Wednesday, September 17, 2014

புதுக்கணிதமும், புதுக்கவிதையும் -3


புதுக்கணிதமும், புதுக்கவிதையும் -3
===============================


    பள்ளியில் எதைக் கற்பிப்பது? பள்ளிகள் எதற்காகத்தான் இருக்கின்றன? குழந்தைகள் விளையாடப்பிறந்தவை. பதின்ம வயதுவரை ஏதாவது ஒரு விளையாட்டுதான் எதையாவது கற்க சரியான வழி. பழங்குடிகள் தம் குடியறிவுச்சேர்மத்தை அங்கனமே குழந்தைகளுக்கு கடத்துகின்றன. பதின்ம வ்யதுகளில் உடலில் பொங்கிக்கிளம்பும் வேதிவினைகள் மனதை கூர்மையாக்குகின்றன. கலங்க அடிக்கின்றன. அனத்தையும் அறியும் ஆர்வத்தை உச்சமாக்குகின்றன. இருபது வயதுவரை ஒரு இளைஞன்/இளைஞியின் மனஒருங்கின் சாத்தியம் அவர் வாழ்வில் உச்சத்தில் இருக்கின்றது.. அனைத்து கணிதவியலாளரும் இவ்வயதிலேயே அதிகம் கற்கின்றனர். கணிதம் ஆக்குகின்றனர்.  பொதுவாகக் கவனித்தால் 20-30 வயதில் பல கணிதமேதமைகளும் மேதைகளாக வெளிப்பட்டு விடுகின்றனர். இயல்பியல் அதற்கடுத்தும் வேதியியல், உயிரியல் சாதனையாளர்கள் அதைத்தொடர்ந்தும் வெளிப்படுகின்றனர். இது ஒன்றும் அறிவியல் 'உண்மை' அல்ல. பொதுவாக மேற்கத்திய அறிவொளிக்காலத்துக்குப் பின்வந்த அறிவியலாளர்களை, கணிதவியலாளர்களைக் கவனித்தால் தோன்றும் பொதுவான ஒரு யூகம்தான்.

    நம் நவீனக் கல்வியின் நோக்கம் எல்லோரும் எல்லாமும் கற்பதும் அவர்களுக்கான ஆர்வத்தைக் கூர்தீட்டிப் பெருக்கிக் கொள்வதுமே எனக்கொண்டால் நம் பள்ளிப் பாடத்திட்டம் எவ்வாறு இருக்கவேண்டும்? எத்துணை பொதுவாகவும் எத்துணை ஆழமாகவும் இருக்கவேண்டும். இதற்கான விடை எளிதன்று. நமது அரசுப் பள்ளியா, தனியார்பள்ளியா? சமச்சீர்க்கல்வியா அல்லது நாடுதழுவிய மாற்றுக்கல்வியான சிபிஎஸ்ஸி போன்றவையா என்ற அனைத்து வாதங்களும் கேள்விகளை சரியாகக் கேட்காததால் விளைபவை. . எளிமையாகவும் விரிவாகவும் சிந்தனையைத் தூண்டும் எப்பாடத்திட்டமும் உகந்ததுதான். எளிமையும், கேள்விகேட்டுக் கற்க நேரமும் உடைய எந்தப் பாடத்திட்டத்திலும் இயல்பாகக் கற்கும் எதுவும் பயனுடையதுதான்.

     அனால் பாரிசில் கூடிய அவ்விளைய ஆசிரியர்களுடைய நோக்கம் வேறு. பல்கலை இளங்கலையில் எத்தகைய பாடத்திட்டங்கள் இருக்கவேண்டும்? இளங்கலை கணிதம் கற்கும் ஒரு மாணவன் தற்கால ஆய்வுகளைப் படிக்கக் கூடியதாக அக்கல்வி இருக்கவேண்டாமா? ஏதாவது ஒரு துறையில் - கணிதம், இயல்பியல், வேதியியல் உயிரியல் போன்ற ஏதாகினும் சரி - இளங்கலை மாணவன் அத்துறையில் நிபுணத்துவம் கொண்டவனாக இருக்கவேண்டும் அல்லவா. நிபுணன் என்றால உடனே அத்துறையில் அடிப்படை ஆய்வுகள் செய்து அத்துறையின் எல்லைகளில் பங்களிக்கக் கூடிய நிபுணத்துவம் அல்ல. அந்நிலை அடைய இன்னும் சில ஆண்டுகள் தேவைப்படும். இளங்கலையில் நிபுணத்துவம் என்றால் அத்துறையில் தற்கால ஆய்வுகளை உள்வாங்க்கக்கூடிய நிபுணத்துவம். ஆய்வுக்கட்டுரைகளைப் படிக்கவும் மற்றவர்க்கு அதை விளக்கிச் சொல்லவும் தேவையான நிபுணத்துவம். இதுகூட இயலாத அறிவு இளங்கலை வழங்கத்தேவையானதல்ல. இந்நிலை அடைய மூன்று நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் கூட ஆகலாம். நான்கு அல்லது ஐந்தாண்டு இளங்கலை வேண்டும் என்பது என்நிலை. சமீபத்தில் டெல்லியில் மாணவர் எதிர்ப்பால் நடுவண் அரசு அடிதடியாக எடுத்த தீர்மானப்படி மூன்றாண்டுகள் இளங்கலைக்குப் போதும் பார்க்கலாம்.

   இளங்கலை மாணவர்களுக்கு கற்கும் பாடத்திட்டமும் நவீனமாக இல்லை. கற்றுக்கொடுக்கும் முறையும் சரியானதாக இல்லை. அதற்கான தீர்வு ஐந்தாறு பேர் சேர்ந்து புத்தகங்கள் எழுதுவது. ஒவ்வொரு புத்தகத்தையும் விவாதித்து சண்டை போட்டு முறையாக எல்லோரும் 'சேர்ந்து' எழுதுவது. அந்தப் புத்தகங்கள் தற்கால கணிதத்தைப் போதிக்கும். தற்கால முறைகளில் போதிக்கும். எழுதியவர் பெயர் என்று தனியாக இருக்கக்கூடாது. அனவருக்கும் சேர்ந்து ஒரு புனைப் பெயர் வேண்டும், அப்பெயர்களில்தான் புத்தகம் வெளியிடவேன்டும் என்று தீர்மானம் செய்து தம் குழுவுக்காக வரித்துக்கொண்ட பெயர் - ' நிக்கோலஸ் பூர்பாகி' . யார் இந்த நிக்கலஸ் பூர்பாகி?


No comments: