Sunday, April 21, 2013

பழைய விளம்பரம். என்றுமான அழகியல்.(நண்பர் @mislexic வலைத்தளம் " நீரோட்டம்: அழகிய படங்களுடன் கூடியது" ( http://www.neerottam.com/artpost/  ) பல பழைய வணிக பொதுஜனக் கலைப் படங்களைக் கொண்டுள்ளது. சமீபத்தில் பார்த்த ஒரு படத்தைப் பற்றிய சிறு பார்வை)
  ஒரு சாதாராண விளம்பரம்தான். அதுவும் வேளாண்மை செய்ய உரம் செய்யும் நிறுவனம் செய்யும் விளம்பரம். தீபாவளி மலரில். தீபாவளிக்கும், வேளாண்மை மகசூலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.  அப்போதெல்லாம்  தீபாவளி மலர் படிப்பவர்கள் பெரும்பான்மை கிராமத்தவரோ விவசாயிகளோ இல்லை. இந்த மலரை வாங்குபவர்களில் முக்கால்வாசிப்பேர் இதை ஒரு நொடிக்கு மேல் பார்க்கமாட்டார்கள். ஆனாலும் இந்த விளம்பரத்தைச் சிறப்பாக செய்யவேண்டும் என அதை வனைவு செய்த குழு முயன்றிருக்கிறது. ஒரு ஓவியர், ஒரு காபி ரைட்டர், ஒரு க்ரியேட்டிவ் ஹெட் இருந்திருக்கலாம்.

  ஓவியர் என்ன செய்திருக்கிறார் என்று பார்ப்போம். மிக எளிமையான ஒரு பெண்ணின் முகமும் தலைமீது நெற்கதிர்க்கட்டும் மகிழ்வுடன் கன்னத்தில் வைத்திருக்கும் கையும்தான் படத்தில். படம் வரைந்த முறையை மட்டுமே இப்போது நாம் பார்க்கப்போவதால  இந்த விளம்பரம் முழுமையாக என்ன சொல்ல வருகிறது, சொல்வதை சரியாகச்சொல்லுகிறதா என்றெல்லாம் நாம் பேசப்போவதில்லை. படத்தை மட்டும் பார்க்கலாம்.

  படத்தில் வரைதல் (drawing)  தீற்றல் (painting)  இரண்டுமே உண்டு. நம்மில் பலரும் பொதுவாக ஓவியர் என்றால் வண்ணங்களைக்கொண்டு தீற்றுபவர் என்றே ஒரு யூகம் வைத்திருக்கிறோம். ஆனால் வெறுமனே பென்சிலைக்கொண்டோ க்ரேயான் போன்ற மெழுகுவண்ணங்களைக் கொண்டோ வரைபவரும் ஓவியர்கள் தாம்.  ஒரு தீற்றல் ஓவியரும் வரைதலை மிகச்சரியாகக் கற்கவேண்டும். சில புகழ்பெற்ற ஓவியர்களின் தீற்றல்களில்கூட வரைகலை சரியாக இல்லாததைப் பார்க்கலாம். இன்னொருமுறை காட்டுகளுடன் விளக்குகிறேன். வரைதல் ஒரு ஓவியத்தின் முதுகுஎலும்புபோன்றது. ஓவியத்தின் முழு வலுவுமே அதுதான் எனக்கூறலாம். முக்கியமாக பொருண்மையான உலகைக்காட்டும் உருவஓவியங்களில் (figurative painting) வரைதலின் கூறுகள் பயிற்சியின்றி வனையப்பட்டிருந்தால் காணவே உறுத்தலாக இருக்கும். அருவ ஓவியங்களும் (abstract painting)  இதற்கு விதிவிலக்கல்ல! அருவஓவியத்திற்கும் வரைதல் முக்கியம் - இது ஒரு விதத்தில் வியப்பாக/முரணாகத் தோன்றலாம். ஆனால் இதுவும் ஒரு ஓவியத்தின் சிறப்பை,அழகியலை கணிக்கையில் கருத்தில் கொள்ளத்தக்கதே. இதைப்பற்றியும் பின்னால் எழுதுகிறேன்.

 இந்தப்படத்தில் வரைதல் தீற்றல் இரண்டுமே உண்டு. பொதுவாக ஒரு தீற்றல் ஓவியத்தை வனையும் போது ஓவியத்தின் பொருண்மைப் பகுதிகளை (மனிதர்,விலங்கு,மலை,மரம்,மேசை,தெரு என்று பிற பொருண்மைகளைச்சுட்டக்கூடிய பகுதிகளை) முதலில் வெளிக்கோடுகளால் பென்சில் கொண்டு வரைந்து கொள்வர்.பின்பு அதன் உட்புற பரப்புகளை வண்ணங்களால் பிரஷ் கொண்டு தீட்டுவர். முடிவாக பொருண்மைகளின் வெளிக்கோடுகளை சில இடங்களில் சிறப்ப்பாக, எடுப்பாகத் தோன்றுமாறு மீண்டும் பிரஷ்ஷால் கோடுகளால் தீற்றுவர். இதுவே பொதுவாக தீற்றல் ஓவியங்களை வனையும் பாணி.
 
