Saturday, January 05, 2013

சற்று முன்பு ... உன்னதங்களை உதறிய முழுமை (satru munbu, nepv)  சற்று முன்பு ... உன்னதங்களை உதறிய முழுமை  "சற்று முன்பு பார்த்த மேகம் மாறிப் போக..."  நா. முத்துக்குமார்


  உன்னதம் எனும் பெரும் மண்ணாங்கட்டிச் சுமையை முதுகில் சுமந்து ஏறக்குறைய செங்குத்தான அறமலையை வாயில் நுரைதள்ள கலை தன் உச்சத்தை அடைய  ஓயாமல் ஏறிக்கொண்டிருக்கிறது. இப்படி ஒரு பிம்பத்தை கட்டி எழுப்புவதில் கலை படைப்பவர்களுக்கு பெரும் ஆர்வம் இருக்கிறது. ஒரு வியாபாரத் தந்திரம் எனும் அளவில் நாமும் இதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் கலையின் முழுமை என்றுமே இத்தகைய பெரும் திட்டங்களில் சிக்குவதில்லை. கணத்தில் தெறித்து ஓடும் ஒரு காட்டருவியின் நிகழ்லயமே அதன் பேரழகாக இருந்திருக்கிறது. பார்க்கலாம்.

 எப்போதாவது அரிதாகப் பார்க்கும் ஒரு தமிழ்த் திரைப்படத்திலும் ஏதாவது பிடித்தது போல வந்து விட்டால் நண்பர்களிடம் பத்துப்பேரிடமாவது சொல்லிவிடுவேன். அதிலும் ஒரு முழு பாடல் காட்சியே இதுபோல் அபாரமாக அமைந்துவிட்டால் எழுதியே வைத்துவிடவேன்டும்

     நீதானே என் பொன் வசந்தம் படத்தின் இப்பாடல் காட்சியமைப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. படத்தின் இறுதிக்கட்டத்தில் வரும் நீண்டதொரு காட்சியடுக்கு இது.  (காட்சியடுக்கு- சீக்வன்ஸ்). கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். வருண் தன் கல்யாணத்துக்கு முந்தையநாள் மாலை  (இப்போதைய வழக்கப்படி) வரவேற்பு நிகழ்சியில் மேடையில் நாளைய மனைவியாகும் மணப்பெண், அப்பா அம்மாக்களுடன் நின்று கொண்டிருக்கிறான். அனைவரும்  வாழ்த்திக்கொண்டு இருக்கின்றனர். அப்போது உள்ளே நுழைகிறாள் நித்யா. இங்கே துவங்குகிறது சமீபத்திய தமிழ்ச்சினிமாவின் அருமையான காட்சியமைப்பு.

    வருணும் நித்யாவும் சிறுகுழந்தைகளாக இருந்தபோதிலிருந்து ஒன்றாக வளர்ந்து சண்டையிட்டுப் பிரிந்து பிரிந்து மீண்டும் சேரும் காதலர்கள். பெரும் பிரிவுக்குப்பின் ஒரு மாதம் முன்பு தன்னுடன் வருமாறு அழைக்கவந்த வருணை வைது நாம் சேர்ந்திருக்க படைக்கப்பட்டவர்கள் இல்லை என்று நித்யா திருப்பி அனுப்ப வருண் வீட்டுவிருப்பத்தின் படி ராதிகாவை மணக்க சம்மதிக்கிறான். இது முன்கதை.

  இப்பாடல்காட்சியமைப்பு மிகுந்த ஆற்றலைப்பொதித்து படமாக்கப்பட்டுள்ளது. அனேகமாக படத்தின் முழுக்கதையும் இங்கு சுட்டப்படுவதால் பாடல் அசாதாரணமானவீச்சையும் கொண்டுள்ளது ராஜாவின் சமீபத்தியக் கொடை இப்பாடல். அதை கௌதம் முழுக்கப் பயனாக்கி தன் கதையை எதோ உயரத்துக்கு கொண்டுசென்றுவிட்டார். திரைப்படத்தில் பாடல்காட்சிகள் கண்டிப்பாக இருக்கவேண்டும் அதுதான் நம் சினிமாவின் கதைகூறுமுறையின் இலச்சினை எனக்கருதுபவன் நான். பாட்டில்லாத தமிழ்ப்படத்தில் உட்காருவதையே நினைக்கமுடியாது எனக்கு.

        கல்யாண ஹாலில் நுழைந்து இருக்கைகளை நோக்கி நடக்கும் நித்யா வருணைப் பார்க்கும் கணத்தில் எந்தப் பின்னணி இசையுமின்றி திடீரென ஒரு பெண்குரலில்  "சற்றுமுன்பு பார்த்த மேகம் மாறிப் போக..." எனத்துவங்குகிறது பாடல். அடுத்த 14 நிமிடங்களுக்குத் தொடரும் இக்காட்சியடுக்கு தமிழ்த் திரையில் சமீப காலங்களில் வந்ததொரு மகத்தான ஒன்றாக எனக்குப் படுகிறது.

 இந்தப்பாடல் படத்தின் கதையாடலில் மிக வீரியமிக்க இடத்தில் வருகிறது.  அதேசமயம் இந்தப்பாட்டிலேயே வீரியமிக்க காட்சிகள் என இரண்டு உண்டு. அவற்றை மட்டும் எழுதுகிறேன். முழுப்பாடலையும் பற்றி எழுதவேன்டுமானால் மிகவும் நீண்டுவிடும். இன்னொரு முறை முயலலாம்.

 இந்த இரண்டு காட்சிகளிலும் சமந்தாவும் ஜீவாவும் மிக அருமையாக தம் பாத்திரத்தின் சாரத்தை முழுவதுமாக உள்வாங்கி நமக்குக் காட்டுகிறார்கள். அந்த இரண்டு காட்சிகள்:
(அ) நித்யா மணமக்களுக்கு வாழ்த்துச் சொல்ல மேடைக்கு வந்து நிற்கும் காட்சி.
(ஆ)  பாடல் முடியும்போது இறுதியாக நித்யா வருணிடமிருந்து விடைபெறும் காட்சி.

(அ) முதல்காட்சியைப் பார்ப்போம்.

(பின்னணியில்: நெஞ்சம் துடிப்பதும் மின்னல் அடிப்பதையும் சொல்
                ஒ ஹோ .. உன்னை பிரித்திட என்னை எரித்து நீ செல்)

     கூட்டத்தில் அமர்ந்திருந்த நித்யாவை ஜென்னி அழைத்துக்கொண்டு மேடைக்கு வருகிறாள். காட்சியில் நித்யாவும் வருணும் இரண்டே பேர். முழுஹாலும் காலி. மற்றவர்கள் யாரையும் காட்டவில்லை கௌதம். வர்ணம் தீட்டுகையில் ஒரு சிறுஇடத்தை எடுப்பாகக்காட்ட சுற்றிவர இருக்கும் பகுதியை சற்றே மங்கலாக தீட்டுவார்கள்.ஓவியர்களுக்குத் தெரியும். accenting.  இதே டெக்னிக் தான். மூன்று நான்கு பேரின் உணர்ச்சிகளின் விளையாட்டைக் காண்பிக்க வேண்டிய தொடர்ந்துவரும் பகுதிக்காக. கௌதம் நித்யா நடந்து வரும் காட்சியில் அவர்கள் இருவரைத்தான் காட்டுகிறார்.

("எல்லாமே பொய் என்று சொல்வாயா.. ஒ.ஹோ.")
வருணின் கையைக் குலுக்கி வாழ்த்துத் தெரிவிக்க தன் கையை நீட்டுகிறாள் நித்யா. திருமண வரவேற்பில் நாம் எல்லோரும் செய்யும் ஒரு சடங்குதான் இது. மேலும் வருண் அவள் தொட்டுப் பழகிய காதலன்தான்.தன் இயல்பாக, சடங்காகவும் கையை நீட்டுகிறாள். வருண் அதைப்பற்றி குலுக்கியிருந்தால் அது சடங்காகவும் அதனாலேயே அக்கணத்தின் இயல்பாகவுமே இருந்திருக்கும். அவன் அதைச்செய்யாமல் அவள் கையைத் தவிர்க்கிறான். ராதிகாவிடம் அவளை அறிமுகம் செய்ய, நீட்டிய கையைராதிகாவிற்கு திருப்புகிறாள் நித்யா.

   இயல்பாகவோ, சடங்காகவோ நடந்திருக்கக் கூடிய ஒன்று அது நடக்காமையால்அதன் இன்மையை பெருப்பித்து உணர்த்துகிறது.  வருணின் அம்மா நித்யாவை இழுத்து அருகில் புகைப்படத்துக்காக் நிறுத்துதல், வருணின் திணறல், அவன் அப்பா இதை கூர்ந்து கவனித்தல், அவசரமாக நித்யா ஜென்னியை விட்டு முன்னால் நகர்ந்து விரைதல் என இக்காட்சியடுக்கின் முழுமையும் இருபதே நொடிகளில் முடிந்து விடுகிறது. இந்த இருபது நொடிகளில் சமந்தாவின் நடிப்பு மிக உயர்தரம். மின்னல் போல் தெறிக்கும் ஆயிரம் உணர்ச்சிகளை அமைதியாக அலட்டல் இன்றி உள்ளிருந்து ஊற்றெடுக்கும் உணர்வோடு வெளிப்படுத்தியிருக்கும் இப்பெண் என்ன ஓர் அருமையான நடிகை.


(ஆ) இருவரும் காரில் ஒரு சுற்றுபோய்வந்து மீண்டும் வருணின் வீட்டுக்கே வருகிறார்கள்.

