Monday, July 01, 2013

பொறியியல் ப்ராஜக்ட் ரிப்போர்ட், அறிவியல் பயில்முறை
 
    "இப்போ ஐன்ஸ்டைன் ஸ்பெஷல் தியரி ஆஃப் ரிலேட்டிவிட்டி கண்டுபிடித்தாரே அது முழுக்க அவரே யோசிச்சதா" எதிரிலிருந்த மாணவி கேட்டாள்.
 இரண்டு மாணவிகள், ஒரு மாணவன். வேறுவேறு பொறியியல் கல்லூரிகளில் கடைசி வருடம் படிக்கிறார்கள். ஒரே ப்ராஜக்ட் செய்கிறார்கள்.
  கேள்விக்கு நான் பதில் சொல்லாமல் ம்ம் என்றேன்.
" அவர் அதை சிந்தித்துக்கொண்டிருக்கும் போது அவருக்கு என்னென்னவெல்லாம் தோன்றியிருக்கும். அவருக்கு முன்னால் இருந்த பலருடைய சிந்தனைகளும் வந்து போகும்தானே."
"கண்டிப்பா"
"அதேபோலத்தானே நியூட்டனுக்கும். டார்வினுக்கும்."
நான் 'ம்' கொட்டிக்கொண்டே கேட்டேன்
இன்னொரு பெண் இடை மறித்து, " நீங்கள் இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள். சொல்லவே இல்லை?"
என்று மடக்கினாள்.
"நீங்க முடியுங்க. சரியாத்தானே சொல்கிறீர்கள்" என்று பொதுவாக ஏதோ சொல்லிவைத்தேன்.

அவர்களுடைய ப்ராஜக்ட்டை விவரித்துக்கொண்டிருக்கிறார்கள். நம் அபிப்பிராயங்கள் இதில் இப்போது முக்கியமில்லை.அடுத்த அரை மணிநேரத்துக்கு மாற்றி மாற்றி மூன்று பேரும் அவர்களுடைய ப்ராஜக்டை விளக்கமாக எடுத்துச் சொன்னார்கள். நான் நடுவில் அவ்வப்போது உற்சாகப்படுத்தும் சொற்களை மட்டும் சொல்லிக்கொண்டு அவர்களுடைய சிந்தனை செல்லும் திசைகளையும் ஒழுங்கையும் கவனித்துக்கொண்டிருந்தேன்.
   
    அவர்கள் முக்கியமாக நிறுவமுயற்சிப்பது என்னவென்றால் நாம் நமது சிந்தனைகளை நமதே என நினைத்துக்கொண்டிருப்பது சரியல்ல. எப்படியும் மற்றவர்களுடைய சிந்தனைகளும் உள்ளடங்கியவையே நமது அனைத்துச் சிந்தனைகளும். அது பொதுவாக அனைத்துத் தளங்களுக்கும் உண்மை. கண்டுபிடிப்புகள், படைப்புகள் அனைத்தும் இவ்வகையே.
 
    சரி இப்படி ஒரு பொதுவான ஒரு கோட்பாடு (என்று வைத்துக்கொள்வோம்) ஒன்றை அவர்கள் வகுத்துவிட்டார்கள். இதையெல்லாம் வளவள என்று எழுதி இதாங்க ரிப்போர்ட் என்று கொடுக்கமுடியாது. இதை இன்னும் கோட்பாடு எனும் நிலையிலிருந்து ஒரு குறிப்பிட்ட திசையில் கோட்பாட்டின் எல்லைகளோடு நிறுவ வேண்டும். இதை எப்படி நிறுவுவது? இந்த இடத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்காமல் நிறுத்தி சில நிமிடங்கள் இதை சிந்தித்துப் பாருங்கள். நீங்களாக இருந்தால் என்ன செய்து இதை நிறுவுவீர்கள்? சில நிமிடங்கள் செலவிட்டால் உங்களுக்கே இந்த சிந்தனைப்போக்கின் ஆழம் புரியும்.

