Sunday, September 14, 2014

புதுக்கணிதமும், புதுக்கவிதையும் -1
புதுக்கணிதமும், புதுக்கவிதையும் -1
=============================
     
    அறுபதுகளில் சூடுபிடித்து எழுபதுகளில் தமிழ்ப் 'புதுக்கவிதை' பொதுத்தளத்திற்கு நகர்ந்து வந்துகொண்டிருந்தது. ஒருபள்ளிச் சிறுவ்ன் அதை எதிர்கொண்டதைப் பற்றி இங்கே http://www.arulselvank.com/2010/07/blog-post.html  படிக்கலாம்.  அதே நேரத்தில் எழுபதுகளின் இடையில் பள்ளிச் சிறுவர்களுக்கு இன்னொரு 'புதுக்' திடுக்கிடல் காத்திருந்தது. பொள்ளாச்சியில் என் கால்பரிட்சை லீவையும் அந்த 'புதுக்' காவு கொண்ட சோகக்கதைதான் இது. சற்றே விரிவாவகவே இதை எழுதுகிறேன்.


   அதுக்கு ஆறு மாசம் முன்னாடி எங்கள் 9-B  வகுப்பு ஒலிபெருக்கியில் தலைமையாசிரியர் திடீரென்று பேசினார். 'இன்று மாலை பள்ளி முடிந்தவுடன் அனைவரும் --- அறையில் கூடவும்'.  கூடி அரட்டையுடன் கலகலத்துக் கொண்டிருக்கும்போது மூன்று அண்ணன்மார்கள் நுழைந்தார்கள்.  மூன்று பேருக்கும் எங்களைவிட நாலைந்து வருடம்தான் அதிகம் இருக்கும். ஒவ்வொருவராக பெயர் அறிமுகம் செய்துவிட்டு 'இப்ப எதுக்கு இங்க கூடியிருக்கிறோம்னா...' என்று தொடங்கி அவர்கள் கூறியது:

   "நமது (தமிழக) பாடத்திட்டங்கள் பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது மிகக்குறைவாக இருக்கின்றன. அதனால் நமது மாணவர்கள் பலரும் தம் வயதுக்கேற்றபடி அடுத்த தள படிப்புகளுக்கு தேசிய அளவில் செல்லமுடிவதில்லை. இதை சரிசெய்ய நாம் அனைத்துப் பள்ளிகளிலும் இருக்கும் பாடத்திட்டத்திற்கும் மேல் மாணவர்களால் ஏற்க முடிந்த அளவு வரையரை இல்லாமல் கற்க வசதி வேண்டும். அவர்கள் மூவரும் அருகில்
கலைக் கல்லூரியில் முறையே இளநிலை கணிதம், இயல்பியல், வேதியியல் முதற்பாடமாக எடுத்து படிப்பவர்கள். அவர்கள் இளநிலை பட்டப்படிப்பில் கற்கும் பல கோட்பாடுகளை எங்களுக்கு புரியும்படி எங்கள்  தளத்தில் கற்பிப்பார்கள். இது முறையான பாடத்திட்டமல்ல. வாரத்தில் ஓரிருநாட்கள் பள்ளி முடிந்த பின்  4:30-6:30 கற்றுக் கொடுப்பார்கள். விருப்பமுள்ளவர்கள் வரலாம். ஆனால் 20/30 பேருக்குத்தான் அனுமதி. அதற்கு மேல்  தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவருக்கும் கவனம் செலுத்தி கற்பிக்க இயலாது. எதிர்வரும் ஞாயிறு ஒரு தேர்வு வைப்பார்கள். அதில் முதலில் வரும் 20/30 மாணவர்களுக்கு இந்த சிறப்பு வகுப்புகள் விடுமுறை நாட்களிலும் வார நாட்களில் சிலவற்றில் மாலையிலும் நடைபெறும்"

 அந்த ஞாயிறு சென்று பொதுவாக அறிவியல்,கணிதம் இவற்றில் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து சில பேர் தேர்வானோம். பின்பு தொடர்ந்து ஒருவருடத்திற்கும் மேல் அந்த சிறப்பு  வகுப்புகளை அந்த மூன்று கல்லூரி மாணவர்களும்  நடத்தினர். கணிதத்தில்  sets, groups, இயல்பியலில்  atomic theory, வேதியியலில் chemical equations என பல கோட்பாடுகள் அப்போது இளங்கலையில் மட்டுமே கற்க முடிந்ததை எங்களுக்கு பள்ளியிலேயே அறிமுகப் படுத்தினர். வகுப்புகள் பெரும்பாலும் அரட்டைகள் தாம். பாடம் எடுப்பதுபோலன்றி நாங்கள் காட்டுத்தனமாக உளரலாக கேட்ட பல கேள்விகளை நூல் பிடித்துக்கொண்டு போய் உயர் கோட்பாடுகளை அறிமுகம் செய்தனர். முழுவதும் தன்னார்வத்தால் அந்த மூன்று இளைஞர்களும் அதை அப்போது செய்தார்கள். 70 களின் மத்தியில். பொள்ளாச்சி எனும் சிற்றூரில் நகரமன்ற அரசுப்பள்ளியில். அதற்கப்புறம் அவர்கள் என்ன ஆனார்களோ தெரியவில்லை. நாங்கள் இருபது பேரும் சோடை போகவில்லை.