நித்யா இறுதியாக விடைபெற தன் கார் அருகில் சென்று " எனக்கு எல்லாமே நீயாதான் இருந்திருக்கே. எனக்கு என்னைத் தெரிவது போலவே உன்னையும் தெரியும். இதையும் சொல்லத்தான் வந்தேன்" என்கிறாள். "வேறறெதுவும் இல்லையா. இதைச் சொல்லவா வந்தே" என்று கேட்கும் வருணுக்கு அவள் பதில் சொல்வதில்லை. காரின் கதவைத் திறக்கத் திரும்புகிறாள். வருண் அவளை நெருங்கி அவள் தோளைத் தொட்டு நிறுத்துகிறான். தன் தோளின் மீதிருக்கும் அவன் கையைப் பற்றுகிறாள் அவள். அவன் அவள் கைவிரல்களை இணைத்து தன் முகத்தை கையை நோக்கி சற்றே இழுத்து, ஒரு கணம் தயங்கி முகத்தைத் திருப்பி கைகளை விடுவிக்கிறான். அந்த ஒரு கணத்தில் நித்யா அவன் முகத்தில் எதையோ தேடுகிறாள். வருண் அவளை விட்டு விலகித் திரும்புகிறான். மீண்டும் அவளை நோக்கி நகர்ந்து மிக நெருக்கமாக வருகிறான். நித்யா சடாரென விலகி கதவைத் திறந்து காரினுள் நுழைந்து கிளப்பிக்கொண்டு போய் விடுகிறாள். பாடல் "காலம் இன்று காதல் நெஞ்சைக்கீறிப் போக" என முடிகிறது.

 இந்த ஒரு காட்சியில் நித்யா வருண் இருவரின் முழு மனங்களும் தெளிவாக வெளிப்படுகின்றன. வருண் தான் எடுத்த முடிவை நினைத்துத் தடுமாறுகிறான். மீண்டும் நித்யாவைக் கண்டதில் இருந்து அவன் மனம் கூறுபட்டுச் சிதைந்து விட்டது. மீண்டும் மீண்டும் அவளிடமே இழுக்கப்படுகிறான்.

"நான் கல்யாணம் செய்யப்போறேன்" என்று வருண் நித்யாவிடம் சொன்ன கணத்திலிருந்து இந்த பாடல் முடிவுக்காட்சி வரை நித்யா அவனை இழந்துவிட்டதாகவே நினைக்கிறாள். நம்புகிறாள். அவள் அதை வைத்து அவனிடம் தன்னை மீண்டும் ஏற்றுக்கொள் என்று கேட்கவே இல்லை. அவன் அண்மை அவன் நேசம் அவன் காதல் இதுவே அவள் வேண்டியது. அது அவளுக்கு இல்லை என்பதே அவள் உணர்வு. அதனால் இன்னொருத்திக்குப் போகும் அவனை எவ்விதத்திலும் அவள் தனக்காக மீட்டுக்கொள்ள முயற்சி செய்யவில்லை. என்னை தவறாக புரிந்து கொள்ளாதே நான் மணப்பாடில் மறுத்ததற்கு என்னை வெறுக்காதே என்று சொல்லிச் செல்லவே முயல்கிறாள்.  இந்த மன வேறுபாடு இப்பாடல் காட்சியில் முழுமையாக வெளிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    அந்த இறுதிக்கணத்தில் நித்யா தன் தேர்வை முடித்துக்கொண்டாள். அதற்குமேல் அவளுக்கு இந்த உறவில் கேட்கவோ வழங்கவோ ஏதுமில்லை. அதற்குப் பிறகு படத்தில்  வருவது வாழ்வு அவளுக்குக் கொடுத்தது. அது எப்படியும் முடிந்திருக்கலாம். வருணுடனோ இல்லாமலோ. அவன் அப்பா அவனைத் தூண்டாவிட்டால்  வருண் நித்யாவிடம் மீண்டு வரப்போவதில்லை. கதை எனக்கு இங்கேயே முடிந்தது. இவ்வளவே நான் ஒரு 'கலை'ப் படப்பிலிருந்து எதிர்பார்ப்பதும்.
     
    படம் நித்யாவையும் அருணையும் சேர்த்துவைக்கிறது. அந்த முடிவில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. ஆனால் வாழ்வு அத்தகைய மகிழ்ச்சிகளை அனைவருக்கும் எப்போதும் அளிப்பதில்லை. அதைப்பற்றி எனக்கு கவலையுமில்லை. வாழ்வின் அநீதிகளை வாழ்ந்து யாரும் சரி செய்ய ஏலாது. அவை அப்படியேதான் இருக்கும். ஆனால் ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுடைய மானுடம் இருக்கிறது. அதை வாழும் ஒவ்வொருகணத்திலும் அவன் வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறான். மானுடம் என்பது இந்த கணங்களில் வருவதுதான். இதற்கும் சமூகம் விரிக்கும் பிற சமய குழு அற பின்னல்களுக்கும் தொடர்பில்லை. இக்கணங்கள்தாம் இப்புவியில் மானுட வாழ்கை.  இக்கணங்கள் மானுடத்தின் உன்னதங்களல்ல.உச்சங்களல்ல. முழுமைகள்.