Thursday, July 28, 2016

எல்லாமும் அழல் தின்னக் கொள்ளும் போது... ( ஞானக்கூத்தன் நினைவில்)

 . . . எல்லாமும் அழல் தின்னக் கொள்ளும் போது
- - - - - - — - - — - - - - — - - - — - - 

    ஞானக்கூத்தனின் இந்தக்கவிதையை நான் படித்தது “நாற்றங்கால்”  எனும் கவிதைத்தொகுப்பில். எனக்கு அப்போது பதினாறு பதினேழு வயதிருக்கும். தீவிர நம்பிக்கையாளனாக இருந்து இறை எனும் தர்க்க நிலைபாட்டைப் பற்றி இயல்பாக ஐயங்கள் வரும் வயது. அறிவியலின் ஆச்சரியப் படுத்தும் முன்தோற்றங்கள் கடந்து அதன் உள்ளுறை ஒத்திசைவு  மெல்லப் புரியும் வயது. பற்றி நிற்க பல மெய்யியல் சட்டகங்கள் புகைபோலப் புலப்பட்டும் எதுவும் உறுதியாக நிலைநிற்காத தடுமாற்றங்கள் அறியும் வயது. எல்லோரும் பதற்றங்களோடு உடல் உணர்வுகளைக் கடக்கும் வயது. 

எதை எடுத்துக் கூறுவது
- - - - — - - — - - - - -

எதை எடுத்துக் கூறுவது நீஙகள்
இடமொன்றைத்
தெரிவிக்க வேண்டுமென்றால்

ஆலமரம் ஒன்றுண்டு
அதற்கு நேரே
கிளைவிட்டுப் போகிறதில் தெற்கு நோக்கிப்
போகுமொன்றில் தொடர்ந்து செல்லக்
கிட்டும் என்போம்

கோலை நட்டுக் கட்டாத அச்சுத் தேர்க்கு
மேற்காகப் பிரிகின்ற தெருவில்
என்போம்

தோப்புகளின் தலைவிளிம்பு பொக்கைப் போரை
ஆனதற்குப் பக்கத்தில்
உள்ள தென்போம்.

இன்ன பொருள் இத்திசையில் அதற்குப் பக்கம்
இஃதிருக்கப் பாரென்று சொல்லக் கூடும்
எதை எடுத்து நான்கூற கேட்கப்பட்டால்
எல்லாமும் அழல் தின்னக் கொள்ளும் போது
---------------- 
   அந்த “நாற்றங்கால்” தொகுதியில்  எனக்கு நினைவில் எப்போதும் நிற்பது 
   
 “எதை எடுத்து நான்கூற கேட்கப்பட்டால்
     எல்லாமும் அழல் தின்னக் கொள்ளும் போது” 

எனும் வரிகள்தாம். இவ்விரு வரிகளைத் தவிர்த்தால், இக்கவிதை அதன் ஒவ்வொரு வரியிலும் துல்லியமான பொருண்மையான காட்சிப் புலச் சுட்டுகளை அடுக்கி அதை ஒழுங்கான தர்க்கத்தில் கோர்த்தெடுத்துச் செல்கிறது.

புலனறிப் பொருண்மையுலகு. அதை அறிய நாம் சேர்க்கும் கோட்பாட்டுச் சட்டகங்கள். அச்சட்டகங்களின் உட்தர்க்கம். அவை வழிகூறாக வெளிப்படும் முற்றுண்மைகள். அவை தரும் ஓரு நிலைப்பாட்டு உறுதி. புற அக வாழ்வின் இருத்தலை சமனப் படுத்தி  இசைவித்து நம் அன்றாட உலகின் இயல் வாழ்க்கையின் நடப்புக் காட்சி. கவிதை தன் கடைசி இரு வரிகளில் அனைத்தையும்  சிதைத்துச் சுக்குநூறாக்குகிறது. எல்லாமும் அழல்தின்னக் கொள்ளும் போது எனும் ஊழிப் பேரழிவின் பின் என்ன நிலை மிஞ்சும். எங்கும் விரிந்து பரந்த அந்த அர்த்தப் பாழியுள் உறை பொருள்தான் என்ன? பாழ் என்பது இழிநோக்காக பாழ் என்ற பொருளில் நான் சொல்லவில்லை. ஏதுமற்ற ஒரு அன்மைத் தன்மையைச் சொல்கிறேன். அந்த அமானுடப் பெருவளியில் சொல் என்றும் பொருள் என்றும் ஏதுமற்ற விரிபுலத்தில் மிதக்கும் கவிதை இது. சதாகாலமும் ஓயாமல் மனம் கோர்த்துக்கொண்டிருக்கும்  தர்க்கப் பின்னல்களை  இக்கவிதை அறுத்தரிந்து முழுவதுமாக என்னை விடுவித்தது . அதன் முடிவில் தோன்றிய அப்பாழ்வெளி என்றும் என்னை விட்டு அகலவில்லை. 

   ஞானக்கூத்தனை  பல நோக்குகளிலும் காணக்கூடிய கட்டுரைகள் எழுதலாம். இன்னும் ஒன்றை மட்டும் இங்கே சொல்லிவிடுகிறேன்.  

அவருடைய இறையியல்தான் என்ன? 

