடிமட்டத்துக்குப் போய்விட்டது. ராணுவமும் உளவுத்துறையும் சிவிலியன் அதிகாரத்தில் இல்லை. அமெரிக்கா ஆப்கான் எல்லையில் இஷ்டத்துக்கு என்னமோ செய்கிறது. ஏகப்பட்ட ஆயுதங்கள் பொதுமக்களிடம் பரவி உள்ளன. அணுஆயுத பலமிக்க கட்டுக்கடங்காத ராணுவம், மோசமான நம்பிக்கையில்லாத பொருளாதாரம், மத அடிப்படைவாத மீட்டெழுச்சி, பிராந்த்தியங்களில் உள்நாட்டுப்போர், அமெரிக்க-மேற்கத்தியப் படைகளின் ஊடுருவல் என அனைத்துக் கோணங்களிலும் பெரும் உள்வெடிப்புக்கு தயாராகி வருகிறது. இந்தியாவிற்கு இதனால் எந்த விதத்திலும் நிம்மதி கிடைக்கப் போவது இல்லை. தற்காப்புதான் ஒரே வழி.

4. இன்றைக்கு மேற்கத்தியர்கள் சம்பத்தப் பட்டிருப்பதால் அமெரிக்கா பிரிட்டன் போன்ர நாடுகளில் சற்றே இந்திய ஆதரவு குரல் கேட்கிறது. அதைதாண்டி எந்த வித தீர்மானமான முடிவுக்கும் இந்நாடுகளின் ஆதரவு இந்தியாவிற்குக் கிடைக்காது.  இந்தப் பிரச்சினையில் இந்தியா எப்போதும் போல் தனித்துத் தான் எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

5. அதிரடிப் படைகளை நாடுமுழுவதும் பரவலாக்குதலும் உடனடி பிரயோகத்திற்கான செயல் கேந்திரங்களை அமைப்பதும் என்றோ நடந்திருக்க வேண்டியவை. மற்றபடி பாதுகாப்புப் படைகள் அனைத்தும் பழைமையாகிக் கொண்டு இருக்கின்றன. கப்பல் படை போதுமான நீர்மூழ்கிகள், போர்க்கப்பல்கள் இல்லாமல் இருக்கிறது. விமானங்களும் இற்றைப்படுத்தப் படவில்லை.

6. காஷ்மீர் பிரச்சனை இந்திய முஸ்லிம்களின் முழுப் பிரச்சனை அல்ல. ஆட்களைக் கவர முதல் கட்ட ஈர்ப்புக்கு மட்டுமே அதை பயன்படுத்த முடியும். மற்றபடி பெரும்பான்மையான இந்திய முஸ்லிம்களின் பிரச்சனை மற்ற எல்லோருக்கும் இருக்கும் பிழைப்பு பற்றியதுதான். வளர்ந்து வரும் இந்திய பொருளாதாரத்தில் தங்களையும் இணத்துக்கொள்ளலாம் என பெரும்பான்மை மக்களின் அனைத்து பொருளாதார அடுக்குகளிலும் இருக்கும் மக்களுக்குத் தோன்றும் ஒரு மாய நம்பிக்கை கூட முஸ்லிம்களுக்கு இல்லை. இதற்குக் காரணம் மிக முக்கியமாக இஸ்லாமிய மதப் படிப்புதான் காரணம். அதை மற்றவர்களால் சரி செய்ய இயலாது.

7. நாட்டின் அரசியல் கட்சிகளில் நான் பெரிசு நீ பெரிசு என்று பேச ஒன்றுமில்லை. கடந்த பிஜே பி அரசு பாதுகாப்பாக வெளியே கொண்டுபோய் விட்டுவந்த மசூத் அஸார், ஒமார் ஷேக் போன்றவர்களை கடந்த ஆண்டுகளில் இந்தியாவில் நடந்த பல பயங்கரவாதச் செயல்களுடன் சம்பந்தப் படுத்தி பல அறிக்கைகள் உள்ளன. இத்தகைய செயல்களில் காங்கிரசும் பிஜேபியும் ஒரே அளவு அரசியல் தகுதிதான் கொண்டவர்கள். அசிங்கமான அரசியல் செய்ய முயன்ற மோடியை இறந்த அதிரடிப் படைத் தலைவர்  ஹேமந்த் கார்கரேயின் மனைவி  நடத்தியதை நாடே பார்க்கிறது. 

8. இஸ்ரேலில் இருந்து  நாங்கள் உதவி இருந்தால் உயிர் இழப்பைத் தடுத்திருக்கலாம் என்று குரல்கள் வருகின்றன. பயங்கரவாதிகளின் குறியே மிக அதிகமானவர்களைக் கொல்லுதல் என்று இருக்கும்போது இந்தியப் படையினர் செய்ததே சரி. இதற்கெல்லாம் பிற நாடுகளின் உதவிகளை பெறத் தேவையில்லை. புலனாய்விலும் துப்புகளை பகிர்ந்து கொள்வதிலும் உலகளாவிய புரிந்துணர்வு இருந்தால் பலதைத் தடுக்கலாம்.

9.  உயிர் இழந்த பொதுமக்களுக்கும், பணியில் உயிர் துறந்த படை வீரர்களுக்கும் அஞ்சலி.

10.  பொறுப்பேற்று அமைச்சர் சிவராஜ் பாடீல், செயலாளர் எம். கே. நாராயணன் முதலியோர் பதவித்துறப்பு செய்துள்ளதாக செய்திகள் வருகின்றன. இப்போதாவது அமைச்சரவை சில முடிவுகளை எடுப்பதற்கு நன்றி சொல்லத்தான் முடியும்.உருப்படியாக வேறு திட்டங்கள் வந்தால் சரி.

-