Thursday, April 11, 2013

ராபர்ட் கெராச்சி (Robert.M.Geraci ) உரையும் விவாதமும்

          இன்று (10-04) சொற்பொழிவு ஒன்றுக்குப் போயிருந்தேன். ராபர்ட்.எம்.கெராச்சி எனும் நியூயார்க் நகர பேராசிரியர் "அமெரிக்க, இந்திய தொழில்நுட்பத்தில் சமய வழக்குகள்: அடிப்படை, பயன்முறை" என்பதைப் பற்றிப் பேசினார்.
 (Robert.M.Geraci "Fundamental and applied: religious practices in U.S. and Indian technology")
   
 வாரம் ஒருமுறை நடக்கும் இதுபோன்ற கூட்டங்களில் இந்த வாரம் இவர். இது ஓர்ஆய்வு/அறிவியற் கூடத்தில் நடப்பதால் பொதுவாக மாணவர்கள் சுறுசுறுப்புடன் கேள்விகள் கேட்டுத் துளைத்துவிடுவார்கள். இன்றைக்கோ படுசுவாரசியம். இவரும் ஒரு பேராசிரியராக இருப்பதால் ஒரு ஆய்வுக்காகவே இந்தியா வந்திருந்தார்.
  கெராச்சி ஒரு சமயப்புலப் பேராசிரியர். அறிவியலின் வரலாறு மற்றும் சமூகவியல், மானுடவியல் போன்ற பிறதுறைகளிலும் வல்லுனர்.இவருடைய முந்தைய புத்தகமான "பேரழிவுச் செயற்கை அறிவு" எனும் பரவலாக வாசிக்கபட்டு பாராட்டைப் பெற்றது.
அவருடைய இன்றைய சொற்பொழிவின் சுருக்கமாக அழைப்பிதழில் இருந்தது:
   In the 20th and 21st centuries, debates have raged over the respective domains of religion and science, often resulting in misguided attempts to identify how religion and science interact with one another. Such attempts are misguided in that 1) they are generally too limited in their explanatory power and 2) they presume that the practices of religion and the practices of science are separate and thus able to come into contact with one another as independent entities. In fact, science, technology, and religion are far more like plies in a length of yarn than they are like (non?)overlapping circles; therefore, it is pointless to look for “pure science” or “pure religion.” Examples from apocalyptic dreams of immortality and resurrection in U.S. technology and the integration of cultural traditions in Indian technology reveal how religion, science, and technology are intertwined, pulling one another first one way, then another. These are not religious ideas appended onto science and technology, but are perfectly ordinary examples of human scientific practice.

   முக்கியமாக அறிவியல், சமயம் என்று இரண்டும் தனித்தனி அல்ல. அவை தனித்தனியாக பிரிந்திருப்பதைப்போலவும் அதனால் அவை இணையும் புள்ளிகள் எவை என்பதைக் கண்டறியும் முயற்சிகள் போலவும் சென்ற நூற்றாண்டுகால வாதங்கள் இருந்தன. ஆனால் அவை இரண்டும் தனித்தனியானவை அல்ல, சமய வழக்குகளில் அறிவியல்த்தன்மை உண்டு அதிலும் முக்கியமாக அறிவியல் வழக்குகளில் சமயத்தின் கூறுகளும் உண்டு. இதில் இரண்டாவதை நிறுவவே தன் தற்போதைய முயற்சிகள் என தெரிவித்தார். அமெரிக்காவில் ரோபோடிக்ஸ் ஆய்வகங்கள் சிலவற்றில் தான் நடத்திய ஆய்வைச் சொல்லும்போது அங்குள்ள அறிவியலாளர்கள் ஆய்வகங்களில் தானியங்கி செயற்கைப் பாம்பு கார்கள் என முற்றிலும் அறிவியல் செய்துகொண்டிருந்தாலும் வெளியே உரைகளிலும், புத்தகங்களிலும் மிகுந்த சமயக் கூறுகளைக்கொண்டபடியே பேசினார்கள் என குறிப்பிட்டார். இங்கு இவர் சொன்னதை பொதுவாக அறிவியலாலர்கள் உரையாடல்களில் நிறைய சமயக் கருத்துகளை சாதாரணமாக தெளித்துப் பேசுவதை குறிப்பிடுகிறார். எனவே சமயமும் அறிவியலும் தனித்தனி என்று சொல்ல இயலாது அறிவியல் 'செய்யும்' போதே சமயமும் உள்ளே இருக்கிறது என்று சொன்னார். (இதற்கு பின்னணியில் இவரது முந்தைய புத்தகத்தை வைத்தே பார்க்க இயலும் அதைப் பின்னால் செய்வோம்).
 
    இப்படி அவர் பேசிவந்தபோது முதலில் அறிவியல் என்றால் என்ன சமயம் என்றால் என்ன என்பதை இந்த உரைக்காக நீங்கள் வரையறுங்கள் இல்லாவிட்டால் நீங்கள் சொல்வது குழப்பம்தான் என்று அவையினர் இடைமறித்தார்கள். அதற்கு அவர் சரி அறிவியல் என்பதை "மீஇயற்கையைத் (supernatural) தவிர்த்த உலகை அறியும் முயற்சி எனக்கொள்ளலாம்" எனவும், சமயம் என்பதற்கு டேவிட் சிடெஸ்ட்டர் எனும் சமய வரலாற்றியலாளர் சொன்ன : "மீமானுடத்திற்கும் குறைமானுடத்திற்குமிடையே மானுடனாக இருப்பதற்கான ஒரு பேச்சுத்தீர்வு" என்பதையே சமயம் என தான் ஏற்றுக்கொள்வதாகவும் கூறினார்.
(David Chidester:religion: ‘The negotiation of what it means to be human with respect to the superhuman and subhuman"). இப்படி வரைமுறையாக அவர் அறிவித்தாலும் பின்வந்த உரையில் அவர் கூறியவை பெரும்பாலும் இதற்குள் அடங்கவில்லை. அதை பலரும் சுட்டிக்காட்டிக்கொண்டே வந்தோம். இதை இப்போதைக்கு விட்டுவிடுவோம்.
 
    அடுத்ததாக அறிவியலை அளவீடுசெய்ய என்னஎன்ன போல்மங்களை (models) தற்போதைய அறிவியல்மெய்யியல் பயன்படுத்துகிறது என்பதைக் குறிப்பிட்டார். உதாரணமாக சாரம்சவாதம்,வகைமைவாதம்,வாழ்வுக்குறிப்புவாதம்,வலைப்பின்னல்கள் (essentialist;typological,biographical,actor-network) என பல போல்மங்களின் மூலம் அறிவியல் வழமைகளை அணுகலாம் எனக்குறிப்பிட்டு 19 ஆம் நூற்றாண்டின் அறிவியல்xசமயம் எனும் எதிர்மறை வழக்கு எப்படி இருபதாம் நூற்றாண்டின் மெய்யியல் அணுகுமுறையில் தவிர்க்கப்படுகிறது என்று சுட்டினார். இந்த வழிப் பார்வைகளில் பல போதாமைகள் இருக்கின்றன. சிலவற்றை சுட்டிக்காட்டியும் மேலும் விவரிக்கச் சொல்லியும் அவையினர் நாங்கள் கேட்க விவாதம் வளர்ந்தது.
     
