Saturday, January 25, 2020

அடையாளம், அடக்குமுறை, அதிகாரம்

(ஏறக்குறைய 15 வருடங்களுக்கு முன் என் livejournal பதிவான அறி|புனை -யில் நண்பர்களுக்கிடையேயான விவாதம். தொகுத்துவைத்துக்கொள்ள).
அடையாளம், அடக்குமுறை, அதிகாரம் -1

———————————————————————
Nov. 27th, 2005 | 02:15 pm
தனிமனிதனின் அடையாளங்கள் என்றும் பிறரை வெருட்டுபவை. அவனுடன் அண்மித்த, அவன் சார்ந்திருக்கும் இனக்குழுவின் குழுநன்மைக்கு ஊறாக கற்பிக்கப் படுபவை. தமிழகத் தமிழரின் தற்போதய அடையாளச் சிக்கல் நடிகர்கள் வடிவத்தில் வருவது ஒரு இடைச்செய்திதான். அதேசமயம் இதைவைத்து தனிமனித கருத்துச் சுதந்திரம் என நடக்கும் விவாதங்களில் நாம் சொல்ல ஒன்றுமில்லை. இது வெளிப்படையாக பொதுப்புத்திக்கே அனைவருக்கும் தெளிவாகத் தெரியும் விதயம். அதனாலேயே அதை அசட்டை செய்யக்கூடியது சரியல்ல என்றாலும் இத்தனை தீர்மானமாக நடக்கும் இந்த விவாதங்கள், இதே நடிகர்கள் இந்து/முஸ்லிம்/கிருத்துவ மதக்குழுவைப் பற்றியோ இந்தியப் பண்பாடு என்று வியந்து போற்றப்படுவதைப் பற்றியோ முழு நாட்டு மக்களையும் முன்னிறுத்தி ஒரு கருத்து சொன்னால் எத்தனைபேர் அந்த சுதந்திரத்துக்கு சிந்தனை அணிசேர்வார்கள் என்பது சந்தேகமே. ஒன்றுக்குள் ஒன்று விழுங்கி மறைத்த ரஷ்யப் பொம்மைபோல் இவ்வடையாள அடுக்குகள், யார் எவர்மீது எதைக்கொண்டு அடக்கமுயல்கிறார்கள் என்பதையே சுட்டும். அடையாள மற்றுப்போய் உலகக் குடிமகனாகவோ, மனிதப் பிரதிநியாகவோ, அல்லது மனிதன் மட்டுமல்ல உலகின் அனைத்து உயிருள்ளவற்றிற்கும் சகஉயிரணு பங்காளனாகவோ தன்னைத்தான் உயர்த்திக்கொண்டு கருத்துப் பின்னல் சமைப்பதே எப்போதும் வசதியானது. ஏதாவது ஒரு அடையாளத்தை தம்மேல் வரித்துக்கொண்டு தம்மை அச்சுறுத்துவதை கேள்விகேட்பவர்களை கேலிசெய்து பேச்சற்று போகச்செய்து தம்மை அவரினும் உயர்தளத்தில் அமர்த்திக்கொள்ள வகை செய்வது. 'இந்தத் தமிழ் அடையாளம்தான் என்ன' என்ற கேள்வியில் தமிழ் என்ற இடத்தில் வேறெந்த அடையாளச்சுட்டியைப் போட்டாலும் அதற்கு வரும் பதில் சிரிப்புக்கிடமாகத்தான் இருக்கும் என்பதை உணர்ந்து அடுத்த தளத்தில் பேசுபவரிடம் பேசலாம். மற்றபடி வசதிக்கேற்ப அரசியல் நடத்தும் அரசியல் வாதிகளினும் ஒருமாற்றும் குறையாமல் நடக்கும் கருத்துப் புல அரசியலிலும் பங்குபெற மறுப்பதே இப்போது ஒரே வழியாக இருக்கிறது. கட்சிசார்ந்த ஊடகச் சிந்தனை குறுக்கும் மூளைச்சலவையை சரியாக கவனிக்கும் ஒருவரே பெரும் பத்திரிக்கைகள் தம் விருப்பப்படி பரப்பும் இனச்சார்புகளையும், ஆதிக்கச் சார்புகளையும் பொருட்படுத்தாமல் நகர்ந்துவிடலாம். அது வசதிக்கேற்பவே நடைமுறையாகிறது. மாற்றுச் சிந்தனைகள் என்றால் அது எவரிடத்திலிருந்து வந்தாலும் அதனை வெளியிடும் புலத்தில் நம்பிக்கையுடையவர்களுனேயே கருத்துப் பரிமாற்றம் இயல்பாக நடக்கமுடியும். இன்று அணிதிரண்டு இருப்பவர்களில் இருபாலாரிடமும் பலரிடம் இதைக்காண முடியவில்லை.
அருள் செல்வன். க. | Leave a comment | Share | Flag
=======================
Comments {6}
(no subject)
from: anonymous
date: Nov. 27th, 2005 03:35 am (UTC)
அருள் செல்வன். க.
அருள், என் மரமண்டைக்கு நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை. அது எப்படியாயினும் ஒரு வெளிப்படையான பாசிசத்தை, ஒரு பதிவுக்காகவேணும் கண்டித்து ஒரு வார்த்தை கூட நீங்கள் எழுதாதது வருத்தமாக உள்ளது. இரண்டு நாள் முந்தய செய்தியில் திருமா புதிதாய் தமிழ் பண்பாட்டுக்கான இயக்கத்தை துவங்கி வைத்து, 'குஷ்பு சுகாசினி மட்டுமில்லாமல், அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்போரும் கூட தமிழ்நாட்டில் இருக்க முடியாது' என்றும், 'தமிழ்நாடாய் இருக்க துடப்பத்தையும், செருப்பையும் காட்டினார்கள், ஈழத்தில் துப்பாக்கியால் பதில் சொல்லியிருப்பார்கள்' என்றும் பேசியிருகிறார். இதை விட பச்சையான பாசிசம் வேறு எது என்று எனக்கு புரியவில்லை. இந்த சமயத்தில் வேறு எதையோ அறிவுஜீவித்தனமாய் பேசுவதை போன்ற எரிச்சல் வேறு எதுவும் இல்லை.
Reply | Thread
(no subject)
from: anonymous
date: Nov. 27th, 2005 03:36 am (UTC)
அருள் செல்வன். க.
அருள், என் மரமண்டைக்கு நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை. அது எப்படியாயினும் ஒரு வெளிப்படையான பாசிசத்தை, ஒரு பதிவுக்காகவேணும் கண்டித்து ஒரு வார்த்தை கூட நீங்கள் எழுதாதது வருத்தமாக உள்ளது. இரண்டு நாள் முந்தய செய்தியில் திருமா புதிதாய் தமிழ் பண்பாட்டுக்கான இயக்கத்தை துவங்கி வைத்து, 'குஷ்பு சுகாசினி மட்டுமில்லாமல், அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்போரும் கூட தமிழ்நாட்டில் இருக்க முடியாது' என்றும், 'தமிழ்நாடாய் இருக்க துடப்பத்தையும், செருப்பையும் காட்டினார்கள், ஈழத்தில் துப்பாக்கியால் பதில் சொல்லியிருப்பார்கள்' என்றும் பேசியிருகிறார். இதை விட பச்சையான பாசிசம் வேறு எது என்று எனக்கு புரியவில்லை. இந்த சமயத்தில் வேறு எதையோ அறிவுஜீவித்தனமாய் பேசுவதை போன்ற எரிச்சல் வேறு எதுவும் இல்லை.

---ரோஸாவசந்த்.
Reply | Thread
(no subject)
from: arulselvan
date: Nov. 27th, 2005 03:53 am (UTC)
அருள் செல்வன். க.வஸந்த்,
குஷ்புவையும், சுஹாசினியையும் எதிர்த்து இப்போது பமக+திருமா கூட்டணி செய்வதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இன்று கருணாநிதி பேசியதையும் அதோடு சேர்த்துக்கொள்ளுங்கள். வெளிப்படையாக சொல்லியாச்சு. நேரமில்லை. எழுதவில்லை. ஆனால், இவ்விஷயங்களை முன்னிறுத்தி நடக்கும் தமிழ் அடையாள எதிர்ப்பு அரசியல் எங்கு இட்டுச் செல்லுகிறது? அடையாளங்களை முற்றாக அழித்துவிட்டு வெளியேறி வாழவேண்டாம், கருத்தளவு வெளியிடக்கூடியதையாவது அநுமதிப்பவர்களா இன்று குஷ்புவுக்கும் சுஹாசினிக்கும் ஆதரவு தெரிவிக்கிறார்கள்.
அருள்


Reply | Thread
(no subject)
from: anonymous
date: Nov. 27th, 2005 05:13 am (UTC)
அருள் செல்வன். க.
அருள்: குஷ்பு, சுஹாசினிக்கு ஆதரவு தெரிவிப்பவர்களின் பின்னணி, அவர்களது அரசியல் என்ன என்பதைத் தெளிவாகவே காட்டிவிடுகிறது. அவரவர் தத்தம் நிலைப்பாடுகளுக்கு ஆதரவானவற்றை - அது யாரிடமிருந்து வந்தாலும் சரி - வரவேற்கிறார்கள். பாஜக, பிற இந்துத்துவவாதிகள் குஷ்பு, சுஹாசினி கூறுவதை உள்ளூர எதிர்ப்பவர்களே.

சரி. அதனால் என்ன?

இப்பொழுது தமிழ் அடையாள அரசியலுக்கு எதிராக என்ன நடந்துவிட்டது? ராமதாசும் திருமாவளவனும் வரிந்து கட்டிக்கொண்டு தமிழ் அடையாள அரசியலை முன்னுக்கு வைக்கும் அளவுக்கு அவர்களுக்கு எதிராக ஏதேனும் சதி நடக்கிறதா என்ன?

மாற்றாக, பெயர்ப்பலகைகளில் தார் பூசுதலில் தொடங்கி, சினிமா பிரச்னைகளில் அளவுக்கதிகமாக ஈடுபடுவதில் இருந்து, இப்பொழுது குஷ்பு விவகாரத்தில் கூத்தடிப்பது வரை தமிழ் அடையாள அரசியலை முன்னிறுத்துபவர்களின் முட்டாள்தனமல்லவா வெளியே அப்பட்டமாகத் தெரிகிறது?

இப்படிப்பட்ட தமிழ் அடையாள அரசியலை ஆதரிப்போருக்கல்லவா மானம் போகும்?

கூத்தாடிகள் தலைமையினால் 'தமிழ் அடையாள அரசியல்' எதிர்ப்பாளர்களுக்குத்தானே இப்பொழுது கொண்டாட்டம்?

கருணாநிதி தமிழ் அடையாள/எதிர்ப்பு அரசியலிலிருந்து இப்பொழுது பார்ப்பன/அ-பார்ப்பன அரசியலுக்குத் தாவுவது இந்தக் கோமாளிக் கூத்தையல்லவா இன்னமும் அதிகரிக்கிறது?
Reply | Parent | Thread
(no subject)
from: anonymous
date: Nov. 27th, 2005 05:14 am (UTC)
அருள் செல்வன். க.
கடைசி பின்னூட்டம் என்னுடையது. --பத்ரி
Reply | Parent | Thread
(no subject)
from: anonymous
date: Nov. 27th, 2005 09:55 am (UTC)
அருள் செல்வன். க.
பத்ரி,


>>>
இப்படிப்பட்ட தமிழ் அடையாள அரசியலை ஆதரிப்போருக்கல்லவா மானம் போகும்?
-----------
ஆமாம்
----------
>>>
கூத்தாடிகள் தலைமையினால் 'தமிழ் அடையாள அரசியல்' எதிர்ப்பாளர்களுக்குத்தானே இப்பொழுது கொண்டாட்டம்?
-----------
ஆமாம்
-----------
>>>>
கருணாநிதி தமிழ் அடையாள/எதிர்ப்பு அரசியலிலிருந்து இப்பொழுது பார்ப்பன/அ-பார்ப்பன அரசியலுக்குத் தாவுவது இந்தக் கோமாளிக் கூத்தையல்லவா இன்னமும் அதிகரிக்கிறது?
---------------
இதுதான் தற்போதைய மிகப்பெரிய விபரீதம். தமிழக அந்தணர்கள் தமிழர்கள் அல்லர், சமஸ்கிருதமும் தமிழும் சம்பந்தமேயில்லாத தனிமொழிகள் போன்ற மடத்தனங்கள் கருத்துப் புலத்தில் மட்டுமன்றி, அன்றாட அரசியலாகவும் இருப்பது இன்னும் எத்தனை நாட்களுக்கு என்று தெரியவில்லை.

அருள்Reply | Parent | Thread

அடையாளம், அடக்குமுறை, அதிகாரம் -2

« previous entry | next entry »
Nov. 27th, 2005 | 11:37 pm
இன்றைய இந்திய நவயுவர்கள் இடையில் நாட்டுப் பற்றோ, பூடகமாக வெளிப்படுத்தும் மத, சாதிப்பற்றோ kosher அடையாளங்களாக மாறியிருக்கின்றன. இவை ஒரு பெருங்குழு அடையாள சமனப்படுத்தலாக, குறிப்பான்களாகவும் இருக்கின்றன. இவர்களின் தாராளத்துவக் கதையாடல்களில், இதற்கு நேர் எதிர் அலகில் உள்ள நாட்டின் பழங்குடிகள் பண்பாடு, வாழ்முறைச் சடங்குகளைப் பற்றிய நியாயப்படுத்தலும் காணப்படுகிறது. இப்படி இரு துருவ அலகுகளிலும் பயிலும் அடையாளங்கள் நியாயமானவையாகவும், சரியானவையாகவும், நாட்டின் கூறுகளாகவும் காணப்படும்போது, இவையிரண்டின் இடை அலகில் பயிலும் மொழி அடையாளம் மட்டும் ஏன் இப்படி ஒரு எதிர் அடையாளமாக குறிக்கப்படுகிறது? தவிர்க்கக்கூடியதாகவும், சிறுமைப்படுத்த தகுதியானதாகவும் இருக்கிறது. ஒருவேளை அது ஒன்றுதான் நியாயமான உள்ளுறை அடையாளமோ என்ற அச்சத்தினாலா? சமீபத்தில் பெங்களூரில் நடந்த பாடல்விழாவின் போது கன்னடப் பாடல்களைப் பாட முடியாமல் மறித்துக் கூச்சலிட்ட கும்பல் கற்றறிந்த, இன்றைய நாடுதழுவிய நாகரிகக் கும்பல்தானே? தாம் இருக்கும் இடத்தின் மொழியைக் கற்காவிட்டாலும் அதை எள்ளக்கூடிய மனநிலை பாசிச மனநிலை அல்லவா? இதற்கு எதிர்வினையாக எதை எதிர்பார்க்க முடியும். நாளை உடையும் கண்ணாடிகளும் சாலையில் சிந்தும் ரத்தமும் விதைக்கப் படுவது யாரால்? மக்கள் தம் அடையாளாங்களாகத் தேர்ந்தெடுப்பவை அவர்களின் சுதந்திரம். அவை முட்டாள்தனமாக இருந்தாலும். நான் நாத்த்கன் என்று பெயருக்கு வைத்துக்கொண்டாலும், எனக்கு என் நம்பிக்கையைப் பரப்ப சுதந்திரம் அளித்தாலும், பிறரிடம் கடவுள் இல்லை என்று சொல்லும் சுதந்திரமும் எனக்கு இருக்கிறது என்று கொள்ளலாம். ஆத்திகர்களிடம் கடவுள் இல்லை என்று கூடச் சொல்லலாம். ஆனால் ஒரு இறை நம்பிக்கையாளரிடம் நீ கடவுள் மீது வைத்திருக்கும் உன் தனிப்பட்ட நம்பிக்கை பித்தலாட்டமானது, அது பொய் என்று கூறுவது கருத்து ரீதியான வன்முறைதானே. அதைச் சொல்ல ஒருவருக்கும் ஒரு சுதந்திரமும் கிடையாது. முட்டாள்தனமாகவேனும் ஒரு ஆயிரம் ஆண்டுகளாக தமிழகத்தில் கற்பு என்று ஒரு கோட்பாடு உண்மையானதாக கருதப் பட்டு போற்றப் பட்டும் வருகிறது. இதன் ஊற்று பெண்ணடிமைத்தனம் என்று நாம் சொன்னாலும் கூட - தனிப்பட்ட முறையில் என் நிலையும் இதுதான். சங்ககாலம் கூட வேறுவிதமானதுதான். இப்படிப்பட்ட நிலையில் எனக்கு கற்பு போன்ற கொள்கைகளில் நம்பிக்கை இல்லை என்பதற்கும் அதை நம்பிக்கொண்டிருப்பவர்களிடம் உங்களுக்கெல்லாம் கற்பு இருக்கிறதா என்று கேட்கும் மனநிலைக்கும் பெரும் வித்தியாசம் இருக்கிறது. கடவுள் பொய் என்பதற்கும், நீ கொண்ட கடவுள் நம்பிக்கை பொய்யானது என்று ஒரு ஆத்திகனை கூறுவதற்கும் உள்ள வித்தியாசத்தைப் போலத்தான் இது. பிறரின் நம்பிக்கைகளை மறுப்பது என்பது வேறு. அதனை எள்ளி அவர்களின் நம்பகத்தன்மையையே கேள்விக்குள்ளாக்குவது கருத்து வன்முறையின் உச்ச கட்டம். It is high time this liberalist terror is called its bluff. Liberalism does not necessitate showing scant regard for the dignity of the other. ஆனால் இதற்குப் பிரதிவினையாக நடக்கும் நாடகங்களும் நடத்தப்படும் போராட்ட நிகழ்வுகளும் பண்பாட்டு அபத்தத்தின் உச்சத்தையே தொட்டிருக்கின்றன. இதில் பமக, விசி இரண்டும் புரட்சிகர அரசியலின் கேலிச்சித்திரங்களாகவே தம்மைக் காட்டிக்கொண்டிருக்கின்றன. ஆனால் இதைக் கொண்டு அகில இந்திய ஊடகங்கள் (இன்றைய அவுட்லுக்கில் இக்காரணத்தால் இனி பன்னாட்டு மூலதனம் தமிழகத்துக்கு வருமா என்று கூட ஒரு வரி இருக்கிறது!) ஏதோ தமிழ் அடையாள காட்டுமிராண்டிகளுக்கும் நாகரிக இந்தியக் கனவான்களுக்கும் இடையில் நடைபெறும் இன்னொரு போராகவே இதைக்காட்டுகின்றன.
அருள் செல்வன். க. | Leave a comment | Share | Flag

=======================Comments {8}

சன்னாசி
from: anonymous
date: Nov. 27th, 2005 11:34 am (UTC)
அருள் செல்வன். க.
சிக்கலான இந்தக் கோணத்தை முன்வைப்பதற்கு நன்றி. திருமாவளவனும் ராமதாஸும் அடிக்கும் கூத்தைத் திட்டி எழுதினால், ஒரு மேலோட்டமான பார்வையில் அதுவும்கூட "மொழி அடையாளத்தை"க் கண்மூடித்தனமாக விமர்சிப்பது என்ற ரீதியிலேயே பார்க்கப்பட்டு/திரிக்கப்பட்டுவிடுவதைப் பிரமிப்புடன் பார்த்து வருந்தத்தான் முடிகிறது. இப்படியொரு Catch-22 நிலைப்பாட்டுக்குப் பலரைத் தள்ளும் இவர்கள், நீங்கள் சொன்னதுபோல //அகில இந்திய ஊடகங்கள் ஏதோ தமிழ் அடையாள காட்டுமிராண்டிகளுக்கும் நாகரிக இந்தியக் கனவான்களுக்கும் இடையில் நடைபெறும் இன்னொரு போராகவே இதைக்காட்டுகின்றன.// இந்த வாய்களுக்கு அவலைக் கொடுத்ததுதான் தற்போதைய கிழிந்து தொங்கும் மிச்சம் என்று தோன்றுகிறது.
Reply | Thread
(no subject)
from: anonymous
date: Nov. 27th, 2005 11:53 am (UTC)
அருள் செல்வன். க.
அருள்,

பூடகமாக இல்லாமல் நேராகவே என் கருத்தைச் சொல்கிறேன்.

1. குஷ்பூ சொன்னது தவறு. ஆனால், இது இத்தனை தூரம் பிரச்சனை ஆகும் என்று நினைத்திருக்க மாட்டார். நினைத்திருந்தால் சொல்லி இருக்கமாட்டார். திரைக்கலைஞர்களுக்கு மக்கள் அபிமானம் தான் முக்கியம். அதற்கு பங்கம் வருகிறமாதிரி அவர்கள் நடந்து கொள்ள மாட்டார்கள். தான் பார்த்த, பழகிய, சொந்த அனுபவங்களை வைத்து, கற்பு பற்றி அப்படி ஒரு ஸ்டேட்மெண்ட் விட்டிருக்கக் கூடாது. ஆனால், அதற்காக மன்னிப்பும் தெரிவித்து விட்டார். தான் சொன்னதுதான் சரி என்று அவர் நின்றிருந்தால், தொடர்ந்து நடைபெற்ற ஆர்பாட்டங்களுக்கு அர்த்தமுண்டு.

2. சுஹாசினி, குஷ்பூ விவகாரம் அணைந்துவிட்டது என்று நினைத்து, அந்த மேடையிலே பேசியிருக்கிறார். சுகாசினி சொல்கிற கருத்துக்கள், ஹிந்துவின் page-3 இல், வேண்டாம், டெக்கான் கிரானிக்கிளின் society page இல் கூட வர லாயக்கற்றவை. இதற்கு முன்பு வந்ததில்லை. அந்த தைரியத்தில், விவகாரம் முடிந்துவிட்டது என்ற நினைப்பில் பேசி இருக்கிறார். விஷயம் வெளியே வந்ததும், ஒளிந்து கொண்டு விட்டார்.