  அதற்குப்பிறகு அவர்கள் தாம் செய்யும் சில சோதனைகளை விளக்கத் தொடங்கினார்கள். ஒரே தலைப்பில் சிலர் தனித்தனியாக எழுதுதல், கலந்து பேசி எழுதுதல், இணை சேர்ந்து எழுதுதுதல் என்று பல படிவங்களைச் சேர்த்து அதை எப்படி தொகுத்து அலசலாம் என்று ஒரு திசை ஆய்வு.விக்கிபீடியா போன்ற தொகுப்புக் களஞ்சியங்களில் 'பொருள்' பொதிந்திருப்பதும் புலப்படுத்துவதும் போன்ற இன்னொரு திசைத் தரவுகள்.இப்படி செல்கிறது அவர்கள் பொறியியல் ப்ராஜக்ட் வேலை.
 பேசிமுடிந்ததும் எனது கேள்விகளைக்கேட்டேன். குழந்தைகளின் குறிப்பிட்ட சில கூட்டுச் செயல்களை வரைப்படுத்தி அணுகுவதன் மூலம் எப்படி அவர்களுடைய முதல் சோதனையை இன்னும் கூர்மையாக்க, எளிமையாக்கவும் கோட்பாட்டின் ஒரு பகுதியை விடுவிப்பதாகவும் அமைக்கலாம் என்றும் விளக்கினேன். பியாஜெ-யின் (jean piaget) சில ஆய்வுகளை இதற்கும் பயன்படுத்துவது எப்படி என்று விவாதம் சென்றுவிட்டது. இது அவர்கள் இன்னும் வேலைசெய்துகொண்டிருக்கும் ஒரு விஷயமாதலால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.
   
    இதுவரை சொன்னதை யார்வேண்டுமானாலும் உட்கார்ந்து ரூம் போடாமலே யோசித்து விடலாம். ஆனால் அறிவியல் 'செய்வது' என்பது இதற்குபிறகுதான் துவங்குகிறது. அது அறிவியல் முறை. அதை தொடர்ந்த பயிற்சியின் மூலமே செம்மையாக்க முடியும். அந்த வகையில் நம் பொறியியல் மாணவர்களின் ப்ராஜக்ட் ரிப்போர்ட் என்பது ஒரு முக்கியமான பயிற்சி. மீண்டும் கவனப்படுத்த:

பொறியியல் ப்ராஜக்ட் ரிப்போர்ட்டின் நோக்கமும் வரையறையும்:
----------------------------------------------------------------------------------------------------
1. சிறு வயதிலேயே தமக்கான கோட்பாடுகளை அமைத்துக் கொள்ள பயிற்சி எடுத்தல்
2. அதை சரியா தவறா என்று  நிறுவ குறிப்பான எடுத்துக்காட்டுகளைக் கண்டுபிடித்தல், தேர்ந்தெடுத்தல்
3. எடுத்துக்காட்டுகளை கூர்மையாகவும் ஆழமாகவும் கவனமாக்கி அவற்றின் எல்லைகளை நிறுவுதல்
4. எடுத்துக்காட்டுகள் பல வகையான புறத் தூண்டல்களுக்கும் எப்படி எதிர்வினை செய்கின்றன என நோக்கல், வகைப்படுத்துதல், கணித்தல்.
5. இவற்றையெல்லாம் தொகுத்து தாம் தொடங்கிய கோட்பாடு இவற்றுக்கு இயைந்து வருகிறதா இல்லையா என சீர்தூக்கல்.அதை ஆவணப்படுத்துதல்.
6. இவையனைத்தையும் சீராக ஒழுங்காக மற்றவர்க்கு கற்றுத்தர, விளக்க பயிலுதல்.

     மிக அருமையான மாணவர்கள். அப்படியே கண்கூசும் அறிவுச்சுடர் ஜொலிக்கிறது என்றெல்லாம் இல்லாமல் சாதாரணமான, நிறைய, விடாமல் தொடர்ந்து கடிஜோக் அடிக்கும், விளையாட்டுப் போக்கானவர்கள். ஆனால் புதிதாக சிந்திக்கவேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. ஐன்ஸ்டைன் டார்வின் போன்ற அறிவியலின் பெரும் 'கடவுளர்' களைப் பற்றியே அவர்களின் சிறப்பு என்ன, அப்படி ஒன்று இருக்கிறதா என்று குடைந்து நோக்கும் ஆர்வமும், பயமின்மையும் இருக்கிறது. தமக்குத் தெரிந்தவற்றை பிறருடன் பகிர்ந்து குற்றங்குறைகளை ஏற்று வாதித்து தம்மை மேன்மைப்படுத்தும் முனைப்பு இருக்கிறது. இதெல்லாம்தான் தேவை. 199.99/200 என்பதில் எந்த அர்த்தமும் இல்லை.  நானே கண்டுபிடித்தேன் நானே பெரும் படைப்பாளி என்பதிலும் ஒரு பொருளும் இல்லை.

No comments: