Friday, September 19, 2014

எதைக் கற்பது? எதைத்தான் கற்பிப்பது?எதைக் கற்பது? எதைத்தான் கற்பிப்பது?
----------------------------------------------------------------


  ஏறக்குறைய ஒன்றரை வ்ருடங்களாக வேளாண்மை ஆராய்ச்சி செய்பவர்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளேன். என்னுடைய பணி முன்னிட்டுத்தான். எல்லாத்துறைகளையும் போல கடந்த நாற்பது ஐம்பது ஆண்டுகளில் சாதித்தது அதிகம்.  செய்ய முடிந்தும் செய்யாதது நிறைய. ஆனால் ஒரு விஷயத்தை மிக சுவாரசியமானதாகவும் கவலையுடனும் பார்க்கிறேன். வேளாண்மை ஆராய்ச்சி செய்ய வேளாண்மைப் பல்கலைக்கழகங்களில் பிற துறை சார்ந்தவர்கள் அதிகம் கலந்துகொள்ள வருவதில்லை வந்தாலும் அனுமதிக்கப் படுவதும் இல்லை. சென்ற நூற்றாண்டின் கடைப் பாதியில் உலகம் தழுவிய அறிவியல் ஆராய்ச்சியில் மிக முக்கியமாக நடைபெற்ற ஒரு போக்கு என்றால் அது பல்துறை கூட்டு ஆராய்ச்சிகள்தான் (inter disciplinary research). இதைக் கொஞ்சம் பார்க்கலாம்.

    சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் இயல்பியல் சிறு அலகுகளில் க்வாண்டம் கோட்பாட்டையும் பெரு அலகுகளில் சார்பியல் தத்துவத்தையும் முன்னெடுத்து பெரும் பாய்ச்சலைக் கண்டது. அதன் பின் அவற்றை ஒன்றிணைக்கும் போக்கும், இயல்பியல் முழுவதுமாக கணிதமயமாக்கலும் தீவிரமாகியது. ஏறக்குறைய 70 கள் வரை இப்போக்கு நிலவியது எனலாம். 70 களின் இடையிலிருந்து 80, 90 கள் தொடர்ச்சியாக  க்வாண்டம் கோட்பாடும் மீச்சிறு அளவைகளில் பயன்பட்ட பிற இயல்பியல் கருத்துருவாக்கங்கள் ஆங்க்ஸ்ட்ராம், மைக்ரான் அளவுகளை விட்டு மேல்நோக்கி இடைநிலை அலகுகளில் (மைக்ரானுக்கு மேல் மிமீ செமீ) அலகுகளில் மேக்ரோஸ்கோப்பிக் பினாமினா என்று அறியப்படும் இயல்பியல் விரிவு நடந்தது, அதாவது கண்டன்ஸ்ட் மேட்டர் பிஸிக்ஸ் எனப்படும் இறுகுநிலை இயல்பியல்த்துறை, தான் அதுவரை கூர்மையாக ஆய்ந்துகொண்டிருந்த  மூலக்கூறுகள், அணுத்தொகுதிகள், படிகக் கட்டுமானங்கள் இவற்றை விட்டு மேல் அலகுகளில் நடைபெரும் இயல்பியல் நிகழ்வுகளை அணுகத்தொடங்கியது. இது பொறியாளர்கள் இயங்கும் சமவெளி. ஆகவே இயல்பியல் பொறியியல்த் துறைகள் பெருமளவு எண்பதுகளில் தொடங்கி கலந்து பல்லலகு இயல்பியல் (multiscale physics) துறையாக முகிழ்ந்தது.

     இவற்றிலெல்லாம் நாம் கூர்ந்து நோக்கவேண்டியது என்னவென்றால் இயல்பியல், கணிதம், பல பொறியியல்த் துறைகள் என அனைத்தும் குவியத் தொடங்குவதுதான். இன்று நடக்கும் முன்னணி ஆய்வு எதிலும் இப்படி பலதுறை அறிவு பரந்து பட்ட அறிவு இல்லாமல் ஒரு குறிப்பிட்ட அளவு சாதிப்பது இயலாது. இப்படி பல்துறை அறிவை இளமையிலேயே பெறுவதெப்படி. ஒவ்வொன்றும் ஒரு வாழ்நாளையே விழுங்கும் துறைகள். ஆராய்ச்சியில் நுழையும் ஒரு ஆய்வு மாணவன் 22,23 வயதில் எப்படி இத்தனை பரந்த புலங்களைக் கற்று அறிய முடியும். இதற்காகவே பல துறைகளிலிருந்தும் இளங்கலையிலிருந்தே பாடங்கலைக் கற்க வேண்டியுள்ளது. பல துறைகளிலும் அவ்வத்துறையில் மேதைகளாக இருப்போரிடம் பயிலுவதே ஒரே வழி. இதற்கான சூழல் நமது இளங்கலை போதிக்கும் கல்லூரிகளில் உள்ளதா? பல்கலைக் கழகத் துறைகளிலாவது உள்ளதா? எங்குதான் இத்தகைய அறிஞர் குழாம் உள்ளது. ஏன் நமது பல்கலை இளங்கலைக் கல்வியை திட்டமிட்டு உதாசீனப் படுத்திவிட்டு இப்போது திகைத்து நிற்கிறோம்?

(தொடர்வேன்)

2 comments:

Narain Rajagopalan said...

1) இது அமெரிக்காவில் நடக்கிறது. Multi disciplinary or cross-pollination of ideas என்பது முன்னேறிய பல்கலைக்கழங்களில் தொடர்ச்சியாக நடக்கக் கூடிய ஒன்று.

2) இந்தியாவில் நடக்காது. சிக்கல் இந்தியாவில் துறை வல்லுநர்கள் குறைவு. அப்படியே இருந்தாலும், தங்கள் துறையை தவிர மற்றதெல்லாம் குப்பை என்று பேசும் ஒரு மேட்டிமை தன்மை இங்கே அதிகம்.

3) STEM-துறைகளில் தான் வேலை என்னும் போது இளங்கலை கல்வியில் நாம் பேசும் ஆழம் கட்டாயமாக போதிக்கப்படாது. போதித்தாலும் அந்த மாணவர்களை வேலைக்கு எடுக்கும் நிறுவனங்கள் குறைவு.

4) இந்தியாவின் அறிஞர் குழாமில் இருக்கக்கூடிய இன்னொரு சிக்கல் இவர்கள் யாரும் ஒருவருக்கு ஒருவர் attribution தரவே மாட்டார்கள். இங்கே எழுதப்பட்டு பல்கலைக்கழங்களில் எலி நடமாடும் ஏராளமான ஆராய்ச்சிக் கட்டுரைகளும், வெவ்வேறு பொறியியல் கல்லூரிகளில் (கடைகளில் வாங்காமல்) உழைத்து முன்வைக்கப்படும் இறுதியாண்டு ப்ராஜெக்ட்களும் உலகத்தின் கண் பார்வையிலேயே கிடையாது.

இந்த சிக்கல்கள் தீராத வரைக்கும், இந்த மாற்றத்தினை முன்னெடுக்க முடியாது.

BrazoriaBlue said...

திரு அருட்செல்வன்,

அறிவியல் சார்ந்த விஷயங்களை அழகான தமிழில் எழுதியுள்ளீர்கள். மிக்க நன்றி.

நீங்கள் கூறியபடி, நவீன யுகத்தில், பல துறை சார் நிபுணர்கள் ஒன்று சேர்ந்து இயங்க வேண்டியது அத்தியாவசியமான ஒரு செயல். ஆனால் மனிதனின் வாழ்க்கை, மிகக் குறைந்த காலமே. எப்படி, பல துறைகளில் நிபுணத்துவம் பெருவது? எதைக் கற்பிப்பது? என்ற உங்கள் கேள்வி மிக முக்கியமானது.

இதை இரண்டு வகையில் அணுகலாம். முதல் வழி, தற்கால கல்வி முறையை இன்னும் கொஞ்சம் சீரமைப்பது, அல்லது மாற்றிக் கட்டமைப்பது. உதாரணமாக, பாடத்திட்டங்களை, கொஞ்சம் தொலை நோக்குடன் மாற்றி அமைப்பது. உதாரணமாக, எந்த அறிவியல் சார்ந்த கருதுகோளையும், பல துறை சார்ந்த உதாரணங்கள் மூலம் விளக்குவது. இந்த உதாரணங்கள் நடைமுறையில், மாணவர்களால், புரிந்து கொள்ள முடியும் ஒன்றாக இருப்பது அவசியம். முதலில், தேர்வுகளில் பரிசோதிக்கப்படும் எந்தக் கேள்வியும், தகவல்களை பிரதி எடுத்து வாந்தியெடுக்கும் செயல்களுக்கு மதிப்புக் கொடுக்கும் வகையில் இருக்கக் கூடாது. எல்லாக் கேள்விகளும், மாணவர்கள் கருதுகோள்களை புரிந்து கொண்டு விட்டார்களா, என்பதை துல்லியமாக கணிக்கும் வகையில் இருக்க வேண்டும். இப்படிச் செய்வதற்கு, கேள்வித்தாள்கள் மாற்றியமைக்கப் பட வேண்டும். உதாரணமாக, நுண்கணிதத்தின் அடிப்படைகளை, உயிரியல் சார்ந்த கேள்விகளைக் கொண்டு விளக்க முடியும். உதாரணமாக, ஒரு விலங்குக் கூட்டத்தில், இத்தனை சதவிகித விலங்குகளின் மரபணுவில் ஒரு அனுகூலமான மாற்றம் ஏற்படுகிறது. எத்தனை சந்ததிகளில், அந்த மரபணு மாற்றம், அந்த விலங்கை மாற்றியமைக்கும் என்பது போன்ற கேள்விகள் - கணிதத்தை மட்டுமல்ல, பரிணாம வளர்ச்சி கோட்பாட்டின் அடிப்படையையும் விளக்கும். இபோலா, பரவுவதின் கணித அடிப்படையை விளக்குவதன் மூலம், மாணவர்கள், தம் கல்வியை, இது கணிதம், இது உயிரியல், என்று பிரித்து பார்த்து படிக்காமல், அதை ஒரு ஒருங்கினைந்த கல்வியாக சின்ன வயதில் இருந்து பார்க்க கற்றுக் கொள்ள முடியும். இதற்கு, கொஞ்சம் தொலை நோக்கும், பல துறை சார் வல்லுனர்கள் சேர்ந்து அமைக்கும் பாடத்திட்டமும் தேவை. இதை நம்மால் செய்ய முடியும் என்றே நம்புகிறேன்.

இரண்டாவது வகையான கல்வி, தகவல்களுக்கு முக்கியத்துவம் அளிக்காத - சிந்திக்கும் பயிற்சியளிக்கும் கல்வி. ஒரு சிக்கலான, பிரச்னையை எப்படி பிரித்தனுகுவது, தொகுத்து அனுகுவது என்பது பற்றிய கல்வி. இதற்கு, முக்கியமாக, குழந்தைகள் கற்கும் முறை சார்ந்த அறிவு மிகவும் தேவை. ஒரு வட்டத்தின் பரப்பளவு, பை*ஆரம்*ஆரம் என்று சொல்லிக் கொடுப்பதல்ல கல்வி. அந்த விடைக்கு எப்படி பண்டைய கிரேக்கர்கள் வந்து சேர்ந்தார்கள், என்பதைப் புரிந்து கொள்வதே உண்மையான கல்வி. நம் ஆரம்ப பள்ளிக் கூடங்கள் இத்தகைய பள்ளிகளாக அமைய வேண்டியது அவசியம். இந்த மாதிரி கற்கும் மாணவர்களுக்கு, உலகத்தில் உள்ள அனைத்துமே, ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டவை என்பது எளிதாக புலப்படும். இது குறித்து இன்னும் சொல்லலாம்.

நீங்கள் ஒரு நல்ல கேள்வியை எழுப்பியுள்ளீர்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

அன்புடன்,
ராஜா