3. திருமா & ராமதாஸ் அவர்களைப் பொறுத்தவரை, அவர்கள், தங்களுடைய அரசியல் கட்சிப் போராட்டத்துக்கான விவகாரமாகத்தான் இதைப் பார்க்கிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக, தொலைக்காட்சி செய்திகளையும், பிற பல்லூடகங்களையும் விடாமல் கவனித்து வருகிறேன் என்ற முறையில் இதை நான் உறுதியாக நம்புகிறேன். ராமதாஸ¤க்கும், திருமாவளவனுக்கு, தமிழ்நாட்டுப் பெண்களின் கற்பு பற்றிய உள்ளார்ந்த அக்கறையும், கலாசாரம் குறித்த உயர்ந்த மதிப்பீடுகள் இருக்கிறதா இல்லையா என்பதல்ல பிரச்சனை. இருக்கலாம். ( நிச்சயம் இருக்கக்கூடும் என்பது என் தனிப்பட்ட நம்பிக்கை). ஆனால், குஷ்பூ விவகாரத்துக்கு அதல்ல காரணம்.

4. இந்த விவகாரம் முற்றியதற்கு முக்கியமான காரணமே திமுகவைச் சார்ந்த ஊடகங்கள் தான். மெனக்கெட்டுச் செய்த ஒரு sting operation கூட, ஒரு பத்திரிக்கைக்கு இந்த அளவுக்கு மைலேஜ் தராது. வலிய வந்த சீதேவியை எட்டி உதைக்க, புதிதாக பத்திரிக்கை துவக்கியவர்களுக்கு மனசு வராது. அந்த ஒரு விஷயத்தையே மிகையாகச் சொல்லிச் சொல்லி, மாலைப்பத்திரிக்கைகளில் ஒரு தனி இடத்தைப் பிடித்து விட்டார்கள்.

5. philosophy வேறு, psephology வேறு. இன்னும் சில மாதங்களில் வர விருக்கும் தமிழக சட்டசபைத் தேர்தலை நினைவிறுத்திக் கொள்ளவும். கருணாநிதியாகட்டும், திருமாவளவனாகட்டும், ராமதாஸ் ஆகட்டும், யாருமே, இந்தச் சமயத்தில், தமிழின பாதுகாவலர் என்று ஓசியில் கிடைக்கும் அந்தஸ்தை தக்க வைத்துக் கொள்ளவே விரும்புவார்கள்.

6. உனக்கு கற்பு இருக்கிறதா என்று கேட்டு ஒருவரின் நம்பிக்கையை கேலி செய்வதற்கும், கற்பு என்ற விஷயத்தில் நம்பிக்கை வைக்காமல் இருப்பதற்கும் இடையிலான வித்தியாசம் சரிதான். அப்படி கேலி செய்வது கூட, கற்பு என்ற ஒன்று இல்லவே இல்லை என்று நம்பிக்கையை வலியுறுத்துவதற்கான துவக்கப்புள்ளியாக அமையலாம். நாளடைவில் கற்பென்பதே தவறான கற்பிதம் என்று நிரூபிக்கப்பட்டுவிட்டால், இன்றைய கேலி நாளைய தீர்க்க தரிசனம் ஆகிவிடுகிறது அல்லவா?

7. தமிழின அடையாளத்தைப் பாதுகாக்கத்தான் வேண்டும். இன்னார் தான் செய்ய வேண்டும் என்று நான் சொல்ல வில்லை. அல்லது பத்ரி எழுதியது போல நலத்திட்டங்கள் தான் முக்கியம் என்றும் சொல்லவில்லை. தமிழடையாள பாதுகாப்பு என்று சொல்பவர்களை கேலி செய்ய வில்லை. ஆனால், தங்களுடைய வசதிக்காகவும், சந்தர்ப்பங்களுக்காகவும், இதை கையில் எடுப்பவர்களை, எதிர்ப்பதோ அல்லது கண்டுகொள்ளாமல் விடுவதோதான் இந்தச் சமயத்திலே சரியான செயலாக இருக்க முடியும்.

-prakash
http://icarus1972us.blogspot.com
Reply | Thread
(no subject)
from: anonymous
date: Nov. 27th, 2005 04:25 pm (UTC)
அருள் செல்வன். க.
இந்த மாதிரியான சிக்கலான சூழலில் ஒவ்வொருவரும் தத்தமது அரசியல் அபிலாசைகளை, இனக்குழு அரசியலை முன்னெடுக்கிறார்கள். ராமதாசும், திருமாவ்வும் குஷ்பு-சுகாசினி என்ற தனிநபர் பிரச்சனையை தமது அரசியல் நலனுக்காக/ சில சக்திகள் வளராமல் கட்டுப்படுத்த கையில் எடுத்தால் எதிர்முகாம் (சாதியீய அடையாளங்களை தத்தமது உடலிலேயே மாட்டிக்கொண்டு இருப்பதை பிற்போக்குத்தனமாகக் கருதாத சாதாரணரும், தமது பெயர்களில் உள்ள சாதிய அடையாளங்களை துறந்தபின்னும் தனிப்பட்ட சாதி அடையாளத்தை துறக்காத தன்மையை பிற்போக்குத்தனமாகக் கருதாத, விமர்சிக்காத 'நவீன' மார்க்சீய அறிவிஜீவிகளும்)திருமாவையும், இராமதாசையும் சாதிக்கட்சிகள் என்று நிறுவிவந்தவர்ர்கள் இப்போது அதனோடு மொழி/இன அடையாளத்தையும் ஒரு வசையாகச் சேர்ப்பதில் பெரும் உவகை கொண்டு தமது அரசியலை திறம்படச்செய்கின்றனர். இது மிக முக்கியான கேள்வியை எழுப்புகிறது. அதுதான் நீங்கள் எழுப்பியிருப்பதும்.

//தவிர்க்கக்கூடியதாகவும், சிறுமைப்படுத்த தகுதியானதாகவும் இருக்கிறது. ஒருவேளை அது ஒன்றுதான் நியாயமான உள்ளுறை அடையாளமோ என்ற அச்சத்தினாலா?//

இந்தக்கேள்வி மிக முக்கியமானது. ஒரு நண்பர் இன்னொருவரிடம் ஒருமுறை சொன்னார்: தமிழ்தேசியம் பேசு அல்லது சர்வதேசியம் பேசு, மற்ற தேசியமெல்லாம் யாருடைய நலனுக்காக என எனக்கும் தெரியும், உனக்கும் தெரியும் என்று. இதுதான் நினைவுக்கு வருகிறது.

-தங்கமணி
www.bhaarathi.net/ntmani
Reply | Thread
(no subject)
from: anonymous
date: Nov. 27th, 2005 08:01 pm (UTC)
அருள் செல்வன். க.

சன்னாசி:
என்ன செய்வது. nuances என்பது முற்றிலுமாக மறுதலிக்கப்பட்டு நீ எங்களோடா, அவர்களோடா என்றுதான் விவாதமே நடக்கிறது. எழுதாமல் இருப்பதே நிம்மதியானது என்றே தோன்றுகிறது.
பிரகாஷ்:
நீங்கள் சொல்கிறீர்கள் அவர்கள் தெரியாமல் பேசிவிட்டார்கள். அப்படியே நானும் நினைக்கிறேன். அதை எதிர்த்து போராட்டம் செய்தவர்களும் முட்டாள்தனமான காரியங்களைச் செய்தார்கள். அதுவும் சரிதான். ஆனால் இங்கே விவாதக்களம் எப்படி இருக்கிறது? இது பெண்ணியப் பிரச்சினையாக உயர்த்தப் படுகிறது. கற்பு என்பது மற்றவர்மேல் திணிக்கப் படுமானால் பெண்ணியப்பிரச்சினைதான். ஆனால் நடிகைகள் சொன்னதும், அரசில்வாதிகள் செய்வதும் இரண்டும் பாசிசக்கூறுகள் கொண்டவை. பிறறது அடையாள வரிப்புகளுக்கோ, தேடுதல்களுக்கோ இடம்கொடாதவை. நமது விவாதங்களெல்லாம் ஏதோ இரண்டு பெண்பிள்ளைகளைக் காட்டுமிராண்டிகள் மிரட்டுகிறார்கள் என்றே இதைப்பார்க்கின்றன. என்ன சொல்ல.
தங்கமணி:
எல்லா அடையாளங்களும் புனைவுகள்தான் எனப்படும்போது சிலவற்றை உயர்த்துவது ஓவ்வொருகாலத்திலும் நடந்து கொண்டே இருக்கிறது. பின்விளைவுகளை மட்டுப்படுத்தவே சாதாரண குடிமக்களாகிய நாம் செயல்பட முடியும் என்றே தோன்றுகிறது.
arul
Reply | Thread
(no subject)
from: anonymous
date: Nov. 28th, 2005 12:59 am (UTC)
அருள் செல்வன். க.
அருளின் பல கருத்துக்களை, அதன் அடிப்படையை நான் ஏற்கிறேன். ஆனால் அவை இந்த விஷயத்தில் சரியாய் பொருந்திவரவில்லை என்பதுதான் உண்மை.

நான் புரிந்து கொண்டவரை (இந்தியா டுடே பேட்டியை விடுவோம், எல்லோரும் (இதை மட்டும்) ஆட்சேபிப்பதாக சொல்லும்) 'தமிழ்நாட்டில் யாருக்கும் கற்பு இல்லை' என்றோ, 'கற்பை கொண்டாடுபவர்கள் காட்டுமிராண்டிகள்' என்றோ (பெரியார் சொன்ன கடுமையில் கூட) குஷ்பு எதுவும் சொல்லவில்லை. தன் கருத்துக்கு ஆதாரமாக, பத்திரிகை ஒன்று கேள்விகள் கேட்டு provoke செய்த ஒரு சந்தர்ப்பத்தில், 'தமிழ் நாட்டில் திருமணத்திற்கு முன்பு உறவு கொள்ளாதவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று எனக்கு தெரியவேண்டும்?' என்பதாக பதில் கேள்வி கேட்டதாக மட்டுமே அறிகிறேன். இது எப்படி அருள் சொல்வது போன்ற வன்முறற ஆகும் என்று எனக்கு புரியவில்லை. மிக தெளிவாக வேறு காரணக்களுக்காக பழிவாங்கும் நோக்கில் இது பெரிது படுத்தப்பட்டு, அவர் மீது பலவகைகளில் தாக்குதல் நடத்தப்பட்டதை அருள் இப்படி ஏதோ பாசிச கூறுகள் கொண்டதாக சொல்வதும், வன்முறை என்று விளக்கம் தருவதும் நியாயமாய் படவில்லை.

குஷ்பு நடுத்தர, அடித்தட்டு அல்லது தன்னால் அடையாளம் காணமுடியாத பெண்களை நோக்கி, அவர்களின் கற்பு மதிப்பீடு பற்றி சொல்லியிருந்தால் அது வன்முறை. தன் கருத்துக்கு அதரவாக வேறு எவ்வாறு அவர் பேசமுடியும? ஒருவேளை குஷ்பு சொன்னது தவறூ எனில் சாருநிவேதிதா தொடங்கி பல எழுத்தாளர்களை என்ன செய்யலாம்? 'இரண்டாம் ஆட்டம்' நடத்தியதற்காக அவர் மீது தாக்குதல் தொடுத்தும் சரிதானா? இதையே மாற்றி வேறு விதமாகவும் சொல்லலாமே. தீபா மேத்தா ஓரினப் பாலியல் குறித்து என்னவும் கருத்து வைத்துகொள்ளட்டும், அதை படமாய் எடுத்து, ஒரு ஒழுக்க நெறியை பேணிவரும் சமூகத்திஉல் அதிர்ச்சியை உண்டாக்குவது வன்முறை என்றும் சொல்லலாமே. சிவசேனா செய்ததில் என்ன தவறு?

அருள் சொன்னது விவாதத்திற்கு உரியது என்று நானும் நினைகிறேன். ஆனால் 'நாட்டை விட்டு ஒடிப்போ' என்று சொல்லி வாரியல், செருப்பு வீசுவதும்,குஷ்பு சொன்னதும் ஒரே விஷயம், இரண்டும் (// நடிகைகள் சொன்னதும், அரசில்வாதிகள் செய்வதும் இரண்டும் பாசிசக்கூறுகள் கொண்டவை//) ஒன்றுதான் என்று சொல்வது ஒப்புகொள்ள கூடியதாய் தெரியவில்லை.

அருள் சொல்வது போல் தமிழ் அடையாளத்திற்கான ஒரு crisis இருப்பதையும், அதை நாசூக்குதன்மை எதிர்கொள்வதில் ஒரு அதிகாரம் மற்றும் அடக்குமுறை இருப்பதையும் ஏற்கிறேன். ஆனால் நடந்த சம்பவங்களை அதற்கான எதிர்வினையாய் எப்படி பார்க்க முடியும் என்று புரியவில்லை. விரிவான கருத்துக்களும், அதை விவாதிக்கவும் பரிசீலனை செய்யும் தேவையும் இருப்பதாகவே நினைக்கிறேன். அதற்கான முயற்சியை தொடங்க முடியுமா என்று தெரியவில்லை.
Reply | Parent | Thread
(no subject)
from: anonymous
date: Nov. 28th, 2005 01:00 am (UTC)
அருள் செல்வன். க.
மேலே எழுதியது ரோஸாவசந்த்
Reply | Parent | Thread
(no subject)
from: anonymous
date: Nov. 28th, 2005 01:27 am (UTC)
அருள் செல்வன். க.
தமிழ்முரசில் குஷ்பு பேசியதை நான் நேரடியாக படிக்கவில்லை. பல இடங்களில் அது மேற்கோள் கட்டப்பட்டதை முன்வைத்தே மேலே சொன்னதை எழுதியுள்ளேன். ஒருவேளை நான் புரிந்துகொண்டதில் தவறு இருந்தால் கருத்தை மாற்றிக்கொள்ள முடியும். உதாரணமாய் படித்தவர்/ படிக்காதவர் என்பதை முன்வைத்து குஷ்பு சொன்னதை எதிர்க்க முடியும். ஆனால் அதையும் பாசிசக்கூறு என்பதாக பார்க்க முடியவில்லை. வேறு ஒரு சந்தர்ப்பத்தில் அதை ஒரு எலீட் வன்முறை என்று கூறமுடியும். இங்கே அப்படி சொல்லும் வகையில் நிலமை இல்லை.

