Thursday, October 06, 2011

ஸ்டீவ் ஜாப்ஸ் எனும் கலைஞன்.

        நேற்றைக்கு ஒரு மால்-இல் சுமார் 3 மணிநேரம் அட்டைக்கணினிகளைச் சோதித்துக்கொண்டிருந்தேன். 13 ஆயிரம் ரூபாவில் துவங்கி 40 வரை விலை. ஒரு மென்பொருளைச் சோதனை செய்ய ஆண்றாய்ட் அட்டைவேண்டும் அதற்காகத்தான். புதிதாக வந்திருக்கும் i-ball ஸ்லைட் துவங்கி சாம்சங்கின் காலாக்ஸி பேட் வரை இடைப்பட்ட நிலையில் வ்யூசானிக், மோட்டரோலா, ஆசர், ஹெச்டிஸி, ஆர்சோஸ் என்று பலவகை அட்டைகள் உள்ளன. வேறு வேறு ஆண்றாய்ட் பதிப்புகள், வேறுவேறு திரை அளவுகள் என்று கலந்துகட்டி நமக்குத் தேர்வு செய்ய பலவிதமான வாய்ப்புகள். ஆனால் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு குறை. சிலவற்றில் தன்வயப்படுத்திய இடைமுகங்கள். சிலவற்றில் வெளிஉலகத்துடன் பேச போதுமான துறைகள் இல்லாமை. மோசமான தொடுஇசைவு, குறைவான சில்லுசக்தி, போதாத ஞாபகக் கலன், சேமிப்புத்தளம் என ஒவ்வொன்றிலும் வேறுவேறு விதமான குறைபாடு. ஒன்றைப்பார்த்தால் இன்னொன்று இல்லை. சாம்சுங்கின் காலாக்ஸி தனிரகம். இந்தக்கூடத்திலிருந்து சற்றே மேம்பட்டதரத்தில் ஏறக்குறைய தேவையான அனைத்தையும் கொண்டுள்ளது. விலைஅதிகமானதும் இதுதான். ஆண்றாய்ட் அட்டைகளில் சாம்சுங்தான் சிறப்பு. ஆனால் ஒரு புது நிரலை/ செயலியை இருப்பதிலேயே சிறந்த கட்டமைப்பும் செயல்திறனும் கொண்ட ஒரு கருவியில் சோதிப்பது தவறானது. பயனர்களிடம் ஆகச்சிறந்த கருவியோ செயல்தளமோ இருக்கத்தேவையில்லை. சந்தையிலிருக்கும் மீச்சிறு வசதிகளைக்கொண்ட கருவியிலேயே சோதிக்கவேண்டும். அதில் நமது செயலி சரியாக இயங்கினால் மேலதிக வசதியுள்ள விலைஅதிகமான கருவியில் சரியாகவே இயங்கும். என்ன செய்யவேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டு திரும்பினேன். அடுத்த வரிசையில் சிலசிறுவர்கள் சிரித்து விளையாடிக்கொண்டிருந்தார்கள். அது ஆப்பிள் கணினிகளின் வரிசை. மூன்று அட்டைகள் இருந்தன. ஐந்தாறு சிறுவர்/சிறுமியர் இரண்டை ஆக்கிரமித்துக்கொண்டு ஒரே குதூகலம். மூன்றாவதை மற்றவர்களுக்கு  முன்னால் பாய்ந்து கைப்பற்றினேன். ஜென் ட்ரா என்று மிகமிக எளிமையான வரைசெயலி அதில் இருக்கிறது. ஆட்காட்டி விரலால் எளிதாக விரைவாக வரையலாம். இரண்டுமூன்று உருவங்களை வரையத்தொடங்கினேன். இரண்டு சிறுவர்கள் வந்துவிட்டார்கள். 'ஷோ மி அங்கிள்' என்று. உலகின் ஆகச்சிறந்த நுட்பங்களைக்கொண்டு வடிவமைக்கப்பட்ட குழந்தைகள் கருவி அது. ஸ்டீவ் ஜாப்ஸ் எனும் கலைஞன் மற்றவர்களுக்கு அளித்த கொடை. இன்றைய தொழில்நுட்பத்தில் இருக்கும் அழகும் உள்ளமைதியும் செயல்திறனும் சீர்மையும் எந்தக் கவிதையிலும் கலைப்பொருளிலும் என்னால் காணமுடிவதில்லை. அதை கணினிகளில் செயலாக்கி அனைவருக்கும் விட்டுச் சென்ற ஸ்டீவ், goodbye. 


Tuesday, October 04, 2011

சிய்யாங்கு


இந்த இனிப்புக்குப் பெயர் எங்கள் வீட்டில் சிய்யாங்கு. உண்மையில் என்ன பெயரோ நான் அறியேன்.

(அ) தேவையான பொருட்கள்:
------------------------------------
1. கோதுமை மாவு   - 1 கப்
2. வாழைப்பழம்       -  1 (பெரிய்ய்யது) அல்லது 2 (நடுத்தரமானது)
3. வெல்லம்  -             1/2 கப்
4. சிறிது வெண்ணெய் - ஒரு பெரு  நெல்லிக்காய் அளவு
5. எலக்காய் - 1
6. நல்லெண்ணெய் /கடலை எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.(ஆ) செய்முறை:

கோதுமை மாவு, வாழைப்பழம், பொடித்தவெல்லம், வெண்ணெய் இவற்றை நன்கு பிசைந்து கொள்ளவும்.
நீர் விடக்கூடாது. பழம் நன்றாகக் கனிந்ததாக  இருக்கவேண்டும். அப்பொழுதுதான் நன்றாக பிசையவரும். தோலில் கருப்புப்புள்ளிகள் வந்த பழங்கள் போதுமான அளவு  கனிந்து இருக்கும்.
கடைசியில் ஏலப்பொடியை போட்டு பிசைந்து கொள்ளவும்.
எந்தப்பதத்தில் பிசைவது? வழியாத அளவு கெட்டியாக ஆனால் நன்றாக மெதுமெதுவென்று இருக்கும்படி.
எண்ணெய் காய்ந்தபிறகு சிறுதீயாக வைத்து உருண்டையாக போட்டு பொரித்து எடுக்கவும்.

(இ)
1. பழம் கனிந்து இருப்பது மிகமுக்கியம். ரோபஸ்டா/மோரீஸ்  போன்ற  ஹைபிரீட் வகைகளைப் பயன்படுத்தவும். அவை விரைவில் கனிந்து விடும். நம் நாட்டுப்பழங்க்அள் பூவன், ரஸ்தாளி போன்றவற்றில் மாவுச்சத்து அடர்வு அதிகம். கனிய நாளாகும். முழுவதாகவும் ஒரேயடியாக கனியாது.
2. கோதுமைமாவுதான். மைதா ஆகாது.
3. வெல்லத்திலும், பழத்திலும் நீரிருப்பதால் நீர்சேர்க்கத்தேவையில்லை. மிகவும் கட்டியாக இருந்தால் சற்றே தெளிக்கவும். ஊற்றக்கூடாது.
4. நம்நாட்டுப் பலகாரங்கள்  செய்யும்போது  நல்லெண்ணெய், கடலை எண்ணெய் பயன்படுத்துங்கள். வடிகட்டினவை (பில்டர்ட்) மட்டுமே. ரிபைண்ட்டு வகை அல்ல. மணமே இல்லாத சன்பிளவர், பாமாயில் போன்றவற்றைப் பயன்படுத்தாதீர்கள். ந.எ,க.எ எல்லாம் கெட்ட எண்ணெய்கள் அல்ல. எந்த டாக்டர் சொன்னாலும் நம்பாதீர்கள். தற்போதைய ஆராய்ச்சிமுடிவுகள் சன்பிளவர்தான் சிறந்தது என்றெல்லாம் சொல்லவில்லை.

பிகு. ஆமா நான் செய்ததுதான்.