    பிறகு தான் அறிபுனைகளை மிக முக்கியமானவைகளைக் கருதுவதாகவும் அவைகளின் பின்புலத்தில் தாம் சமயம் அறிவியல் குறித்த முக்கிய இடையூடுகளைக் காண்பதாகவும் சொன்னார். இவ்விடத்தில் அவருடைய புத்தகமான Apocalyptic AI படித்தவர்களுக்கு அவர் சொல்லவந்தது எளிதாக விளங்கியது. அதில் அவர் குறிப்பிடும்  ஆர்த்தர் க்ளார்க், வெர்னர் விஞ்ச், வில்லியம் கிப்ஸன், சார்ல்ஸ் ஸ்ட்ரோஸ் ஆகியோரின் எழுத்துகளையே மீண்டும் நினைவு கூர்ந்தார். யூத/கிருத்துவ மதத்தின் சில முக்கிய கருத்துருக்களான மானுடத்தின் போதாமை, கீழ்மை, எதிர்வரும் பேரழிவு,மீட்பர் தோற்றம், பிறகான சொர்க்கமாகும் உலகு என பலவற்றையும் தான் குறிப்பிடும் அறிபுனைகள் முன்வைப்பதாகவும் அவற்றை உள்வாங்கிய ரோபாடிக்ஸ் போன்ற அறிவியல்ப்புலங்கள் மானுடநினைவுகளை,எண்ணங்களை,உணர்வுகளை முழுவதுமாக இயந்திர ஞாபகவட்டுக்களுக்கு மாற்றம் செய்வதை குறிக்கோளாகக் கொண்டுள்ளதாகவும் இவை மானுடத்தின் சாகாவரம் கோரும் ஒரு நிலைபாட்டின் செயல்பாடே என்றும் சொன்னார். இதுவும் அவருடைய முந்தைய புத்தகத்தின் ஒரு இழை என்பதாகவே இருந்தது. இவ்விடத்தில் அவர் இக்கருத்துருக்களை முன்வைக்க நான் அவர் தேர்ந்த கதைகளில் ஏன் ப்ரான்க் ஹெர்பர்ட்டின் ட்யூன் (dune) புத்தகங்கள், ஹார்லன் எலிசன், மெக்காப்ரே போன்றோரின்  சிறுகதைகள் இல்லை எனக் கேட்டேன். முக்கியமாக ட்யூன்னின் ஆறு புத்தகங்களும் இறையியல்,அறிவியல்,சமயம்,அறிவியங்கியல் என பல பரிமாணங்களில் அவருடைய கருத்துகளைப் பேசும் புனைவுதானே என்று கேட்டேன். ட்யூன் ஒரு அதிமுக்கியமான புத்தகம் என்று சொல்லி சமாளித்தார். கொஞ்சநேர விவாதத்துக்குப்பின் தான் முதல் 3 புத்தகங்களை மட்டும் படித்ததாகச் சொன்னார். சரி என்று அடுத்த விவாதத்துக்கு தாவிவிட்டோம்.
  மேலைச் சமுதாயத்தின் எந்திரம்x மானுடம், மனதுx மூளை, சைபருலகு xபொருண்மையுலகு எனும் இருமை நிலையும் அதன் பின் தொடர் கருத்து/செயல் முறைகளால் கட்டமைக்கப்படும் பொறிகளும் வாழ்முறையும் முன்குறிப்பிட்ட யூத/கிருத்துவச் சிந்தனைகளின் முன்னெடுப்பே என்பதை விளக்க முனைந்தார். இதில் ஹான்ஸ் மோரவெச், ரே குர்ஸ்வைல் போன்றோரின் கருத்துகள் எப்படி இச்சமய கருத்துருவங்களின் நடமாடும் நிழல்கள் என்றும் விளக்கினார். இவற்றில் ஏற்கவும் மறுக்கவும் இருந்தாலும் அடுத்த புள்ளிக்கு விவாதம் தொடர்ந்தது.
 
 இப்படி உரை என்பது ஒரு கலந்துரையாடல் போல மாறிவிட்டதால் அவரை தொடர்ந்து பேசச்சொன்னோம். பிறகுதான் தலைப்பின் முக்கிய இழையான இந்தியாவில் தொழில்நுட்பத்தில் சமயவழக்குகள் பற்றி பேசத்துவங்கினார். தான் இங்கே தங்கியிருந்த சில மாதங்களில் சுமார் 150 அறிவியலாளர்களுடன் பேசியதாகவும் அவர்களின் சமயநம்பிக்கைகள் வழக்குகள் அறிவியல் செய்முறைபற்றி விவாதித்ததாகவும் தம் சாரம்சம் இது என்றும் சில புள்ளிகளைக் கூறினார். அதற்காக எப்படி ஆயுத பூஜை தொழிற்கூடங்கள், கல்வி, ஆய்வு நிறுவனங்கள் என பல இடங்களிலும் கொண்டாடப்படுகிறது, அதை எப்படி மதநம்பிக்கையற்ற ஆய்வாளர்களும் ஏற்றுக்கொள்கிறார்கள் அதில் சிலர் கருவிகளை செப்பனிட அவகாசம் எனும் வகையில் கொண்டாட்டத்தை பயன்படு வகையில் பார்க்கிறார்கள் என விளக்கினார். இவ்விடத்தில் அவையில் இருந்த பல இளைய ஆய்வாளர்களும் காரசாரமாக விவாதத்தில் உள்ளே நுழைந்தனர். இப்படி பல சமூகக் காரணிகளை உள்கொண்ட சடங்கை எப்படி அறிவியல் செயல்பாட்டுக்குள் கொணர முடியும் என விவாதம் பொறிபறந்தது. பல இடங்களில் தன் கருத்துகளின் போதாமையை கெராச்சி ஒத்துக்கொண்டார்.
  பிறகு கேள்விநேரத்திலும் பலமுனைத் தாக்குதல்தான். ஏறக்குறைய grilling என்று சொல்லக்கூடிய அளவு. ஆனாலும் ஒரு நல்ல விவாதமாலை என்பதை மறுக்கமுடியாது.
இன்னும் இதைப்பற்றி எழுத ஏராளம் உண்டு. ஆனால் அவருடைய முந்தைய புத்தகத்தைப் படித்தால் அதிலுள்ளபலவற்றையும் விளக்கியே இந்த உரையும் பெரும்பாலும் இருந்தது என உணரலாம்.  நீளம் கருதி இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்

இனி எனது கருத்துகள் சில
1. அறிவியல் தொழில் நுட்பம் இன்று நம் வாழ்வின் எல்லாக்கூறுகளிலும் யாராலும் தப்ப இயலாதவாறு நுழைந்துவிட்டதால் அறிவியல் வல்லுனர்களைத் தவிர சமுதாயத்தின் பிரதிநிதிகள் யாவரும் அறிவியல் பற்றிய விவாதங்களில் பங்குபெறுவது தவிர்க்க இயலாததாகிறது.
2. இன்றைய அறிவுப் புலங்களில் அறிவியல் மட்டுமே 'உண்மைக்கு' இன்று ஏகபோக பொறுப்பேற்றுக்கொண்டுள்ளதால் மெய்யியல் போன்றவை தம்மை நிலைநெகிழ்ந்து அறிவியலை அணுகவேண்டிய தேவை இருக்கிறது.
3. அறிவியலில் 'அறிவுத்தோற்ற செயல்பாடு' நடப்பது எப்படி என்பதை ஆராய சமூகவியல் மானுடவியல் வல்லுனர்கள் முனைந்ததில் கடந்த அரை நூற்றாண்டுகாலமாகவே ஏறக்குறைய பேட்டைச் சண்டையே நடந்து கொண்டிருக்கிறது. திரும்பத் திரும்ப கறாரான அறிவியல் /பொறியியல் கற்காதவர்களின் போதாமை இத்தகைய விவாதங்களின் போது தெளிவாகவே வெளிக்கிடுகிறது. இதை கெராச்சியே ஒப்புக்கொண்டார். தெளிவாகசொல்லக் கோரியபோது ஒரு முறை 'in our area we tolerate a lot of hot air' என்று சிரித்தார். இயல்பியல் விவாதங்களில் சிலர் எரிச்சலுடன்  'that is a lot of hand waving' என்று பழிக்கும் வாதங்கள் கூட பல சமூகவியல் வாதங்களை ஒப்பு நோக்க எவ்வளவு கறாரானவை என்று வெளிப்படையாகத் தெரிகிறது.
4. ஆக்டர்-நெட்வொர்க் தியரி எனும் வலைப்பின்னல் கோட்பாடு ஒரு போல்மமாக இப்போது நிறைய பயன்படுத்தப் படுகிறது. அறிவியல் செயல்பாட்டை ஆய்வுசெய்ய இதை சமூகவியலாளர் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இதன் போதாமைகளை விரிவாக எழுதவும் நிறைய இருக்கிறது.
5. தன்னை ஒரு அக்னாஸ்டிக் என அழைத்துக்கொண்ட கெராச்சி யூதர்கள் எதையும் நம்பவேண்டியதில்லை என்றும் நம்பிக்கைவேறு பழக்கவழக்கங்கள் வேறு என்றெல்லாம் சொல்லி தனக்கு ஒருவர் மதநம்பிக்கையாளரா இல்லையா என்பது ஒரு பொருட்டில்லை என்றும் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதே முக்கியம் என்றும் கூறினார். அப்புறம் எப்படி இவர்போடும் நெட்வொர்க்கைவைத்து கருத்துச் சொல்லமுடியும் என்று கேட்க நேரமில்லை. நாத்திகன் என்றே இருந்தாலும் கோவிலில் நெடுஞ்சாண்கிடையாக விழத் தயங்காத நம்மையெல்லாம் மேலை நாட்டவர்களால் அணுகவே இயலாது என்றே தோன்றியது.
 6 கடைசியாக ஒரு ஜாலியான புள்ளி. சிவபெருமானின் நடனவிளக்கத்தைச் சுட்டிக்காட்டப்போய்  கிருபானந்த வாரியாருக்கு அடுத்தபடி அறுபத்தி ஐந்தாவது நாயன்மாராகவே ஆக்கப் பட்ட கார்ல் சாகனின் நிலைமை இந்த கெராச்சிக்கும் இந்துத்துவவர்கள் கொடுத்தே விடுவார்களோ என அச்சமாக இருக்கிறது. ஆயுத பூஜையின் ஆக்டர் நெட்வர்க் போட்டு அதன்படி (ஒரு யூகம்தான். நிஜமென்று நம்பிவிடாதீர்கள்) அடுத்த ஆய்வுக்கட்டுரையோ புத்தகமோ வரும் போது கொண்டாங்களை எதிர்கொள்ள நாமும் தயார்செய்துகொள்ளலாம்.

No comments: