Monday, October 28, 2013

நவீன அறிவியல் எனும் சப்பை மேட்டர்
 நவீன அறிவியல் எனும் சப்பை மேட்டர்

 இன்று இந்து ஆங்கில இதழில் ஒரு செய்தி வந்திருந்தது. கிண்டி பொறியியல்
கல்லூரியில் இலந்திரனியல்-தகவல்தொடர்புத்துறையில்  இளநிலைப் பொறியியல் பயிலும் ஒரு மாணவரைப் பற்றி. அவர் தன்னுடைய செமஸ்டர் தேர்வுகள் சிலவற்றில் தேறாமல் நிலுவையில் வைத்திருந்த போதிலும் இயல்பியலில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார்; அவற்றை பன்னாட்டு ஆய்வு இதழ்களில் பிரசுரம் செய்திருக்கிறார், அவருடைய ஆய்வுக்கட்டுரைகளை முன்னிட்டு கலிபோர்னியா-பெர்க்கிலி பல்கலைகழகம் அவருக்கு முனைவர் பட்டம் கொடுத்துள்ளது. இவ்வாறெல்லாம் அந்த செய்தியில் (  சுட்டி  ) படிக்கும் போது வியப்பாகத்தான் இருந்தது.

       எனக்கு இயல்பியலில் ஆர்வம் உள்ளதால் சரி இவர் என்னதான் ஆய்வு செய்திருக்கிறார் என்று பார்க்க அடங்கா வேட்கையில் கூகுளில் சிறிது தேடினேன். அவர் எழுதி பிரசுரமான  இரண்டு கட்டுரைகளின் பிரதிகள் கிடைத்தன. கட்டுரைகளைப் பார்த்தவுடன் ஒரே நிமிடத்தில் இதுதொன்றும் சரியில்லையே என்று தெரிந்து விட்டது.
1. ஒரு கட்டுரையின் தலைப்பு:
பொருண்மையீர்ப்பு விசையின் வினை மூலம் ஒடு இலந்திரனின் உட்கட்டமைப்பு ( சுட்டி )
2.  இன்னொன்று:
ஒரு கருந்துளையின் உள்ளே ஒரு இலந்திரனின் செயல்பாடு ( சுட்டி )

 இதில் முதலாவது கட்டுரையின் தலைப்பே திகைப்புதான். ஏனென்றால் இப்போதுள்ள அறிவின் படி ஒரு எலக்ட்ரானுக்கு உட்கட்டமைப்பு என்று ஒன்றும் இல்லை. இன்னும் கொஞ்சம் பணிவாகச் சொல்லவேண்டுமானால் ஒரு எலக்ட்ரானின் உட்கட்டமைப்பு பற்றியெல்லாம் பேசுமளவு கோட்பாட்டளவிலோ அல்லது செய்முறை ஆய்வளவிலோ நவீன இயல்பியல் இன்னும்  முன்னேறவில்லை. இதைப்பார்த்தவுடனே இது அறிவியல்
அல்ல வேறே ஏதோ என்று தெரிந்து விட்டது.

 இரண்டாவது கட்டுரை தலைப்பு எதுவும் சொல்லவில்லை. எனவே  முதலில்
வழக்கமாகக் கொடுக்கும்  ஆய்வுக்கட்டுரையின் கதைச் சுருக்கத்தைப் படித்தால் அதைவிடக் குழப்பம். ஆற்றல் அழியாக் கோட்பாடெல்லாம் மீறப்படுகிறது என்பது போல சொற்றொடர்கள். 'இது ஆவுறதில்லை' என்றே தெரிந்து விடுகிறது.

      இரண்டு கட்டுரைகளையும் முழுதாகப் படித்தேன். இதில் 'புரிந்து கொள்ள' ஏதுமில்லை.. -முழு உளரலில் புரிய ஏதுமில்லை என்பதுபோன்ற பொருளில். ஆய்வுக்கட்டுரைகள் எழுத ஒரு முறை இருக்கிறது. ஒரு மொழி இருக்கிறது. இலக்கணப் பிழைகளையோ, சொற்பிழைகளையோ சொல்லவில்லை. நவீன அறிவியல் எல்லாப் புலங்களிலும் சில பரிமாற்ற உள் ஒழுங்குகளைக் கொண்டுள்ளது. கோட்பாடுகளைப் பேசவும் அவற்றை ஒட்டியும் வெட்டியும் விவாதிக்கவும் வழிமுறைகள் உள்ளன. இவை யாரும் படிக்கவியலாத மொழியில் செயப்பாட்டு வினைகளோடு இருக்கவேண்டும் என்றெல்லாம் நினக்க வேண்டாம். சரளமாக பேச்சுமொழிபோலவே எழுதப் பட்ட ஆய்வுக்கட்டுரைகளே இப்போது இயல்பியலில் அதிகம். ஆனால் அடிப்படைக் கோட்பாடுகளில் அலட்சியமிருந்தால் அபத்தம் இருந்தால் அவை ஒரே வீச்சில் குப்பைக் கூடைக்குத்தான் போகும்.

     தற்கால நவீன அறிவியல் விளையாட்டல்ல. அதை பற்றி கருத்துகளையும் போகிற போக்கில் வசைகளையும் நம் தமிழ்ச் சிந்தனையாளர்கள் அள்ளி வீசுவது நாளும் நடக்கிறது. அதற்கெல்லாம் எதிர்வினை செய்து நமது நகைச்சுவை உணர்வைக் குறைத்துக்கொள்ளக்கூடாது. ஆனால் இது போல அறிவியல்,பொறியியல் துறைகளில் உள்ளிருந்தே அதுவும் மாணவப்பருவத்திலேயே தவறுகள் நடந்தால் அதைக் கண்டிப்பதும் விவாதிப்பதும் மிகவும் முக்கியம்.No comments: