Monday, December 16, 2013

நமது நூலகம் - 3

நமது நூலகம் - 3

---------------------------
 7. ஆத்மாநாம் படைப்புகள்
பதிப்பாசிரியர்: பிரம்மராஜன்
காலச்சுவடு பதிப்பகம்
விலை ரூ 145

 'புதுக்கவிதை' என்று குறிப்பிடப்படாமல் கவிதை என்றாலே 'புதுக்'தான் என்றாகிவிட்ட காலத்தில் வந்த பல கவிஞர்களுக்கும் கவிதை சரியாக எழுத வாய்க்கவில்லை. ஆத்மாநாம் கவிதையை கவிதையாக எழுதிய சிலருள் ஒருவர். அநேகமாக அவருடைய அனைத்துக் கவிதைகளும் சில கட்டுரைகளும் ஒரு பேட்டியும் கூட இருக்கும் ஒரு நல்ல தொகுப்பு இது. இவரையெல்லாம் படிக்காமல் தமிழில் யாரும் தயவு செய்து இனி கவிதை எழுதாதீர்கள்.
8. எம் தமிழர் செய்த படம்
சு. தியடோர் பாஸ்கரன்
உயிர்மை பதிப்பகம்
விலை ரூ. 100

திரைப்படம்தானே தமிழரின் இப்போதைய ஒரே திரள்கலை ஊடகம், ஒரே கலைப்படைப்புச் செய்பொருள், ஒரே அறிவுசேர் மொழி, ஒரே இனக்குழு அடையாளம்? ஆனால் திரைப்படங்களைப் பற்றிய முறையான வரலாறோ, அடிப்படைக்கருதுகோள்களோ, கோட்பாட்டுச் செழுமைகளோ, சமூகவியல் கூராய்வுகளோ இன்னும் சரியாக தமிழில் வரவே இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமான சில முயற்சிகளைத் தவிர. அவற்றுள் ஒன்று இது. தமிழ்த் திரை பற்றி ஒரு பறவைப் பார்வைக்கு ஏதுவான நூல். ஆரம்பநூல் எனும் வகையில் முக்கியமானதும் கூட.

9. சோழர்கால நிலவுடைமைப் பின்புலத்தில் கோயில் பொருளியல்
மே. து. ராசுகுமார்
மக்கள் வெளியீடு

தமிழக வரலாற்றில் மிக முக்கியமாக பேரரசு அமைத்தல், பெரும் சமயம் வளர்த்தல், உன்னதக் கலை வடித்தல் என பாரிய கூறுகள் கொண்ட காலம் சோழர்கள் காலம். அக்கால நிலவுடமை நிலை, அரசர், பிராமணர்கள், வேளாளர், பிற சாதியினர் என பலரிடையே இருந்த உறவு, அதிகார வலைப் பின்னல்களை அறிய தமிழும் நன்கு அறிந்தவரே நுணுக்கி அணுகமுடியும். அந்நோக்கில் பல தரவுகளைக் கொண்டு தொகுக்கப்பட்ட நீண்ட கட்டுரையின் நூல்வடிவம் என ஆசிரியரே ஒப்புக்கொள்ளும் நூல் இது.
நம் முன் யூகங்கள் பலவற்றை கேள்விகேட்கவும் செய்யும் நூல். இதைப்போன்ற ஆய்வுகள் இன்னும் நிறைய தமிழர் வரலாற்றை முன்னிட்டுச் செய்யவேண்டி உள்ளது.

Saturday, December 14, 2013

நமது நூலகம்-2


நமது நூலகம் - 2
------------------------------------------

4. காட்டில் ஒரு மான்.

அம்பை
காலச்சுவடு பதிப்பகம்
விலை ரூ 75

 எழுபதுகளிலும் எண்பதுகளிலும் தமிழிலக்கிய, சிறுபத்திரிக்கைகள் அறிமுகம் உள்ளவர்கள் அம்பையின் எழுத்துகளைத் தவராமல் எதிர்கொண்டிருப்பார்கள். பெண்ணியக்கூறுகள் பொதுவாகவே இந்தியமொழி எழுத்துகளில் மேலைநாட்டு இலக்கியம் போல் வெளிப்படையாக, எதிர்மறையாக, போராட்டமாக அன்றி உள்முகமாகவே வெளிப்பட்டிருக்கின்றன. தமிழில் அம்பையின் குரல் அப்படி முதலில் வந்தவற்றுள் ஒன்று.

