Tuesday, October 07, 2014

2014 இயல்பியல் நொபல் பரிசு -nobel prize

ஒளிஉமிழ் டையோடுகள் - இந்த ஆண்டு இயல்பியல்  நோபல் பரிசு

 சூரியன் ஒளிரும் பகல் பொழுதுகள் மட்டுமே ஆதிமனிதனுக்குப் போதவில்லை. மாலை இருளடைந்தவுடன் பிற  உயிரிகளைப்போல் அவனும் உறங்கி அதிகாலையில் விழித்தெழ, இரவெல்லாம் அவனது பெரிய மூளை சோம்பிக்கிடக்க, அவனுக்கு உவப்பாக இல்லை. உணவைச் சுடவும், குளிருக்குச் சூடுதரவும் ஒளியில் கதைகள் பேசவும் நெருப்பைப் பழக்கினான். அதையே கட்டுப்படுத்தி மட்டுப்படுத்தி அகல் விளக்குகளில் விலங்குக் கொழுப்புகளை எரித்து தன் இருப்பிடத்துக்கு  இருளில் ஒளியேற்றினான். அது நடந்தது பதினையாயிரம் ஆண்டுகளின் முன். பலகாலம் விலங்குக் 
கொழுப்பே விளக்கெரிக்கப் பயன்பட்டது. பின்பு தாவர எண்ணெய்களைப் பயன்படுத்தத் தொடங்கினான். ஏறக்குறைய  நூற்றைம்பது வருடங்களுக்கு முன்தான் (19 ஆம் நூற்றாண்டில்) கரியிழையைப் பயன்படுத்தும் மின் விளக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் பரவலாகத் தொடங்கின. பின்பு டங்ஸ்டன் இழைகள் வந்தபின்னரே 
பொதுமக்களும் பயன்படுத்த மலினமான குண்டு மின்விளக்குகள் வந்தன. இரண்டாம் உலகப்போருக்குப் பின் மின்சாரம் பலநாடுகளிலும் அத்தியாவசியமானதாக உணரப்பட்டு வீடுவீடாக விளக்கொளி வழங்குவதே அரசுகளின், தனியார் நிறுவனங்களின் தொழிலாகவும் ஆனது. தமிழகத்தை எடுத்துக் கொண்டால் 70 களில்தான் நூறு சதவீத கிராமங்களும் 
மின்னிணைப்பு வசதிகளைப் பெற்றன. நாட்டின் பல மாநிலங்களில் இது இன்னும் சாத்தியமில்லை என்பதை நினைவில் 
கொள்ளவேன்டும்.  

   நாட்டில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் நாம் பெரும்பகுதியை விளக்கெரிக்கப் பயன்படுத்துவதில்லை. தொழிற்ச்சலைகளுக்கே பயன்படுத்துகிறோம். வீடுகளுக்கு சாலைகளுக்கு பொது இடங்களுக்கு என ஒளிதர நாம் பயன்படுத்தும் மின்சக்தி உற்பத்தியாகும் மின்சக்தியில் 30% க்கு மேல் மிகாது. ஆனாலும் உலகின் பல பகுதிகளும் மின்சக்தி இணைப்பில்லாமலும் இருந்தாலும் விளக்குகளை வாங்கிப்பயன்படுத்த போதிய வசதி இல்லாமலும் இருப்பதால் பலகோடி மக்கள் இருளிலேயே உள்ளனர். உலகளாவிய நோக்கில் ஒளியும் உணவைப்போலவே சிலராலேயே மிகவும் கையகப் படுத்தப்பட்டும் பலருக்கு கிட்டாமலும் இருந்து கொண்டிருக்கிறது. இதனளவில் பார்க்க மின்விளக்குகளின் விலையைக் குறைக்க எந்தத் தொழில் நுட்பம் வந்தாலும் அது ஒட்டு மொத்த மாநுட நலனுக்கானது என்பதில் ஐயமில்லை.அவ்வகையில் இவ்வாண்டின் இயல்பியல் நொபல் பரிசு ஒளியை அனைவருக்கும் சிக்கனமான முறையில் வழங்குவதற்கான நுட்பத்தைக் கண்டுபிடித்த மூன்று ஜப்பானிய இயல்பியலாளர்களுக்குக் கிட்டியுள்ளது. அவர்கள் கண்டுபிடித்த நீல ஒளியுமிழ் டையோடுகளுக்கே இப்பரிசு கிட்டியுள்ளது. இந்த டையோடுகள் இப்போது  அன்றாடம் பயன்படுத்தும் டிவித் திரைகள் விலையுயர்ந்த செல்போன்களின் ஒளிபல்புகள் என சந்தைக்கு வந்து விட்டன, இந்த புது நுட்பம் பற்றிச் சற்றே பார்ப்போம்.

