Thursday, July 29, 2010

காணாமல் போன கவிதைக் கணம்.

காணாமல் போன கவிதைக் கணம்.
--------------------------
மூன்று நாட்களுக்கு முன்பு (9/12/2003 இல் ராயர் காபி கிளப் எனும் இணையக்குழுமத்தில் எழுதியது) பிச்சமூர்த்தியின் கவிதைத் தொகுப்பு ஒன்றை வாங்கினேன். சாகித்திய அகாடமி வெளியீடு. நேற்று இரவுதான் அதைப் படிக்கத் துவங்கினேன். முதலில் தேடியது பூக்காரி எனும் கவிதையைத்தான். அதற்குக் காரணம் உண்டு; பின்னால் சொல்கிறேன். படித்த உடனேயே யாரையாவது முகத்தில் நாலு குத்து விடவேண்டும் என்று தோன்றியது. அது யாரை என்று கண்டறிய நண்பர்கள் உதவினால் கடப்பாடுடன் இருப்பேன்.

நான் பள்ளிச் சிறுவனாக எங்கள் கிராமத்து LLA நூலகத்தில் குடைந்து குடைந்து படித்த பல பொக்கிஷங்களில் பிச்சமூர்த்தியின் காட்டுவாத்து, வழித்துணை தொகுப்புகள் தான் எனக்கு 'புதுக்கவிதை' யை அறிமுகப்படுத்தின. இது சுமார் முப்பது வருடம் பழையகதை. அப்போது புதுக்கவிதை புதுக்கவிதையாகத்தான் இருந்தது. நாற்றங்கால் தொகுதி இன்னும் வரவில்லை (இப்போது எங்கேயாவது கிடைக்குமா இது?). வானம்பாடிகள் தத்தம் முட்டைக்குள்ளே இருந்தார்கள். முத்து காமிக்ஸ் மாயாவியை
அப்போதுதான் உலவவிட்டிருந்தார்கள். கோகுலம் வந்து ஒரிருவருடம்போல் ஆகியிருந்தது. சுஜாதா " என்றான் அப்பாஸ், என்றான் இலியாஸ்" என்று அப்போதைய தினமணிக்கதிரில் பறந்து கொண்டிருந்தார். பேசும் படத்தில் ஜெயந்தி இருபக்கங்களில் சுடச்சுட போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார். சிவாஜி சில படு மோசமான படங்களுக்கு அப்புறம் "மன்னனின் கௌரவம்ம்ம்..." என்று அசத்திக் கொண்டிருந்தார். இந்திரா இன்னும் மூன்றுநான்கு வருடங்களுக்காகவாவது ஜனநாயகவாதியாகத் தான் இருப்பதற்கு தயாராக இருந்தார். ரயில்கள் எல்லாம் நேரத்துக்கு செல்லாமல் இருந்தன. சாமியார்கள் சாமியார்களாகவும் அரசியல்வாதிகள் அரசியல்வாதிகளாகவும் அவர்களுக்குள்ளே குழப்பமே இல்லாத பொற்காலம் அது. அப்போதுதான் எனக்கு புதுக்கவிதையில் கவிதைக்கணம் நிகழ்ந்துவிட்டது.

" வானெங்கும் எஃகிறகு
தெருவெங்கும் பிணமலை "

என்று படித்து, எஃகிறகு என்பது புரியாமல் மீண்டும் ஒரு முறை படித்தேன். அட! உடனே அந்த தொகுப்புகளை வீட்டிற்கு issue செய்து எடுத்து வந்து விட்டேன். அப்போதெல்லாம் நூலகச்சந்தா ஒரு நூலுக்கு 2 ரூபாய். அப்பா எங்கள் கிராமத்து "பெரிய" பள்ளிக்கூடத்தில்(உயர் பள்ளி. துவக்கப்பள்ளிக்கு "சின்னப் பள்ளிக்கூடம்") ஆசிரியராக இருந்ததால் நூலகப் பொறுப்பாளர் தொந்தரவு தாங்காமல் 5 சந்தா எடுத்து வைத்திருந்தார். நான் ஏதோ ராஜா வீட்டுப்பிள்ளை மாதிரி பாவித்து நூல்களைக் கொண்டுவருவேன். வீட்டுக்கு வந்து என் தம்பியை (ஆறாம் வகுப்பு) கூப்பிட்டு எஃகிறகு என்றால் என்ன என்று கவிதையை விளக்கித் தீர்த்து விட்டேன். அவன் விட்டால் போதும் என்று நிசமான சிறகிருக்கும் கோழிகளுக்கு கறையான் பிடிக்க ஓடிவிட்டான்.
ஒரு சிறுவனின் இப்படிப்பட்ட மகத்தான கவிதைக்கணம் நேற்று தொலைந்து போய்விட்டது. நான் வாங்கிய சாகித்திய அகாடமிப் பதிப்பில் இது

"வானெங்கும் பிளேனிறகு
தெருவெங்கும் பிணமலை " என்றிருக்கிறது.

இக் கொடூரமான பாடபேதம் யாரால் நிகழ்ந்தது? அது சாகித்திய அகாடமியோ அல்லது பிச்சமூர்த்தியோ ஆனாலும் சரி. நண்பர்கள் கண்டு பிடிக்க உதவினால் ஏதேனும் ஒரு பிறவியில் இதற்குப் பழி வாங்காமல் இருக்க மாட்டேன். இல்லை நான்தான் தற்போதைய ஃபேஷன்படி மாந்த்ரீக யதார்த்தத்தில் மாட்டி ஏதாவது உளறுகிறேனா?
------------------
மேலே இருப்பது 2003இல் அப்போதைய ராயர் காப்பி கிளப்பில் எழுதியது. இதற்கு மறுமொழியாக இரா.முருகன் தன்னிடம் இருக்கும் எழுத்து பிரசுரம் வெளியிட்ட 1975ம் வருட பதிப்பிலும் பிளேனிறகு என்றுதான் இருக்கிறது என்று கூறியிருந்தார்.
அதன் பிறகு இரு ஆண்டுகளில் கழித்து சென்னைப்புத்தகக் காட்சியில் நான் படித்த பதிப்பின் பிரதியைக் கண்டெடுத்தேன். அதில் எஃகிறகு என்றே இருக்கிறது.

எழுத்து பிரசுரம் 1964 இல் வெளியிட்ட பதிப்பு இது. பூக்காரி முழுக்கவிதையையும் அப்போது இருந்தபடி ஒளி வருடி கீழே தந்திருக்கிறேன்.


தற்போது கிடைக்கும் சாகத்திய அகதமி பதிப்பு இது. 2000 ஆம் ஆண்டுப் பதிப்பு. தொகுத்தவர் ஞானக்கூத்தன். இந்தப் பதிப்பில் ஞானக்கூத்தனின் மிக நீண்ட முன்னுரையும், செல்லப்பாவின் மிகநீண்ட பின்னுரையும் (85இல் வெளிவந்த பி.மூர்த்தியின் தொகுப்பின் அணிந்துரை) இருக்கிறது.

பிச்சமூர்த்தியின் கவிதைகளை செம்பதிப்பாக யாராவது கொணரும்போது கவனம் கொள்ளலாம். இந்த மாற்றம் பி.மூர்த்தியே செய்ததா அல்லது இரு வேறு விதமாக அவரே எழுதி சிசுசெல்லப்பாவிடம் கொடுத்தாரா என்பதெல்லாம் கண்டுபிடிக்க முடியாது. இருவரும் இப்போது இல்லை.---

1 comment:

Sridhar Narayanan said...

கவிதையை விட அந்த சிறுவனுக்கு ஏற்பட்ட கவிதைக்கணம் முக்கியமாகிறது.

அவன் அப்படி தம்பியிடம் சொன்ன விளக்கம்தான் என்ன?