    அந்த நேரத்தில் எங்கள் அறிவியல் புத்தகம் பொது அறிவியல் மட்டும்தான். ஒரு 150 பக்கம் இருக்கும். முட்டையின் குறுக்கு வெட்டுத்தோற்றம் (10 மதிப்பெண்), ஜீரணக் குழாய் குறுக்கு வெட்டு (10 மதிப்பெண்கள்) இந்த அளவுதான் அறிவியல். இப்போதெல்லாம் ஆறு, ஏழாம் வகுப்பிலேயே இதை படிக்கிறார்கள். இயல்பியல்,வேதியியல், உயிரியல் என்று தனித்தனியாகக் கிடையாது எல்லாம் சேர்த்து ஒரு அறிவியல்ப் புத்தகம். அவ்வளோதான் சிலபஸ். பொதுக் கணிதம் எல்லோருக்கும் பொது. அதில் செவ்வக வயலில் ஒரு மூலையில் நீளமான ஒரு கயிற்றில் மாடு கட்டியிருந்தால் அது எவ்வளவு பரப்பளவில் மேயும் போன்ற கணக்குகள்தாம். மேலும் நாமாக விரும்பி எடுக்கும் சிறப்புப்பாடம் ஒன்று உண்டு கணிதம், இயல்பியல், வேதியியல், உயிரியல் என. அதற்காக நான் சிறப்பு கணிதம் எடுத்திருந்தேன். அதில் அல்ஜீப்ரா+ஜியாமட்ரி என்று சற்றே மரியாதைக்குரிய பாடங்கள் இருக்கும். கணிதம் எடுத்தால் நிறைய மதிப்பெண்கள் வாங்கலாம் என்பதும் வகுப்பில் ஓரளவு நன்றாகப்படிக்கும் மாணவர்கள் கணிதம் எடுப்பதை ஒரு
மந்தைஆட்டுத்தனத்துடன் செய்ததாலும் சிலர் கணிதம் எடுக்கவே விதிக்கப்பட்டவர்கள். அந்த சிறப்புக் கணிதத்தை எங்கள் ஆசிரியர் அட்டகாசமாக கற்றுக்கொடுத்தார். கணிதம் தவிர அண்டத்தின் வடிவம்
என்றெல்லாம் அவர் பல பலகணிகளைத் திறந்தார். இன்றும் அவர் கற்றுக்கொடுத்த அனைத்தும் என் நினைவில் இருக்கின்றன. இவரைப்பற்றி இன்னொரு நாள் எழுதவேண்டும்.


       அறிவியல் கணிதம் என்று அப்போது 11 வகுப்புவரை இருந்த பாடத்திட்டம் அவ்வளவாக மாணவர்கள் உயிரை வாங்கவில்லை. எங்களுக்கு விளையாட, அரட்டை அடிக்க ஊர் சுற்ற நிறைய நேரம் இருந்தது. எப்போதும் படித்துக்கொண்டே எல்லாம் இருக்க வேண்டியதில்லை. வகுப்பில் கவனித்தாலே சரளமாக 80 மதிப்பெண்களும் வீட்டில் ஓரிருநாள் கவனமெடுத்துப் படித்தால் 90 மதிப்பெண்களும் தாராளமாக சராசரி மாணவர்களே வாங்கிவிடலாம். படிக்க மாட்டேன் என்று திரிந்தால் யாரும் ஏதும் செய்வதற்கில்லை. . இப்போதுபோல ஓரளவு நன்றாகப் படிக்கும் பையன்கள் ஐஐடி அது இது என்று டியூஷனுக்குப் போவது போல இல்லாமல் பெயில் ஆகும் மாணவர்கள்தான் டியூஷன் போவார்கள். தேவையான அளவு நேரம் ( http://www.arulselvank.com/2008/03/90.html  -இப்படி சினிமாவெல்லாம் பார்க்க), குறைந்த பாடச்சுமை என இருந்ததால் மாணவர்கள் மகிழ்ச்சியாகவே இருந்தோம். இப்படிப்பட்ட ஒரு ஈடன் சூழலில் வந்து புகுந்தது 'புதுக் கணிதம்' எனும் நாகம். எதிர்காலத்தைப் பற்றிய பல ஆப்பிள் கவர்ச்சிகளுடன்.


No comments: