Saturday, December 19, 2009

கோபன்ஹாகன்: புவிவெப்ப மாநாடு (Climate Change Summit )- 1

கோபன்ஹாகன்: புவிவெப்ப மாநாடு (Climate Change Summit )- 1
================================

ஒருவழியாக மாநாட்டின் கடைசி நாளில் ஏதோ ஒரு உடன்பாடு ஏற்பட்டிருப்பது மகிழ்ச்சிதான். உடன்படிக்கையின் முழுப் பிரதியும் இன்னும் கையொப்பமிடப்படவில்லை. ஆனால் உடன்பாட்டிற்கான முன்னோட்டப் பிரதி அமெரிக்கா, சீனா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, பிரேசில் ஆகிய ஐந்து நாடுகளின் தலைவர்களுக்குள் நடந்த ஆலோசனையின் பெயரில் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கின்றது. இது ஒரு அனைத்துலக மாநாடு என்றபோதும், அமெரிக்க அதிபர் ஒபாமா மாநாட்டுக்கு வந்தவுடன் இந்த ஐந்து நாடுகளின் தலைவர்களுடன் இணைந்து இதுதான் இந்த மாநாட்டிற்கான ஒப்பந்தம் என்று ஒன்றை கொடுத்துவிட்டு, அமரிக்க தெலிவிஷனில் தம் நாட்டுமக்களுக்கும் கூறிவிட்டு நாடு திரும்ப விமானம் ஏறிவிட்டார். ஆனால் ஐரோப்பிய கூட்டமைப்பு மிகுந்த கடுப்பில் இருப்பதுபோல் இருக்கிறது. க்யூபா, பொலீவியா போன்ற மற்ற நாடுகளும் இது ஜனநாயகமான முறை அல்ல, ஏற்கமுடியாது என்று கூறுகின்றன.
எனினும் அனேகமாக ஒப்பந்தமாக மாறக்கூடிய (சிற்சிறு மாற்றங்களுடன்) பிரதியின் சுருக்கப்பட்ட தமிழாக்கம்:

கோபன்ஹாகன் ஒப்பந்தத்தின் முன்வரைவுப் படி: Draft text of new "Copenhagen Accord"
(சுருக்கப் பட்ட, சற்றே மாற்றப்பட்ட வடிவம்)
நீண்டகால கூட்டுச் செயல்பாடுகள், முந்தைய க்யோத்தோ வரைவின் தொடர்ச்சியை முன்வைத்தும் தற்காலிக குழு தொடர்ந்த்து இயங்கும்படி வேண்டிக்கொண்டு இவ்வறிக்கை தொடங்குகிறது.
1. அனைத்து நாடுகளின் ஒன்றுபட்ட குறிக்கோளாக புவிவெப்ப மாறுதல்களை குறைப்பதை ஏற்கிறது. தனித்தனி நாடுகளுக்குள் வேறுபட்ட பொறுப்புகளையும், கடமைகளையும் ஏற்கிறது. பசுங்கூடு (green house) விளைவு ஏற்படுத்தும் கார்பன் டை ஆக்ஸைடு மீத்தேன் போன்ற மாசு வாயுக்களை உமிழ்வதன்மூலம் புவிவெப்பம் உயர்கிறது என்ற அறிவியல் வாதத்தை ஏற்கிறது. இவ்வுமிழ்வை கடுப்படுத்துவதன்மூலம் மேலும் அதிக பட்ச உயர்வாக 2 டிகிரி அளவே இருக்கவேண்டும்.
2. உலகளாவிய மாசுவாயு உமிழ்வு மிகக்கடுமையாக கட்டுப்படுத்தப் படவேண்டும், குறைக்கப் படவேண்டும். அனைத்துலக அளவில் 50% குறைப்பு நிகழ வேண்டும். இது 2050 ஆண்டுக்குள் நிகழத்தப் படவேண்டும். 1990 ஆண்டு அளவில் இந்த உமிழ்வு மட்டுப்படுத்தப்படும். தனித்தனி நாடுகளின் அதிகபட்ச உமிழ்வுகளை அடையும் வருடம் நாட்டுக்கு நாடு வேறுபடலாம். வளரும் நாடுகள், ஏழ்மையைபோக்க தேவையான தம் வளர்ச்சியை மட்டுப்படுத்த ஏலாது என்பதால் அவற்றிற்கு இந்த அதிகபட்ச உமிழ்வு குறிஆண்டை எட்ட அதிக காலம் தேவைப்படும் என்பது உணரப்படுகிறது.
3. கடற் கரையோர நாடுகள், சின்னன்சிறு தீவு நாடுகள், ஆகக்குறைய வளர்ச்சியடைந்த நாடுகள், காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் வளரும் நாடுகள் இவற்றில் ஏற்படும் வெள்ளாபாயங்கள், பாலைவனமாகுதல் முதலியவற்றை தடுக்கவும், தவிர்க்கவுமான தேவையான பொருள் உதவி, தொழில்நுட்ப உதவி, செயல்திறன் வளர்ச்சி உதவி இவற்றை வளர்ந்த நாடுகள் தரமுன்வரவேண்டும்.
4. பிற்சேர்க்கை 1 ல் வரும் நாடுகள், தனித்தனியாகவோ சேர்ந்தோ 80% உமிழ்வுகளை 2050க்குள் குறைக்கும். 2020 க்குள் தனித்தனியாக அவை குறைக்கும் உமிழ்வுகள் X,Y (1990,2005 அளவுகளுடன் பார்க்க) சதவீதம் இருக்கும் (இவை பின்னர் ஒப்புக்கொள்லப்படும் என்று தெரிகிறது). முக்கியமாக முந்தைய க்யோத்தோ வரையரைகளை கணக்கில் கொண்டு அளக்கத்தக்க, அறியத்தக்க உமிழ்வுக்குறைப்புக்கு இந்நாடுகள் ஒப்புக்கொள்ளும்.
5. பிற்சேர்க்கை 1 இல் வராத நாடுகள், பின்னிணைப்பு 2 இல் வரும் தடுப்பு செயல்பாடுகளையும், தக்கவைக்கக்கூடிய வளர்ச்சி முறைகளையும் பின்பற்றும். இவற்றைபற்றிய அறிக்கைகளை இரண்டாண்டுகளுக்கொருமுறை இந்நாடுகள் அளிக்கும். பன்னாட்டு உதவிகள் இருக்கும்போது அவை முறைப்படி குறிப்பு எடுக்கப்பட்டு, அறிக்கைகள் தயாரிக்கப்படும். அத்திட்டங்கள் பன்னாட்டு மேற்பார்வையிலும், சரிபார்த்தலிலும் நடத்தப்படும்.
6. காடுநசிவு , காடுஅழிப்பு இவற்றின் மூலம் ஏற்படும் உமிழ்வுகளை கட்டுப்படுத்தவும் பாதிக்கப்படும் நாடுகள் அவற்றை சரியாக்கும் முயற்சிகளுக்கான நிதி, தொழில்நுட்ப உதவிகளை வளர்ந்த நாடுகள் அளிக்கும்
7. தடுப்புச் செயல்பாடுகளுக்காக சந்தை பொருளாதார முறைகள் உள்ளிட்ட, அனைத்து வழிகளிலும் முயற்சிகள் செய்யப்படும். நிதிச் சலுகைகளும் அளிக்கப்படும்.
8. இருக்கும் நிதி அதிகரிப்பு, புது நிதி வழங்குதல் இவற்றின் மூலம் காப்புத்திட்டங்கள், காடுபாதுகாப்பு, நுட்பவளர்ச்சி போன்ற திட்டங்களுக்கு உதவி நல்குதல். அது சஏறக்குறைய 30 பில்லியன் டாலர் நிதியாக 2010-2012 க்குள் இருக்கும் என அறிவிக்கப்படுகிறது. 2020லிருந்து ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர்கள் நிதி திரட்டவும் அவற்றை கண்காணிப்புடன் கூடிய திட்டங்களுக்கு வளர்நாடுகளுக்கு வழங்கவும் முன்மொழியப்படுகிறது.
9. இதற்காக ஒரு உயர்மட்டக் குழு ஒன்று அனைத்து நாடுகளை உள்ளிட்டு அமைக்கப்படும். அது இதனால் வரும் வருமான வழிமுரைகளையும், மாற்று நிதித் திட்டங்களையும் முறைப்படுத்தும்
10. 'கோபன்ஹாகன் தட்பவெப்பநிலை நிதியம்' ஒன்று அமைக்கப்படும். அது அனைத்து திட்டங்களையும், செயல்பாடுகளையும், செயல்திட்டங்களையும் வளர்நாடுகளில் ஆய்வு, நுட்ப அமைப்பு, ஆராய்ச்சி, முதலியவற்றை கவனிக்கும்
11. தனிப்பட்ட நாடுகளின் முன்னுரிமையைகளை முன்வைத்து காப்பச் செயல்திட்டங்கள், நுட்ப பரிமாற்றம், நுட்ப ஆய்வு இவை நடத்தத் தக்க நடைமுறை செயல்திட்டங்கள் வகுக்கப் படும்.
12. 2016 ஆம் ஆண்டிற்குள் இந்த உப்பந்தத்தின் அனைத்து கூறுகளும் நடைமுறையாக்கப் பெற்றமைக்கான தணிக்கை மீள்நோக்கு செய்யப்படும். நீண்டகால திட்டமான வெப்ப உயர்வை 1.5 டிகிரிக்குள் அடக்குவது பற்றியும் இது இருக்கும்.

இம்மாநாட்டின் மூலம் ஏதாவது பயன் உண்டா, புவிவெப்பப் பிரச்சினைதான் என்ன?, இந்தியாவிற்கு என்ன சாதக பாதகங்கள் என்பதைபற்றி அடுத்து பார்ப்போம்.

(தொடரும்)