பெண்ணியம் என்பது ஒரு குறுக்கும் சிந்தனைக்கட்டு அல்ல,  ஒரு உள்ளடக்கும் விரிசிந்தனைதான் என்ற தெளிவுடன் இவர் கதைகளை அப்படி வகைப்படுத்தலாம். தொண்ணூறுகளில் அவர் எழுதிய கதைகளின் தொகுப்பு இது.
'சிறகுகள் முறியும்' அம்பைக்கும் இதற்கும்தான் எத்தனை வித்தியாசம்.
------------------------------------------------------
5. தமிழர் உணவு

சே. நமசிவாயம்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
சென்னை
விலை ரூ. 70

 பத்து வருடங்களுக்கு முன்புகூட இல்லாத பலபுது உணவுகள், உணவுப் பொருட்கள் நம் அன்றாட
சமையலில் நுழைந்து விட்டன. பனீர், சீஸ் போன்ற பாலாடைக்கட்டிகள், ஸ்பாகட்டி, பாஸ்தா போன்ற
ஆதார உணவுகள் கசூரி மேதி போன்ற வாசனைப் பொருட்கள் என. மற்றொருபக்கம் உயர்விலைப்
பேரங்காடிகளில் சாமை, வரகு, தினை போன்ற கிராமங்களில் சங்ககாலத்திலிருந்து பயன்படும்
தானியங்கள் அதிகவிலையில் கிடைக்கின்றன.

வேகமாக மாறிவரும் நம் உணவுக் கலப்பில் பழங்காலத் தமிழர்கள் என்னதான் உண்டார்கள் என்பது சுவாரசியமான கேள்வி. அவர்கள் உண்ட தானியங்கள், இறைச்சிகள், பழங்கள் எனப் பார்க்கும் போது மலைப்பாகத்தான் இருக்கிறது.

மிக உபயோகமான அகரவரிசைப் பட்டியலுடன் கூடிய இலக்கிய மேற்கோள்களுடன் கூறும் நூல்.

-----------------------------------------------------------------------------------------------------
6. மழைக்காலமும் குயிலோசையும்           

மா. கிருஷ்ணன்
காலச்சுவடு பதிப்பகம்
விலை ரூ. 90

நம்மைச் சுற்றிலும் விலங்குகள் பறவைகளோடுதான் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இன்னுமொரு ஐம்பதாண்டுகள் கடந்தால் எப்படி நகரங்கள் மாறும் என்பது நம்மை சிந்திக்கவைக்கும் நல்ல கேள்வி.  அறுபது எழுபது ஆண்டுகளுக்கு முன் காட்டு,நாட்டு விலங்குகள்,பறவைகள் பற்றி அழகான தமிழில் எழுதப்பட்ட குறுங்கட்டுரைகளின் தொகுப்பு நூல். அழகான வரைபடங்களும் உண்டு. அனுபவித்துப் படித்தேன்.

 பள்ளி மாணவனாக இருக்கும்போது வாசிக்கக் கிடைத்திருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்பேன். ஆனாலும் அக்காலத்தில் தி.ஜ.ர மொழிபெயர்ப்பில் படித்த "குமாவுன் புலிகள்" இன்றும் மறக்கவில்லை. வீட்டில் பள்ளிசெல்லும் குழந்தைகள் இருந்தால் தவறாது வாங்கித் தாருங்கள். 

Friday, December 13, 2013

நமது நூலகம்-1


நமது நூலகம்-1
-----------------------------

  சென்னைப் புத்தகக் கண்காட்சி விரைவில் துவங்கப்போகிறது. என்னதான் மடிக்கணினி, கையடக்க அட்டைக்கணினி என வந்துவிட்டாலும் புத்தகம் வாங்கிப் படிப்பதுபோல எதுவும் வராது. புதிதாக புத்தகம் வாங்கத் துவங்கும் இளையோர் கண்களில் பல பழைய புத்தகங்கள் படாமலே போய்விடுகின்றன. அவற்றைப்பற்றிப் பேசவோ எழுதவோ கூட நிறையப்பேர் இல்லை. பல காலமாக நான் சேகரித்த சில புத்தகங்களை மிகமிகச் சுருக்கமான அறிமுகத்துடன் (நான்கைந்து வரிகள் மட்டுமே) இனி வரும் நாட்களில் தொடர்ந்து சுட்டிக்காட்ட முயல்கிறேன். சில பழையபதிப்புகள் இப்போது கிடைக்காமல் இருக்கலாம். நூலகத்தில் கிடைக்கலாம். இவை எல்லா இயல்களிலும் இருக்கலாம். ஆனால் தமிழ்ப் புத்தகங்கள் மட்டும்தான். பரந்துபட்டு வாசிக்கும் ஆர்வத்தைக் கூட்டவே இதைப் பயன்படுத்தப்போகிறேன். அபிப்பிராயங்கள் என்னுடையவை. இப்புத்தகங்களைப் படிக்கும் போது யான் பெற்ற இன்பம் பெருக பிறரும் என்பது மட்டுமே குறிக்கோள்.
(விலைகள், பதிப்பகங்கள் இப்போது மாறி இருக்கலாம்.)

------------------------------------
1. கைப்பிடியளவு கடல்
பிர்மீள் தருமு: ஔரூப் சீவராம்
மணி பதிப்பகம், சென்னை
விலை. ரூ. 8தமிழின் தலைமைக் கவிஞர் என நான் நினைப்பவர். இவரின் முழுக்கவிதைத் திரட்டும் ஒரே நூலாகவும் கிடைக்கிறது. ஆனாலும் ஒரு நினைவூட்டலுக்காக இதைப் பதிக்கிறேன். இவருடைய கட்டுரைகள் பல்நோக்குக் கொண்டவையாயிருந்தாலும் தம்மில் மிக வித்தியாசமான நிலைபாடுகளாலும் அக்காலத்தில் நிலவிய இலக்கியஉலக அரசியலாலும் பெரிதும் சாய்மானமானவை. தமிழிலக்கிய ஆர்வமுடையர் எனத் தம்மைக் கருதும் எவரும் தவறாது படித்திருக்கவேண்டிய கவிஞர்.
-----------------------------------------
2. தொலைக்காட்சி: ஒரு கண்ணோட்டம்
  பியர் பூர்தியு
  (பிரெஞ்சு மொழியிலிருந்து நேரடித் தமிழாக்கம்: வெ. ஶ்ரீராம் )
   க்ரியா பதிப்பகம். சென்னை.
   விலை ரூ. 100 இருபதாம் நூற்றாண்டு பல மானுட அறிவுத்துறைகளிலும் பெரும் பாய்ச்சல் நடந்த ஒரு நூற்றாண்டு. அதேபோல் பெரும் வாணிகம் கட்டியெழுப்பிய நாடுகடந்த திரள்சமுதாயக் கலை நுகர்வும் வளர்ந்த காலம். இப்பெரும் மாற்றங்களை ஆய்ந்து அறியத் தேவையான கோட்பாட்டுக் கட்டமைப்புகளை பெரிதும் ஐரோப்பிய அறிஞர்களே செய்துள்ளார்கள். இதில் பிரெஞ்சு அறிஞர்களுக்கென தனி இடம் உண்டு. இவர்களுள் மெய்யியலாளர், சமூகவியலாளர், விமரிசகர்- பியர் பூர்தியு ஒருவர்.

  தற்காலத் தமிழ் நாட்டில் அனைவரும் தொலைகாட்சி ஊடகத்தில் குடும்பம் குடும்பமாக அமுங்கி சுகித்துக்கொண்டிருக்கும் போது தொலைக்காட்சி ஓயாமல் கொட்டும் பிம்பங்களின் சமிக்ஞைகள் தாம் எவை? அவை எத்தகைய அழகியலையும் அதிகாரக் கட்டமைப்பையும் வளர்த்தெடுக்கின்றன? இக்கேள்விகளை அணுக நவீன அணுகுமுறைகளை, சிந்தனை வழிகளை நாம் கைக்கொள்ளவேண்டியுள்ளது.
தொலைக்காட்சி ஊடகத்தைப் பற்றிய புரிதலில், அதைப்பற்றிய நமது விமரிசனத்தைக் கூராக்குவதில் மிகத் துணையிருக்கும் ஒரு நூல்.
--------------------------------------------------

3. கட்டுரைக்கனிகள்
கிருபானந்த வாரியார்
குகஶ்ரீ வாரியார் பதிப்பகம், சென்னை.
விலை. ரூ.45கிருபானந்த வாரியாரின் உரைகளும் கட்டுரைகளும் சுவையானவை. நம் கடவுள்கள், நம் சிந்தனையை ஆண்டுகொண்டிருக்கும் புராணங்கள், இடைக்காலச் சமயப் பேரெழுச்சி படைத்த தமிழிலக்கியங்களின் உள்ளுறை அழகுகள் இவற்றை சில பத்தாண்டுகளுக்கு முன்கூட தமிழகம் இயல்பாக நூல்கள் வழியாக கற்க முடிந்தது. இப்போது அது இயலாது. இவருடைய எளிமையான ஆனால் ஆழமான விளக்கங்களை என்னால் இப்போதும் ரசித்துப் படிக்க முடிகிறது - என் தனிப்பட்ட நம்பிக்கைகளை ஒருபுறம் தள்ளிவைத்து விட்டு.