Thursday, October 06, 2011

ஸ்டீவ் ஜாப்ஸ் எனும் கலைஞன்.

        நேற்றைக்கு ஒரு மால்-இல் சுமார் 3 மணிநேரம் அட்டைக்கணினிகளைச் சோதித்துக்கொண்டிருந்தேன். 13 ஆயிரம் ரூபாவில் துவங்கி 40 வரை விலை. ஒரு மென்பொருளைச் சோதனை செய்ய ஆண்றாய்ட் அட்டைவேண்டும் அதற்காகத்தான். புதிதாக வந்திருக்கும் i-ball ஸ்லைட் துவங்கி சாம்சங்கின் காலாக்ஸி பேட் வரை இடைப்பட்ட நிலையில் வ்யூசானிக், மோட்டரோலா, ஆசர், ஹெச்டிஸி, ஆர்சோஸ் என்று பலவகை அட்டைகள் உள்ளன. வேறு வேறு ஆண்றாய்ட் பதிப்புகள், வேறுவேறு திரை அளவுகள் என்று கலந்துகட்டி நமக்குத் தேர்வு செய்ய பலவிதமான வாய்ப்புகள். ஆனால் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு குறை. சிலவற்றில் தன்வயப்படுத்திய இடைமுகங்கள். சிலவற்றில் வெளிஉலகத்துடன் பேச போதுமான துறைகள் இல்லாமை. மோசமான தொடுஇசைவு, குறைவான சில்லுசக்தி, போதாத ஞாபகக் கலன், சேமிப்புத்தளம் என ஒவ்வொன்றிலும் வேறுவேறு விதமான குறைபாடு. ஒன்றைப்பார்த்தால் இன்னொன்று இல்லை. சாம்சுங்கின் காலாக்ஸி தனிரகம். இந்தக்கூடத்திலிருந்து சற்றே மேம்பட்டதரத்தில் ஏறக்குறைய தேவையான அனைத்தையும் கொண்டுள்ளது. விலைஅதிகமானதும் இதுதான். ஆண்றாய்ட் அட்டைகளில் சாம்சுங்தான் சிறப்பு. ஆனால் ஒரு புது நிரலை/ செயலியை இருப்பதிலேயே சிறந்த கட்டமைப்பும் செயல்திறனும் கொண்ட ஒரு கருவியில் சோதிப்பது தவறானது. பயனர்களிடம் ஆகச்சிறந்த கருவியோ செயல்தளமோ இருக்கத்தேவையில்லை. சந்தையிலிருக்கும் மீச்சிறு வசதிகளைக்கொண்ட கருவியிலேயே சோதிக்கவேண்டும். அதில் நமது செயலி சரியாக இயங்கினால் மேலதிக வசதியுள்ள விலைஅதிகமான கருவியில் சரியாகவே இயங்கும். என்ன செய்யவேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டு திரும்பினேன். அடுத்த வரிசையில் சிலசிறுவர்கள் சிரித்து விளையாடிக்கொண்டிருந்தார்கள். அது ஆப்பிள் கணினிகளின் வரிசை. மூன்று அட்டைகள் இருந்தன. ஐந்தாறு சிறுவர்/சிறுமியர் இரண்டை ஆக்கிரமித்துக்கொண்டு ஒரே குதூகலம். மூன்றாவதை மற்றவர்களுக்கு  முன்னால் பாய்ந்து கைப்பற்றினேன். ஜென் ட்ரா என்று மிகமிக எளிமையான வரைசெயலி அதில் இருக்கிறது. ஆட்காட்டி விரலால் எளிதாக விரைவாக வரையலாம். இரண்டுமூன்று உருவங்களை வரையத்தொடங்கினேன். இரண்டு சிறுவர்கள் வந்துவிட்டார்கள். 'ஷோ மி அங்கிள்' என்று. உலகின் ஆகச்சிறந்த நுட்பங்களைக்கொண்டு வடிவமைக்கப்பட்ட குழந்தைகள் கருவி அது. ஸ்டீவ் ஜாப்ஸ் எனும் கலைஞன் மற்றவர்களுக்கு அளித்த கொடை. இன்றைய தொழில்நுட்பத்தில் இருக்கும் அழகும் உள்ளமைதியும் செயல்திறனும் சீர்மையும் எந்தக் கவிதையிலும் கலைப்பொருளிலும் என்னால் காணமுடிவதில்லை. அதை கணினிகளில் செயலாக்கி அனைவருக்கும் விட்டுச் சென்ற ஸ்டீவ், goodbye. 


3 comments:

பத்மா அர்விந்த் said...

i am unable to say how I appreciate his artistic vision. Free workshops to learn his products, younger employees, clean and smooth touch screen , above all his product launch speeches with subtle humor. Wish there is 2G steve.

arulselvan said...

ஆமாம்.
வடிவமைப்பு என்பதை தொழில்நுட்பத்தின் மையத்துக்கு இழுத்து வந்தவர் அவரைப்போல யாருமில்லை. ஒவ்வொரு நாளும் அவர் தலைமையில் வடிவமைக்கப்பட்டவற்ரை நாம் பாவிக்கும்போது நாம் உணராத எளிமையே இதற்கு சாட்சி.

Bruno said...

நானும் எழுதியுள்ளேன்


சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு : வேண்டுமா, வேண்டாமா : பகுதி 1