Tuesday, October 04, 2016

அறிதல் - 2 | கற்றல்

அறிதல் - 2 | கற்றல்

====================

 அறிவை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ள சீர்செய்யப் பட்ட கல்விமுறையில் அறிதல் என்பது கற்றலைப் பின்தொடர்ந்தே வருகிறது. கற்றல், கற்பித்தலின் ஒரு விளைபொருளாகவும் பெறப்படுகிறது. கற்பித்தலின் முறைகளோ பலப்பல. மிகக் கறாராக கற்பிக்கப் படும் அறிவுத்துறை கணிதம் தானே. அதனால் அதை கற்பதிலும் கற்பிப்பதிலும் உள்ள சவால்கள் மற்ற துறைகளுக்கு பொதுமைப் படுத்தக்கூடியனவாகவே இருக்கும் அல்லவா. அதனால் இதை எழுதுகிறேன்.

 முறையாக உயர்கணிதம் கற்கவேண்டும் என்ற ஆசையில் எனக்கு மூத்த ஒரு நண்பனை அணுகி ‘எங்கடா தொடங்க’ என்று கேட்டேன். அவன் நூலகத்துக்கு இழுத்துக்கொண்டுபோய்  Paul Halmos எழுதிய  Finite Dimensional Vector Spaces எனும் முத்து காமிக்ஸ் அளவில் இருந்த ஒரு குட்டிப் புத்தகத்தை கையில் கொடுத்து  “அட்டையில் இருந்து அட்டை வரை படி. எல்லா ப்ராப்ளம்-களையும் ஒண்ணுவிடாம வரிசையாப் போடு “ என்று சொல்லி கண்ணடித்து விட்டுப் போய்விட்டான். நானும் படு உற்சாகமாக ஹ ஒரு 200 பக்கம்தானே ரெண்டுவாரத்தில் முடித்துவிடலாம் என்று அறையில் படிக்க ஆரம்பித்தேன். முதல் அத்தியாயம் ஒண்ணேகால் பக்கம்தான் இருந்தது. அலட்சியமாகக் கடந்தேன் என்றுதான் சொல்லவேண்டும். எக்ஸர்ஸைஸஸ் என்று அத்தியாய முடிவில் வந்து முதல் கேள்வி  என்ன என்று பார்த்தால்
Prove that 0+a = a. என்று இருந்தது. ( நன்றாக இன்னும் நினைவு இருக்கிறது அது a அல்ல ஆல்பா.) .

இதில் என்னத்தை நிரூபிக்க. இதுதான் ஒண்ணாங்கிளாசிலேயே தெரியுமே. எந்த எண்ணோடு பூஜ்ஜியத்தைக் கூட்டினாலும் அதே எண்தானே வரும்.  (இங்கே a என்பது எண்கள் மட்டுமல்ல. அதை இப்போதைக்குப் பேசாமல் விடுவோம்.) இன்னொரு விதமாகப் பார்த்தால் இது ஒரு  கற்பிதம்தானே. (assumption). இதை எப்படி நிரூபிக்க என்று திகைத்துப்போய் மீண்டும் அந்த ஒருபக்க அத்தியாயத்தை படித்தேன். மீண்டும் படித்தேன். மண்டை காய்ந்தது என்றுதான் சொல்லவேண்டும். தூக்கி மூலையில் வைத்து விட்டு பொழப்பைப் பார்க்கலாம் என்று பொறியியல் புத்தகம் ஒன்றை படிக்கப் போய்விட்டேன். ஆனாலும் விடாமல் அந்தப் புத்தகத்தோடு சண்டை போட்டு மாதக்கணக்கில் எடுத்து ஒருவழியாக முடித்தேன். அது வேறு கதை.
  இங்கே சொல்ல வந்தது என்னவென்றால் அறிவைக்  கறாராக கற்பிப்பதில்  இருக்கும் பலவிதமான முறைகளைச் சொல்லத்தான். இதே கணிதக் கோட்பாடுகள் பொறியியலில், இயல்பியலில் இன்னும் பொருண்மையான உதாரணங்களுடன் அன்றாட செயல்பாடுகளுடன் தொடர்புபடுத்தி கற்றுக்கொடுக்கப் படும். அந்த முறையில் ஒரு கோட்பாட்டைப் புரிந்து கொள்ளுதல் ஒருவகை. கணிதத்திலோ இக்கொட்பாடுகளைக் கற்பிக்க கணிதத்திலேயே உள்ள ஜியோமிதி  அல்லது கோவைகள் போன்ற பிற உதாரணங்களைச் சொல்லி linear algebra எனக் கற்றுக்கொடுப்பார்கள். ஆனால் Paul Halmos கற்றுக்கொடுக்கும் முறை axiomatic முறை. அது எப்படி இளநிலை கணிதக் கற்பித்தலுக்கு மட்டுமன்றி பள்ளிக்கல்வியிலும் அறுபதுகளில் தொடங்கி உலகமெங்கும் ஒரு அலையாகப் பரவியது என்பது இன்னொரு தனிக்கதை. இந்த முறையில் நவீன கணிதம் என்பது ஒருசில கறாரான கருதுகோள்கள், அவற்றின் வழிவரும் யூகமுடிபுகள் அவற்றை நிரூபித்தால் வரும் தேற்றங்கள் என படிப்படியாக தர்கரீதியாக எழுப்பும் ஒரு மாபெரும் மாடமாளிகை. அதில் ஒவ்வொரு கல்லும் பார்த்துப் பார்த்து இழைக்கப் பட்டது. தவறில்லாமல் பொருத்தமாக அதன் இடத்தில் அமைக்கப்பட்டது. இதைக் கற்கும் முறையே ஒரு ஒழுங்காக்கப் பட்ட பயிற்சிமூலம் அடைவதுதான்.  அந்த முறை புரியத் துவங்கும் வரைதான் ஒழுக்கம், பாடு எல்லாம். பின்பு அதுவே சரியான எளிதான கற்கும் முறையாகத் தோன்ற ஆரம்பித்து விடும். அதற்கு மாணவர்களைவிட கற்பிக்கும் ஆசிரியர்களுக்கே கற்பித்தலில் அதிகத் தெளிவு வேண்டும். இது பள்ளிக் கல்வி அளவில். கல்லூரிகளில் நாமே முட்டிமோதித் தெரிந்துகொள்ளவேண்டியதுதான். (மேற்கத்திய மெய்யியலில் ஸ்பினோசா படிக்கவும் இதே முறை உதவும் என்பது கூடுதல் செய்தி :-) )