 சீன ஜப்பானிய மரபு ஓவியங்களில் முழுவதுமாகவே  பிரஷ்ஷைக் கொண்டே வரைதலையும் தீற்றலாகவே வனையும் பாணி உண்டு. இப்பாணி ஓவியங்கள் மிக அபாரமான இயங்குவிசை உள்ளமைந்த ஓவியங்களாகும். பிரஷ் தீற்றல்கள் அவற்றின் கனம்,அகலம்,நீளம்,முடியும்வகை எனப் பல கூறுகளிலும் ஒரு ஓவியனின் முழு ஆற்றலையும் வெளிப்படுத்தக்கூடியன. இக்கூறுகள் யாவும் மேலை நாட்டு இயற்கைப்பாணி நீர்வண்ண ஓவியங்களிலும் உண்டு. அவற்றினும் பார்க்க சீன/ஜப்பானிய பாணி ஓவியங்களில் சிறப்புத்தன்மையும் உண்டு.
 
     மீண்டும் இப்படத்திற்கே வருவோம். இவ்வோவியம் வெறும் பிரஷ்கொண்டே தீற்றல் முறையில் வனயப்பட்டுள்ளது. ஒரே வண்ணம்தான். கருப்பு.  அந்த நீலம்கலந்த பாசிவண்ணம் பெரும்பாலும் பின்னணியாகவே உள்ளது.(அப்பெண்ணின் பொட்டும் அதே வண்ணம்!). வெள்ளைத்தாளில் வெறும் கருப்பு வண்ணம்கொண்டே வனையப்பட்ட இவ்வோவியம் ஒரு முக்கியமான அம்சத்தில் ஜப்பானிய வகையில் சேர்ந்து விடுகிறது. அது கண்கள் வரையப்பட்ட விதம். மாங்கா எனப்படும் ஜப்பானிய வகைக் காமிக்ஸ்கள் தனித்தன்மையான ஓவிய வரைமுறையும்  அழகியலும் கொண்டவை.
   
மங்காவைப் பற்றி பேசினால் நாள் முழுக்கப் பேசலாம். விக்கிபீடியாவில் விவரமாக மங்காவின் வரலாறு வடிவம் பற்றியெல்லாம் படிக்கலாம்.
 மங்கா/மாங்கா என அழைக்கப்படும் காமிக்ஸ் வடிவம் ஜப்பானுக்கே உரியதாக இருந்தது. இப்போது உலகளவு ரசிகர்கள் இருப்பதால் ஒரு உலகளாவிய வரைகலை வடிவமாகவே காணப்படுகிறது.

 கண்களை மிகவும் கவனப்படுத்தி வரைவது மாங்காவின் அழகியலின் ஒரு முக்கிய கூறு. இப்படத்தில் ஏனோ பொதுவாக இந்திய ஓவியங்களில் காணப்படாத அளவு நுணுக்கமாக பெண்ணின் கண்கள் வரையப்பட்டுள்ளன. ஒரு விளம்பரப்படத்துக்கு இந்த நுணுக்கம் அதிகம்தான். ஓவியர் ரசித்து செய்திருக்கிறார் என்பதே இதன் மூலம் நாம் அறிவது. கை விரல்களில் இட்டிருக்கும் மருதாணியின் தீற்றலைக்கவனியுங்கள். சற்றே மேற்புரமாக வளைந்தபடி ஒரே தீற்றலில் வரையப்பட்டவை அவை. முப்பரிமாணம் காட்ட ஒரு கோடு போதும். அது எப்படி வரைவது என்பதே திறமை.
 
வெள்ளை வெளியைப் (white space)  பயன்படுத்துதல் சீன/ஜப்பானிய முறையின் இன்னொரு கூறு.இப்பெண்ணின் முகத்திலும் அதுவே அழகு. இசையில் நிசப்தங்களின் பங்கு ஓவியத்தில் வெள்ளைவெளி. கவிதையில் கூறாமல் விட்ட சொற்கள். அனைத்துக் கலைகளுக்கும்  அழகியல் வெளிப்பாடு வேறு. அழகியல் உட்கட்டமைப்பு ஒன்றே. இதைப்பற்றிப் பேசினால் ஒரு யுகம் ஆகும். பின்பு.

1 comment:

mislexic said...

இடுகைக்கு நன்றி. :-) அடர்த்தியான தூரிகைத் தீற்றலைப் பார்த்து எனக்கு முதலில் எக்ஸ்பிரஷனிச பாணிதான் நினைவுக்கு வந்தது. நீங்கள் மங்கா பற்றிச் சொன்ன பின்பே சீன பிரஷ் பெயின்ட்டிங்கும் இன்ன பிறவும் தோன்றின. தலைமுடிக்குக் கொஞ்சம் வாட்டர் கலரும் பயன்பட்டிருப்பது போலுள்ளது.

அந்தப் பெண்ணைப் பேரழகியாக வரைய வேண்டும் என்று மெனக்கெட்டு வெற்றி கண்டிருக்கிறார் ரசனைக்கார ஓவியர். நீள்வட்ட முகம், மைதீட்டிய பெரிய கண்கள், அளவான மூக்கு, அதற்கு அழகு சேர்க்கும் மூக்குத்தி, அளவான உதடுகளின் ஓரங்கள் சற்றே மேலே தூக்கியிருத்தல் (எஸ்டரியர் நடிகை ரோஜாவின் உதடுகளைப் போல), வளையல்கள் மலிந்த (ஆனால் விரலில் ஏனோ மோதிரம் இல்லை) குச்சிக் கை என்று தனது லட்சியத்தை முன்வைத்திருக்கிறார். அந்த ஓவர்சைஸ்டு ஓவல் பொட்டுகூட உறுத்தவில்லை. எதை வரையாமல் விட வேண்டும் என்ற தேர்வு லேஅவுட்டுக்காக மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்றாலும் முகத்திலிருந்து கை வரை செங்குத்தாக வரைந்திருப்பது அட்டகாசம்.

பின்பு, அப்புறம் என்று பெரிய பெரிய வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கிறீர்கள் சார், பார்த்து. :-)