--ரோஸாவசந்த்
Reply | Parent | Thread
(no subject)
from: arulselvan
date: Nov. 28th, 2005 08:32 am (UTC)
அருள் செல்வன். க.
வஸந்த்,
நான் சொல்லவந்ததை மிகச்சுருக்கமாக இன்னொருமுறை (மாண்டி எழுதிய 'சுருக்குக்'கதையை நினைவில் வைத்து சிரிக்காமல் படியுங்கள்):

1. நான் குஷ்பு/சுகாசினிக்கு எதிரான போராட்டத்தை நியாயப்படுத்தவில்லை.
2. குஷ்பு/சுகாசினி சொல்லியதாக பத்திரிக்கைகள் பிரசுரித்ததை வைத்து அவர்கள் சொன்னதையும் (இந்தியாடுடே பேட்டி அல்ல, மற்றது) நியாயப்படுத்தவில்லை.
3. வினை/எதிர் வினை இரண்டுக்கும் ஒரு சமனமே இல்லை என்பது நீங்கள் சொல்வது என்று புரிந்து கொள்கிறேன். அது சரிதான்.
4. நடிகர்கள்/அரசியல்வாதிகள் இவர்களின் ஒவ்வொரு தன்முனைப்புச் செயல்பாடுகளையும் நியாயப்படுத்தவோ, விவாதிக்கவோ நமக்கு தேவையும், நேரமும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.
5. இந்தச்செயல்பாடுகளின் சமூகத் தாக்கங்கள் பற்றியதே என் பதிவு.
6. இது தமிழர் அடையாளச் சிக்கல் காலம் என்பது சரிதான்.
'இருபத்தொன்றாம் நூற்றாண்டில் தமிழ் அடையாளம்' என்பதைப்பற்றியோ,
'இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் தமிழ் அடையாளம்?' என்பதைப்பற்றியோ நல்லதொரு விவாதம் நடத்தினால் பயனாக இருக்கும். ஆமாம் சென்னையில் எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறீர்கள். மெயில் போடுங்கள்
அருள்
Reply | Thread

=============================================

அடையாளம், அடக்குமுறை, அதிகாரம் -3

Nov. 28th, 2005 | 08:09 amகுழு அடையாளங்களை முற்றும் துறத்தல் என்பதே தனிமனித சுதந்திரத்தின் முதல்படி. ஆனால் அனைத்து உறவுகளும் ஏதாவது ஒரு படியில் குழு அடையாளங்களாலேயே கட்டப்படும் இக்காலத்தில் எது மற்றதிலும் சிறந்தது என்பது கணக்கிலா வாதங்களுக்கான வழியைத்தான் அமைக்கிறது. அனைவருக்கும் தம் நம்பிக்கையை ஆக்கிக்கொள்ளவும், அதை மற்றவர்க்குப் பரப்பவும் நமது மக்களாட்சியும் சட்டமும் வகைசெய்கின்றன. பிறரை எள்ளுவதற்கும், அவரளவில் அவர்கள் பயிலும் நம்பிக்கைகளை புறந்தள்ள அவர்களை கருத்து ரீதியில் நெருக்கடி கொடுக்கவும் சட்டம் வகை செய்யவில்லை. அனைத்து அடையாளங்களையும் அதனதன் உரிமையாளர்கள் என்று கருதப்படும் அவ்வக்குழுக்களே பேண வகைசெய்யும்போது மற்ற குழுக்களின் அடையாளத்தையும் அதைக்காக்க அவர்களுக்கிருக்கும் உரிமையையும் மீட்டுத்தருவதே உண்மையான நிலைபாடாக இருக்கமுடியும். இது தனிமனிதரிடமிருந்து தொடங்கி குழுக்களின் அனைத்து அலகுகளிலும் பாதுகாக்கப் பட நம் கருத்து நிலைகலைகளை எடுப்பதே உண்மையான தாராளவாதமாக இருக்கமுடியும். அடையாளங்களை வைத்துக்கொள்ள அனைவருக்கும் இருக்கும் உரிமையை முதலில் மீட்டெடுப்போம். அவ்வடையாளங்கள் எவ்வளவு அபத்தமானதாக இருந்தாலும். தமிழக அரசியலும் ஒரு திருப்புமுனைக்கு வந்திருப்பதாகவே படுகிறது. தமிழக அந்தணர்கள் தமிழர்கள் அல்லர், சமஸ்கிருதமும் தமிழும் தமக்குள் சற்றும் தொடர்பே இல்லாத தனித்துவமான மொழிகள் என்றெல்லாம் நிரூபிக்கப் படாத கருதுகோள்களின் மீது கட்டப்பட்டு நடத்திய அரசியல் முடிவுக்கு வந்துகொண்டிருக்கின்றது. இவற்றின் எச்சங்களை இன்னும் காட்டுபவர்களை கடந்து செல்வதே சரியான நிலை. மக்களின் உண்மையான பிரச்சனைகளை எதிர்கொள்ள இனியாவது காலம் வரும் என்று நம்புவோம். மாநிலமே நீரில் தத்தளிக்கும்போது இதை எழுதிக்கொண்டிருப்பதும் ஒருவிதத்தில் தேவையற்ற செயல்தான்.

==============
Comments {8}
(no subject)
from: anonymous
date: Nov. 28th, 2005 05:26 am (UTC)
அருள் செல்வன். க.
அருள்
சென்ற இரு பதிவுகளில் இருந்த உங்கள் கருத்துக்களோடு நான் பலவழிகளில் வேறுபடுகிறேன். இது ஒருவேளை நிஜத்திற்கும் நிழலுக்குமான வேறுபாடாய் இருக்கலாம்.
குழுக்களின் அடையாளத்தை தொலைப்பது எளிதான காரியம் இல்லை. வலியும் வேத்னையும் அதிகம். அப்படியே தொலைத்தாலும், மீண்டும் ஏதேனும் ஒரு அடையாளத்தை முகத்தில் பதியவே பலரும் விரும்புகிறார்கள். இது ஒரு வேளை மனிதன் கூட்டமாய் வாழவும், ஒரு கூட்டத்தால் அங்கீகரிக்கப்படுவதையும் விரும்புவதால் இருக்கும்.
பத்மா அர்விந்த்
Reply | Thread
(no subject)
from: anonymous
date: Nov. 28th, 2005 08:06 am (UTC)
அருள் செல்வன். க.
------------------
>>>
சென்ற இரு பதிவுகளில் இருந்த உங்கள் கருத்துக்களோடு நான் பலவழிகளில் வேறுபடுகிறேன்
--------------
பலவழிகளில் என்று சொல்லிவிட்டு எதுவுமே சொல்லவில்லை. தேறாத கேஸ் என்று நினைத்திருக்கலாம். :-). தனிப் பதிவாகவாவது போடுங்கள்.
-------------
>>>
குழுக்களின் அடையாளத்தை தொலைப்பது எளிதான காரியம் இல்லை.
------------------
அடையாளங்களை முற்றும் துறப்பது என்பது மிகக் கடினமான செயல்தான். என்னால் முடிந்ததில்லை. ஆனால் அது ஒரு மாறாத பார்வைக்கோணம் என்பதை மனதில் வைத்துக்கொண்டு எந்த விதயதைப் பற்றியும் யோசிக்கும்போது, பல வரட்டுத்தனமான, மற்றவர்களுக்கு ஊறு செய்யும் நிலைகளை நம் யோசனைத் தடங்களில் இருந்து நீக்கமுடியும். என் சிந்தனையை நல் வழிப்படுத்தும் ஒரு பார்வைக்கோணமாகத்தான் நான் அதை உபயோகப்படுத்துகிறேன். மற்றபடி தனி/குழு அடையாளங்களை அனைவருக்கும் வைத்துக் கொண்டிருக்கத் தேவையான் சுதந்திரத்தைப் பற்றியதுதான் என் பதிவுகள். சற்றே குழப்பியிருக்கலாம்.
-----------------
அருள்
Reply | Thread
சில எண்ணங்கள்
from: anonymous
date: Nov. 28th, 2005 03:37 pm (UTC)
அருள் செல்வன். க.
அருள்: நம்பிக்கை உடையவரிடம் அது தவறு என்று சொல்வது கூட வன்முறை என்று நீங்கல் சொன்னது எப்படி சரியாகும்? உதாரணமாக வன் புணரப்பட்ட ஒரு பெண் தன் கற்பை இழந்துவிட்டதாக நம்பி, அது இல்லாவிடில் வாழ்க்கையே இல்லை என்று நம்புகிறாள். அவளிடம் மன பக்குவத்தை வரவழைத்து இது ஒரு விபத்துதானே தவிர இதை விட முக்கியமான விஷ்யங்கள் வாழ்க்கையில் உண்டு என்ரு புரியவைப்பது மனிதம் அல்லவா?
நிறைய பெண்கள் கற்பு என்பதே ஒரு பெரிய குணமாகி அது இல்லை என்றால் வாழ்வே வீண் என்று இருப்பது தவறான நம்பிக்கை இல்லையா. கணவன் வன்புணர்ந்தாலும் அது தவறு என்று எத்தனை பெண்களுக்கு தெரியும்? சில சமயங்களில் தவறான நம்பிக்கை வைத்து, வாழ்க்கையை வீணடிக்கும் பெண்கள், நான் சமீப காலமாக ஆளாலுக்கு மின்னஞ்சல் அனுப்பி உதவ முயற்சி செய்யும் தவறெதுவும் செய்யாமலே இரண்டு குழந்தைகளுடன் வீட்டை விட்டு துரத்தப்பட்ட இந்த பெண், தற்கொலை செய்து கொள்ள சொல்லி மிரட்டிய கணவன் இவர்களும் தமிழர்கள் தான். எது சரி என்று அல்லது எது தவறென்றோ புரியாமல்ல் திணிக்கப்பட்ட ஒரு கருத்தை நம்பியுள்ளதை பற்றி சிந்திக்க இது மாதிரியான கருத்துக்கள் தேவை. அதுவும் ஒரு ஜனரஞ்சகமான நடிகை சொன்னதாலேயே பலருக்கு ஒரு வாய்ப்பு. இங்கே சம்பந்த பட்டவர்கள் இருபாலாரும் ஆதாயத்திற்காக சொன்னாலும், அதனால் ஒரு சிந்தனை அலையை தோற்றுவிக்க முடியுமானால் அதுவும் நன்மைக்கே.
கற்பை காரணம் காட்டி, கணவனால் முறையாக விவாகமும் ரத்து ஆகாமல் தனிமையில் தவிக்கும் (தள்ளிவைத்த பெண்களிடம்) பெண்களிடம் விழிப்புணர்வு பற்றி பேசுவது வன்முறையாகுமா?
பிரகாஷ் சொல்வது போல தமிழின அடையாளத்தை காப்பாற்ற வேண்டும் என்றால் எது அந்த அடையாளம் என்று விளக்குவீர்களா?பழக்கங்களால் வந்தது அடையாளம் என்றால், அது எந்த முறையினரின் சாதீய வழக்கம்? இல்லை அது நூல்களில் சொல்ல பட்டது என்றால் எந்த காலத்து நூல்களால் மனநிலையில் எழுத பட்ட விதிகள்? அப்படியே ஒரு அடையாளம் இருக்குமானால் அதை பெண்கள் மட்டுமே ஏன் காப்பாற்ற வேண்டும்?
ஒருவனுக்கு ஒருத்தி என்பது அடையாளமானால், இத்தனை பால்வினை நோயாளிகள் ஏன்? படிக்காத பெண்களை பற்றி என்ன, வலையிலேயே படித்த பெண்களைக்கூட கருத்து சொல்ல எத்தனை தடை? நீ யாருடன் படுத்து எழுந்தாய் என்று சொல்லி அதையே ஒரு ஆயுதமாக்கும் கூட்டத்தில், அது தவறாண நம்பிக்கையா இல்லையா என்று சிந்தித்து பார் என்று சொல்வதில் வன்முறை எதுவும் இல்லை.
பசி இன்றி அடுத்து தன்னை கொல்வானோ என்ற பயமின்றி, இன்று என்ன கொடுமையோ என்றெல்லாம் யோசிக்காமல், பெற்றவர்களே இன்னும் என்ன செய்ய முடியும் அது உன் தலை எழுத்து என்று விலகிவிடும் போது, அறிவுஜீவித்தனமாக யோசிக்க முடியாது. என் சிந்தனைகள் நல்ல புத்தகங்கள் படித்து வருவதில்லை. இது பாஸிசமா இல்லையா என்பது என் கவலை இல்லை. இவர்களின் கண்ணீர் கேட்கும் கேள்விக்கு பதில் என்ன? திருமணம் ஆனபின், கணவன் சொல்லும் போதெல்லாம் அனுமதித்து பிள்ளை பெற்று கொண்டபின், இவர்கள் படும் துயரத்திற்கு என்ன பதில்?முதலில் இவர்களின் கண்னீர் அடையாளங்களை களை எடுக்கலாம் அதன்பின் தமிழனா, மனித அடையாளமா எது தேவை, எதை காப்பாற்றுவது என்பது பற்றி யோசிக்கலாம்.விளக்குமாற்றை எடுத்து ஓடும் பெண்களுக்கு அது ஒருவேளை உணவுதரும் செய்கைதானே தவிர, எதை அல்லது யாரை எதிர்த்து செய்கிற போராட்டம் என்பது தெரியாது.இன்னும் எழுதலாம். என் கருத்துக்கள் நகைப்புக்கு மட்டுமே ஆளாவதால் எழுத இப்போதெல்லாம் மனம் வருவதில்லை.
பத்மா அர்விந்த்
Reply | Parent | Thread
Re: சில எண்ணங்கள்
from: anonymous
date: Nov. 29th, 2005 08:04 pm (UTC)
அருள் செல்வன். க.
I like the way u r writing. For the first time I been in this site. Please don't stop writing. we need writers like you.

Selvi
Reply | Parent | Thread
(no subject)
from: rozavasanth
date: Nov. 28th, 2005 10:30 pm (UTC)
அருள் செல்வன். க.
அருள் பதிலுக்கு நன்றி. நாராயணணை தவிர இன்னும் யாரையும் சந்திக்கவில்லை. விரைவில் மெயில் போடுகிறேன்.

பத்மா எழுதியதை ஒழுங்காய் படிக்க முடியவில்லை(கணணியில் மோஜிலாவில் அலைத்தமிழாய் தெரிவதால்). புரிந்தவரையில் எனக்கும் அதில் ஒப்புதல் உள்ளதாய் தெரிகிறது. இது குறித்து எழுத/பேச நேரும் போது பார்க்கலாம்.
Reply | Thread
(no subject)
from: arulselvan
date: Nov. 29th, 2005 09:32 am (UTC)
அருள் செல்வன். க.
பத்மா

1.
-----------
>>>
நம்பிக்கை உடையவரிடம் அது தவறு என்று சொல்வது கூட வன்முறை என்று நீங்கல் சொன்னது எப்படி சரியாகும்?
---------------
நம்பிக்கையாளர்களிடம் அந்த நம்பிக்கையை பொய்,தவறு என்று பரப்புரை செய்யக்கூடாது என்று நான் எழுதவில்லை. குழப்பாமல் எழுதியிருக்கலாம் என்று வேண்டுமானால் சொல்லலாம். நான் திரும்பத் திரும்ப ஆத்திகம்-நாத்திகம் உதாரணத்தை வைத்து எழுதியபின்னால் என்னடா இப்படி மறுபடிமறுபடி ஒன்றையே சொல்கிறோமே குறைத்து விடலாமா என்றுகூட நினைத்தேன். ஆனால் நீங்களும் ரோசாவும் கொடுத்த பின்னூட்டம் நான் தெளிவாக எழுதவில்லை என என்னை நினைக்க வைக்கிறது. தயவு செய்து மீண்டும் ஒருமுறை படித்துப் பார்க்கவும்.
2. எந்த ஒரு அடையாளத்தையும் 'விவரித்துக்'கொண்டே போனால் அது நகைச்சுவையாகத்தான் இருக்கும் என்றே நான் எழுதியிருக்கிறேன். மனிதர்கள் அடையாளங்களை வைத்துக்கொள்ளக்கூடிய உரிமையை மட்டுமே நான் கூறியிருக்கிறேன். அடையாளங்களை நியாயப்படுத்துதலை அல்ல.
3.நீங்கள் தனிப்பட்ட மனிதர்களின் பிரச்சினைகளைச் சொல்லி இருக்கிறீர்கள். இவற்றிற்கெல்லாம் நீங்கள் சொல்லுவதைத் தவிர, சாதாரண மனிதனுக்கு தோன்றுவதைதவிர வேறு 'புது' தீர்வையையா நான் சொல்லுவேன் என்று நினைக்கிறீர்கள். உங்களுக்குத் தோன்றுவதுதான் சார்பில்லாமல் சிந்திக்கும் எவருக்கும் தோன்றும்.
4. எல்லா அடையாளங்களும் பொய்தான், ஆனால் சில மட்டும் புனிதப்படுத்தப் படுகின்றன. மற்றவற்றின் புனிதம் எதிர்வினையின்றி கேள்விக்குள்ளாக்கப் படுகிறது. அதன் 'அரசியலை' புரிந்துகொள்ளவே எனது பதிவுகளில் முனைந்தேன். இன்னும் விரிவாகச் சொல்லியிருக்கலாம் என்றே படுகிறது.
5.
---
>>>
என் கருத்துக்கள் நகைப்புக்கு மட்டுமே ஆளாவதால் எழுத இப்போதெல்லாம் மனம் வருவதில்லை.
----
உங்களுடைய எந்தக்கருத்துக்கு யார் சிரித்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் உங்களைப் போன்ற களத்தில் இருந்து எழுதுபவர்களின் கருத்துகள் தனிப்பட்ட முறையில் எனக்கு நிறைய கோணங்களைக் காட்டுகின்றன. அதற்காகத்தான் உங்களை தனிப்பதிவாகவாவது எழுதவும் என்று சொன்னேன். தொடர்ந்து எழுதுங்கள்.
யாருக்கு எந்தக்கருத்து எப்போது உபயோகமாக இருக்கும் என்று நம்மால் நினைத்துக் கூட பார்க்க இயலாது.

----
அருள்
Reply | Thread
(no subject)
from: anonymous
date: Nov. 29th, 2005 11:13 am (UTC)
அருள் செல்வன். க.
ஆனால் ஒரு இறை நம்பிக்கையாளரிடம் நீ கடவுள் மீது வைத்திருக்கும் உன் தனிப்பட்ட நம்பிக்கை பித்தலாட்டமானது, அது பொய் என்று கூறுவது கருத்து ரீதியான வன்முறைதானே. அதைச் சொல்ல ஒருவருக்கும் ஒரு சுதந்திரமும் கிடையாது. முட்டாள்தனமாகவேனும் ஒரு ஆயிரம் ஆண்டுகளாக தமிழகத்தில் கற்பு என்று ஒரு கோட்பாடு உண்மையானதாக கருதப் பட்டு போற்றப் பட்டும் வருகிறது. இதன் ஊற்று பெண்ணடிமைத்தனம் என்று நாம் சொன்னாலும் கூட - தனிப்பட்ட முறையில் என் நிலையும் இதுதான்}- இதன்படி கற்பு உன்னதமானதென்று கருதும் மக்கள் அதையே ஆயுதமாக்கி பெண்களை வதைப்பதும், அது முறையில்லை என்று விழிப்புணர்வு ஏற்படுத்துவதென்பதும் கூடாது என்றல்லவா தோன்றுகிறது.சரியாக புரிந்து கொள்ளாதது என் தவறாக கூட இருக்கலாம்.
அடையாளங்கள் என்ன என்றே தெரியாத போது எந்த ஒன்றை அடிப்படையாக கொண்டு அதை காப்பாற்ற வேண்டும் என்ற என் வினா, பிரகாஷின் பின்னூட்டத்தினால் (1) வந்தது.

தனிப்பட்ட மனிதர்களின் பிரச்சினை சமுதாயத்தில் பிரச்சினைகள் எவ்வளவுதூரம் பரவி இருக்கின்றன என்று காட்டும் ஒரு லிட்மஸ் பரிசோதனை. ஏனென்றால் இந்த தனிப்பட்ட மனிதர்கள் சேர்ந்ததுதான் சமுதாயம். அடையாளம் என்ன என்று வினா எழுப்புவர்களுக்கும் இது உன் அடையாளம் என்று முத்திரை பதிக்க படுகிறது.நீங்கள் சொன்னதுபோல சில அடையாளங்கள் மட்டும் புனிதமாக்கப்படுவதும் நடக்கிறது.

தெளிவாக நீர் இருக்கிறது என்று நினைத்து மகிழ நாம் ஆசைப்படுகிறோம். கல்லெறிந்ததாலே அது குழம்பி விட்டது என்பதைவிட, எத்தனை சேறு அந்த தெளிவான நீரின் ஆழத்தில் இருக்கிறது என்று அடையாளம் காட்ட உதவியது என்ற வரையில் அதை வரவேற்கத்தான் வேண்டும். கல் எறிந்ததன் காரணம் எதுவாயினும், இல்லை நோக்கமே இல்லாமல் போகிற போக்கில் எறியப்பட்டதானாலும் குழப்பத்தை அடையாளம் காட்ட உதவிய வகையில் வரவேற்கத்தான் வேண்டும். அடிப்படை குழப்பத்தை புரிந்து வடிகட்டாமல், ஆளாளுக்கு ஆதாயம் தேட முயற்சிப்பது மட்டுமே நடந்து கொண்டிருக்கிறது.

தனிப்பட்ட முறையில் வந்த சில மடல்கள், அதையும் மீறி எனக்கு பொதுவான ஒரு அடையாளம் காட்டமுடியாத முகவரியிலிருந்து அனுப்பி வைத்த பிற பதிவுகளின் சுட்டிகள் இதெல்லாம் கால விரயம் என்று தோண்றியது. மன வருத்தம் தராவிடினும் இன்னும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை மட்டும் உணர்த்தியது.
உங்களின் மூன்று பதிவுகளுமே நன்றாக இருந்தன உங்கள் படங்களை போலவே.நான் போக வேண்டிய தூரம் நிறைய:)
Reply | Parent | Thread
(no subject)
from: anonymous
date: Nov. 29th, 2005 11:14 am (UTC)
அருள் செல்வன். க.
போன பின்னூட்டம் என்னுடையதுதான்.
பத்மா
Reply | Parent | Thread