வந்தனம் என்றான் ஒருவன்
இளங்காலைக் கதிரைக் கண்டு
நன்றென்றான் ஒருவன் இரவில்
முகிழ்கிற நிலவைக் கண்டு

அவன் நின்றான் கால்கள் ஊன்றி
ஒரு போதில் வருதல் மற்றப்
போதிலே மறைதல் என்னும்
இயல் பில்லா முகிலைப் பார்த்து.

தோன்றி அகல்கின்ற பொருண்மை. ஆனால் கதிரும் நிலவும் ஒழுங்கான வலம் கொண்டவை. சீர்கொண்ட இயல்நின்றவை. முகிலோ எங்கும் எக்கணமும் சிதைந்து பரவும் ஒழுங்கிலிப் போராட்டம். உருவழிந்த நிலைத்தகவு. அதில் நிற்கின்றான் அவன். காலூன்றி. நிலையாக. இம்மனம் கண்ட ஓர் இறையியல் வீச்சு அவர்கவிதைகளில் தொடர்ந்தே வந்துள்ளது. 

 சென்ற நூற்றாண்டு தமிழ் படைப்பியக்கத்தில் சிறுகதையும் கவிதையும் தான் முதலில் நவீனத்துவத்தைத் தொட்டன. கடந்தன. ஞானக்கூத்தனை தமிழின் ஆகச் சிறந்த அங்கதக் கவிதைகள், பகடிக்கவிதைகள் நிறைய எழுதியவர் என்று சிலர் அறிமுகப்படுத்துகிறார்கள். அனைத்துக்கவிதைகளிலும் அங்கதத்தினூடே இழைபோலப் பின்னிய  ஒரு கசப்புடன் எழுதியவர் என்கிறார்கள். அக்கால வழக்குப்படி அபத்தக் கவிதைவின் உச்சம் தொட்டவர் என்கிறார்கள். அவரை இப்படியெல்லாம் படிக்கலாம். இவையனைத்துக்கும் அப்பால் அவர்  கவிதைகள் அடுக்காக வைக்கும் பொருண்மைக் காட்சிகள் நமக்குக் காட்டி நம்மை ஏமாற்றும் ஒரு  மாயவிளையாட்டு என்றே நான் உணர்கிறேன். அப்பால் ஓர் ஆழத்தில்  அவர் சொல்லாமல் சொல்லிச்சென்ற இறையியலும் மெய்யியலும் மட்டுமே எனை ஈர்க்கின்றன. தமிழின் நவீனக்கவிதை  மரபில் அவர் யாருடைய வழியில் வருவதாகக் கருதலாம்? என்னைப் பொருத்தவரை அங்கதத்திலும் ,நன்கு அறிந்தே இலக்கணம் மீறிய மொழி  விளையாட்டிலும், அலட்சியமாக வீசிச்செல்லும் மெய்யியல் குறும்பார்வைகளிலும் அவர் சி.மணியின் வழியே வந்தவர் என்றே கொள்ளலாம். இவ்விருவரைத்தவிர இவையனைத்தும் அமைந்த மற்றொரு தமிழ்க்கவிஞரை நான் காணவில்லை. கடந்த கால் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதைகள் எனக்கு அறிமுகமும் இல்லை என்பதையும் கூறவேண்டும்.

 பகடியாக எழுதுபவர் அல்லர் அவர். கசப்போடும் எழுதவில்லை. அவர் நிலையை வெளிப்படையாக அவர் சொற்களில் உரத்துக்கூறாவிட்டாலும் அவரது கவிதைகள் விட்டுச் செல்வது மெய்யியல் சட்டகத்தில் ஒரு ஐயவாத மனச்சார்புதான். அவரது இறைகுறித்தான மத நம்பிக்கைகள் எல்லாம் அவரில்  ஒரு பகுதி. ஆனால் கவிதை என்பது மனிதன் தன் தர்க்கபூர்வ  வெளித்தோற்றப்படுத்தல்கள், நியாயப்படுத்தல்கள், ஒப்புக்கொடுத்தல்களைக் கடந்தே படைக்கப் படுகிறது. உள்ளிருந்து ஊறிஎழுந்து வெளிப்பாய்கிறது. அனைத்துக் கலைகளின் இயல்பே அதுதான். அதற்காகவே கலைகளின் நம் இடை இருப்பும். 

  கவிதை,ஓவியம், இலக்கியம் எனக் கலைகளின் பரப்புமுழுவதும் நீக்கப்படும் கல்விச்சூழல் நம்முடையது. சமச்சீர்க்கல்வியில் அறிவியல் போதாது கணிதம் போதாது என்று குமுறும் நம் மக்கள் கவிதை போதாது சிற்பம் போதாது என்று கேட்பதில்லை. பத்து ஞானக்கூத்தன் கவிதைகளையாவது படிக்காமல் வளரும் ஒரு தமிழ்க்குழந்தை என்னவாக உருவாகமுடியும்? ஞானக்கூத்தன் ஒரு உதாரணம்தான். புதுமைப்பித்தனில் தொடங்கி பிச்சமூர்த்தியில் தொடங்கி ஒரு பெரும் நவீன இலக்கியப் பரப்பே தமிழில் உண்டு. இன்றைய நவ உலகில் அறிவியலும் பொறியியலும் தன்னால் வளரும். கலையும் மொழியும் மெய்யியலும் அற்ற ஒரு கல்வி எதையும் எதிர்காலத்தில் நிறை செய்ய இயலாது. No comments: