Wednesday, October 06, 2010

2010 இயல்பியல் நோபல் பரிசு (physics nobel) - கரியின் அடுக்குகள்-1

இந்த வருட இயல்பியல் நோபல் - கரியின் அடுக்குகள்

================================================இந்த வருட இயல்பியல் நோபல் பரிசைப் பார்த்தவுடன் எனக்கு முதலில் நினைவுக்கு வந்தது என் சிறுவயது கிராம நினைவுகள்தான். எங்கள் ஊரில் காக்கைப்பொன் என்று அழைக்கப்படும் மைக்கா ஆங்காங்கே கிடைக்கும். கருப்பு நிறமாக கற்களுக்கு இடையில் பாளம் பாளமாக கிடைக்கும். சிறுவர்கள் நாங்கள் அதை வயல்வெளிகளில் தேடிச்சென்று தோண்டி எடுத்து விளையாடுவோம். காக்கைப் பொன்னின் முக்கிய பண்புகளில் ஒன்று அது பாளம் பாளமாக இருப்பது. படம் 1 ஐப் பாருங்கள். கட்டி போல இருந்தாலும் அதை நகத்தாலோ, குட்டி பிளேடாலோ மெல்லக் கீறினால் சன்னமான தகடுகளாக அதை உரிப்பதுபோல பிளந்து எடுத்து விடலாம். யார் மிகச்சன்னமான ஒரு காக்கைப்பொன் தகட்டை பிளப்பார்கள் என்பது எங்கள் அரை டிரவுசர் நண்பர்களுக்குள் அடிக்கடி நடக்கும் போட்டி. இந்தப் பிளப்பது (cleaving) என்பது மிக நுணுக்கமாக நடப்பது. அதாவது ஒரு உளியை வைத்து மரத்தைப் பிளப்பது போல அல்ல இது. இது அணுவளவில் நுணுக்கமானது. அதாவது பிளந்த பாளங்களின் இரு பரப்புகளும் ஒன்றுக்கொன்று சீரான அமைப்புடன் அணுவளவில் பிளக்குமுன் பொருந்தி இருந்தவை. இதைப்பற்றி பின்னால் விளக்கலாம்.
இயற்கையில் தனிமங்களும் தனிமங்களால் ஆன கூட்டுப்பொருள்களும் பலசமயம் ஒரு சீரான அணு அமைப்புடன் கட்டப்பட்டு இருக்கின்றன. இவற்றை படிகங்கள் (க்ரிஸ்டல், crystal) என அழைக்கிறோம். படிகங்கள் என்றால் அவற்றின் அணு அல்லது மூலக்கூறு அமைப்பு ஒரு சீரான முறையில் முப்பரிமாணத்தில் கட்டப்பட்டது என்று பொருள். உப்பு. சர்க்கரை போன்ற அன்றாடப் பொருள்களையும் படிகமாக்கலாம். வைரம், நீலம் போன்ற விலைஅதிகம் கொண்ட கற்களும் படிகங்கள்தான் . இவை இயற்கையாக கிடைக்கிறன. வேண்டுமானால் ஆய்வுக்கூடங்களிலும் செய்துகொள்ளலாம். அது தவிர சாதாரண அலுமினியம், செம்பு, முதல் தங்கம் போன்ற உலோகங்களையும் படிகமாக்கலாம். இவற்றில் கவனிக்க வேண்டிய விடயம் இவை அனைத்தும் முப்பரிமாண படிகங்களாகும். (சில படங்களைப் பாருங்கள்)ஆனால் காக்கைப்பொன்போன்ற படிகங்கள் முப்பரிமாணமாகத் தோன்றினாலும் அவற்றின் அடுக்குகளுக்கு இடையேயான பிணைப்புகள் அவ்வளவு உறுதியானவை அல்ல. அதனால்தான் அவ்வடுக்குகளை எளிதில் தனித்தனியாக பிளந்து எடுத்துவிட முடிகிறது. ஒரு எடுத்துக்காட்டாக கூறவேண்டுமானால் (அடுப்புக்) கரியை கூறலாம். கரி என்பது முக்கியமாக இரு படிக வடிவங்களில் இயற்கையில் கிடைக்கிறது. ஒன்று வைரப் படிகங்களாக. வைரம் ஒரு கடினமான, உறுதியான (இவை இரண்டும் வேறுவேறு பண்புகள்) பொருள் என்பது நமக்குத் தெரியும். அது வெறும் கரிதான். அதேபோல் கரியின் இயற்கையான மற்றொரு வடிவம் கிராபைட் எனப்படுகிறது. இது ஒரு பாளங்களால் ஆன வடிவமாகும். அதாவது இரண்டு கரிப்பாளங்களுக்கு நடுவில் பிணைப்பு வலிமை இல்லை. நாம் பாளங்கள்,அடுக்குகள்,தளங்கள் என்று பலவகையிலும் குறிப்பிடுவது ஒரே பொருளில்தான். அடுக்கு என்பது சாதாரண வழக்குச் சொல் என்றும் பாளம் என்பதை லேயர் (layer ) எனும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையாகவும் தளம் என்பதை சர்பேஸ் எனும் கணித வழக்கிலும் (surface ) கூறலாம். அனைத்தும் அணு அடுக்குகளையே இக்கட்டுரையில் குறிக்கும் என்பதை நினைவில் கொள்வோம். தளம்,அடுக்கு,பாளம் என மாற்றி மாற்றி பாவித்தாலும் அவை குறிப்பது இனிமேல் கரிஅணுக்களால் ஆன ஒரு இருபரிமாண தளத்தையே.


கரியின் கிராபைட் படிக வடிவத்தைப்பற்றிப்பேசிக்கொண்டிருந்தோம். அது கரி அணுத் தளங்களால் ஆன ஒரு அமைப்பு. ஒருதளத்திற்க்கும் அடுத்த தளத்திற்கும் இடையில் வலிமையற்ற அணுப்பிணைப்பான வான்- டெர்- வால்ஸ் பிணைப்பு மட்டுமே உண்டு. அதனால் அடுக்கிவைக்கப்பட்ட சீட்டுக்கட்டை நகர்த்துவதுபோல ஒரு அடுக்கை இன்னொன்றின் மீது எந்த ஒரு எதிர்ப்பும் இல்லாமல் நகர்த்த முடியும். இதனால் இவ்வகையான கிராபைட் ஒரு திட உயவுப் பொருளாக பயன்படுத்தப் படுகிறது. எண்ணைக்கு பதிலாக பற்சக்கரங்கள், பேரிங்குகள் போன்றவற்றில் சில நேரங்களில் கிராபைட்டையும், மாலிப்டினம் டை சல்பைடு எனும் இன்னொரு அடுக்கு படிகத்தையும் பயன்படுத்தலாம்.

இவ் வருட நொபல் பரிசு இந்த கரிப்பாளமான கிராபைட்டின் ஒரு அடுக்கை தனியாக பிரித்தெடுத்து அதன் பண்புகளை பயின்றதற்காக வழங்கப்பட்டிருக்கிறது. ஆன்றே கைம், கொன்ஸ்டன்டின் நோவோசெலாஃப் என்ற இரு இயல்பியலாளர்கள் இப்பரிசைப் பெறுகிறார்கள். இருவரும் இஙிலாந்திலுள்ள மான்செஸ்டர் பல்கலையில் நடத்திய ஆய்வுகள் இதற்கு அடித்தளமாகின.கரி கடந்த சில வருடங்களாகவே அறிவியலில் அதிகம் ஆய்வுநடத்தும் தனிமமாக மாறி உள்ளது. நானோ குழாய்களாகவும், உருளைகளாகவும், புல்லரீன் கோளங்களாகவும் பலவடிவங்களில் கரியின் நிலைத்தன்மை

கண்டுபிடிக்கப்பட்டுள்லது. ஆனால் இந்த ஒற்றை அணு தடிமனே கொண்ட ஒரு கரிப்பாளமாக தனியே பிரித்தெடுத்து அதன் பண்புகளைக்கற்று அதனை ஒரு நிலையான கரிவடிவமாக யாரும் ஆய்வு செய்யவில்லை. அப்படிச் செய்த கைம் மற்றும் கொன்ஸ்டண்டின் ஒரு முக்கியமான புள்ளிக்கு படிகங்களைப்பற்றிய அறிவை நகர்த்தி உள்ளனர். இந்த நிலையான கரி வடிவம் கிராபைட்டின் ஒரு அடுக்குத்தான் என்பதால் இதனை கிராபீன் என்று அழைக்கிறார்கள். கிராபீனின் மிக ஆச்சரியகரமான இயல்பியல் பண்புகளைப்பற்றி நாளை பார்ப்போம்.


Monday, August 30, 2010

அடையாளம், அரசியல்

அடையாள அரசியல்
-----------------------------

இந்த ஆரிய, திராவிட,தமிழ், சமஸ்கிருத சண்டைகளை ஓயாமல் நடப்பதால் இங்கே சில முக்கியக் கூறுகளைத் தொகுத்துக் கொள்கிறேன்.

அரசியல் நிலைபாடுகள்:
-------------------------
இந்துத்துவவாதிகள்:
1. சிந்து சமவெளி: சமஸ்கிருத நாகரிகம்
2. ஆரியர், திராவிடர் ஒரே இனம்;பிரிவினையே இல்லை
3. இந்து என்பது ஒரு தனி தேசியம்
4. தமிழ் சமஸ்கிருதம் இவை இரண்டும் (மற்ற இந்திய மொழிகளோடு) ஒரே மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவை.

தமிழ்த்தேசியவாதிகள்:
1. சிந்து சமவெளி: திராவிட அல்லது தமிழ் நாகரிகம்;
2. ஆரியர்-திராவிட இவை வேறு வேறு இனங்கள்;
3. தமிழ் என்பது தனி தேசியம்;
4. தமிழ்-சமஸ்கிருதம் இவை வேறு மொழிக்குடும்பங்களைச் சேர்ந்த மொழிகள்.

அறிவியல் (தற்போதைய) நிலைபாடு:
-------------------------------------------
1. மொழி,இடம்(நிலம்)சார்ந்த அடையாளங்கள் பருண்மையானவை.இனம் சார்ந்த அடையாளங்களுக்கு அறிவியல் ஆதரவு இல்லை.மத அடையாளம் பருண்மையானதல்ல.
2. திராவிட எனும் அடையாளம் மொழிக்குடும்பம் சார்ந்ததெனில் பருண்மையானது.இனம் சார்ந்ததெனில் பொய்யானது.ஆரியர் அடையாளமும் அவ்வாறே.
3. படையெடுத்துவந்து ஆரிய இனம் திராவிட இனத்தை வென்றது என்பதற்கான ஆதாரம் எதையும் காணோம்.
4. ப்ரோடோ-திராவிட மொழிக் கட்டு இல்லாமல் தமிழை மட்டும் வைத்து சிந்து நாகரிகத்தை அறியமுடியாது. அங்கு வாழ்ந்தவர் தமிழர் என்பற்கும் முடிபான ஆதாரம் இல்லை.
5. திராவிட மொழிகள் அனைத்திற்கும் (மலையாளம் தவிர்த்து) தனித்த பழமையான பண்பாட்டு வரலாறு உண்டு. தனி அடையாளமும் உண்டு.
6. சிந்து சமவெளி நாகரிகம்: திராவிட நாகரிகமாக இருக்கலாம்.சமஸ்கிருதம் ,தமிழ் வேற்று மொழிக்குடும்பங்கள்.


-

Saturday, July 31, 2010

ரோபோட் பாடல் - kraftwerk

எல்லோரும் புதுப்பாடல்களில் கதிகலங்கி இருக்கும் போது பழைய நினைவுகள் வருவதைத் தவிர்க்க இயலவில்லை.
1977 ஆம் ஆண்டு வெளிவந்த 'வீ ஆர் த ரோபோட்ஸ்'. (சுட்டியில் இருப்பது ஆங்கில வடிவம்)
அதன் ஜெர்மன் வடிவம் இங்கே
அப்போதைய மேற்கு ஜெர்மனியின் டூஸொல்டோர்ஃப் பைச் சார்ந்த 'க்ராஃப்ட் வெர்க்' (kraftwerk) எனும் குழுவினரின் இந்தப்பாடல் சில ஆண்டுகள் கழித்து பொறியியல் கற்க பெங்களூர் வந்த எங்கள் வருட மாணவர்களுக்கு ஒரு தேசிய கீதமாகவே இருந்தது. எங்கள் கல்விச்சாலையின் இசை அறையில் ஒரு பாடலுக்கு ஐந்து பைசா கொடுத்து ஒரு தடிப் புத்தகத்தில் பதித்து வைத்துவிட்டு சோபாக்களில் நீட்டிச் சாய்ந்து கொண்டு நண்பர்களுடன் இரவு உணவுக்குப் பின் நள்ளிரவுவரை கேட்டு மகிழ்ந்த பாடல்களில் பல. இப்பாடலைப் போலவே இன்னொரு பாடலான 'மாடல்' எனக்கு பிடித்த பாடல். மாடல் கீழே.க்ராஃப்ட் வெர்க் இசையாக்கம் செய்த அனைத்துப் பாடல்களும் அநேகமாக முழுவதும் செயற்கையாக வனையப்பட்ட இசையாகும். அனைத்து இசைத்துணுக்குகளும் இலந்திர நுணுக்கங்களால் அலைமாற்றப்பட்டவை. அந்த விதத்தில் இலந்திர இசைக்கு முன்னோடிக்குழு க்ராப்ட் வெர்க் தான்.


--

Thursday, July 29, 2010

காணாமல் போன கவிதைக் கணம்.

காணாமல் போன கவிதைக் கணம்.
--------------------------
மூன்று நாட்களுக்கு முன்பு (9/12/2003 இல் ராயர் காபி கிளப் எனும் இணையக்குழுமத்தில் எழுதியது) பிச்சமூர்த்தியின் கவிதைத் தொகுப்பு ஒன்றை வாங்கினேன். சாகித்திய அகாடமி வெளியீடு. நேற்று இரவுதான் அதைப் படிக்கத் துவங்கினேன். முதலில் தேடியது பூக்காரி எனும் கவிதையைத்தான். அதற்குக் காரணம் உண்டு; பின்னால் சொல்கிறேன். படித்த உடனேயே யாரையாவது முகத்தில் நாலு குத்து விடவேண்டும் என்று தோன்றியது. அது யாரை என்று கண்டறிய நண்பர்கள் உதவினால் கடப்பாடுடன் இருப்பேன்.

நான் பள்ளிச் சிறுவனாக எங்கள் கிராமத்து LLA நூலகத்தில் குடைந்து குடைந்து படித்த பல பொக்கிஷங்களில் பிச்சமூர்த்தியின் காட்டுவாத்து, வழித்துணை தொகுப்புகள் தான் எனக்கு 'புதுக்கவிதை' யை அறிமுகப்படுத்தின. இது சுமார் முப்பது வருடம் பழையகதை. அப்போது புதுக்கவிதை புதுக்கவிதையாகத்தான் இருந்தது. நாற்றங்கால் தொகுதி இன்னும் வரவில்லை (இப்போது எங்கேயாவது கிடைக்குமா இது?). வானம்பாடிகள் தத்தம் முட்டைக்குள்ளே இருந்தார்கள். முத்து காமிக்ஸ் மாயாவியை
அப்போதுதான் உலவவிட்டிருந்தார்கள். கோகுலம் வந்து ஒரிருவருடம்போல் ஆகியிருந்தது. சுஜாதா " என்றான் அப்பாஸ், என்றான் இலியாஸ்" என்று அப்போதைய தினமணிக்கதிரில் பறந்து கொண்டிருந்தார். பேசும் படத்தில் ஜெயந்தி இருபக்கங்களில் சுடச்சுட போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார். சிவாஜி சில படு மோசமான படங்களுக்கு அப்புறம் "மன்னனின் கௌரவம்ம்ம்..." என்று அசத்திக் கொண்டிருந்தார். இந்திரா இன்னும் மூன்றுநான்கு வருடங்களுக்காகவாவது ஜனநாயகவாதியாகத் தான் இருப்பதற்கு தயாராக இருந்தார். ரயில்கள் எல்லாம் நேரத்துக்கு செல்லாமல் இருந்தன. சாமியார்கள் சாமியார்களாகவும் அரசியல்வாதிகள் அரசியல்வாதிகளாகவும் அவர்களுக்குள்ளே குழப்பமே இல்லாத பொற்காலம் அது. அப்போதுதான் எனக்கு புதுக்கவிதையில் கவிதைக்கணம் நிகழ்ந்துவிட்டது.

" வானெங்கும் எஃகிறகு
தெருவெங்கும் பிணமலை "

என்று படித்து, எஃகிறகு என்பது புரியாமல் மீண்டும் ஒரு முறை படித்தேன். அட! உடனே அந்த தொகுப்புகளை வீட்டிற்கு issue செய்து எடுத்து வந்து விட்டேன். அப்போதெல்லாம் நூலகச்சந்தா ஒரு நூலுக்கு 2 ரூபாய். அப்பா எங்கள் கிராமத்து "பெரிய" பள்ளிக்கூடத்தில்(உயர் பள்ளி. துவக்கப்பள்ளிக்கு "சின்னப் பள்ளிக்கூடம்") ஆசிரியராக இருந்ததால் நூலகப் பொறுப்பாளர் தொந்தரவு தாங்காமல் 5 சந்தா எடுத்து வைத்திருந்தார். நான் ஏதோ ராஜா வீட்டுப்பிள்ளை மாதிரி பாவித்து நூல்களைக் கொண்டுவருவேன். வீட்டுக்கு வந்து என் தம்பியை (ஆறாம் வகுப்பு) கூப்பிட்டு எஃகிறகு என்றால் என்ன என்று கவிதையை விளக்கித் தீர்த்து விட்டேன். அவன் விட்டால் போதும் என்று நிசமான சிறகிருக்கும் கோழிகளுக்கு கறையான் பிடிக்க ஓடிவிட்டான்.
ஒரு சிறுவனின் இப்படிப்பட்ட மகத்தான கவிதைக்கணம் நேற்று தொலைந்து போய்விட்டது. நான் வாங்கிய சாகித்திய அகாடமிப் பதிப்பில் இது

"வானெங்கும் பிளேனிறகு
தெருவெங்கும் பிணமலை " என்றிருக்கிறது.

இக் கொடூரமான பாடபேதம் யாரால் நிகழ்ந்தது? அது சாகித்திய அகாடமியோ அல்லது பிச்சமூர்த்தியோ ஆனாலும் சரி. நண்பர்கள் கண்டு பிடிக்க உதவினால் ஏதேனும் ஒரு பிறவியில் இதற்குப் பழி வாங்காமல் இருக்க மாட்டேன். இல்லை நான்தான் தற்போதைய ஃபேஷன்படி மாந்த்ரீக யதார்த்தத்தில் மாட்டி ஏதாவது உளறுகிறேனா?
------------------
மேலே இருப்பது 2003இல் அப்போதைய ராயர் காப்பி கிளப்பில் எழுதியது. இதற்கு மறுமொழியாக இரா.முருகன் தன்னிடம் இருக்கும் எழுத்து பிரசுரம் வெளியிட்ட 1975ம் வருட பதிப்பிலும் பிளேனிறகு என்றுதான் இருக்கிறது என்று கூறியிருந்தார்.
அதன் பிறகு இரு ஆண்டுகளில் கழித்து சென்னைப்புத்தகக் காட்சியில் நான் படித்த பதிப்பின் பிரதியைக் கண்டெடுத்தேன். அதில் எஃகிறகு என்றே இருக்கிறது.

எழுத்து பிரசுரம் 1964 இல் வெளியிட்ட பதிப்பு இது. பூக்காரி முழுக்கவிதையையும் அப்போது இருந்தபடி ஒளி வருடி கீழே தந்திருக்கிறேன்.


தற்போது கிடைக்கும் சாகத்திய அகதமி பதிப்பு இது. 2000 ஆம் ஆண்டுப் பதிப்பு. தொகுத்தவர் ஞானக்கூத்தன். இந்தப் பதிப்பில் ஞானக்கூத்தனின் மிக நீண்ட முன்னுரையும், செல்லப்பாவின் மிகநீண்ட பின்னுரையும் (85இல் வெளிவந்த பி.மூர்த்தியின் தொகுப்பின் அணிந்துரை) இருக்கிறது.

பிச்சமூர்த்தியின் கவிதைகளை செம்பதிப்பாக யாராவது கொணரும்போது கவனம் கொள்ளலாம். இந்த மாற்றம் பி.மூர்த்தியே செய்ததா அல்லது இரு வேறு விதமாக அவரே எழுதி சிசுசெல்லப்பாவிடம் கொடுத்தாரா என்பதெல்லாம் கண்டுபிடிக்க முடியாது. இருவரும் இப்போது இல்லை.---

Thursday, June 10, 2010

Monday, May 10, 2010

தஞ்சைப் பெரியகோயிலுக்கு ஆயிரம் வருடங்கள்

இராஜராஜ சோழன் தஞ்சைப் பெரிய கோயிலை கட்டி ஆயிரம் ஆண்டுகள்

ஆகின்றன. சென்ற மாதம் சென்றபோது எடுத்த புகைப்படம்.