   நாம் குண்டு பல்புகளோடு கதையை விட்டுவிட்டோம். அதன்பின் குழல் விழக்குகள் வந்தன. இவை இரண்டுக்கும் நுட்பத்தில் வேறுபாடு உண்டு. குண்டு பல்புகளில் அவற்றில் உள்ள டங்க்ஸ்டன் இழைவழியே மின்சாரம் பாயும்போது அவை சூடேறி சூட்டின்மூலம் எலக்ட்ரான்கள் அணுக்களுக்கு இடையே உள்ள மின்கடத்தும் பட்டைகளில் மேலும் கீழும்  குதிப்பதால் 
ஒளித்துகள்களான போட்டான்களை உமிழ்கின்றன. இப்படி உமிழும்போது அவ்வொளித்துகள்கள் நாம் காணும் அதிர்வெண்களில் இருக்கவேன்டுமானால் உலோக இழை 2200 செல்சியஸ் வெப்பத்துக்கு மேல் இருக்கவேண்டும். இத்தனை வெப்பத்தில் அதிக நேரம் இருப்பதாலேயே குண்டுபல்புகளின் இழைகள் நாட்பட அறுந்து தம்  செயலிழக்கின்றன. மேலும் பாயும் மின்சாரத்தை ஒளியாக மாற்றும் செயல்திறனிலும் இவை குறைபட்டவையாகவே இருக்கின்றன. இத்தகைய குண்டு பல்புகளுக்கு மாற்றாக குழல் விளக்குகள் வந்தன,
    
   குழல் விளக்குகள் சற்று வேறு கோட்பாட்டில் இயங்குகின்றன. ஒரு குழலில் ஒரு தனிமக் காற்றை நிறப்பி அதனுள்ளே ஒரு மின்பொறியை ஆக்குவதன் மூலம் அந்த தனிமக்காற்றின் அணுக்கள் வேகமாக அலைபாய்கின்றன. அந்த மின் பொறி சில அணுக்களின் வெளிச்சுற்றில் உள்ள எலக்ட்ரான்களுக்கு போதிய ஆற்றலைக் கொடுத்து அவற்றை அந்த அணுக்களின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கின்றன. அவ்வாறு விடுபட்ட எலக்ட்ரான்கள் பிற அணுக்களில் மோதி இவ்வாறு தொடர் அயனமயமாகின்றன. இதை அயனைசேஷன் என்கிறோம். இதன் மூலம் பெறும் ஒளியானது தனிமத்தைப் பொறுத்து வண்ணங்களில் வேறுபடுகின்றன. சோடியம் , ஆர்கான். நியான் என பல தனிமங்களின் காற்றையும் நிறப்பி வெவேறு வண்ண குழல் விளக்குகளை உருவாக்கலாம்.. மிகப்பரவலாக உள்ள டியூப் லைட் என அழைக்கும் குழல்விளக்கில் வெள்ளை நிறம் பெறுவதற்காக மெர்குரி- அதாவது பாதரச வாயுவை நிரப்புகிறோம்.    இந்த குழல் விளக்குகளைப் பயன்படுத்துவதில் உள்ள முக்கிய சிக்கல் என்னவென்றால்  பாதரசம்தான். பாதரசம் மிக மோசமான நச்சுப் பொருள். சிறு அளவுகலிலும் மனித மூளையை குலைத்துவிடக்கூடியது. எனவே பாதரச குழல்விளக்குகளை பயன்படுத்தும்போதும் பின்னர் கழிவாக அவற்றை புதைக்கும்போதும் கவனம் வேண்டும். ஆனால் எங்கும் பரவியுள்ள குழல்விளக்குகளை நம்மைப்போல கவனக்குறைவாக அலட்சியமாக குழந்தைகள் விளையாடும் இடங்களிலெல்லாம் கழித்துக் கொட்டும் ஒரு நாட்டைப் பார்க்கமுடியாது. இப்போது அரசே சிஎப்எல் எனும் குறுக்கியகுழல் விலக்குகளை பயன்படுத்த விளம்பரப்படுத்துகிறது. இவை மின்சாரத்தைக் குறைவாக எடுத்துக் கொண்டாலும் இவையும் பாதரச நச்சை நாடெங்கும் பரப்புபவையே.


                 இந்தப் பின்னணியில்தான் இப்போது கிடைத்திருக்கும் நொபல் பரிசைப் பார்க்கவேண்டும். இந்த ஒளியுமிழ் டையோடுகள் பல ஆன்டுகளாகப் பயனில் இருந்தாலும் பச்சை சிவப்பு ஒளியுமிழிகளே முதலில் கண்டு பிடிக்கப்பட்டன. நீல நிற ஒளியுமிழிகளை கண்டுபிடிக்க இத்தனை காலம் ஆனது. நீலமும் இருந்தால்தான் பச்சை, சிவப்பு நீலம் இவ்வொளிகளைக் கலந்து வெண்ணிற ஒளியைப் பெற முடியும் என்பது நாம் அனைவருக்கும் தெரியும். மிகக் கடினமான நீலக்கதிர்களைப் பெற உழைத்ததற்காக ஜப்பனைச் சேர்ந்த 
1.  இசாமு அகசாகி  
(Isamu Akasaki, Meijo University, Nagoya, Japan and Nagoya University, Japan)
2.  ஹிரோஷி அமானோ
(Hiroshi Amano, Nagoya University, Japan)
3. ஷுஜி நாகமுரா 
(Shuji Nakamura, University of California, Santa Barbara, CA, USA) என்ற மூவருக்கும் அளிக்கப்படுகிறது. நாகமுரா இப்போது அமரிக்காவில் இருந்தாலும் அவரும் இக்கண்டு பிடிப்பின் போது ஜப்பானிலேயே இருந்தார். அதனால் இது ஒரு முழு ஜப்பானியப் பரிசு என்றே கொள்லலாம்.

All pictures copyright : http://www.nobelprize.org/

Friday, September 19, 2014

எதைக் கற்பது? எதைத்தான் கற்பிப்பது?எதைக் கற்பது? எதைத்தான் கற்பிப்பது?
----------------------------------------------------------------


  ஏறக்குறைய ஒன்றரை வ்ருடங்களாக வேளாண்மை ஆராய்ச்சி செய்பவர்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளேன். என்னுடைய பணி முன்னிட்டுத்தான். எல்லாத்துறைகளையும் போல கடந்த நாற்பது ஐம்பது ஆண்டுகளில் சாதித்தது அதிகம்.  செய்ய முடிந்தும் செய்யாதது நிறைய. ஆனால் ஒரு விஷயத்தை மிக சுவாரசியமானதாகவும் கவலையுடனும் பார்க்கிறேன். வேளாண்மை ஆராய்ச்சி செய்ய வேளாண்மைப் பல்கலைக்கழகங்களில் பிற துறை சார்ந்தவர்கள் அதிகம் கலந்துகொள்ள வருவதில்லை வந்தாலும் அனுமதிக்கப் படுவதும் இல்லை. சென்ற நூற்றாண்டின் கடைப் பாதியில் உலகம் தழுவிய அறிவியல் ஆராய்ச்சியில் மிக முக்கியமாக நடைபெற்ற ஒரு போக்கு என்றால் அது பல்துறை கூட்டு ஆராய்ச்சிகள்தான் (inter disciplinary research). இதைக் கொஞ்சம் பார்க்கலாம்.

    சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் இயல்பியல் சிறு அலகுகளில் க்வாண்டம் கோட்பாட்டையும் பெரு அலகுகளில் சார்பியல் தத்துவத்தையும் முன்னெடுத்து பெரும் பாய்ச்சலைக் கண்டது. அதன் பின் அவற்றை ஒன்றிணைக்கும் போக்கும், இயல்பியல் முழுவதுமாக கணிதமயமாக்கலும் தீவிரமாகியது. ஏறக்குறைய 70 கள் வரை இப்போக்கு நிலவியது எனலாம். 70 களின் இடையிலிருந்து 80, 90 கள் தொடர்ச்சியாக  க்வாண்டம் கோட்பாடும் மீச்சிறு அளவைகளில் பயன்பட்ட பிற இயல்பியல் கருத்துருவாக்கங்கள் ஆங்க்ஸ்ட்ராம், மைக்ரான் அளவுகளை விட்டு மேல்நோக்கி இடைநிலை அலகுகளில் (மைக்ரானுக்கு மேல் மிமீ செமீ) அலகுகளில் மேக்ரோஸ்கோப்பிக் பினாமினா என்று அறியப்படும் இயல்பியல் விரிவு நடந்தது, அதாவது கண்டன்ஸ்ட் மேட்டர் பிஸிக்ஸ் எனப்படும் இறுகுநிலை இயல்பியல்த்துறை, தான் அதுவரை கூர்மையாக ஆய்ந்துகொண்டிருந்த  மூலக்கூறுகள், அணுத்தொகுதிகள், படிகக் கட்டுமானங்கள் இவற்றை விட்டு மேல் அலகுகளில் நடைபெரும் இயல்பியல் நிகழ்வுகளை அணுகத்தொடங்கியது. இது பொறியாளர்கள் இயங்கும் சமவெளி. ஆகவே இயல்பியல் பொறியியல்த் துறைகள் பெருமளவு எண்பதுகளில் தொடங்கி கலந்து பல்லலகு இயல்பியல் (multiscale physics) துறையாக முகிழ்ந்தது.

     இவற்றிலெல்லாம் நாம் கூர்ந்து நோக்கவேண்டியது என்னவென்றால் இயல்பியல், கணிதம், பல பொறியியல்த் துறைகள் என அனைத்தும் குவியத் தொடங்குவதுதான். இன்று நடக்கும் முன்னணி ஆய்வு எதிலும் இப்படி பலதுறை அறிவு பரந்து பட்ட அறிவு இல்லாமல் ஒரு குறிப்பிட்ட அளவு சாதிப்பது இயலாது. இப்படி பல்துறை அறிவை இளமையிலேயே பெறுவதெப்படி. ஒவ்வொன்றும் ஒரு வாழ்நாளையே விழுங்கும் துறைகள். ஆராய்ச்சியில் நுழையும் ஒரு ஆய்வு மாணவன் 22,23 வயதில் எப்படி இத்தனை பரந்த புலங்களைக் கற்று அறிய முடியும். இதற்காகவே பல துறைகளிலிருந்தும் இளங்கலையிலிருந்தே பாடங்கலைக் கற்க வேண்டியுள்ளது. பல துறைகளிலும் அவ்வத்துறையில் மேதைகளாக இருப்போரிடம் பயிலுவதே ஒரே வழி. இதற்கான சூழல் நமது இளங்கலை போதிக்கும் கல்லூரிகளில் உள்ளதா? பல்கலைக் கழகத் துறைகளிலாவது உள்ளதா? எங்குதான் இத்தகைய அறிஞர் குழாம் உள்ளது. ஏன் நமது பல்கலை இளங்கலைக் கல்வியை திட்டமிட்டு உதாசீனப் படுத்திவிட்டு இப்போது திகைத்து நிற்கிறோம்?

(தொடர்வேன்)

Wednesday, September 17, 2014

புதுக்கணிதமும், புதுக்கவிதையும் -3


புதுக்கணிதமும், புதுக்கவிதையும் -3
===============================


    பள்ளியில் எதைக் கற்பிப்பது? பள்ளிகள் எதற்காகத்தான் இருக்கின்றன? குழந்தைகள் விளையாடப்பிறந்தவை. பதின்ம வயதுவரை ஏதாவது ஒரு விளையாட்டுதான் எதையாவது கற்க சரியான வழி. பழங்குடிகள் தம் குடியறிவுச்சேர்மத்தை அங்கனமே குழந்தைகளுக்கு கடத்துகின்றன. பதின்ம வ்யதுகளில் உடலில் பொங்கிக்கிளம்பும் வேதிவினைகள் மனதை கூர்மையாக்குகின்றன. கலங்க அடிக்கின்றன. அனத்தையும் அறியும் ஆர்வத்தை உச்சமாக்குகின்றன. இருபது வயதுவரை ஒரு இளைஞன்/இளைஞியின் மனஒருங்கின் சாத்தியம் அவர் வாழ்வில் உச்சத்தில் இருக்கின்றது.. அனைத்து கணிதவியலாளரும் இவ்வயதிலேயே அதிகம் கற்கின்றனர். கணிதம் ஆக்குகின்றனர்.  பொதுவாகக் கவனித்தால் 20-30 வயதில் பல கணிதமேதமைகளும் மேதைகளாக வெளிப்பட்டு விடுகின்றனர். இயல்பியல் அதற்கடுத்தும் வேதியியல், உயிரியல் சாதனையாளர்கள் அதைத்தொடர்ந்தும் வெளிப்படுகின்றனர். இது ஒன்றும் அறிவியல் 'உண்மை' அல்ல. பொதுவாக மேற்கத்திய அறிவொளிக்காலத்துக்குப் பின்வந்த அறிவியலாளர்களை, கணிதவியலாளர்களைக் கவனித்தால் தோன்றும் பொதுவான ஒரு யூகம்தான்.

    நம் நவீனக் கல்வியின் நோக்கம் எல்லோரும் எல்லாமும் கற்பதும் அவர்களுக்கான ஆர்வத்தைக் கூர்தீட்டிப் பெருக்கிக் கொள்வதுமே எனக்கொண்டால் நம் பள்ளிப் பாடத்திட்டம் எவ்வாறு இருக்கவேண்டும்? எத்துணை பொதுவாகவும் எத்துணை ஆழமாகவும் இருக்கவேண்டும். இதற்கான விடை எளிதன்று. நமது அரசுப் பள்ளியா, தனியார்பள்ளியா? சமச்சீர்க்கல்வியா அல்லது நாடுதழுவிய மாற்றுக்கல்வியான சிபிஎஸ்ஸி போன்றவையா என்ற அனைத்து வாதங்களும் கேள்விகளை சரியாகக் கேட்காததால் விளைபவை. . எளிமையாகவும் விரிவாகவும் சிந்தனையைத் தூண்டும் எப்பாடத்திட்டமும் உகந்ததுதான். எளிமையும், கேள்விகேட்டுக் கற்க நேரமும் உடைய எந்தப் பாடத்திட்டத்திலும் இயல்பாகக் கற்கும் எதுவும் பயனுடையதுதான்.

     அனால் பாரிசில் கூடிய அவ்விளைய ஆசிரியர்களுடைய நோக்கம் வேறு. பல்கலை இளங்கலையில் எத்தகைய பாடத்திட்டங்கள் இருக்கவேண்டும்? இளங்கலை கணிதம் கற்கும் ஒரு மாணவன் தற்கால ஆய்வுகளைப் படிக்கக் கூடியதாக அக்கல்வி இருக்கவேண்டாமா? ஏதாவது ஒரு துறையில் - கணிதம், இயல்பியல், வேதியியல் உயிரியல் போன்ற ஏதாகினும் சரி - இளங்கலை மாணவன் அத்துறையில் நிபுணத்துவம் கொண்டவனாக இருக்கவேண்டும் அல்லவா. நிபுணன் என்றால உடனே அத்துறையில் அடிப்படை ஆய்வுகள் செய்து அத்துறையின் எல்லைகளில் பங்களிக்கக் கூடிய நிபுணத்துவம் அல்ல. அந்நிலை அடைய இன்னும் சில ஆண்டுகள் தேவைப்படும். இளங்கலையில் நிபுணத்துவம் என்றால் அத்துறையில் தற்கால ஆய்வுகளை உள்வாங்க்கக்கூடிய நிபுணத்துவம். ஆய்வுக்கட்டுரைகளைப் படிக்கவும் மற்றவர்க்கு அதை விளக்கிச் சொல்லவும் தேவையான நிபுணத்துவம். இதுகூட இயலாத அறிவு இளங்கலை வழங்கத்தேவையானதல்ல. இந்நிலை அடைய மூன்று நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் கூட ஆகலாம். நான்கு அல்லது ஐந்தாண்டு இளங்கலை வேண்டும் என்பது என்நிலை. சமீபத்தில் டெல்லியில் மாணவர் எதிர்ப்பால் நடுவண் அரசு அடிதடியாக எடுத்த தீர்மானப்படி மூன்றாண்டுகள் இளங்கலைக்குப் போதும் பார்க்கலாம்.

   இளங்கலை மாணவர்களுக்கு கற்கும் பாடத்திட்டமும் நவீனமாக இல்லை. கற்றுக்கொடுக்கும் முறையும் சரியானதாக இல்லை. அதற்கான தீர்வு ஐந்தாறு பேர் சேர்ந்து புத்தகங்கள் எழுதுவது. ஒவ்வொரு புத்தகத்தையும் விவாதித்து சண்டை போட்டு முறையாக எல்லோரும் 'சேர்ந்து' எழுதுவது. அந்தப் புத்தகங்கள் தற்கால கணிதத்தைப் போதிக்கும். தற்கால முறைகளில் போதிக்கும். எழுதியவர் பெயர் என்று தனியாக இருக்கக்கூடாது. அனவருக்கும் சேர்ந்து ஒரு புனைப் பெயர் வேண்டும், அப்பெயர்களில்தான் புத்தகம் வெளியிடவேன்டும் என்று தீர்மானம் செய்து தம் குழுவுக்காக வரித்துக்கொண்ட பெயர் - ' நிக்கோலஸ் பூர்பாகி' . யார் இந்த நிக்கலஸ் பூர்பாகி?


Monday, September 15, 2014

புதுக்கணிதமும், புதுக்கவிதையும் -2 : பாரிஸ்

புதுக்கணிதமும், புதுக்கவிதையும் -2 - பாரிஸ்
---------------------------------------------------------------------------
பொள்ளாச்சிச் சிறுவனை ஒரு புனைவு பிரெஞ்சுக் குடிமகன் கடுப்படித்த கதை தொடர்கிறது.....

முதலாம் உலகப்போரில் பிரான்சு நாடு ஏறக்குறைய ஒரு முழு தலைமுறை இளைஞர்களையே இழந்தது.  அதனால் 1930 களில் பிரான்சில் பல அறிவுப்புல இயக்கங்களும் தேக்கமடைந்தன. அதிலும் முக்கியமாக இளைஞர்களாலேயே உரமூட்டப்படும் கணிதம் போன்ற துறைகள் ஏலவே பாதிப்படைந்தன. மேலும் இளநிலை பட்டப்படிப்புக்  கல்வியில் பாடத்திட்டங்களும் கற்பிக்கும் முறைகளும் பழைய (19 ஆம் நூற்றாண்டு) முறைகளிலேயே பரவலாக இருந்தன. பேராசியர்கள் கற்பிக்கும் பாடங்களும் கற்பிக்கும் முறையும்  பிரான்சின் அண்டை நாடான ஜெர்மனியை விட மிகவும்  பின்தங்கி இருப்பதாக அப்போதைய ஆசிரியர்களில் சில இளைஞர்கள் கருதினார்கள். இந்நிலையைச் சரிசெய்தே ஆகவேண்டும் என்று ஆந்த்ரே வெய்ல், ஆன்ரி கார்டான், ரேனே பொசல், க்ளோட் செவலெ, ழான் த்யூதனே போன்ற இளம் கணித பேராசிரியர்கள் 1934 ஆம் ஆண்டு 
பாரிஸ் காபிக் கடை ஒன்றில்  கூடினார்கள். கூடி,

 "அடுத்துவரும் இருபத்தைந்து ஆண்டுகளுக்கான ஒரு பாடத்திட்டம் - டிபரன்ஷியல், இன்டெக்ரல் கால்குலஸுக்கு மட்டும் - ஒழுங்கு செய்வோம். அதை அனைவரும் கூடிச் செய்யவேண்டும். கூட்டாக எழுதவேண்டும். அந்த பாடங்கள் முடிந்தவரை தற்காலத்திய, இவ்விரு கோட்பாடுகளின் பொதுமைப்படுத்தலான,  அனாலிஸிஸ் -இன் பார்வையில் எழுதப்படவேண்டும்" என்று முடிவெடுத்தார்கள். 

“to define for 25 years the syllabus for the certificate in differential and integral
calculus by writing, collectively, a treatise on analysis. Of course, this
treatise will be as modern as possible.”


 இளைஞர்களான நாலைந்து கல்லூரி ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு தம் மொழியில்  ஒரு துறையை  தாம் எப்படி கற்றுத்தரவேண்டும் என்று ஒரு நாட்டில் எடுத்த  இந்த முடிவு 20 ஆம் நூற்றாண்டில் கணிதம் கற்பிக்கும் முறையையும் கணிதம் எழுதும்
 முறையையும் முற்றாக மாற்றியமைத்தது. மட்டுமல்லாமல் மானுடவியல், மொழியியல், இலக்கியம் போன்ற துறைகளிலிருந்து உளவியல், இலக்கிய விமரிசனம், மெய்யியல் என அனைத்துத் துறைகளிலும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தியது. இருபதாம் நூற்றாண்டின் சிந்தனை இழைகளில் மிக முக்கியமான பங்களிப்பையும் அவர்கள் பங்கு பெற்ற இவ்வியக்கம் நிகழ்த்தியது. 

 இப்போது நம் தமிழக மாணவர்களுக்கு எதைக் கற்பிப்பது, எப்படி கற்பிப்பது, ஏன் கற்பிக்கவேண்டும் என்ற பல கேள்விகளும் இன்று நம்மிடையே அலசப்பட்டுக்கொண்டிருக்கின்றன,. பல கோணங்களில் அணுகத்தேவையான இந்த கேள்விகளுக்கு ஒரு அணுகும் முறையாக  என் அனுபவத்தில் கண்டதை சில பதிவுகளில் தொடர்ச்சியாக எழுதலாம் என்ற முயற்சிதான் இது. 

Photo thanks to:
http://www.canalacademie.com/ida3791-Henri-Cartan-et-la-fondation-du-groupe-Bourbaki.html

முதலாம் உலகப்போர் பற்றி
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D

Sunday, September 14, 2014

புதுக்கணிதமும், புதுக்கவிதையும் -1
புதுக்கணிதமும், புதுக்கவிதையும் -1
=============================
     
    அறுபதுகளில் சூடுபிடித்து எழுபதுகளில் தமிழ்ப் 'புதுக்கவிதை' பொதுத்தளத்திற்கு நகர்ந்து வந்துகொண்டிருந்தது. ஒருபள்ளிச் சிறுவ்ன் அதை எதிர்கொண்டதைப் பற்றி இங்கே http://www.arulselvank.com/2010/07/blog-post.html  படிக்கலாம்.  அதே நேரத்தில் எழுபதுகளின் இடையில் பள்ளிச் சிறுவர்களுக்கு இன்னொரு 'புதுக்' திடுக்கிடல் காத்திருந்தது. பொள்ளாச்சியில் என் கால்பரிட்சை லீவையும் அந்த 'புதுக்' காவு கொண்ட சோகக்கதைதான் இது. சற்றே விரிவாவகவே இதை எழுதுகிறேன்.


   அதுக்கு ஆறு மாசம் முன்னாடி எங்கள் 9-B  வகுப்பு ஒலிபெருக்கியில் தலைமையாசிரியர் திடீரென்று பேசினார். 'இன்று மாலை பள்ளி முடிந்தவுடன் அனைவரும் --- அறையில் கூடவும்'.  கூடி அரட்டையுடன் கலகலத்துக் கொண்டிருக்கும்போது மூன்று அண்ணன்மார்கள் நுழைந்தார்கள்.  மூன்று பேருக்கும் எங்களைவிட நாலைந்து வருடம்தான் அதிகம் இருக்கும். ஒவ்வொருவராக பெயர் அறிமுகம் செய்துவிட்டு 'இப்ப எதுக்கு இங்க கூடியிருக்கிறோம்னா...' என்று தொடங்கி அவர்கள் கூறியது:

   "நமது (தமிழக) பாடத்திட்டங்கள் பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது மிகக்குறைவாக இருக்கின்றன. அதனால் நமது மாணவர்கள் பலரும் தம் வயதுக்கேற்றபடி அடுத்த தள படிப்புகளுக்கு தேசிய அளவில் செல்லமுடிவதில்லை. இதை சரிசெய்ய நாம் அனைத்துப் பள்ளிகளிலும் இருக்கும் பாடத்திட்டத்திற்கும் மேல் மாணவர்களால் ஏற்க முடிந்த அளவு வரையரை இல்லாமல் கற்க வசதி வேண்டும். அவர்கள் மூவரும் அருகில்
கலைக் கல்லூரியில் முறையே இளநிலை கணிதம், இயல்பியல், வேதியியல் முதற்பாடமாக எடுத்து படிப்பவர்கள். அவர்கள் இளநிலை பட்டப்படிப்பில் கற்கும் பல கோட்பாடுகளை எங்களுக்கு புரியும்படி எங்கள்  தளத்தில் கற்பிப்பார்கள். இது முறையான பாடத்திட்டமல்ல. வாரத்தில் ஓரிருநாட்கள் பள்ளி முடிந்த பின்  4:30-6:30 கற்றுக் கொடுப்பார்கள். விருப்பமுள்ளவர்கள் வரலாம். ஆனால் 20/30 பேருக்குத்தான் அனுமதி. அதற்கு மேல்  தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவருக்கும் கவனம் செலுத்தி கற்பிக்க இயலாது. எதிர்வரும் ஞாயிறு ஒரு தேர்வு வைப்பார்கள். அதில் முதலில் வரும் 20/30 மாணவர்களுக்கு இந்த சிறப்பு வகுப்புகள் விடுமுறை நாட்களிலும் வார நாட்களில் சிலவற்றில் மாலையிலும் நடைபெறும்"

 அந்த ஞாயிறு சென்று பொதுவாக அறிவியல்,கணிதம் இவற்றில் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து சில பேர் தேர்வானோம். பின்பு தொடர்ந்து ஒருவருடத்திற்கும் மேல் அந்த சிறப்பு  வகுப்புகளை அந்த மூன்று கல்லூரி மாணவர்களும்  நடத்தினர். கணிதத்தில்  sets, groups, இயல்பியலில்  atomic theory, வேதியியலில் chemical equations என பல கோட்பாடுகள் அப்போது இளங்கலையில் மட்டுமே கற்க முடிந்ததை எங்களுக்கு பள்ளியிலேயே அறிமுகப் படுத்தினர். வகுப்புகள் பெரும்பாலும் அரட்டைகள் தாம். பாடம் எடுப்பதுபோலன்றி நாங்கள் காட்டுத்தனமாக உளரலாக கேட்ட பல கேள்விகளை நூல் பிடித்துக்கொண்டு போய் உயர் கோட்பாடுகளை அறிமுகம் செய்தனர். முழுவதும் தன்னார்வத்தால் அந்த மூன்று இளைஞர்களும் அதை அப்போது செய்தார்கள். 70 களின் மத்தியில். பொள்ளாச்சி எனும் சிற்றூரில் நகரமன்ற அரசுப்பள்ளியில். அதற்கப்புறம் அவர்கள் என்ன ஆனார்களோ தெரியவில்லை. நாங்கள் இருபது பேரும் சோடை போகவில்லை.

    அந்த நேரத்தில் எங்கள் அறிவியல் புத்தகம் பொது அறிவியல் மட்டும்தான். ஒரு 150 பக்கம் இருக்கும். முட்டையின் குறுக்கு வெட்டுத்தோற்றம் (10 மதிப்பெண்), ஜீரணக் குழாய் குறுக்கு வெட்டு (10 மதிப்பெண்கள்) இந்த அளவுதான் அறிவியல். இப்போதெல்லாம் ஆறு, ஏழாம் வகுப்பிலேயே இதை படிக்கிறார்கள். இயல்பியல்,வேதியியல், உயிரியல் என்று தனித்தனியாகக் கிடையாது எல்லாம் சேர்த்து ஒரு அறிவியல்ப் புத்தகம். அவ்வளோதான் சிலபஸ். பொதுக் கணிதம் எல்லோருக்கும் பொது. அதில் செவ்வக வயலில் ஒரு மூலையில் நீளமான ஒரு கயிற்றில் மாடு கட்டியிருந்தால் அது எவ்வளவு பரப்பளவில் மேயும் போன்ற கணக்குகள்தாம். மேலும் நாமாக விரும்பி எடுக்கும் சிறப்புப்பாடம் ஒன்று உண்டு கணிதம், இயல்பியல், வேதியியல், உயிரியல் என. அதற்காக நான் சிறப்பு கணிதம் எடுத்திருந்தேன். அதில் அல்ஜீப்ரா+ஜியாமட்ரி என்று சற்றே மரியாதைக்குரிய பாடங்கள் இருக்கும். கணிதம் எடுத்தால் நிறைய மதிப்பெண்கள் வாங்கலாம் என்பதும் வகுப்பில் ஓரளவு நன்றாகப்படிக்கும் மாணவர்கள் கணிதம் எடுப்பதை ஒரு
மந்தைஆட்டுத்தனத்துடன் செய்ததாலும் சிலர் கணிதம் எடுக்கவே விதிக்கப்பட்டவர்கள். அந்த சிறப்புக் கணிதத்தை எங்கள் ஆசிரியர் அட்டகாசமாக கற்றுக்கொடுத்தார். கணிதம் தவிர அண்டத்தின் வடிவம்
என்றெல்லாம் அவர் பல பலகணிகளைத் திறந்தார். இன்றும் அவர் கற்றுக்கொடுத்த அனைத்தும் என் நினைவில் இருக்கின்றன. இவரைப்பற்றி இன்னொரு நாள் எழுதவேண்டும்.


       அறிவியல் கணிதம் என்று அப்போது 11 வகுப்புவரை இருந்த பாடத்திட்டம் அவ்வளவாக மாணவர்கள் உயிரை வாங்கவில்லை. எங்களுக்கு விளையாட, அரட்டை அடிக்க ஊர் சுற்ற நிறைய நேரம் இருந்தது. எப்போதும் படித்துக்கொண்டே எல்லாம் இருக்க வேண்டியதில்லை. வகுப்பில் கவனித்தாலே சரளமாக 80 மதிப்பெண்களும் வீட்டில் ஓரிருநாள் கவனமெடுத்துப் படித்தால் 90 மதிப்பெண்களும் தாராளமாக சராசரி மாணவர்களே வாங்கிவிடலாம். படிக்க மாட்டேன் என்று திரிந்தால் யாரும் ஏதும் செய்வதற்கில்லை. . இப்போதுபோல ஓரளவு நன்றாகப் படிக்கும் பையன்கள் ஐஐடி அது இது என்று டியூஷனுக்குப் போவது போல இல்லாமல் பெயில் ஆகும் மாணவர்கள்தான் டியூஷன் போவார்கள். தேவையான அளவு நேரம் ( http://www.arulselvank.com/2008/03/90.html  -இப்படி சினிமாவெல்லாம் பார்க்க), குறைந்த பாடச்சுமை என இருந்ததால் மாணவர்கள் மகிழ்ச்சியாகவே இருந்தோம். இப்படிப்பட்ட ஒரு ஈடன் சூழலில் வந்து புகுந்தது 'புதுக் கணிதம்' எனும் நாகம். எதிர்காலத்தைப் பற்றிய பல ஆப்பிள் கவர்ச்சிகளுடன்.